இளையர் அறிவியல் களஞ்சியம்/மேகம்
மேகம் : கிணறு முதல் மாகடல் வரையுள்ள நீர்ப்பரப்புகளிலிருந்து சூரிய வெப்பத்தால் நீராவி உருவாகி மேல் நோக்கி ஆகாயத்தை அடைகிறது. வானில் குறிப்பிட்ட உயரத்தை எட்டியவுடன் வேகமாக உருமாறுகிறது. அப்போது அங்கு மிதந்து கொண்டிருக்கும் ஏராளமான தூசித் துகள்களைச் சுற்றி நீர்த்துளிகள் படிந்து மழை மேகமாக ஆகிறது. அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் இக் கார் மேகம் மேலும் குளிர்ச்சியடையும்போது நீர்த் திவலைகளாக மாறி மழையாகப் பெய்கிறது. சிலசமயம் ‘ஆலங்கட்டி’ மழையாகப் பொழிவதும் உண்டு.
மேகக் கூட்டங்கள் ஒன்றைப் போலவே மற்றொன்று காணப்படுவதில்லை. வெவ்வேறான உயரத்திலும் தட்பவெப்ப நிலையிலும் மேகங்கள் உருவாவதால், அவை பலவகைப்பட்ட மேகங்களாக அமைகின்றன. உயரம் தட்டவெப்ப நிலையைப் பொறுத்தும் அங்குள்ள தூசித் துகள்களைப் பொறுத்தும் மேகங்கள் உருவாகின்றன.
மிக உயரத்தில் உருவாகும் மேகங்கள் 'நொக்ட்டிலுசன்ட்' (Noctilucent) என்று அழைக்கப்படுகின்றன. இவை 50 அல்லது 80 கி.மீ. உயரத்தில் இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் உள்ள மேகம் 'நக்ரியாஸ்’ (Nacreous) அல்லது 'தாய் முத்து' என்று கூறப்படுகிறது. இவை 15 அல்லது 20 கி.மீ. உயரத்திலுள்ள மேகமாகும். இம் மேகம் மெல்லியதாக இருக்கும். துாசித் துகள்களாலும் நீர்த் திவலைகளாலும் அழகிய வண்ணத் தோற்றமுடையதாகத் தோன்றும். இம்மேகம் சூரியன் மறைந்த பிறகோ, இரவிலோ அல்லது சூரியன் உதிப்பதற்கு முன்போ காணப்படும்.
இதற்கு அடுத்தபடியாக உள்ள மேகம் பூமியிலிருந்து எட்டு அல்லது பத்து கி.மீ. உயரத்தில் காணப்படுவதாகும். இம்மேகங்கள் 'சிர்ரல்’ என்றும், 'சிக்ரோஸ்ட்ரேட்டஸ்’ மேகம் என்றும் 'சிர்ரோகுமுலுஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இம் மூன்று வகை மேகத்தில் முதல் வகை இறகுபோல் மென்மைத் தன்மையுடையதாகும். இரண்டாம் வகை மெலிதான வெள்ளத் தட்டுப் போல் இருக்கும். மூன்றாவது மேகம் உருண்டை வடிவினவாக ஆகாயத்தில் தோற்றமளிக்கும்.
கீழ்மட்ட மேகம் சிறிய நீர்த்துளிகளால் உருவானதாகும் இதற்கு மேல் தரையிலிருந்து 4 கி.மீ. உயரத்தில் உள்ள மேகம் பெரும் உருள் வடிவினவாகக் காணப்படும். அனைத்துக்கும் கீழாக, தரையிலிருந்து ஒரு கி.மீ. உள்ள மேகம் அலைகளைப் போல அமைந்திருக்கும். இதே அளவு உயரத்தில்தான் மழை மேகங்களும் உள்ளன . இதற்குக் குறிப்பிட்ட வடிவம் என்று ஏதுமில்லை. இதற்கும் கீழாக 350 மீட்டர் உயரத்தில் உள்ள மேகம் மூடு பணிபோல் காணப்படும்.
கோடை காலத்தில் நீரானது நீராவியாக மேலே சென்று மேகமாகி, குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என முன்பே அறிந்தோம். அதேபோன்று மலை அருகில் உருவாகும் நீராவி தாங்கிய காற்று அருகில் உருவாகும். நீராவி தாங்கிய காற்று மலைப் பகுதி மேல் செல்லும்போது குளிர்ச்சியடைந்து மேகமாக மாறுகிறது. அதனால்தான் மலைகளில் அதிக அளவில் மேகக்கூட்டங்களைக் காண்கிறோம்.
இதே சமயத்தில் பாலைவனப் பிரதேசங்களில் மேகக் கூட்டத்தையே காண முடிவதில்லை. காரணம், அங்கு அதி வெப்பம் நிலவுவதால் காற்றில் ஈரம் இருக்க வழியில்லாமல் போகிறது. ஈரப்பதம் இல்லாத காற்று மேலெழுந்து சென்றாலும் மேகமாக மாறமுடியாமற் போய்விடுகின்றது. எனவே, பாலைவன ஆகாயம் மேகமேதும் இல்லாமல் வெறுமையாய் வெறிச்சோடிக் கிடக்கிறது.
போதிய மழையில்லாதபோது விமானம் மூலம் சென்று மேகங்களின் மீது இரசாயனத் தூள்களைத் தூவி மழை மேகமாக மாற்றி மழை பெய்விக்க செயற்கை மழை முயற்சி மேற் கொள்ளப்படுகிறது. மேகங்கள் இல்லாத வானத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பெய்விக்க முடியாது.