இளையர் அறிவியல் களஞ்சியம்/மீன்
மீன் : நீர் வாழ் உயிரினமான மீன் ஆறு, குளம், ஏரி, கடல் ஆகியவற்றில் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. முதுகெலும்புள்ள உயிரினங்களிலேயே மிகப்பெரும் எண்ணிக்கையிலுள்ளவை மீன்களேயாகும். ஒரு சென்டி மீட்டர் அளவுள்ள மீன் முதல் 15 மீட்டர் நீள திமிங்கிலம்வரை பல அளவுள்ள மீன்கள் உள்ளன. திமிங்கிலத்தை மீன் இனத்தில் சேர்க்காது குட்டிபோட்டு பால் கொடுக்கும் விலங்கினத்தில் சேர்ப்பர்.
மீன் இனத்தில் முப்பத்திரெண்டாயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவை மலை முகட்டில் உள்ள நீர்க் குட்டையிலிருந்து மாகடல்வரை வாழ்வனவாகும்.சிலவகை மீன்கள் உப்பு நீராகிய கடல் நீரில் மட்டுமே வாழ்வனவாகும். இன்னும் சில வகை மீன்கள் இருவகை நீரிலும் வாழ்வனவாகும். குளிர் இரத்தப் பிராணியான மீன்கள் தாங்கள் வாழும் பகுதியிலுள்ள நீரின் வெப்பத்தன்மைக்கேற்ப அவற்றின் உடலின் வெப்பநிலை அமையும்,
மீன்களை மூன்று பிரிவாகப் பகுப்பர். முதல் வகை, எலும்புச் சட்டகம் முழுமையும் குருத்தெலும்பாலான மீன்கள். இவற்றிற்கு உதாரணமாக சாய்சதுர வடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல் மீன் வகைகளையும் சுரா மீன் மற்றும் திருக்கை மீன்களையும் கூறலாம். இவைகள் எலும்புக் கூட்டிற்குப் பதிலாக உறுதியான அதே சமயம் நெகிழ்வுத் தன்மையுள்ள குருத்தெலும்புகளைக் கொண்டுள்ளன. செதில்கள் இருக்கவேண்டிய பகுதிகளில் நல்ல விறைப்பும் கெட்டித் தன்மையுள்ள உறுதியான மேல் தோலைப் பெற்றுள்ளன.
இரண்டாம் பிரிவு, எலும்புள்ள மீன்களாகும். மீன்களில் இப்பிரிவே மிகப்பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. இம்மீன் முழுமையாக எலும்புக் கூட்டைக் கொண்டுள்ளன. இவற்றை மூடியுள்ள மேல் தோல்மீது அமைந்துள்ள செதில்களும் கூட எலும்பைப் போல் உறுதியானவையாகும்.
மூன்றாம் பிரிவு, நுரையீரலைக் கொண்டுள்ள மீன்களாகும். இத்தகைய மீன்களில் சில நுரையீரலோடு காற்றுப்பையையும் கொண்டிருக்கும். இக்காற்றுப்பை சிறுநீரகத்திற்கு அடியிலே அமைந்திருக்கும். இஃது சில மீன்களுக்கு மிதவையாகவும் பயன்படுகின்றன. இவ்வகை மீன்கள் அனைத்தும் எப்போதும் நன்னீரிலேயே வாழும்.
மீன்கள் நீரில் எளிதாக நீந்த பலவகைத் துடுப்புகளைப் (Fins) பெற்றுள்ளன. இவை கால்களைப் போன்று செயல்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக நீந்துகின்றன. உந்திச் செல்ல உதவுகின்றன. இவை இடம் வலமாகத் திரும்பவும் உதவுகின்றன. இதன் முதுகுத் துடுப்பும் மீனைச் சமநிலையில் இருக்கத் துணைசெய்கின்றன. மார்புப் பகுதியில் உள்ள இரு துடுப்புகள் மீன் மேலும் கீழுமாகச் செல்ல உதவுகின்றன. சிலசமயம் இம்மீன்கள் கரைக்கு வருவதுண்டு.
பெரும்பாலான மீன்கள் செவுள்கள் மூலமாகவே சுவாசிக்கின்றன . வாய்மூலம் உள்ளிழுக்கும் நீரைச் செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் கரைந்துள்ள பிராணவாயுவை (ஆக்சிஜன்) செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன. அப்போது அதன் இரத்தத்திலிருந்து வெளியேறும் அசுத்தக்காற்றாகிய கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) நீரில் கரைத்து வெளியேற்றுகின்றது.
