இளையர் அறிவியல் களஞ்சியம்/விண்வெளிப் பயணம்

விண்வெளிப் பயணம் : வானில் பிறந்து விண்வெளி அதிசயங்களை யெல்லாம் நேரில் கண்டு மகிழ வேண்டும் என்ற வேட்கை பண்டு தொட்டே மனிதர்களிடம் இருந்து வந்துள்ளது. அன்றைக்கு அவற்றை விண்ணில் பறந்து சென்று காண முடியாவிட்டாலும் தன் ஆசைகளை, அனுமானங்களை கதைகளாகவும் புராணங்களாகவும் பழங்கால மனிதன் படைத்து வழங்கத் தவறவில்லை.

காலப் போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் காரணமாகக் கருவிகள் பல கண்டறியப்பட்டன. அவற்றின் துணை கொண்டு விண்வெளியை மேலும் மேலும் ஆய முற்பட்டனர். எப்படியேனும் விண்வெளிக்குச் சென்று மீள்வதைத் தன் இலட்சியமாகக் கொண்டிருந்தனர் அறிவியல் ஆய்வாளர்கள்.

விண்ணை நோக்கி ராக்கெட் புறப்படுதல்

வாயு மண்டலத்திற்கு அப்பால் காற்று இல்லை. இதனால் சாதாரண விமானம் கூட வாயு மண்டலத்தைத் தாண்டிச் செல்வது இயலாததாக இருந்தது. எனினும் விஞ்ஞானிகள் தளராது தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ராக்கெட்டுகள் எனும் ஏவுகணைகளை உருவாக்கினர். இவற்றால் காற்று இல்லாத பகுதிகளிலும் உந்து விசையோடு ஊடுருவிச்செல்ல முடியும், இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்வது எல்லா வகையிலும் எளிதாக ஆயிற்று.

ராக்கெட்டுகள் மிக விரைவாக வானில் பறந்து செல்லும். உந்து விசை ஊட்ட எரி பொருளாக திரவமாக்கப்பட்ட உயிர்வளியாகிய ஆக்சிஜனும் திரவ எரி சாராயமும் கலந்த கலவையை எரியச் செய்வதன் மூலம் ஆற்றல் மிகு உந்துவிசையை உண்டாக்கினர். இதனால் ராக்கெட்டுகள் வாயு மண்டலத்திற்கு அப்பாலும் விண்வெளியில் பறந்து செல்ல இயன்றது. இதில் ரஷியா, ஜெர்மனி, அமெரிக்க விஞ்ஞானிகள் முன்னிலை பெறலாயினர்.

முதல்முதலாக விண்ணில் செலுத்த வல்ல ராக்கெட்டை உருவாக்கிய பெருமை கோடார்டு எனும் அமெரிக்க விஞ்ஞானியையே சாரும். 1985ஆம் ஆண்டில் வடிவமைத்து உருவாக்கிய ராக்கெட் மணிக்கு 1,100 கி.மீ. வேகத்தில் 2,800 கி.மீ. தூரம் வரை செலுத்தப்பட்டது. இஃது விண்வெளி ராக்கெட் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இச்சாதனை விண்வெளி ஆய்வுலகில் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்டது.

விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. முதலாவது பூமியிலிருந்து விண்ணை நோக்கிச் செலுத்தப்படும் ராக்கெட் புவியீர்ப்பால் ஈர்க்கப்படும் நிலைக்கு ஆளாகிறது. அத்துடன் காற்று மண்டலத்தினுள்டே செல்லும்போது கடுமையான காற்று உராய்வுக்கு ஆளாக நேர்கிறது. அதனால் கடுமையான வெப்பமுண்டாகிறது. இவ்வெப்ப மிகுதியால் சில சமயம் ராக்கெட்டே

எரிந்து போகும் நிலை ஏற்படுகிறது. எனவே, இத்தகைய வெப்பமுண்டாகாதவாறு

(படம் தெளிவாக இல்லை)

ராக்கெட்டை உருவாக்க வேண்டிய இன்றியமையா அவசியம் உருவாகியது.

