இளையர் அறிவியல் களஞ்சியம்/புறஊதாக் கதிர்
சூரியஒளி வெண்மையாகத் தோன்றினும் அதில் ஏழு வண்ணங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் ஊதாநிறமும் ஒன்று. கண்ணுக்கு தெரியும் இவ்வூதா வண்ணம் போன்றே, கதிரவனிடமிருந்து கண்ணுக்குப் புலனாகாத வேறொரு ஊதா வண்ண ஒளியும் வெளிப்படுகிறது. இதையே ‘புற ஊதாக் கதிர் (Ultra violet) என்று அழைக்கின்றனர்.
சூரியனின் ஏழு வண்ணங்களில் கண்ணுக்குத் தெரியும் ஊதா வண்ணக் கதிர்களைவிட, கண்ணுக்குத் தெரியாத 'புற ஊதாக் கதிர்’ குறைந்த அலை நீளமுடையதாகும். ஷீலே எனும் விஞ்ஞானி சூரியக்கதிர்களுக்கு நேராக ஒரு போட்டோ தட்டை நீட்டினார். அது சிறிது நேரத்தில் கறுத்துவிட்டது. இக் கருமையை ஏற்படுத்திய கதிரே புற 'ஊதாக் கதிர்’ என்பதைக் கண்டறிந்து கூறினார். இப்போதுங்கூட சூரிய ஒளியில் இருக்கும்போது நம் முகம் கறுத்துவிடும். இதற்குக் காரணம் நம் முகத்தின் மீது புற ஊதாக்கதிர்படுவதேயாகும்.
சாதாரண சூரியக்கதிர்களைப் போன்றே புற ஊதாக்கதிர்களை பிரதிபலிக்கச் செய்யவோ, கோட்டமடையச் செய்யவோ அன்றி சிதறச் செய்யவோ முடியும். ஆனால், அக்கதிர் கண்களுக்கு மட்டும் புலனாவதில்லை.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர் முழுமையும் பூமியைச் சென்றடைவதில்லை. கதிரவனைச் சுற்றியுள்ள பல்வேறு வகையான வாயுக்கள் பெரும்பாலும் கதிர்களை உறிஞ்சிக் கொள்கின்றன. தரைப்பகுதியைச் சூழ்ந்துள்ள காற்றும் புகையும் புறஊதாக் கதிர்களை மேலும் ஓரளவு உறிஞ்சி விடுகின்றன. மீதமுள்ள சிறிதளவு புற ஊதாக்கதிர்களே நம்மை வந்தடைகின்றன. புறஊதாக்கதிர் முழுமையாக நம் மீதுபட்டால் நாம் பெரும் பாதிப்புக்கு ஆளாகிவிடுவோம். நம் உடலிலுள்ள திசுக்கள் அதனால் பெருங்கேட்டிற்கு ஆளாகும்.
மிகச்சிறு அளவாக நம்மை வந்தடையும் புற ஊதாக்கதிரை அதிக நேரம் பார்க்க நேரின் அஃது பார்வைக் கோளாறை ஏற்படுத்தி விடும்.
புற ஊதாக்கதிர் நமக்குப் பல வகைகளில் உதவக்கூடியதாகவும் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மருத்துவத்துறையில் பெரிதும் பயன்படுகிறது. புண்களை விரைந்து ஆறச் செய்கிறது. கணைநோய் மற்றும் சரும நோய்களுக்குப் புற ஊதாக்கதிர் மூலம் செய்யும் மருத்துவம் பெரும்பயனை அளிக்கிறது. எலும்பும் நரம்பும் பல்லும் நன்கு வளர்ந்து வலுவடைவதற்குத் தேவையான வைட்டமின் 'D' யை புற ஊதாக்கதிர்கள் உண்டாக்குகின்றன. பால், முட்டை போன்றவற்றின்மீது இக்கதிர்கள் படுவதால் அவை மிகுந்த சத்துடையவைகளாக ஆகின்றன எனக் கண்டறிந்துள்ளனர். திருத்தப்படும் அவை மிகுந்த போலி காசோலைகளைக் கண்டறிய புற ஊதாக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன.
சிலவகை சருமப்புற்று நோய்கள் ஏற்பட புற ஊதாக்கதிர்களே காரணமாகின்றன என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. முகப்பவுடர், கிரீம் போன்ற அழகு சாதனங்களைப் பயன் படுத்தும் போது தோலில் உள்ள சில திசுக்கள் புறஊதாக்கதிரின் ஆளுகைக்கு உட்பட்டு சருமப்புற்று நோய்கள் ஏற்படுகின்றன.