இளையர் அறிவியல் களஞ்சியம்/சின்னம்மை
சின்னம்மை : இந் நோய் ஆங்கிலத்தில் ‘சிக்கன்பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அம்மை நோய் வகைகளில் இது ஒரு கொடிய தொத்து நோயாகும். இந்நோய் வைரஸ் நச்சு நுண் கிருமியால் உண்டாகிறது. இந்நோயுள்ளவரைத் தொடுவதாலோ அல்லது அவர் வெளியிடும் சுவாசக்காற்றை பிறர் சுவாசிப்பதாலோ இந்நோய் எளிதாகப் பரவுகிறது. நோயாளியின் தொடர்பில்லாதவருக்கும்கூட இந்நோய் வருவதுண்டு.
இந்நோய் பெரும்பாலும் 2 முதல் 6 வயதுள்ள சிறுவர்களையே பீடிக்கிறது. பெரியவர்களுக்கும் இந்நோய் வருவதுண்டு. இந்நோய்க் கிருமிகள் உடலில் சேர்ந்த பன்னிரண்டு அல்லது பதினைந்து நாட்களுக்குப்பின் தலைவலி, முதுகுவலி, குளிர் போன்றவைகள் ஏற்படும். அதன்பின் காய்ச்சலும் அதைத் தொடர்ந்து கொப்புளங்களும் உண்டாகும். முதலில் நீர்க் கோர்வையோடு உருவாகும் கொப்புளங்கள் மூன்று நாட்களுக்குப்பின் பால் கொப்புளங்களாக உருமாறும். நான்காம் நாள் கொப்புளம் சுருங்கத் தொடங்கும். அதன்பின் கொப்புளம் உலர்ந்து பொருக்காக மாறி உதிரும். சின்னம்மைக் கொப்புளங்களால் வடுக்களே தழும்புகளோ உண்டாவதில்லை.
இந்நோய் கண்டவுடன் நோயாளியைத் தனிமைப்படுத்துதல் அவசியம். நோய்தீர்ந்த நிலையில் கொப்புளப் பொருக்குகள் உதிர்ந்த பின்னரே பிறரோடு கலந்து பழகவேண்டும். பெரியம்மையைவிட சின்னம்மை மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.