இளையர் அறிவியல் களஞ்சியம்/லிஸ்ட்டர்

லிஸ்ட்டர் : அறுவை மருத்துவத்துறையில் அருஞ்சாதனை செய்து, அதன் இன்றைய மாபெரும் வளர்ச்சிக்கு நூறு ஆண்டுகட்கு

லிஸ்டர்

முன்பே வழியமைத்வர் லிஸ்ட்டராவார். இவரது முழுப் பெயர் ஜோசப் லிஸ்டர் பிரபு என்பதாகும். இவர் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள அப்ட்டன் என்னும் ஊரில் பிறந்தார், லிஸ்டர் லண்டன் மருத்துலக் கல்லூரியில் பயின்று மருத்துவரானார். பின்னர் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மருத்துவத்துறையில் கிருமிநாசினியான நச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்தி, அறுவை மருத்துவத்தில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருமைக்குரியவர் ஆவார். இவர் எடின்பரோவில் மருத்துவராகப் பணியாற்றியபோது அறுவை மருத்துவம் செய்து கொண்ட பலர், அறுவை செய்து கொண்ட இடத்தில் சீழ் பிடித்து மடிவதைக் கண்டு பெரிதும் வருந்தினார். இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய இரவு பகலாக முயன்றார். இச் சமயத்தில் ஃபிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி பாஸ்டர் நொதித்தல் குறித்து வெளிவந்திருந்த ஆய்வு முடிவு இவரது ஆராய்ச்சிக்கு அடிப்படையாயிற்று. பாக்டீரியாக்களைப் பழச்சாறு நொதிப்பு அடைவதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தபோது அறுவை செய்து கொண்ட இடத்தில் கிருமிகள் உட்புகுவதால் சீழ் பிடிக்கிறது. இரத்தத்தில் நஞ்சேறுகிறது. இதனால் இறப்பு ஏற்படுகிறது என்று கண்டறிந்தார். இத்தகைய நுண் கிருமிகளைக் கொல்லும் கார்பாலிக் அமிலத்தைக் கண்டுபிடித்தார். அறுவை மருத்துவம் தொடங்குமுன் அறுவை செய்யும் மருத்துவரின் கைகள், அறுவைக்கான கருவிகள், அறுவைக்குப் பின் அப்பகுதியில் வைத்துக் கட்டும் பஞ்சு ஆகியவை கிருமிகளின்றி இருக்கும் பொருட்டு அவற்றின்மீது நச்சுக் கொல்லியாகிய கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தும் புது முறையைக் கையாண்டார். இதனால் அறுவை மருத்துவம் செய்து கொண்டவர்கள் சீழ் பிடித்தல் போன்ற தொல்லைகளின்றி உயிர் பிழைக்க ஏதுவாயிற்று. இதற்கேற்ப அறுவை மருத்துவக் கருவிகளையும் வடிவமைத்துத் தந்தார். இதனால் அறுவை மருத்துவத்துறை அளவிட முடியா பெரு நன்மை பெற்றது. அறுவை மருத்துவ உலகில் இவர் பெயர் அழியா முத்திரையாக அமைந்தது.

இவர் ராயல் சொசைட்டியின் தலைவராகவும் மற்றும் பல அறிவியல் ஆய்வுக் கழகங்களின் தலைவராகவும் திகழ்ந்தார்.