இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/1

பெருமானாரின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரையொன்றை எழுதியனுப்புமாறு ‘தினமணி’ ஆசிரியர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதி அனுப்பினேன்.

அன்று இரவு ஒன்பது மணியளவில் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நான் அனுப்பியிருந்த கட்டுரையை அப்போதுதான் படித்து முடித்ததாகவும் உடனடியாகத் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து அவர்: “அண்ணலார் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்த போது நீண்ட காலமாக எனக்கிருந்த பல ஐயப்பாடுகள் அகன்று விட்டன. ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்’ கட்டுரையின் கருத்துகள் இன்றைய உலகு முன் உரத்த குரலில் ஒலிக்கப்பட வேண்டியவை. இக்கருத்துகள் உரிய முறையில் பரப்பப்படாததாலேயே தேவையற்ற பல பிரச்சினைகள் இன்று நம்மிடையே தலைதூக்கிக் கூத்தாட்டம் போட நேர்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கட்டுரை மட்டும் எழுதியதாக நான் கருதவில்லை. இதன் மூலம் இன்றையத் தேவையை நிறைவு செய்ய அற்புதமான சமூக சேவையைச் செய்திருப்பதாகவே கருதி மகிழ்கிறேன். உடனே உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற உந்துதலாலேயே உங்களுக்கு உடனடியாகப் போன் செய்தேன்.” எனத் தன் அறிவுப் பூர்வமான உள்ளுணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

வெறுப்பு மறைந்து விருப்பு மிகுந்தது

கட்டுரை வெளியான பின்பு பல வாசகர்கள் அக்கட்டுரை பற்றிக் கருத்துரைத்திருந்தார்கள். பலரும் வரவேற்று எழுதியிருந்த கடிதங்களில் திரு பி. பெருமாள் என்பவர் எழுதிய கடிதம் பின்வருமாறு இருந்தது. “...கட்டுரையைப் படிப்பதற்கு முன் இஸ்லாம் மதம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். இந்தியச் சமயங்களை அழிக்க வந்த சமயம் என்றே இஸ்லாத்தைப் பற்றி எண்ணியிருந்தேன். பிற மதங்களை மதிப்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை குர்ஆனிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருவதன் மூலமாகவே சிறப்பாக விளக்கியிருந்தார் கட்டுரையாளர். இதைப் படித்தபின் என்னுள் இருந்த வெறுப்பு விலகியது மட்டுமல்ல, இஸ்லாம் மதம்மீது மதிப்பு ஏற்பட்டுவிட்டது. இஸ்லாம் கொள்கை வழி நடப்பதன் மூலமே மத சுமுக நிலை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.”

‘தினமணி’ ஆசிரியரின் தொலைபேசி உரையாடலும் தொடர்ந்து வெளியான வாசகர் கடிதமும் எனக்குப் பல உண்மைகளை வெளிப்படுத்தின. இஸ்லாத்தைப் பற்றியும் குறிப்பாக அதன் பிற சமயங்களைப் பற்றிய கருத்தோட்டம், பிற மத தீர்க்கதரிசிகள், அவர்கள் மூலம் வெளிப்பட்ட வேதங்கள், கடவுளர், சமயச் சடங்குகள் பற்றிய இஸ்லாமிய நோக்கும் போக்கும் போன்றவற்றை அறிந்து கொள்வதிலே மற்ற சமயத்தவர்க்குள்ள பெரும் நாட்டத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

