இளையர் அறிவியல் களஞ்சியம்/பூமி
பூமி : நில உலகாகிய பூமி ஒரு கிரகமாகும் இது சூரியனைச் சுற்றிவரும் ஒன்பது கிரகங்களுள் ஒன்றாகும். சூரியனிலிருந்து பூமி சுமார் பதினைந்து கோடி கி.மீ. நெடுந்தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ளது. சூரியனிலிருந்து தெறித்து விழுந்து குளிர்ந்த பகுதியே பூமியாகும்.
பூமியின் வடிவம் மேல் முனையும் கீழ் முனையும் சற்று ஒடுங்கிய ஆப்பிள் பழத்தைப் போன்று உருண்டை வடிவுடையதாகும். பூமி தனது அச்சில் தானாகச் சுழல்கிறது. இவ்வாறு பூமி தனக்குத்தானே சுற்றுக் கொள்ள 25 மணிகள் 56 நிமிடங்கள் 4.095 விநாடிகள் பிடிக்கிறது. இச்சுழற்சியோடு சூரியனையும் பூமி சுற்றி வருகிறது. இவ்வாறு சூரியனை ஒரு முறை சுற்றிவர பூமிக்கு ஓராண்டு பிடிக்கிறது. பூமி பம்பரம் போன்று நேராகச் சுழல்வதில்லை.28½0 சாய்வாகச் சுழல்கிறது. இதனாலேயே நான்கு பருவகாலங்கள் மாறி மாறி வருகின்றன. பூமியின் விட்டம் 12,880 கி.மீ ஆகும்.
பூமியின் மேற்பரப்பு மூன்று பங்கு நீராலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதாவது உலகின் மேற்பரப்பில் நீர் அளவு 70%, நிலப்பகுதி 30% ஆகும். உலகின் நிலப்பரப்பு ஏழு கண்டப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆசியா, ஆஃப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா. ஆஸ்திரேலியா, அண்டார்க்டிக்கா ஆகியனவாகும்.
பூமியின் மேற்பகுதியில் தரைப் பகுதியி லிருந்து சுமார் 960 கி.மீ. தூரம் உயரம்வரை வாயு மண்டலம் அமைந்துள்ளது. இவ்வாயு மனிதர்களும் பிற உயிரினங்களும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான காற்றைத் தந்து உதவுகிறது. அத்துடன் சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பக் கதிர்களின் வெப்பத்தைக் குறைக்கிறது. புற ஊதாக் கதிர்கள் வாயு மண்டலம் வழி வருவதால் அவற்றால் நமக்கு ஏற்படக்கூடிய தீங்கின் கடுமை வெகுவாகக் குறைகிறது. நிலத்தை நோக்கி வரும் எரி நட்சத்திரங்களை காற்று உராய்வினால் தேய்மானம் அடையச் செய்து நம்மைக் காக்கிறது.
பூமியின் மேற்பகுதி 'புறணி' என்று அழைக்கப்படுகிறது. இஃது 80 கி.மீ. கனமுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மண், பாறைத் துண்டுகளான பகுதி இதற்குக் கீழேயுள்ள பகுதி கடினப் பாறைப் பகுதியாகும். இந்த இரண்டாம் பகுதி 2,800 கி.மீ. கனமுடையதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கும் கீழாக இரும்பு, நிக்கல் போன்ற கடின உலோகப் பொருட்களைக் கொண்ட பகுதி அமைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பு கற்பனைக் கோடுகளால் அளவிடப்பட்டுள்ளது. வட, தென் துருவங்களுக்கு இடையே சமதூரத்தில் கிடையாக அமைந்துள்ள கோடு பூமத்திய ரேகையாகும்.
பூமத்திய ரேகைக்கு இணையாக பூமியைச் சுற்றிலும் செல்வதாக அமைக்கப்பட்டுள்ள கோடுகள் 'அட்ச ரேகை' எனப்படும். தென் துருவத்துக்கும் வடதுருவத்துக்கும் இடையேயுள்ள தூரம் 90 சம பாகங்களாகப் பகுக்கப்பட்டு கோடிடப்பட்டுள்ளது. இடத்தையும் நேரத்தையும் கணிக்க வட்டக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இஃது 'தீர்க்க ரேகை' எனப்படுகிறது. கிழக்குப் பகுதியில் உள்ள இக்கோடுகள் 'கிழக்குத் தீர்க்கரேகை' எனவும் மேற்குப் பகுதிக்கோடுகள் மேற்கு தீர்க்கரேகை எனவும் அழைக்கப்படுகிறது.