மேற்கண்ட பாதிப்புகள் ஏதும் இல்லா வண்ணம் விண்ணில் செல்லவல்ல செயற்கைக் கோள் ஒன்றை ரஷியா முதன் முதலில் வடிவமைத்துத் தயாரித்தது. ஸ்புட்னிக்-1 எனும் இத்தகைய செயற்கைக் கோள் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாளன்று ரஷியா விண்ணில் செலுத்தியது. இச்செயற்கைக்கோள் ஒருமுறை உலகை வலம்வர 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. சந்திரன் பூமியைச் சுற்றுவதுபோல் இச்செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வந்ததால் இதனை மக்கள் 'செயற்கைச் சந்திரன்’ என்றே பெயரிட்டு அழைக்கலாயினர்.

ஸ்புட்னிக்-1ஐ விண்ணில் செலுத்திய அதே ஆண்டு நவம்பர் திங்களில் ஸ்புட்னிக்-2 என்ற மற்றொரு செயற்கைக் கோளை ரஷியா விண்ணில் செலுத்தியது. இதில் 'லைக்கா' எனும் பெயர் கொண்ட நாய் வைக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இதன் மூலம் விண்ணில் செல்லும்போது நாயின் இதயத் துடிப்பு. மூச்சின் அளவுகளைத்துல் லியமாகக் கணக்கிட்டு அறிய முடிந்தது. இதன் மூலம் மனிதனால் விண்ணில் பயணம் செய்ய முடியும் என்பது உணரப்பட்டது. இவ்வாராய்ச்சிக்குப் பின் மனிதன் விண்ணில் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வலுவடைந்தது. விண்வெளி ஆய்வில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் 'எக்ஸ் புளோரர்’ என்ற பெயரில் புதிய செயற்கைக் கோளை விண்ணில் ஏவினர். இதன் மூலம் மேலும் பல புதிய தகவல்களை விண்வெளி விஞ்ஞானிகளால் பெறமுடிந்தது.

தொடர்ந்து விண்வெளி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் விளைவாக விண்வெளிப் பயணத்தின்போது புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவது எவ்வாறு, அப்போது ஏற்படும் உடலின் எடையின்மையைச் சமாளிப்பது எப்படி என்பதை யெல்லாம் ஆய்வு செய்து புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டன. விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் வகையில் புதுவகை உடைகள் உருவாக்கப்பட்டன. இதன்பின் விண்வெளிப் பயணமாக மனிதன் செல்ல முடியும் என்பது உறுதியாகியது.

முதன் முதலாக மனிதன் பயணம் செய்யும் செயற்கைக்கோளை 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12இல் ரஷியா விண்ணில் செலுத்தியது. அதில் பயணம் செய்த யூரி காகிரின் என்பவரே விண்வெளிப் பயணம் செய்த முதல்

(படம் தெளிவாக இல்லை)

மனிதராவார். சுமார் 800 கி.மீ. உயரத்தில் உலகை வலம் வந்தார். உலகை ஒருமுறை வலம்வர 108 நிமிடங்கள் பிடித்தன. பாதுகாப்பாக அச்செயற்கைக் கோள் பூமிக்கு திரும்பியதன் மூலம் விஞ்ஞானிகட்கு மிகப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த மாதமே அமெரிக்கா ஆலன் ஷெப்பர்டு என்பவனக் கொண்ட செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அவ்விண்வெளிப் பயணமும் வெற்றியாக அமைந்தது. அதன்பின் அமெரிக்காவும் ரஷியாவும் போட்டி போட்டுக் கொண்டு மனிதர்களைக் கொண்டே பல விண் கலங்களை வானில் செலுத்தி மேலும்மேலும் ஆய்வுகளை மேற்கொண்டன. நாளடைவில் சந்திரனுக்குச் செல்வது விஞ்ஞானிகளின் இலட்சியமாகியது.