நெறிப்படுத்தவே தவிர வெறிப்படுத்த அல்ல

உலகத்துச் சமயங்கள் அனைத்துமே அன்பையே போதிக்கின்றன. ‘அன்பின் வழியது உயர் நிலை’ என்பது தான் சமயங்களின் உயிரோட்டமான கருத்து. மனித நேயம் போற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில், ‘மனிதன் இறையம்சமானவன்’ என இஸ்லாம் போதிப்பதைப் போல உலகச் சமயங்கள் பலவும் எடுத்தோதுகின்றன. ஆனால், அதற்குப் புறம்பான முறையில் மத நடவடிக்கைகள் அமைகின்றனவென்றால் அதற்கு மதம் காரணம் அல்ல. அந்த மதத்தை வழி நடத்துவதாகக் கூறி கொள்ளும் போலிச் சமயவாதிகளும் சமயப் போர்வையில் சுய லாபம் தேடியலையும் சுய நலக் கும்பல்களுமே காரணமாகும். சமய நெறிக்குப் புறம்பாக மக்களுக்கு மதவெறியைப் புகட்டி சமயத்தின் உன்னதத்தையே உருக்குலைத்து விடுகிறார்கள். இத்தகைய சமூக விரோதிகளை இனங்கண்டு ஒதுக்குவதன் மூலமே உண்மைச் சமயத்தின் உன்னதத்தை நிலை நாட்ட முடியும் என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும்.

மேலும், மக்களுக்கு அவரவர் சமயத்தின் உண்மைத் தத்துவங்களை, கொள்கை கோட்பாடுகளை உரிய முறையில் உணர்த்துவதன் மூலம் அனாவசியமான ஐயப்பாடுகளை நீக்கி மனித உள்ளங்களை நெருக்கமடையச் செய்ய முடியும்.

அடிப்படை தேடும் ஆக்க விமர்சனம்

ஒரு முஸ்லிம் எந்தச் சமயத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதில் தவறில்லை. அஃது அவசியமும்கூட. அம் மதத்தவரின் சமயக் கருத்துகளை-தத்துவ நுட்பங்களை சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றி தொடர்புடைய சமய அறிஞர்களோடு ஆக்க பூர்வமான விமர்சனக் கண்ணோட்டத்தில் வாதிப்பதும் ஆய்வதும் அம் மதக் கோட்பாடுகள், கொள்கைகள், சடங்கு, சம்பிரதாயங்கள் எந்த அளவுக்கு அச்சமயத்தின் இறை தூதரின் மூலக் கருத்துக்கு இசைவானவை என்பதையும் எந்த அளவுக்கு போலித்தனமும் பொய்மையும் கொண்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.

இதற்கு மாறாக, அம்மதத்தவர் முஸ்லிம்கள் பின்பற்றும் கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவரல்ல என்றோ, தான் வணங்கும் முறையில் இறைவணக்கம் செய்யவில்லை என்ற காரணத்துக்காகவோ ஒரு முஸ்லிம் பிற மதத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கும் உரிமை ஒரு முஸ்லிமுக்கு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் ஒரு மதக் கருத்தின் வடிவம், காலப் போக்கில் எவ்வாறெல்லாம் மனிதர்களின் மாற்ற திருத்தங்களுக்கு ஆட்பட்டு, மூல வடிவை இழந்து நிற்கும்பாங்கை, இறைத் தூதர்களின் மூலக் கருத்தை இயன்றவரை இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் அடிப்படையில் விளக்கி உண்மையை உணரத் தூண்டுவதில் தவறேதும் இல்லை.

சமய அறிவின்மையே
அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படை

பிற சமய அன்பர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இஸ்லாமிய உணர்வுகளை, சிந்தனைகளை, எடுத்து விளக்கினால் அவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதுமட்டுமல்ல, இஸ்லாமியத் தத்துவ நுட்பங்களை எளிய முறையில் எடுத்துக் கூறினால், அவற்றைப் படித்து மனதுள் இறுத்தி, அவற்றை ஆழச் சிந்திக்க அளாவும் உள்ளங்கள் பல இருப்பதை மறுக்க முடியாது. இதன் வாயிலாக இஸ்லாத்தை உரிய முறையில் அணுகாமலும் அறியாமலும் அதன் மீது தவறான கண்ணோட்டம் செலுத்தி வருபவர்கள் தங்கள் தவறான உணர்வையும் கருத்தையும் திருத்திக் கொள்ளவும் தெளிவு பெறவும் வாய்ப்பேற்படுகிறது. இதனால் முஸ்லிம்களுக்கு பிற சமயத்தவர்களுக்குமிடையில் தவறான கண்ணோட்டங்கள் மறையவும் மன நெருக்கம் ஏற்படவும் சமூக ஒருங்கிணைவு உருவாகவும் வாய்ப்பேற்படுகிறது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?

