இளையர் அறிவியல் களஞ்சியம்/பிளேக்
பிளேக் : இது ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோய் முதலில் எலிகளைத் தாக்கி வளர்கிறது. எலியின் உடலில் தெள்ளுப்பூச்சி வடிவில் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. எலி இறந்தபின் இப்பூச்சிகள் வெளியேறி மற்ற எலிகளையும் மனிதர்களையும் பீடிக்கிறது. இப்பூச்சி மனிதர்களை கடிப்பதன் மூலம் பிளேக் உருவாகிறது. கொறிக்கும் பழக்கமுள்ள அணில் போன்ற பிராணிகள் மூலமும் இந்நோய் பரவுவது உண்டு.
இந்நோயால் பீடிக்கப்பட்ட மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படும். கடுங் குளிரும் உண்டாகும். நோயின் கடுமையைக் குறிக்கும் அறிகுறியாக சருமத்தின் மீது புள்ளிகள் எழும். இப் புள்ளிகள் கருநிறமாக இருக்கும். தொடையிலும் கக்கத்திலும் கட்டிகளும் உண்டாகும். உடலில் உண்டான கட்டிகள் பதினைந்து நாட்களுக்குள் சீழ்பிடித்து வேதனை தரும். இந்நிலையில் நோயாளி மரணமடைய நேர்கின்றது. இதனால் இந்நோயைக் 'கொள்ளை நோய்’ என்றே மக்கள் அழைக்கின்றனர்.
இந்நோயின் கொடுமை பதினான்காம் நூற்றாண்டில் உலகில் உச்சநிலை அடைந்தது. இந்நோய் முதலில் மத்திய ஆசியாவில் தொடங்கியது. அங்கிருந்து கருங்கடல் பகுதியை எட்டியது. அங்கிருந்து ஐரோப்பா வெங்கணுமிருந்த துறைமுகப்பகுதிகளை அடைந்தது. ஐந்து ஆண்டுகளுக்குள் ஐரோப்பா கண்டம் முழுமையும் இந்நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோரை பலி கொண்டது.
அப்போது நோய் கண்டவர் முதலில் பீதியடைவது தவிர்க்க முடியாததாக இருந்தது. மற்றவர்க்குத் தொற்றாமலிருக்க நோயாளி உடனடியாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நோய் மற்றவர்க்கு ஏற்படாமல் தடுக்கவும் ஏற்பட்டால் பரவாமலிருக்கவும் எல்லாவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நோயாளி இல்லங்களிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டார். மற்றவர்களுடன் கலந்துறவாடாமல் முற்றாகத் தடுக்கப்பட்டார். உணவு முதலியன அதற்கென நியமிக்கப்பட்ட சிறப்புப் பணியாளர் மூலமே வழங்கப்பட்டன. பிளேக் நோய் கண்டவர் இறந்தவுடன் அவர் உடைகளோடு அவர் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களும் எரிக்கப்பட்டன.
மீண்டும் பிளேக் நோய் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தலைதூக்கி மீண்டும் வெறியாட்டம் ஆடியது. லியோன், ஃபிரான்ஸ் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தொகையில் பாதிப்பேர் இக் கொடிய நோய்க்குப் பலியாயினர். மிலானில் மட்டும் 85 ஆயிரம் பேர் மடிந்தனர். வெனிசியக் குடியரசில் ஐந்து இலட்சம் பேர் இறந்தனர்.
இன்று இந்நோய் உலகெங்கும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோய் தோன்றாமல் தடுக்க அனைத்துப் பாதுகாப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்காக எலிப் பெருக்கம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிளேக் நோய் பீடிக்காமல் இருக்க தடுப்பு ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம் மருந்தை ஊசி மூலம் உடலுள் செலுத்திக் கொண்டால் சுமார் ஓராண்டுக் காலம் இந் நோயால் பாதிப்பு ஏற்படாது.