இளையர் அறிவியல் களஞ்சியம்/மலேரியா
மலேரியா : மனிதனுக்கு வரும் காய்ச்சல்களில் பலவகை உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப அவை பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒருவகைக் காய்ச்சல் மலேரியாக் காய்ச்சலாகும். காய்ச்சலோடு கடுங் குளிரும் உண்டாகும். அதுவும் விட்டு விட்டு வருவதால் இஃது 'முறைக்காய்ச்சல்’ என அழைக்கப்படுவதும் உண்டு.
இது ஒரு கடுமையான நோயாகும். மற்ற நோய்களைக் காட்டிலும் இதில் உயிரிழப்பு அதிகம். இந்நோய் மனிதர்களுக்கு மட்டுமின்றி குரங்குகளுக்கும் கால்நடைகட்கும் மற்றும் பறவை போன்ற பிற உயிரினங்களுக்கும் வருவதுண்டு.
மலேரியா நோய் கொசுக்களால் பரப்பப்படும் ஒருவகைத் தொற்று நோயாகும். ஒருவரிடமிருந்து மற்றவர்க்கும் பிற பிராணிகளுக்கும் கொசு மூலம் பரவுகின்றன. இந்நோயை
எல்லாக் கொசுக்களும் பரப்புவதில்லை. நன்னீரில், உற்பத்தியாகி வளரும் 'அனோ பிலிஸ்’ எனும் ஒருவகை கொசு மூலமே இந் நோய் பரவுகிறது.
ஒட்டுண்ணி 'பிளாஸ்மோடியம், எனும் நுண்ணுயிர்க் கிருமிகளே இந்நோயைத் தோற்றுவிக்கின்றன. இந்நோய் கண்டவரைக் கடிக்கும் அனோபிலிஸ் கொசு மற்றவரைக்கடிக்கும் போது அவரது இரத்தத்தில் நோய்க்கிருமிகளை கலந்து விடுவதால் கொசுக்கடிக்காளானவர்க்கு மலேரியாக் காய்ச்சல் வருவது தவிர்க்க முடியாததாகிறது. இரத்தத்தில் கலக்கும் ஒட்டுண்ணிக் கிருமிகள் விரைந்து பெருகி நோயைக் கடுமையாக்குகின்றன.
மலேரியாக் காய்ச்சல் கண்டவருக்குக் கடுமையான காய்ச்சலும் குளிரும் ஏற்படும். இதனால் உடல் நடுங்கும். உடல் மிகுந்த வெப்பமுடையதாக ஆகும். சில சமயம் கண்கள் சிவப்பேறிவிடும். சிலமணி நேரங்களுக்குப் பிறகு குப்பென்று வேர்க்கும். வேர்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் காய்ச்சலும் குளிரும் குறைந்துவிடும். சிலமணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் பழைய காய்ச்சல், நடுக்க நிலை ஏற்படும். சிலபோது இந்நோய் உச்சத்தை அடையும்போது நோயாளி மரணிக்க நேர்கிறது. மலேரியாக் காய்ச்சல் கண்டவுடன் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றால் விரைந்து குணமடைய முடியும்.
இந்நோய் வராமல் தடுப்பதற்குச் சில வழிமுறைகளைப் பேணி நடக்க வேண்டும். நோயைப் பரப்பும் அனோபிலிஸ் போன்ற கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்காக கொசு உற்பத்திக்களங்களான நீர் நிலைகளில் கொசு ஒழிப்புக்கான மருந்து தெளிக்க வேண்டும். கூடியவரை உறங்கும்போது கொசு வலைகளையே பயன்படுத்த வேண்டும்.