இஸ்லாமிய நெறி பற்றிய உணர்வுகளும் சிந்தனைகளும் பிற சமய மக்களிடையே பரவலாகப் பரவாமற் போனதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.

பிற இந்தியச் சமயங்களைப் போலல்லாமல் இஸ்லாம் வெளிநாட்டிலிருந்து வந்த அந்நிய சமயம் என்ற எண்ணம் மக்களிடையே அழுத்தமாகப் பதிந்திருப்பதோடு, அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை ஆண்டு வந்ததுமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட ஒரு மார்க்கம் என்ற ஒரு தவறான கருத்து, வரலாற்றாசிரியர்களால் புனைந்துரைக்கப்பட்டிருப்பதாகும். நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இத்தவறான பிரச்சாரத்துக்கு அதிகாரப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த சிலுவைப் போரின் விளைவாகவும் இந்தியாவில் இருநூறு ஆண்டுகள் நடைபெற்ற ஆங்கில ஆட்சியில் இங்குள்ள இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைய விடாமல் தடுத்து, அவர்களிடையே வேற்றுமை உணர்வையும் பகைமை உணர்வையும் வளர்க்கும் வகையிலும் ஆங்கில வரலாற்று ஆசிரியர்களால் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றே ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது’ என்ற கோஷம். இதன் அடிப்படையில் மிகத் தவறான பிரச்சாரம் முனைப்பாக மக்களிடையே தொடர்ந்து செய்யப்பட்டது. இதைப்பற்றி,

“இஸ்லாம் உலகிலேயே மிகவும் தவறாக விவரிக்கப்பட்ட - தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் என்று உண்மையிலேயே உணர்கிறேன்” என்று பி.பி.சியில் ‘இஸ்லாம் நம்பிக்கையும் சக்தியும்’ (Islam-Faith and Power) என்ற தொடரைத் தயாரித்தளித்த ரோஜர் ஹார்டி என்பவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை பொதிந்த உணர்வாகும். உண்மையின் ஒளியை நீண்டகாலத்துக்கு மூடிமறைக்க இயலாது என்பதற்கு இஃது ஒரு சான்று!

இத்தவறான கருத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட, ஆட்சி அதிகாரத்திலிருந்த முஸ்லிம்கள் வாள் வலிமையை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் முஸ்லிம் அல்லாதவர்கள் யாரையுமே இந்நாட்டில் காணும் வாய்ப்பு இன்று ஏற்பட்டிருக்காது. இஸ்லாம் தவிர வேறு மதங்கள் அனைத்துமே மறைந்து போயிருக்கும். ஆனால் அத்தகைய நிலை எதுவும் ஏற்படவில்லை. அன்று போலவே இன்றும் முஸ்லிம்கள் இந்நாட்டில் சிறுபான்மையினராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது கற்பனையாகப் புனைந்துரைக்கப் பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, இஸ்லாமியக் கோட்பாடும் திருக்குர்ஆன் இறைமொழியும் அண்ணலார் வாக்கும் இதைக் கடுமையாக எதிர்க்கிறது.

“நாவாலும் கரங்களாலும் தீங்கு விளைவிக்காதவனே முஸ்லிம்” என்பது நபி மொழியாகும். எவ்வகையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்தி மற்றவரை இஸ்லாமிய நெறியின்பால் இணைப்பது இஸ்லாமிய நெறிமுறை களுக்கு முற்றிலும் நேர்மாறான, முரண்பட்ட செயலாகும்” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

“இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை” என்பது திருக்குர்ஆன் திருமறை தரும் வாக்கமுதமாகும்.

