இளையர் அறிவியல் களஞ்சியம்/திசு

திசு : நம் உடலின் அடிப்படைக் கூறுக்ளாகிய உயிரணுக்களின் கோவையே 'திசு’ (Tissue) ஆகும். மனித உடல் மட்டுமல்ல, பிற உயிரினங்களும் தாவரங்களும்கூட திசுக்களால் ஆனவையே யாகும்.

சாதாரணமாகத் திசுக்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் நான்கு வகைத் திசுக்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையனவாகும். அவை எப்பிதீலியத் திசுக்கள் என அழைக்கப்படும் சவ்வுப் படலத் திசுக்கள், நரம்புத் திசுக்கள், தசைத் திசுக்கள். இணைப்புத் திசுக்கள் ஆகும். எப்பிதீலியத் திசுக்கள் உடலின் போர்வைபோல் அமைந்துள்ள தோலில் அடிப்புறப் பகுதியிலும் மூக்கு, வாய், வயிறு போன்ற பகுதிகளில் படர்ந்துள்ள சவ்வுப் படலங்களிலும் அமைந்துள்ளன. நரம்புகளில் அமைந்துள்ள திசுக்கள் மற்ற திசுக்களைவிடச் சற்று நீளமானதாகும். அவை மென்மைத் தன்மை கொண்ட மெல்லிய திசுக்களாகும். உடலின் மிக முக்கிய உறுப்புகளான கைகளையும் கால்களையும் நாம் விரும்பும் வண்ணம் கட்டவும் நீட்டவும் துணை செய்யும் திசுக்கள் தசைத் திசுக்களாகும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இணைத்து முறைப்படி இயங்க உதவி செய்யும் திசுக்கள் இணைப்புத் திசுக்கள் ஆகும்.

எதிர்பாராத நிலையில் நாம் விபத்துக்கு ஆளாக நேரும்போது காயங்கள் ஏற்படலாம் அல்லது உடற் பகுதிகளில் சேதமோ பழுதோ உண்டாகலாம். அப்போது விகாரத் தோற்றம் தரும் உடம்புப் பகுதிகளில் உடம்பின் மற்ற பகுதிகளில் உள்ள திசுக்களை எடுத்து ஒட்ட வைக்கலாம். அவை எளிதாக ஒட்டிக்கொண்டு வளர்ந்து, ஏற்பட்ட ஊனத்தை மறைத்து அழகூட்டிபழைய நிலையை எளிதாக ஏற்படுத்தும். இதுவே ஒட்டு மருத்துவம் என அழைக்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற நோய்களின் தன்மைகளை ஆராய உடலின் திசுக்களைத் தனியே பிரித்தெடுத்து ஆராய்வதுண்டு. இவற்றைச் சோதனைக் குழாய்கள் மூலம் செயற்கையாக வளர்க்கவும் முடியும். இதுவே 'திசு வளர்ப்பு' (Tissue cultuie) என அழைக்கப்படுகிறது.

நம் உடலைப் போன்றே பிற உயிரினங்களான விலங்குகளும் தாவரங்களும் திசுக்களாலேயே அமைந்துள்ளன. தாவரத் திசுக்களையும் விலங்குத் திசுக்களையுய தனியே பிரித்தெடுத்து வளர்க்க முடியும். இத்துறையில் உயிரியல் விஞ்ஞானம் வெகுவாக வளர்ந்துள்ளது.