இளையர் அறிவியல் களஞ்சியம்/மகரந்தச் சேர்க்கை
மகரந்தச் சேர்க்கை : 'பாலினேஷன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மகரந்தச் சேர்க்கை மூலமே தாவரங்கள் இனவிருத்தி
செய்கின்றன. மகரந்தம் என்பது உருண்டை வடிவமான மஞ்சள் நிறமுள்ள நுண் பொடியாகும். மலர்களில் நீண்ட பை போன்ற ஒன்றில் நிறைய மகரந்தப் பொடி இருக்கும்.
மகரந்தப் பை முற்றி வெடித்த பின் அப்பொடி மலர்ப் பகுதிகளில் பரவி ஒட்டிக் கொண்டிருக்கும். தன் மகரந்தச் சேர்க்கை மலரில் தேன் பருக வரும் வண்டுகள் தேனீக்களின் கால்களில் ஒட்டிக் கொண்டு, மலரில் உள்ள சூல் பகுதியைச் சென்றடையும். இவ்வாறு மகரந்தப் பொடித் துகள் சூல்பகுதியை அடைவதன் மூலமே காய் காய்க்கிறது. இதுவே மகரந்தச் சேர்க்கையாகும். பறவைகளும் காற்றும் ஓடும் நீரும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்குத்துணைபுரியும் தேனீக்கள், வண்டுகள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் வகையில் மலர்களில் சுவைமிகு தேனும் வண்ண நிறமும் அமைந்துள்ளன.
மகரந்தச் சேர்க்கை 'தன் மகரந்தச் சேர்க்கை', 'அயல் மகரந்தச் சேர்க்கை’ என இரு வழிகளில் நடைபெறுகிறது. ஒரு பூவில் உள்ள மகரந்தப் பொடியானது அதே பூவின் நடுப்பகுதியில் உள்ள சூலகத்தின் சூல் உறுப்பின் தலைப்பகுதியில் விழுந்தாலும் அல்லது அதே செடியின் வேறொரு பூவின் சூல்முடி மீது விழுந்தாலும் அது தன் மகரந்தச் சேர்க்கையாகும். ஒரு செடியில் உள்ள பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சார்ந்த வேறொரு செடிப் பூவின் சூல்முடியில் மகரந்தப் பொடி விழுந்தால் அது அயல் மகரந்தச் சேர்க்கையாகும். இருவிதமான மகரந்தச் சேர்க்கைகளிலும் அயல் மகரந்தச் சேர்க்கையே சிறந்ததாகும். இதன்மூலம் நல்ல பயன் கிடைக்கும்.
தென்னை போன்ற மரங்களிடையேயும் நெல், கம்பு போன்ற பயிர்களிடையேயும் மகரந்தச் சேர்க்கை ஏற்பட காற்று துணை புரிகிறது. நீர்த் தாவரங்களிடையே மகரந்தச் சேர்க்கை ஓடும் நீர் மூலமே ஏற்படுகிறது.