இளையர் அறிவியல் களஞ்சியம்/மின்னல்

மின்னல் : இயற்கையாக வானத்தில் திடீரென தோன்றி மறையும் பேரொளியையே மின்னல் என்கிறோம்.

மின்னல்

முன்பெல்லாம் வானத்தில் மின்ன ல் தோன்றுவது தெய்வத்தின் செயற்பாடுகள் என மக்கள் நம்பினர். அறிவியல் வளர்ச்சியின் விளைவாக மின்னல் என்பது ஆற்றல் மிக்க மின்பொறியே என்ற கருத்து உருப்பெற்று நிலைத்தது. மின்னலுக்கும் மின்சாரத்துக்குமிடையேயுள்ள தொடர்பை முதன் முதலில் ஆய்ந்து அறிந்தவர் அமெரிக்க அறிவியல் அறிஞரான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆவார். மின்சாரத்தால்தான் மின்னல் உருவாகி தோன்றி மறைகிறது என்பது அவரது கண்டுபிடிப்பாகும்.

மழைக்காலத்தில் உருவாகும் இடிமேகம் முழுவதுமே மின்னேற்றமடைகிறது. எதிர் மின்னேற்றம் பெற்ற மற்றொரு இடிமேகம் இதன் அருகே வரும்போது மின்னேற்றமுற்ற இரு மேகங்களுக்கிடையே திடீரென மின்சாரப் பொறி எழுகிறது. இதுவே இரு மேகங்களுக்கிடையே ஏற்படும் மின்னல். இதன் நீளம் மிக நீண்டதாகும். அவ்வாறே மழை மேகம் பூமிக்கருகில் வரும்போது மின் தூண்டலால் பூமி மின்னேற்றம் பெருகிறது. இவை இரண்டுக்கும் இடையிலுள்ள காற்று இரண்டும் மோதிக் கொள்ளாமல் தடுப்புச் சுவர் போல் காக்கிறது. காற்றுத் தடுப்பையும் மீறிச் சில சமயம் இடி மேகத்திற்கும் பூமிக்குமிடையே எதிர் மின்னேற்றம் காரணமாகப் பொறி எழும். இதுவே பூமிக்கும் இடிமேகத்துக்குமிடையே ஏற்படும் மின்னல் ஆகும். இது பார்ப்பதற்கு வளைந்து நெளிந்து செல்லும் கொடிபோல் தோன்றும் இவற்றின் நீளம் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக நீளமுடையதாகும்.

மேகத்திற்கும் மேகத்திற்கும் இடையே உண்டாகும் மின்னலால் எவ்விதத் தீங்கும் இல்லை. அதன் மின்னாற்றல் பூமியை எட்டாதவாறு காற்றுத் தடுத்துவிடுகிறது. ஆனால், மழை மேகத்திற்கும் பூமிக்குமிடையே ஏற்படும் மின்னல் பெருந்தீங்கு இழைக்கக் கூடியதாகும். மின்னலால் உண்டாகும் மின்சக்தி முழு வீச்சில் பூமியைத் தாக்குகிறது. இதனால் மரங்கள் கருகிவிடுகின்றன; கால்நடைகளும் மனிதர்களும் உயிரிழக்கிறார்கள். கட்டிடங்கள் இடிந்து நொறுங்குகின்றன. இதுவே 'இடி’ என அழைக்கப்படுகிறது.

இடியின் கொடுந்தாக்குதலிலிருந்து தப்ப இடி தாங்கிக் கம்பிகளை அமைக்கிறோம். இடி தாங்கிக் கம்பிகள் இரும்பாலும் செப்புப்பட்டையாலும் அமைக்கப்படுவதால் எளிதாக மின்னல் தரும் மின்சார ஆற்றலை கட்டிடம் வழியே கடத்தாமல் எளிதாகப் பூமிக்குள் கடத்திவிடும். இவை கட்டிடத்தில் உச்சிப் பகுதிக்கும் சற்று மேலாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். அதன் அடிப்பகுதி பூமிக்குள் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

மின்னல் பல்வேறு வகையான தோற்றங்களில் வெளிப்படும்.