இளையர் அறிவியல் களஞ்சியம்/நச்சுக்கொல்லி

நச்சுக்கொல்லி : உடலில் நோயைத் தோற்றுவிக்கும் நச்சுக்கிருமிகளைக் கொல்லும் குணமுள்ள பொருட்கள் நச்சுக் கொல்லிகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கை நச்சுக் கொல்லிகளாக சூரியக்கதிர்களும் உப்பும் சர்க்கரையும் அமைந்துள்ளன.

முதன்முதலில் உடலில் நோயை உண்டு பண்ணுபவை ஒருவித நச்சுக் கிருமிகளே என்பதை பாஸ்டர் எனும் ஃபிரெஞ்சு விஞ்ஞானி 1860ஆம் ஆண்டில் கண்டறிந்தார். உடலில் ஏற்படும் காயங்களில் சீழ்பிடிக்கக் காரணம் காயங்களில் கிருமிகள் சேர்ந்து பெருகுவதேயாகும் என்பதை 1868 ஆம் ஆண்டில் லிஸ்டர் எனும் இங்கிலாந்து அறிவியல் ஆய்வறிஞர் கண்டுபிடித்தார். இத்தகைய தீங்கு தரும் நச்சுக்கிருமிகளைக் கொல்ல பல புதிய நச்சுக்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் கார்பாலிக் அமிலம், டிங்க்சர் அயோடின், ஹைட்ரஜன் பராக்சைடு, போரிக் அமிலம், பொட்டாசியம் பர்மாங்கனேட் முதலியவை முக்கிய மருந்துகளாகும். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இருக்கும் நச்சுக்கிருமிகளைக் கொல்வதோடு புதிய கிருமிகள் மேலும் தொற்றாமலும் தடுக்கப்படுகின்றன.