இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/முன்னுரை

முன்னுரை

ஒருமைப்பாடு குறித்தும் சமய நல்லிணக்கம் பற்றியும் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது; எழுதப்படுகிறது; முனைப்புடன் சிந்திக்கப்படுகிறது. இவற்றின் இன்றியமையாத் தேவை இன்று பெரிதும் உணரப்படுவதே இதற்குக் காரணம். சமய நல்லிணக்கமே ஒருமைப்பாட்டின் அடித்தளமாகும்.

சமய நல்லிணக்கத்திற்கு இறை மறையாகிய திருக்குர் - ஆனும் அதன் வழிப்பட்ட இஸ்லாமிய மார்க்கமும் அதனை உலகில் நிலைநிறுத்திய பெருமானாரின் வாழ்வும் வாக்கும் உலகிற்கு வழிகாட்டும் ஒளி விளக்குகளாக அமைந்துள்ளனவெனலாம்.

இஸ்லாத்தின் ஒளியில், சமய நல்லிணக்கத்தை அண்ணலாரின் வாழ்க்கை வழியே வரலாற்றுப் பூர்வமாக ஆய்வதுதான் இந்நூலின் நோக்கம்.

உலக மக்களுக்கு நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைதூதர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட வேதங்களையும் முழுமையாக நம்பப் பணிக்கிறது இறுதி வேதமான திருக்குர்ஆன். இதையே பெருமானாருக்கு அறிவுறுத்தும் வகையில் அல்லாஹ், “எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்புகிறோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே, நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கிறோம் என்று கூறுவீர்களாக” (திருக்குர்ஆன் 129:46) எனப் பணிப்பதன் மூலம் இறை வேதங்களும் அவை புகட்டும் இறைவனும் ஒன்றே எனக் கூறி, இறை ஒருமைப்பாட்டை நிலைநாட்டுகிறது திருமறை.

இத்தகைய சிந்தனையின் விளைநிலமாக விளங்கிய பெருமை நம் தமிழ்மண்ணிற்குப் பண்டுதொட்டே உண்டு.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பழந்தமிழனின் இறைக் கோட்பாடே இஸ்லாத்தின் அடித்தள இறைக்கொள்கையாக அமைந்துள்ளது. மற்றும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழந்தமிழனின் சமுதாயக் கோட்பாடு இஸ்லாமிய மார்க்கத்தின் சகோதரத்துவக் கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்துள்ளதெனலாம்.

இஸ்லாம் இன்று இனம், மொழி, நிறம், பண்பாடு, புவியியல் பிரிவுகள் அனைத்தையும் கடந்த நிலையில் புவியெங்கும் பரவியிருக்கிறதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் மூலாதாரம் ஒன்றாக இருப்பதுதான்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் தவறான கண்ணோட்டத்தில் இஸ்லாமிய சமய நல்லிணக்க உணர்வுகள் சிலரால் மறைக்கப்பட்டன; மாற்றி, திரித்துக் கூறப்பட்டன; தவறாக விளக்கப்பட்டன. உண்மை நீண்ட நாள் உறங்க முடியாதல்லவா? அறிவுலகம் விழித்துக் கொண்ட நிலையில் இன்று திருமறைச் செய்திகளும் பெருமானார் வாழ்வும் வாக்கும் அறிவியல் பூர்வமாக நுணுகி ஆராயப்படுகின்றன. ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கப்போக்கு போன்ற உயர் கொள்கைகள் பூத்துக் குலுங்கும் பூங்காவாக இஸ்லாத்தைக் கண்டு உலகம் பேருவகை கொள்கிறது. அதன் வெளிப்பாடே இந்த ஆய்வு நூல்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அதன் மனிதக் கண்ணோட்டம் தனித்துவமுடையதாகும். இறையம்சமாக, இறைவனின் ஏகப்பிரதிநிதியாக மண்ணுலகில் விளங்கும் மனிதனின் இயல்புகளை அடியொற்றியே அவன் உயர்வுக்கும் உயர்தகைமைக்கும் வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதன் இறை நெருக்கம் கொள்ள, மாபெரும் ராஜபாட்டையாக அமைந்திருப்பது அவனது மனிதத்தவமேயாகும்.

உலகை உரிய வழியில் திருத்தி சரியான இறைநெறியில் வழிநடத்த வந்த உத்தமர்களில் மனிதத்துவத்தை முன்னிருத்தி செயல்பட்டு வெற்றி பெற்றவர் நாயகத் திருமேனியாவார். மனித உணர்வை மதித்து, மனிதநேயத்தைப் போற்றி அன்பாலும் இனிய பண்பாலுமே மனிதகுலத்தை ஒன்றிணைக்க முடியும் என்பதை செயல்வடிவில் மெய்ப்பித்த பெருமையும் அண்ணலாருக்கே உண்டு.

இறை நெறியாகிய இஸ்லாத்தை முழுமைப்படுத்தும் மாபெரும் இறைப் பொறுப்பை ஏற்ற ஏந்தல் நபி, அதை வெற்றிகரமாக நிறைவேற்ற அன்பு, பண்பு, மனித நேயம், சகோதரத்துவம் ஆகிய உயர் தன்மைகளையே அதிகம் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு மனிதன் தன்னொத்த மற்றொரு மனிதனை, அவன் எச்சமயத்தவனாயினும், அவனை எப்படி மதிக்க வேண்டும், எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அதிகமதிகம் வலியுறுத்தினார். இதைத் தெளிவுபட எடுத்து விளக்கும் அரிய நிகழ்ச்சியொன்று பெருமானார் வாழ்வில் நடைபெற்றது.

