இளையர் அறிவியல் களஞ்சியம்/தந்தி
தந்தி : டெலகிராஃப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தந்தி ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறொரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படுகிறது. இச்சாதனம் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகிறது.
இக்கருவியை அமெரிக்கரான மோர்ஸ் என்பவர் 1887ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதனால் இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்ஸ் தந்தி’ என்று அழைக்கப்படுகிறது.
தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்ஸ் சாவி’ எனும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறு முனையில் அச்செய்தி 'மோர்ஸ் ஒலிப்பான்’ எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.
மோர்ஸ் தந்திக் கருவிகளைக் கவனித்துப பார்த்தால், செய்தி அனுப்பும் 'மோர்ஸ் சாவி’ கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு நெம்புகோல் அமைப்பு உண்டு. இதன் மேற்புறமுள்ள எபனைட் எனும் குமிழை விரலால் அழுத்தி கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின் கலத்தில் உள்ள நேர் துருவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் கலத்தின் எதிர் துருவமானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நெம்புகோலானது செய்தி பெறும் இடத்துடன் கம்பி மூலம் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள மோர்ஸ் ஒலிப்பான் கருவியில் இருக்கும் மின் காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச் சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இருபித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணமிருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும்.
இனி, இவ்வாறு தந்திச் செய்தி மோர்ஸ் தந்திக் கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்தசக்தி பெறுகிறது. அக்காந்தச் சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனை கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டு விட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன்மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின்மேல் மோதி ஓசை எழுப்பும். இவ்வாறு சட்டத்திருகு மேலும் கீழுமாகச் சென்று மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும், இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்ஸ் வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துக்களாக மாற்றுவதன் மூலம் செய்தி பெறுவர்.
இன்றைய அறிவியல் துறையின் பெரு வளர்ச்சியின் விளைவாக பல்வேறு வகைப்பட்ட தந்தி முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை, வீடங்டன் முறை பாடட் முறை, கிரீடு முறை என்பனவாகும். டெலிபிரிண்டர் எனும் தொலை அச்சடிப்பு முறை செய்தித் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படங்களை உள்ளது உள்ள வாறே நெடுந்தொலைவு ஒளிநகல் முறையில் (Fax) அனுப்ப முடிகிறது.