மீன்களின் இரத்தம் குளிர்ச்சித் தன்மை கொண்டதாகும். எனவேதான் மீனினம் குளிர் இரத்த உயிரினங்களைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றின் நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்றே அமைந்துள்ளன. இவைகளும் பிற பிராணிகளைப் போன்றே வலி, நலக்குறைவு போன்றவைகளால் துன்புறுகின்றன.
மீன்களில் உணர்திறன் மிகக் கூர்மையானதாகும். சுவை, உணர்ச்சி ஆகியவற்றை தோல் மூலம் உணர்கின்றன. மோப்ப வாசனையை அறிய இவற்றின் தலையிலுள்ள மூக்குப் பகுதியில் இரு உணர்கொம்புகள் உள்ளன. மீன்களின் காதுகள் தலையுள் அமைந்துள்ளன. தலையில் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்துள்ள கண்களுக்கு இமைகள் இல்லை. ஆழ்கடல் மீன்களின் கண்கள் மிகச் சிறியவையாக இருக்கும். கடலின் அடிமட்டத்தில் வாழும் மீன்களுக்குக் கண்களே கிடையாது. மீனின் வாய் பெரிது. அதனுள் வளைந்திருக்கும் பற்கள் பற்றிப் பிடிக்கும் இரை வாயிலிருந்து தப்பிவிடாமலிருக்க உதவுகிறது.
சில மீன்கள் புதிய இடங்களை நோக்கிச் சென்றபடி சுற்றிக் கொண்டேயிருக்கும். இவற்றிற்கென குறிப்பிட்ட இருப்பிடம் ஏதும் இல்லை. ஆயினும், பெரும்பாலான மீன்கள் கூட்டம் கூட்டமாகவே தரைவாழ் உயிரினங்களைப் போல வாழும். பெரும்பாலான மீன்கள் தன்னொத்த சிறிய மீன்களையும் நீர் வாழ் ஜந்துக்களையும் புழு, பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றன. சில மீன்கள் கடல் வாழ் தாவரங்களை உண்டு வாழும்.
மீன்கள் நீரில் வாழ்வதற்கேற்ற வகையில் தங்கள் உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. முன்னும், பின்னும் சிறுத்தும் நடுப்பகுதி பருத்தும் ஒரு ஓடம்போல எளிதாக நீரில் நீந்திச் செல்ல இயல்கின்றது. இவற்றின் செதில்களில் ஒருவித வழவழப்பு நீர் சுரப்பதால் இவை, எளிதில் நழுவிச் செல்ல முடிகிறது.
மீன்கள் கடலின் அனைத்து மட்டங்களிலும் உயிர் வாழ்கின்றன. சாலமன் மீன்களின் வாழ்க்கை விந்தையானது. இவ்வகை மீன்கள் ஆறுகளில் எங்கோ பிறந்து கடலை அடைந்து வாழ்கின்றன. ஆனால் முட்டையிடும் பருவத்தில் மீண்டும் தன் பிறப்பிடமாகிய ஆற்றை அடைந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து பின் அங்கேயே மடிகின்றன. அதன் குஞ்சுகள் தாய் வழியில் வளர்ச்சி பெறக் கடலை நோக்கிச் செல்கின்றன. ஆனால், மலங்கு எனும் மீன் ஆற்றில் வாழ்ந்தாலும் முட்டையிடக் கடலுக்கே செல்கின்றன.
மீன்கள் மனிதர்களுக்கும் சிலவகைப் பிராணிகளுக்கும் நல்ல உணவாக அமைகிறது. ஆற்றிலும் கடலிலும் மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலும் வலைபோட்டும் தூண்டில் போட்டும் மீன் பிடிக்கிறார்கள். கடலில் கிடைக்கும் 'காட்’ போன்ற சிலவகை மீன்களின் கல்லீரலிலிருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள். சத்துமிக்க இவ்வெண்ணெய் டானிக்காகப் பயன்படுகிறது. மீன்முள், செதில்களைக் கொண்டு கோழித் தீவனமும் உரமும் தயாரிக்கிறார்கள்.
மீன் தசையிலிருந்து எடுக்கப்படும் ‘மீன் எண்ணெய்' மாரடைப்பு நோயைத் தடுக்கும் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.