அபூபக்ர் (ரலி) இஸ்லாத்தில் இணைந்து பெருமானாரின் வலக்கரமாக விளங்கிய நிலையிலும் அவரது துணைவியார் இஸ்லாத்தில் இணையாமல் சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் தன் மகள் அஸ்மாவைக் காண சிறு அன்பளிப்புப் பொருளுடன் வந்தார். மாற்றுச் சமயத்தைச் சார்ந்த தன் தாயாரை இஸ்லாமிய விரோதியாகக் கருதிய அஸ்மா அவரை வீட்டிற்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. அவரை ஏறிட்டும் பார்க்க விரும்பாத அஸ்மா அவரது அன்பளிப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். இச்செய்தியை அறிந்த நபிகள்நாயகம் (சல்) அவர்கள் மிகவும் வேதனைப் பட்டார். உடனே அஸ்மாவை அழைத்து ‘உன் தாயாரை வீட்டிற்குள் அனுமதிப்பதோடு அவர் தரும் அன்பளிப்பையும் ஏற்று. உன் தாயாரைக் கண்ணியப்படுத்து’ எனப் பணித்தார். இம் மனிதநேய உணர்வே சமய நல்லிணக்கத்திற்கு உயிர்மூச்சாகும்.

அனைத்து வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனித குலத்தை ஒரு குலமாகக் கண்ட அண்ணலெம் பெருமானார் அவர்கள், “படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பத்தினரே” எனக் கூறியுள்ளார். அது மட்டுமல்ல,

“சீப்பின் பற்களைப்போல் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே”

என்ற நபிமொழி மக்களினம் சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ வேண்டியவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் முதலில் அவன் மனிதன்; அதன் பின்னரே அவன் சமயம், இனம், மொழி என்பன வரமுடியும். எனவேதான், ‘மனித நேயத்தின் உயிராக’ முஹம்மது நபியைக் கண்ட பிரிட்டானிய கலைக்களஞ்சியம், “அனைத்து மதத் தலைவர்களையும் வெற்றி கண்டவர் முஹம்மது நபி” எனப் புகழ் மாலை சூட்டி மகிழ்கிறது.

இன்றைய உலக ஒற்றுமைக்கு மனிதகுல ஒருமைப்பாட்டிற்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி, மனித உள்ளங்களின் ஒருங்கிணைவை நிலை நிறுத்த பேருதவி புரியவல்ல சமய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாக அமைந்துள்ளது. இதற்கு உதவியாக முன்பு ‘பெருமானாரின் பிற் சமயக் கண்ணோட்டம்’ எனும் நூலை எழுதி வெளியிட்டேன். தமிழ் கூறு நல்லுலகம் அதை ஏற்றுப் பேராதரவு தந்தது. இப்போது ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் இந்நூலையும் அவ்வாறே எழுதி வழங்க ஆவல் கொண்டேன்.

இந்நூலுக்குத் தகுதி மிக்க பெரியார் ஒருவரிடம் அணிந்துரை பெற எண்ணியமாத்திரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பெரியவர் திரு சி.சுப்பிரமணியம் அவர்கள் நினைவே என் மனக்கண்முன் நிழலாடியது. அரசியலிலும் சமுதாயப் பணியிலும் பட்டறிவின் நிறைகுடமாக விளங்கும் அவர்கள் என்மீதும் என் தமிழ்ப் பணிமீதும் பேரன்பு கொண்டவர்கள். அவர்களை அவ்வப்போது சந்தித்து அளவளாவும் பழக்கமுடைய நான் அவர்களோடு உரையாடி மகிழும்போதெல்லாம் புதிய புதிய உணர்வுகள் என்னை ஆட்கொள்ளும். அவர்களிடம் என்விழைவைக் கூறியபோது, அவர் தன் உடல் நலிவான நிலையிலும் பேரார்வப் பெருக்கோடு ஒப்புக்கொண்டு ஒரு சில நாட்களுக்குள் நூலைப் படித்து அழகியதோர் அணிந்துரையை எழுதித் தந்து பெருமைப்படுத்தினார்கள். இந்நூல் வெளிவந்ததில் அவர்கட்குப் பெரும் மகிழ்ச்சி. அன்னாருக்கு நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வாறே என்மீது அன்பும் மதிப்பும் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும் ஆக்கச் சிந்தனையாளருமாகிய மாண்பமை சி.மு.அப்துல் வகாப், எம்.ஏ; பி.எல் அவர்களிடம் இந்நூலுக்கு முகவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். என் விருப்பத்தை உடனே ஏற்றுக் கொண்ட அவர்கள் தனது அலுவல்களுக்கிடையே இந்நூலை முழுமையாகப் படித்து, ஆய்வு அடிப்படையில் முகவுரை தந்து சிறப்பித்துள்ளார்கள். இன்றையச் சமுதாயச் சூழலில் இத்தகைய நூல்கள், பெருமளவில் வெளிப்படுவதன் மூலம் இஸ்லாத்தின் உண்மை நிலையும் சமுதாய மேம்பாடும் வலுப்படும் என்ற அவர்தம் சிந்தனை வரவேற்கப்படத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை, அவர்கட்கும் என் இதய நன்றிகளைப் புலப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.

இந்நூலை அழகிய முறையில் வெளிவர துண்டுகோலா கவும்துணையாகவுமிருந்த என் துணைவியார் திருமதி சித்தை சௌதா அவர்கட்கும் முகப்போவியம் வரைந்த திரு கலைமதி அவர்கட்கும் என் நன்றி.

முதற் பதிப்பை ஏற்று ஆதரவளித்த தமிழுலகம் இம்மறு பதிப்பையும் ஏற்றுப் பேராதரவு நல்கும் என நம்புகிறேன்.


சென்னை - 40 மணவை முஸ்தபா

 நூலாசிரியர்