இளையர் அறிவியல் களஞ்சியம்/வேகமானி
வேகமானி : ஓட்டப் பந்தயங்களின்போது ஓடும் ஒருவரின் நேரத்தை துல்லியமாகக் கணக்கிட ஒருவகை தனிக் கடிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். அதை ‘நிறுத்த கடிகாரம்’ எனத் தமிழிலும் ‘ஸ்டாப் வாட்ச்' என்று ஆங்கிலத்திலும் கூறுவர். இதனால் ஓடும் நேரத்தை மட்டுமல்லாது ஓடும் வேகத்தையும் கணக்கிட்டறிய முடியும்.
அதேபோன்று ஒரு வாகனம் செல்லும் வேகத்தைக் கண்டறிய தனிவகைக் கருவியுண்டு. வேகத்தை அளக்கும் அக்கருவி வேகமானி(Speedometer) என அழைக்கப்படுகிறது. இதனைக் கொண்டு விரைந்து செல்லும் வாகனம் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
வேகத்தை அளக்கும் வேகமானிக் கருவி சாலையில் விரைந்து ஓடும் வாகனங்களான கார், லாரி, வேன், மோட்டார், சைக்கிளில், ஸ்கூட்டர் முதலான வாகனங்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டிருக்கும். ஒட்டுநர் எளிதாகக் கவனித்துக் கொண்டிருக்கும் வகையில் அவர் முன்பாக உள்ள தட்டில் பொருத்தப் பட்டிருக்கும்.
வேகமானிக் கருவி வட்ட வடிவமாக இருக்கும். அதில் 0 முதல் 100 அல்லது 140 வரை எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வாகனச் சக்கரத்துடன் சுற்றக் கூடிய சுழல் காந்த வட்டு அமைக்கப்பட்டிருக்கும். அதோடு சுழலும் சக்கரத்தின் சுழற்சியை காந்தத்திற்கும் கடத்தவல்ல வளையும் தன்மையுள்ள எந்திரத் தண்டும் பொருத்தப்பட்டிருக்கும். இஃது நாலா பக்கமும் வளைய வல்லதாகும். வாகனம் விரைந்து செல்லும்போது சக்கரங்கள் வேகமாகச் சுழலும். அப்போது காந்தமும் சுழலும். அப்போது வட்ட முகப்பில் எண்களைக் காட்டும் முள் நகர்ந்து வாகனத்தின் வேகத்தைக் காட்டும். வாகனம் ஓடாதபோது சக்கரம் சுழலாது. அதனால் காந்தமும் சுழலாது. அப்போது முள் 0 காட்டும் அவ்வேகமானி தட்டின் நடுப்பகுதியின் மேலாக அவ்வாகனம் எத்தனை கிலோ மீட்டர் சென்றுள்ளது என்பதைக் காட்டும் அமைப்பும் இருக்கும். கீழ்ப்பகுதியில் வாகனம் புறப்படும் முன் உள்ள அமைப்பில் 0 வைத்தால் போய் வந்த தூரத்தை அறிந்து கொள்ளமுடியும்.
சாலையில் செல்லும் வாகனங்களில் இருப்பது போன்ற வேகமானி அமைப்பு வானில் செல்லும் விமானத்துக்கும் கடலில் செல்லும் கப்பலுக்கும் இல்லை. அவற்றின் வேகத்தை அளக்க வேறு வகையான அமைப்புகள் உள்ளன.
ஒவ்வொரு வாகனத்துக்கும் வேகமானி இன்றியமையாது தேவைப்படும் ஒன்றாகும். நெரிசல் சாலைகளிலும் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெற வேகக் கட்டுப்பாட்டு விதிகளை அரசு விதித்துள்ளது. அவ்வேகத்தில் அளவுக்குள் வாகனத்தை ஒட்டிச் செல்ல வேகமானி உதவுகிறது. வேகமானி இல்லையெனில் எவ்வளவு வேகத்தில் வாகனத்தைச் செலுத்துகிறோம் என்பது தெரியாமலே போய்விடும். அதனால் ஆபத்தும் விதிகளை மீறிச் சென்ற குற்றமும் ஏற்பட்டுவிட ஏதுவாகிவிடும். எனவே, வேகமானி வாகனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.