காஷ்மீரப் பகுதியில் எக்காலத்தும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதில்லை. ஹிந்து மன்னர்களின் ஆட்சி மட்டுமே அண்மைக்காலம்வரை நடைபெற்றது. ஆனால், காஷ்மீரத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களேயாகும். அதேபோன்று, கேரளப் பகுதியிலும் எக்காலத்தும் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதாக வரலாறே இல்லை. ஆனால், கேரள மாநில மக்களில் கணிசமான எண்ணிக்கையினர் முஸ்லிம்கள் ஆவர். இவற்றிலிருந்து முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கம் ஆட்சி அதிகாரங்களின் துணையோடு வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற கற்பனைக் கூற்று வேரற்ற மரமாக வீழ்ந்து விடுகிறது.

ஆரம்பத்தில் இஸ்லாம் பரவிய காலத்தில் முஸ்லிம்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாயினர். மற்றவர்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டதைக் கொண்டு அவர்கள் இஸ்லாத்தை வாளால் பரப்பினர் எனக் கதைகட்டி விடலாயினர். இஸ்லாத்தின்மீது காழ்ப்பும் முஸ்லிம்கள்மீது வெறுப்பும் கொண்ட ஆங்கில வரலாற்றாசிரியர்கள்.

தொடக்க காலம் முதலே தொடர்புண்டு

இந்தியாவைப் பொறுத்தவரை, பெருமானார் அரபகத்தில் பிறந்து இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கும் முன்பிருந்தே அரபு நாட்டிற்கும் இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. வணிக நிமித்தம் இத்தொடர்பு வலுவாக இருந்து வந்துள்ளது என்பதற்கு இலக்கியங்களும் சான்றுரைத்து நிற்கின்றன.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

அரபு வணிகர்கள் மூலமும், முனைப்புடன் இஸ்லாமியச் செய்தியை உலகெங்கும் பரப்ப விழைந்த நபித் தோழர்களின் வாயிலாகவும் அண்ணலார் காலம் முதலே இங்கு இஸ்லாம் கால் பாவத் தொடங்கியதெனலாம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற மூலமந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாமிய மார்க்கம் தமிழகத்தில் அழுந்தக் காலூன்றக் காரணம் அதே இறைக் கொள்கையையும் சமுதாய நோக்கையும் சங்ககாலம் தொட்டே தமிழகம் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்ததுமாகும். காலவோட்டத்தில இவ்வுயர் சிந்தனைகளை எங்கோ இழந்துவிட்டு நின்ற தமிழகத்தில் மீண்டும் அவ்வுயர் சிந்தனைகள் எதிரொலிக்கத் தொடங்கியவுடன், காணாமற் போன தன் அன்புச் செல்வத்தை மீண்டும் பெற்று மகிழும் தாயின் மகிழ்ச்சியில் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று முழங்கிய இஸ்லாத்தை தமிழகம் ஏற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை.

இஸ்லாம் ஆனவனே தவிர
ஆக்கப்பட்டவன் அல்ல

இன்றும் தமிழக முஸ்லிம்களில் யாராவது ஒருவரைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று வினாத் தொடுத்தால் அடுத்து வரும் பதில் “நான் ஒரு இஸ்லாமானவன்” என்பதாகவே இருக்கும். இதிலிருந்து தானாக இஸ்லாமியநெறியை ஏற்று அதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இஸ்லாம் ஆனவனே அன்றி யாரும் எதற்காகவும் கட்டாயப்படுத்தி ‘இஸ்லாம் ஆக்கப்பட்டவன் அன்று’ என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாமிய நெறியும்
இந்திய முஸ்லிம் மன்னர்களும்

அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை முஸ்லிம் மன்னர்கள் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அவர்கள் நாடாளும் மன்னர்கள் என்ற அளவில் இந்தியாவில் அரசோச்சியுள்ளார்களே தவிர, தாங்கள் சார்ந்த இஸ்லாமிய நெறியைப் பரப்ப பெரும் முயற்சிகள் எதையும் செய்தார்கள் என்பதற்கு வலுவான சான்றுகள் எதையும் வரலாற்றில் காண முடியவில்லை.

