இளையர் அறிவியல் களஞ்சியம்/செயற்கைக் கோள்

செயற்கைக் கோள் : வானில் சூரியனைச் சுற்றிலும் பூமி, சந்திரன், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததே. இவை யெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இயற்கைக் கோள்கள். இதே போன்று பூமியைச் சுற்றிவர செயற்கையாக உருவாக்கி ஏவப்பட்டுள்ள கோள்கள் செயற்கைக் கோள்களாகும். மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படும் இச் செயற்கைக் கோள்கள் மூலம் பல்வேறு பயன்கள் கிட்டுகின்றன. ராக்கெட்டுகள் மூலம் விண்ணிற்கு அனுப்பப்படும் இச் செயற்கைக் கோள்கள் பூமியின் நீள்வட்டப் பாதையை அடைந்து உலகை வலம் வருகின்றன.

அற்புதமான செய்தித் தொடர்புக் கருவியாக அமைந்துள்ள இச் செயற்கைக் கோள்களில் மிக நுட்பமான கருவிகள் பல வைக்கப்பட்டுள்ளன. இவை பூமியிலிருந்து செய்திகளைப் பெற்று குறிப்பிட்ட இடங்களுக்கு அச்செய்திகளை ஒலியாகவும் ஒளியாகவும் வழங்குகின்றன.

இத்தகைய செயற்கைக் கோள்களை முதன் முதலில் விண்ணிற்கு அனுப்பிய பெருமை ரஷ்ய நாட்டையே சேரும். முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1957ஆம் ஆண்டு அக் டோபர் 2இல் ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இக்கோள் பூமியை ஒருமுறை சுற்றிவர 90 நிமிடங்கள் பிடித்தன. அதன்பின் இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் - ஐ லைகா எனும் நாயுடன் அனுப்பியது.

அதன்பின் 1958 ஜனவரி 31இல் அமெரிக்கா 'எக்ஸ்புளோரர்’ எனும் செயற்கைக்கோளை உலகைச் சுற்றிவர விண்ணில் செலுத்தியது. அதன்பின் பல செயற்கைக் கோள்களை அமெரிக்காவும் ரஷ்யாவும்

செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களைப் பெறும் ரேடார் கருவிகள்

போட்டி போட்டுக்கொண்டு விண்ணில் செலுத்தின. இப்போட்டியில் ஃபிரான்சும் வேறு சில நாடுகளும் கலந்து கொண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்பின.

இந்தியா முதன் முதலாக 'ஆரியபட்டா’ எனும் செயற்கைக் கோளை 1975ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன்பின் பாஸ்கரா - ரோஹினி, ஆப்பிள், பாஸ்கரா இன்சாட்-இன்சாட்-பி என்ற பெயர்களில் பல செயற்கைக் கோள்களை விண்ணிற்கனுப்பி உலகை வலம் வரச் செய்தது.

இச் செயற்கைக் கோள்கள் விண் ஆய்வோடு செய்தித் தொடர்புக்காகவும் நிலவுலகம் பற்றிய வேறுபல தகவல்களைத் திரட்டுவதற்காகவுமே அனுப்பப்பட்டன. இச் செயற்கைக் கோள்கள் மூலம் இன்று தொலைபேசி வசதிகளையும் வானெலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எளிதாகப் பெற முடிகிறது. செயற்கைக் கோள்கள் மூலம் நில, நீரியல் ஆய்வுகளும் நிகழ்த்தப்படுகின்றன. பூமியினுள் புதைந்துள்ள பல்வேறு வகையான கனிமப் படிவுகளையும் அறிந்து கொள்ளமுடிகிறது. புயல், மழை விவரங்களையும் முன்கூட்டியே அறிய இயல்கிறது. எல்லா வகையிலும் இன்றைய மனிதகுல வளர்ச்சிக்கும் செயற்கைக் கோள்கள் மாபெருந் துணைபுரிந்து வருகின்றன எனலாம்.