இளையர் அறிவியல் களஞ்சியம்/பாஸ்கரர்
பாஸ்கரர் : இவரது முழுப்பெயர் பாஸ்கராச்சாரியார் என்பதாகும். பண்டைக் காலத்தில் புகழ்பெற்றுத் திகழ்ந்த இந்திய அறிவியல் மேதைகளில் தலையாயவர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் கணிதத்தில் மட்டுமல்லாது வானவியலிலும் வல்லுநராகத் திகழ்ந்தார்.
இவர் 1114ஆம் ஆண்டில் பீஜப்பூர் எனுமிடத்தில் பிறந்தார். இவர் தமது கல்வியை அக்காலத்தில் கணித, வானவியல் ஆய்வுகளின் வளர்ப்புப் பண்ணையாகத் திகழ்ந்த உஜ்ஜயினியில் பெற்றார். கணித வானவியலோடு சோதிடத் துறையிலும் தனித்திறன் பெற்ற வல்லுநரானார். நாளடைவில் இத் துறைகளைப் பற்றி நூல் பல எழுதலானார்.
விரைவிலேயே அங்குள்ள வானவியல் ஆய்வுக் கூடமொன்றின் தலைவரானார். இதன்மூலம் இவரது ஆராய்ச்சிப் புதுப் பரிமாணம் பெற்றது. இவர் கணிதம் குறித்து ‘லிலாவதி' எனும் அரிய நூலை எழுதினார். எண் கணிதம் பற்றிய இந்நூல் இன்றும் வியக்கத்தக்க அறிவியல் படைப்பாகப் போற்றப்படுகிறது, இஃது 1587ஆம் ஆண்டிலேயே பேரரசர் அக்பர் முயற்சியால் சக்கரவர்த்தி என்பவரால் பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டது. இவர் இயற்றிய மற்றொரு அரிய நூல் 'சித்தாந்த சிரோமணி’ என்பதாகும். இது வானவியல் ஆராய்ச்சி பற்றி நுணுக்கமாக விளக்கும் நூலாகும். இதன் ஒரு பகுதியை ஹென்றி தாமஸ் கோல்புருக் என்பவர் 1817ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இந்நூல் வெளியான பின்பே இவரது கணிதத் திறமையும் வானவியல் புலமையும் மேனாட்டவர்க்குத் தெரியவந்தது. பாஸ்கரர் கணிதம் வானவியல், சோதிடக் கலை முதலாக ஆறு நூல்கள் எழுதியுள்ளார். இவரது பெயரைப் போற்றும் வகையில் இந்தியச் செயற்கைக் கோள் ஒன்றுக்கு 'பாஸ்கரா’ என இவர் பெயர் இடப்பட்டுள்ளது.