இன்னும் சற்று நெருக்கமாக, அவர்கள் சமய வாழ்வை நுணுகிப் பார்த்தால், ஒரு சாதாரண முஸ்லிம், ஒரு சராசரி இஸ்லாமியன் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள, ‘ஐம்பெரும் கடமை’களைக்கூட முழுமையாக நிறைவேற்றினார்கள் என்று கூறமுடியவில்லை. அரசு கட்டில் ஏறிய பெரும்பாலான முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமிய நெறிப்படி வாழ்ந்தார்கள் என்றுகூடத் துணிந்து கூற முடியவில்லை. எல்லாவகையிலும் இஸ்லாமிய நெறிப்படி வாழ முனைந்த சக்கரவர்த்தி ஔரங்கஸீப் ஆலம்கீர், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில், வசதி படைத்தவர்கட்குக் கட்டாயக் கடமையாக அமைந்த ‘ஹஜ்’ கடமையை இறுதிவரை நிறைவேற்றாமலேயே மறைந்தார் என்பதுதான் வரலாற்று உண்மை.

இஸ்லாமிய ஒளி ஏற்றிய ஞானிகளும் சூஃபிகளும்

ஆழ்ந்து நோக்கின் இஸ்லாமிய நெறியை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள், அவர்களிடையே எடுத்துக் கூறி விளக்கி மனதில் பதிந்து நிலைபெறச் செய்தவர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களாகிய சூஃபிகளும் மார்க்க ஞான மேதைகளுமே யாவர். பிற சமயத்தவர்கள் மத்தியில் இஸ்லாமிய ஞானச் செல்வர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் முறையே பிற சமயத்தவர் உள்ளத்தை ஈர்த்து, அவர்களை இஸ்லாத்தின்பால் இணையத் தூண்டின என்பது ஒப்பமுடிந்த உண்மையாகும்.

வட இந்தியாவில் ஆஜ்மீரில் அடக்கமாகியுள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்தி, டெல்லி நிஸாமுத்தீன் அவுலியா, தமிழகத்தில் நத்தர்ஷா அவுலியா, நாகூர் ஷாகுல் ஹமீது ஆண்டகை போன்ற இஸ்லாமிய மேதைகளும் பீர் முஹம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கவிஞர்களும் அவர்கட்குச் சீடர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோரும் பிற சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்து, இஸ்லாமிய நெறியை ஏற்று முஸ்லிம்களானவர்கள் என்பதே காலச்சுவடாகப் பதிந்து விட்ட உண்மை. இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் புலவர்களின் ஞானப் பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அனைத்துச் சமய மக்களின் இதய மெல்லாம் எதிரொலித்தது போன்றே இன்றும் அவர்தம் மெய்ஞ்ஞானத் தமிழ்ப்பாடல்கள் இஸ்லாமிய நெறியை மக்கள் உள்ளங்களில் எத்தி வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இனியும் அப்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே, இஸ்லாம் முஸ்லிம் மன்னர்களால், வாளால் பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிந்த உண்மையாகும்.

இஸ்லாம் எச்சமயத்திற்கும்
எதிரானது அன்று

இஸ்லாமிய நெறியை மக்கள் தாங்களாக விரும்பி ஏற்றுக் கொண்டதற்கு அடித்தளக் காரணம். அஃது எந்தவொரு சமயத்திற்கும் எதிராக வந்த சமயம் அல்ல என்ற உணர்வை மக்கள் அழுத்தமாகப் பெற்றிருந்ததேயாகும். இந்த உண்மையை ஞானிகளும் இஸ்லாமிய மார்க்க ஞானச் செல்வர்களும் திருமறை வழியும் பெருமானார் பெருவாழ்வு வாயிலாகவும் உணர்ந்திருந்ததோடு வலுவாக மக்களிடையே உணர்த்தி வந்ததுமாகும்.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அன்று” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் புகழ் பெற்ற பொன்மொழியாகும்.