இதற்கென ஆளில்லாத தானியங்கி ஊர்தியான லூனாவை ரஷியா சந்திரன்வரை அனுப்பி ஆய்வுகள் பலவற்றைச் செய்து, செய்திகளைத் தொகுத்தது. பின்னர் அமெரிக்கா சார்ட்டான்-5 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21இல் ஏவப்பட்ட இவ்விண்கலம் சந்திரனுக்கு மேலாக 111 கி.மீ. உயரத்தில் பத்து முறை நிலவைச் சுற்றிவிட்டு டிசம்பர் 27இல் பூமிக்குத் திரும்பியது.

நிலவில் முதன்முதலில் கால் பதித்த பெருமை அமெரிக்க விண்வெளி வீரர்களையே சாரும், 1969ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூன்று விண் வெளி வீரர்களுடன் அப்பல்லோ-11 என்ற விண்கலத்தை அனுப்பியது. 576r தாய்கலத்துடன் நிலவை வலம் வர, அதினின்றும் பிரிந்த மற்றொரு கலத்துடன் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் நிலவில் இறங்கித் தடம் பதித்தனர். ஆம்ஸ்டிராங் நிலவில் முதன் முதலில் இறங்கி நடந்தார். ஆல்டிரின் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் சந்திரனில் 22 மணி நேரம் ஆய்வு செய்தபின் தங்கள் கலத்துடன் கிளம்பி தாய்க்கலத்துடன் இணைந்து பூமியை அடைந்தனர். அதன் பின் தொடர்ந்து ஐந்து முறை அமெரிக்க விண்வெளிவீரர்கள் நிலவுக்குச் சென்று விரிவான ஆய்வுகளைச் செய்து பூமிக்குத் திரும்பினர். ஆளில்லா விண்கலங்களை நிலவுக்குப் பலமுறை அனுப்பி ஆய்வு செய்த ரஷியா

(படம் தெளிவாக இல்லை)

1960இல் மார்ஸ்-1 என்ற விண்கலத்தை செல்வாய்க் கோளுக்கும் வீனஸ்-2 என்ற விண் கலத்தை வெள்ளிக் கோளுக்கும் அனுப்பி ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் 1982இல் மாரினர்-2 என்ற விண்கலத்தை வெள்ளிக் கோளுக்கும் 1964இல் மாரினர் -4 என்ற கலத்தை செவ்வாய்க்கும் அனுப்பி ஆய்வு செய்தனர்.

அண்மைக் காலமாக அமெரிக்கர் கொலம்பியா எனும் விண்வெளி ஓடத்தை பல விண்வெளி ஆய்வாளர்களுடன் பல தடவை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வுகள் செய்த பின்னர்

புறப்படத் தயாராயுள்ள விண்வெளி ஒடம்

தரைக்கு மீளச் செய்துள்ளது. இதில் அமெரிக்கர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு விண்வெளி ஆய்வாளர்களும் பயணம் செய்து மீள்வது குறிப்பிடத்தக்க சிறப்புச் செய்தியாகும்.

விண்வெளி ஆய்வில் இந்தியாவும் முனைப்புக் காட்டி வருகிறது. விண்வெளி ஆய்வுக்கென கேரள மாநில கடற்கரைப் பகுதியான தும்பா எனுமிடத்தில் ஏவுகணை தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுதுணையும் உண்டு. விண்வெளி ஆய்வில் அமெரிக்க, ரஷ்ய உதவியும் ஆரம்ப முதலே இருந்து வந்துள்ளது. இங்கிருந்து 1968ஆம் ஆண்டில் நைக் அப்பாஷி எனும் அமெரிக்க ஏவுகணை செலுத்தப்பட்டது. அதன்பின் பலமுறை ரோஹினி எனும் இந்திய ஏவுகணைகள் விண்வெளி ஆய்விற்கெனச் செலுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநில கடற்கரைப் பகுதியான ஸ்ரீஹரி கோட்டாவில் மற்றொரு ஏவுகணை தளம் உள்ளது. இங்கிருந்து பலமுறை ஏவுகணை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாயிரம் மைல் சென்று தாக்க வல்ல அக்னி,பிரித்வி ஏவுகணைகளின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றது. இஃது இந்திய விண்வெளி ஏவுகணை விஞ்ஞானிகளின் திறமைக்குக் கட்டியங் கூறும் நிகழ்ச்சியாகும்.