இளையர் அறிவியல் களஞ்சியம்/துரு

துரு : ஈரமான இடங்களில் உள்ள இரும்பு போன்ற உலோகப் பொருட்கள் மீது பழுப்பு நிறத் துகள்கள் இருப்பதை அடிக்கடி காணலாம். இதுவே துரு என அழைக்கப்படுகிறது. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஈரமும் இணைந்து இரும்பு மீது வினைபுரிந்து துருவை உருவாக்குகின்றன. துரு உருவாக சில நாட்களாகும். தொடர்ந்து துரு ஏற்படுவதன் மூலம் பொருள் அரிப்புக்கு ஆளாகும். இரும்பின் மீது தண்ணீரோ அல்லது பிராண வாயுவோ தனியே படும்போது துரு உருவாவதில்லை. இவை இரண்டும் இணைந்த நிலையில் இரும்பில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதன் மூலமே துரு ஏற்படுகிறது. நீரினுள் இருக்கும் இரும்புக்குழாய்கள் மெதுவாகத் துருப்பிடிப்பதற்குக் காரணம் அந்நீரினுள் கரைந்திருக்கும் வாயுக்களேயாகும்.

சில உலோகங்களில் துரு ஏறுவதில்லை. அவற்றுள் முக்கியமான உலோகங்கள் துத்தநாகம், குரேமியம், வெள்ளியமாகும். இவற்றை இரும்பு போன்ற உலோகப் பொருட்கள் மீது பூசிவிட்டால் அவை துருவால் பாதிக்கப்படுவதில்லை.

இரும்புப் பெட்டி போன்றவற்றிற்கு வண்ணப்பூச்சு பூசுவதன் மூலம் துருப்பிடிக்காமல் காக்க இயலும். எண்ணெய்ப்பூச்சு மூலமும் துரு ஏறாமல் தடுக்க முடியும். துருக்கறைகள் துணிகளின் மேல்பட்டால் விரைவில் கறை பட்ட துணிப்பகுதி இற்று கிழிந்துவிடும். துருக் கலந்த உணவை உட்கொள்ள நேரிட்டால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும்.

எனவே, துருவினால் ஏற்படும் பொருள் இரண்டாம் நிலைப் பொருளாகும் (Secondary Product). இது புறப்பரப்பில் ஒட்டாது. மற்றும் ஆக்சிஜனால் மேலும் மேலும் துரு ஏற துணை செய்கிறது.