இஸ்லாம் பிற சமயக் கருத்துகளை, கடவுளர்களை, சமயத் தலைவர்களை, சமயச் சடங்குகளைக் குறை கூறிப் பேசுவதை, கருத்துரைப்பதைக் கடுமையாகத் தடுக்கிறது.

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” (திருக்குர்ஆன் 109-6) எனவும்.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (திருக்குர்ஆன் 6:108)

எனவும் கூறப்பட்டுள்ள திருமறைக் கருத்துகள் இஸ்லாத்தின் பிற சமயச் சகிப்புணர்வின் எல்லை எதுவெனக் காட்டுகிறது.

‘பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய் போலுமே! மெய் போலுமே’ என்ற முதுமொழியொன்று தமிழில் உண்டு. அதற்கொப்ப பிற சமயங்கள் பற்றி இஸ்லாம் கொண்டுள்ள சமயப் பொறை உணர்வுக்கு மாறாக ‘இஸ்லாமியர்கள் தங்கள் ஆதிக்க அதிகார பலத்தைக் கொண்டு வாளால் பரப்பினர்’ என்றெல்லாம் இந்திய மக்களை சமய அடிப்படையில் பிரித்து வைக்கும் போக்கை மேற்கொண்டிருந்த வெள்ளையர்களும் பிறரும் தங்கள் அதிகார, பிரச்சாரப் பலத்தையும் வசதிகளையும் கொண்டு தவறான உணர்வுகளையும் கருத்துகளையும் இஸ்லாமிய விமர்சனம் என்ற போர்வையில் எழுத்து வடிவில் வலுவாகப் பரப்பினர் என்பது கடந்த கால வரலாறு. இஃது இஸ்லாத்தின் பிற சமயக் கண்ணோட்ட உணர்வுக்கும் சிந்தனைக்கும் முற்றிலும் மாறான ஒன்று என்பதை திருக்குர் ஆன், வாயிலாகவும் பெருமானார் வாழ்வையும் வாக்கை யும் விளக்கும் ஹதீஸ்கள் மூலமாகவும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

அனைத்து இறை தூதர்களையும் வேதங்களையும்
ஏற்பவனே உண்மையான முஸ்லிம்

உலகில் உள்ள அனைத்துச் சமயங்களையும் மதிக்கப் பணிக்கிறது இஸ்லாம். சமய சகிப்புணர்வு என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். இதனையே இஸ்லாமியக் கோட்பாடும் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்கு நாளும் பறை சாற்றிக் கொண்டுள்ளது.

ஒருவர் எந்த இறைதூதரை அல்லது சமயத் தலைவரை மனப்பூர்வமாக ஏற்றுப் பின்பற்றுகிறாரோ அவர் அச்சமயத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவது உலகியல் மரபு. சான்றாக, மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்களை மட்டும் ஒருவர் ஏற்றால் போதும் அவர் யூத சமயத்தவராக ஆகிவிட முடியும். அதேபோன்று ஏசு நாதர் எனும் ஈஸா (அலை) அவர்களை ஒருவர் ஒப்புக் கொண்டுவிட்டால் போதும் அவர் கிறிஸ்தவராகிவிட முடியும். அவ்வாறே புத்தரை ஏற்பவர் பௌத்தராகவும் மகாவீரரைப் பின்பற்று பவர் சமண சமயத்தவராகவும் இருக்க முடியும். அதே வழியில் சிவனை ஏற்பவர் சைவராகவும் திருமாலைப் போற்றி வழிபடுபவர் வைணவராகவும் இருக்க முடியும்.

ஆனால், முஸ்லிம் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறை தூதராக, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு விட்டால் மட்டும் அவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியாது. அவ்வாறு கருதுவதும் இஸ்லாமிய மரபு அன்று.

