இளையர் அறிவியல் களஞ்சியம்/பல்

நம் வாயின் மேலும் கீழுமாக இரு வரிசைகளில் 32 பற்கள் அமைந்துள்ளன. இவை உண்ணும் உணவை நன்கு அரைத்து மென்று விழுங்கவும் திருத்தமாகப் பேசவும் உதவுவதோடு முகத்துக்கு அழகையும் தருகின்றன.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப்பின் பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இவை 'பால் பற்கள்’ என அழைக்கப்படும். இப் பால் பற்கள் மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் மேல் தாடையிலும் கீழ்த்தாடையிலுமாக இருபது பற்கள் முளைத்துவிடும். நிலையற்ற இப்பற்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒவ்வொன்றாக விழத் தொடங்கும் பல் விழுந்தவிடத்தில் புதிய பற்கள் முளைக்கும். இவை உறுதிமிக்கவை; நிலையானவை. ஆறு ஆண்டுகட்குப் பின்னர் புதிதாகக் கடைவாய்ப் பற்கள் முளைக்கும். இப்பற்கள் முதுமை வரை விழுவதில்லை.

இவ்வாறு மேல் தாடையில் 16 பற்களும் கீழ்த் தாடையில் 16 பற்களுமாக மொத்தம்32 பற்கள் வாயில் உருவாகி நிலைபெறுகின்றன. இவற்றுள் மேல், கீழ்த் தாடைகளின் முன் வரிசையில் பகுதி நான்கு முன் பற்கள் வெட்டுப் பற்களாக அமைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை வெட்டுவதற்குப் பயன்படுகின்றன. இரண்டு கோரப் பற்கள் அல்லது நாய்ப் பற்களும் 4 முன் கடைவாய்ப் பற்களும் அமைந்துள்ளன. இவை நாம் உண்ணும் உணவை கிழிப்பதற்குப் பயன்படுகின்றன. வாயின் உட்பகுதியில் அமைந்துள்ள 6 கடைவாய்ப்பற்கள் உணவை நன்கு அரைப்பதற்குப் பயன்படுகின்றன.

ஒவ்வொரு பல்லும் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. அவை தலைப்பகுதி, கழுத்துப் பகுதி, வேர்ப் பகுதிகளைக் கொண்டதாகும். வெண்மையாகத் தோன்றும் பகுதி 'எனாமல்' எனப்படும். பற் சிப்பியால் உருவாக்கப்பட்டதாகும். இதன் மேற்பகுதி முழுவதும் சுண்ணாம்புப் பொருளால் பூசப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு இரத்த வோட்டம் ஏதும் வருவதில்லை. இது நாளடைவில் தேய்ந்து போக நேரின் அத்தேய்வை மீண்டும் பழைய நிலையில் பாதுகாப்பதில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். கரகரப்பான பொருட்களைக் கொண்டு பல் தேய்ப்பதாலேயே பெரும்பாலும் தேய்வடைகிறது. இதைத் தவிர்க்கமிருதுவான நாருடைய பச்சை மரக் குச்சிகளையோ அல்லது அதற்கென உள்ள பற்பசையோடு கூடிய பல் புருசுகளையோதான் பல் துலக்கப் பயன்படுத்த வேண்டும். அதையும் கீழ் மேலாகவே தேய்க்க வேண்டும். அப்போதுதான் பற்களுக்கிடையேயுள்ள அழுக்குகள் நீங்கும். ஒவ்வொரு

பல்லின் அமைப்பு (கோரைப்பல்)

முறையும் உணவு உண்டபின் வாயை நன்கு கொப்பளிப்பதுடன் காலையிலும் இரவிலும் இருமுறை பல் துலக்குவது நல்லது.

எனாமலின் அடிப்பகுதியே தந்தினி அல்லது தந்தப் பகுதியாகும். இதுவே பல்லின் கழுத்துப் பகுதி. இது எலும்புபோல் உள்ளதாகும். இதன் உட்புறத்தில் நரம்புகளும் இரத்த நாளங்களும் அமைந்துள்ளன. அவற்றாலான பற்கூழ் இதனுள் பொதியப்பட்டுள்ளது. இஃது மிருதுவானதாகும்.

மூன்றாவது அடிப்பகுதியே வேர்ப்பகுதியாகும். இவ்வேர்ப் பகுதி தாடை எலும்புகளிலுள்ள குழிகளில் ஒருவகைக் காரைப் பொருளால் இறுக்கமாகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்பகுதி ஈறு எனும் கெட்டிச் சதைப் பொருளால் அழுத்தப்பட்டிருக்கும். இதனால் பல் எளிதாக விழுந்து விடுவதில்லை. சில பற்கள் ஒரே வேரையும் மற்றும் சில பற்கள் இரண்டு வேர்களையும் கொண்டு அமைந்துள்ளன.

மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டி உயிரினங்களுக்கும் பற்கள் வாயில் கீழ், மேல் தாடைகளில் அமைந்துள்ளன. மீன்கள். சில வகை விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு அவற்றின் உணவுப் பழக்கத்திற்கேற்ப அண்ணம், குரல் வளை போன்ற வெவ்வேறு இடங்களில் பற்கள் அமைந்துள்ளன. புலி போன்ற மிருகங்கள் பிற பிராணிகளின் இறைச்சியைக் கிழித்து உண்ணும் பழக்கமுடையனவாதலால் அதற்கேற்ப இவற்றின் பற்கள் கோரைப் பற்களாக நீண்டும் ஒரளவு வளைந்தும் அமைந்துள்ளன. எலி, அணில் போன்றவை பொருட்களைக் கொறித்து உண்பதால் அவற்றின் பற்கள் கூர்மையுடையனவாக உள்ளன. பாம்பின் பற்கள் உட்புறமாக வளைந்து அமைந்துள்ளது. காரணம் தாங்கள் பிடிக்கும் இரைகள் எளிதாகத் தப்பாமல் இருக்க வேண்டியும் பிடித்த இரைகளின் மீது நஞ்சைச் செலுத்தவுமேயாகும். யானை வாயின் இரு புறங்களில் நீண்டு துருத்திக் கொண்டிருக்கும் தந்தங்கள் பற்களேயாகும். பறவைகளுக்குப் பற்கள் இல்லை.