இளையர் அறிவியல் களஞ்சியம்/மருத்துவமனை
மருத்துவமனை : ஆங்கிலத்தில் 'ஹாஸ்பிட்டல்’ என்று அழைக்கப்படும். அமைப்புகளே தமிழில் 'மருத்துவ மனை’ என அழைக்கப்படுகின்றன. சாதாரண நோய்களுக்கு மருத்துவரிடம் மருந்து பெற்று வீட்டிலிருந்தபடியே மருந்துண்டு நோய் போக்கிக் கொள்ளலாம். சில சமயம் கடுமையான நோயாலோ அல்லது விபத்துக்கு ஆளானாலோ மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசிய மேற்படும். ஏனெனில் மருத்துவமனையில் மருத்துவரின் மேற்பார்வையும் தாதியர்களாகிய நர்சுகளின் கவனிப்பும் சிகிச்சைக்குரிய கருவிகளும் இருந்து கொண்டேயிருக்கும்.
மருத்துவமனைகள் மிகச் சிறந்த சுகாதார முறையோடு அமைக்கப்பட்டிருக்கும். நல்ல காற்றோட்டமும் சுத்தமும் இருக்கும். அமைதியான சூழ்நிலை நிலவும். கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. இதனால் நோயாளி முறையான சிகிச்சையும் நல்ல ஓய்வும் பெற முடிகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் நோயாளியையும் விபத்துக்கு ஆளானவர்களையும் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு வர 'ஆம்புலன்ஸ்’ வண்டிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். அதில் வேண்டிய மருந்துகளும் சிகிச்சைக் கருவிகளும் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். எல்லாவித நோய்களுக்குமாக அமைந்துள்ள மருத்துவமனை 'பொது மருத்துவமனை’ (General Hospital) என அழைக்கப்படும்.
ஒவ்வொரு வகை நோய்க்கும் தனித்தனி மருத்துவ மனைகள் உண்டு, தொற்று நோயாளிகளிடமிருந்து தொற்றுநோய் மற்றவர்கட்குப் பரவும் வாய்ப்பிருப்பதால் தொற்று நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் தனியாக இருக்கும். இவை அதற்கேற்ற தனி ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும். அதே போன்ற மன நோயாளிகளுக்கென தனியாக மனநோய் மருத்துவமனைகள் உள்ளன.
மருத்துவக் கல்வி கற்கவும் மாணவர்கள் எல்லாவித நோய்களையும் அவற்றின் தன்மை யினையும் நேரடியாக நோயாளிகளிடமிருந்து தெரிந்து கொள்வது அவசியம். இதற்காக மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் பொது மருத்துவமனைகளையொட்டியே அமைக்கப்படுகின்றன.