இளையர் அறிவியல் களஞ்சியம்/சீரணமண்டலம்
சீரணமண்டலம் : நாம் உயிர் வாழவும் உடலின் உறுப்புக்கள் அனைத்தும் சீராக இயங்கவும் சத்து வேண்டும். இச்சத்தை உணவு மூலம் பெறும்போதும் அவ்வுணவைச் சீரணித்துச் சத்தாக மாற்றும் பணியைச் செய்யும் உறுப்புகளடங்கிய பகுதியே 'சீரண மண்டலம்’ ஆகும். அவ்வுறுப்புகள் வாய், உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், மலக்குடல் ஆகியனவாகும்.
வாயில் போடப்படும் உணவுப் பொருட்கள் வாயில் ஊறும் உமிழ்நீரால் ஓரளவு கரைக்கப்படுகிறது. பின் அஃது உணவுக் குழல் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கு கணையத்திலிருந்து ஊறும் கணைய நீரும் பித்தப் பையிலிருந்து சுரக்கும் பித்த நீரும் திட உணவை திரவ நிலைக்கு மாற்றுகின்றன. திரவ வடிவ உணவுப்பொருட்கள் பின் சிறு
குடலைப் போய்ச் சேருகிறது. சிறு குடலின் உட்சுவர்களில் சின்னஞ்சிறு வடிவில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மொட்டுகள் இத்திரவ உணவிலிருந்து சத்தைத் தனியே பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கின்றன. உடலெங்கும் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் இரத்தம் சத்தை அளவாகப் பிரித்தளித்து சக்தியூட்டுகின்றன.
நாம் உண்ணும் உணவு அனைத்துமே சத்தாகவோ சக்தியாகவோ மாறுவதில்லை. அவற்றில் சீரணிக்கப்படாத சிறு பகுதி கழிவுகளாக சிறு குடலிலிருந்து பெருங்குடலை அடைகின்றன. பெருங்குடலாகிய மலக்குடல் மூலம் மலமாக வெளியேற்றப்படுகிறது.