இளையர் அறிவியல் களஞ்சியம்/ஹார்மோன்கள்
ஹார்மோன்கள் : இதைத் தமிழில் ‘இயக்கு நீர்’ என்று கூறலாம். ஹார்மோன்கள் நாளமில்லாச் சுரப்பிகளால் வெளியிடப்படுகின்றன. இவை சுரந்தவுடன் நேராக இரத்தத்தில் கலக்கும் வேதியியல் கூட்டுப் பொருளாக உள்ளது. இரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உடல் இயக்கத்தை முறைப்படுத்துகின்றன. எனவே, இவற்றை உடலின் வேதியியல் தூதுவர் என்று கருதுகின்றனர்.
பல்வேறு சுரப்பிகளிலிருந்து பலவகையான ஹார்மோன்கள் வெளிப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன.
மூச்சுக்குழலுக்கு அருகில் உள்ள தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. அயோடின் உள்ள இஃது உடலில் சர்க்கரை, மாவுப் பொருள் உருவாகிப் பயன்பட உதவுகிறது. இதன் மூலம் உடல் வளர்ச்சி பெறவும் வளமடையவும் துணை செய்கிறது.
பாராத் தைராய்டு சுரப்பி, தைராய்டு சுரப்பிக்கு அருகிலேயே உள்ளது. நான்கு பகுதிகளைக்
கொண்ட இதிலிருந்து பாராத்தார்மோன் எனும் ஹார்மோன் சுரக்கின்றது. இஃது உடலில் கால்சியம் உப்பின் பயன்பாட்டை முறைப்படுத்துகின்றது.
பிட்யூட்டரி எனப்படும் அடிமூளைச் சுரப்பியானது மண்டையோட்டின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது. இஃது இரு பகுதிகளாக உள்ளன. ஒரு பகுதி சுரக்கும் ஹார்மோன் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. மற்றொரு பகுதி சுரக்கும் ஹார்மோன் நீரின் பயன்பாட்டை முறைப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை உயர்த்துவதன் மூலம் சிறு நீர்ப் பெருக்கத்தைத் தடை செய்கிறது. உடலில் சேரும் கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தை முறைப்படுத்தி அளவோடு இருக்க வகை செய்கிறது.
கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
மற்றும் இரு முக்கியமான ஹார்கோன் சுரப்பிகள் சிறுநீர்ப்பைக்கு மேலாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்று அட்ரீனல் சுரப்பி எனப்படுகின்றது. இதிலிருந்து சுரக்கும் ஹார்மோன் இரத்த அழுத்தம் உணர்ச்சி வசப்படுதல், மன இறுக்கம் (Stress) ஆகியவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. நாம் மனக் கிளர்ச்சியடையும்போதோ அல்லது பய உணர்ச்சி பெறும்போதோ அதிக அளவில் ஹார்மோன் கரக்கிறது.
மற்றொன்று அட்ரீனல் கார்ட்டெக்ஸ் சுரப்பி எனப்படுகிறது. இதில் சுரக்கும் ஹார்மோன் உடலில் உள்ள சோடியம் உலோகத்தின் இருப்பு, தசை, வலிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஆண் - பெண் தோற்றத்திற்கும் பால் இயல்புக்கும் உதவுகிறது. இரைப்பை சிறுகுடல் சுரக்கும் ஹார்மோன் கணையத்திலிருந்து சுரப்பைத் தூண்டுவதோடு பித்த நீர்ப்பையைச் சுருக்குகிறது. மொத்தத்தில் ஹார்மோன்கள் உடல் நிலை சீராக அமையவும் சிறப்பாகச் செயல்படவும் உடல் நலத்தை எல்லா வகையிலும் பேணவும் பெருந்துணை புரிகிறது.