இளையர் அறிவியல் களஞ்சியம்/மோட்டார் படகு

மோட்டார் படகு : தரையில் ஓடும் மோட்டார் வாகனங்களைப் போன்று இது நீரில் ஓடுகிறது. இதுவும் மோட்டார் இயந்திரங் கொண்டே இயங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் மோட்டார் படகுகள் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

சாதாரணமாக மோட்டார் படகுகள் பெட்ரோல் அல்லது டீசல் எண்ணெயால் இயக்கப்படுகின்றன. மோட்டார்ப் படகுகளில் பலவகைகள் உண்டு. பொருள் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து, உல்லாசப்பயணம், படகுப்போட்டி போர்ப்படையினர் பயன்படுத்தும் மோட்டார் படகுகள் எனப் பலவகைகள் உள்ளன. அவற்றின் வடிவமைப்பும் இயங்கு திறனும் வேகமும் வேறுபடும். உல்லாசப் படகுகளில் வீட்டிலுள்ள முக்கிய வசதிகள் அனைத்தும் இருக்கும். படகுப் போட்டிகளில் பயன்படுத்தும் மோட்டார்கள் அதிக விசைத் திறனுடையதாகும். போர்ப்படைகளில் வீரர்களையும் போர்ச்சாதனங்களையும் விரைந்து கொண்டு செல்ல மோட்டார்ப் படகுகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. டார்பிடோ எனும் பீரங்கிப் படகுகள் கப்பல்களையே தாக்கி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு வல்லமை கொண்டவைகளாகும். கப்பற் படையின் பேரங்கமாக மோட்டார் படகுகள் அமைந்துள்ளன. கார் போன்றே மோட்டார் படகையும் முன்னும் பின்னுமாகச் செலுத்த முடியும்.