காரணம், ஒருவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமெனில் அவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களோடு, அவர்கட்கு முன்னதாக மனித குலத்தை இறைவழியில் வழிநடத்த, எல்லாம் வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) முதற்கொண்டு அனுப்பப்பட்ட மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களையும் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும் என்பதுதான் அண்ணலார் வாக்கும் இஸ்லாம் உணர்த்தும் கோட்பாடுமாகும். இதையே,

“(நம்பிக்கையாளர்களே) நீங்களும் கூறுங்கள்! அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ்வேதத்) தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் முதலியவர்களுக்கும், இவருடைய சந்ததிகளுக்கும் அருளப் பெற்ற யாவற்றையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்லவென்று) நாம் பிரித்துவிட மாட்டோம் அன்றி, அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிபடுவோம்,” (2 136)

எனக் கூறி திருமறையாம் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இங்கு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இறைவனின் இறுதித் தூதராகிய நாயகத் திருமேனி அவர்களையும் இறுதி வேதமான திருக்குர்ஆன் திருமறையையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். ஆனால், இறுதித் தூதருக்கு முந்தைய நபிமார்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட வேதங்களையும் ஒப்புக் கொள்கிறார். இங்குப் பயன்படுத்தப்படும் ஏற்றுக் கொள்ளல், ஒப்புக் கொள்ளல் என்ற இரு சொற்கள் உணர்த்தும் உட்பொருளை நன்கு உணர வேண்டும். இதை எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எளிமையான உதாரணம் மூலம் அறியலாம். ரயில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் இன்று நடைமுறையிலுள்ள நேர அட்டவணைப்படி, அதைப் பின்பற்றி ரயிலுக்குச் சென்று பயணம் மேற்கொள்கிறார். அவர் பழையதான, முந்தைய நேர அட்டவணையைப் பின்பற்றுவதில்லை. ஏனெனில், அவ்வட்டவணை மாற்ற திருத்தங்கட்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவ்வட்டவணை ரயில் நேரம் அறிவதற்கோ அல்லது பயணத்தை மேற்கொள்வதற்கோ நாம் பயன் படுத்துவதில்லை ஆயினும், மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டதாயினும் பிந்தைய அட்டவணை இல்லை என்றாகி விடாது. முன்பு இருந்த அட்டவணையை ஒப்புக் கொள்கிறோம். நடைமுறையிலுள்ள இன்றைய அட்டவணையை ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறோம்.

இதேபோன்றுதான் முன்னர் இறைவனால் மக்களுக்கு இறைநெறி புகட்டி வழி நடத்த வந்த நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அளிக்கப்பட்ட இறை வேதங்களையும் ஒரு முஸ்லிம் ஒப்புக் கொள்கிறார். ஆனால், இறைவனின் இறுதித் தூதராக வந்த நபிகள் நாயகம் அவர்களையும் அவர்கட்கு இறைவன் நல்கிய இறுதி வேதத்தையும் ஒரு முஸ்லிம் முற்றாக ஏற்றுப் பின்பற்றுகிறார். இதன்மூலம் அவர் முழுமையான முஸ்லிமாகிறார்.

இதிலிருந்து முந்தைய நபிமார்களும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறைவேதங்களும் அவ்வச் சமயத்தவர்கட்கு மட்டும் உரிமையுடையதன்று. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியதாகின்றது. தோரா வேதம் யூதர்கள் வேதம் மட்டுமன்று; இன்ஜீல் வேதம் கிருஸ்தவர்கட்கு மட்டுமன்று; அவ்வாறே ஏப்ரஹாம் எனும் இபுறாஹீம் (அலை) அவர்கட்கும். ஏன்-ஆதி மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) அவர்கட்கும் வழங்கப்பட்ட மூலவேதமும் ஒவ்வொரு முஸ்லிமுடைய வேதமாகும் என்பது தான் இஸ்லாமியக் கோட்பாடு.

இவ்வாறு விண்ணளாவும் அளவுக்குப் பரந்த சமயக் கண்ணோட்டத்தை இஸ்லாமிய மார்க்கம் உணர்த்திக் கொண்டுள்ளது. இதைச் சமய சகிப்புணர்வின் உச்சகட்டம் என்றே கூறவேண்டும்.

உலகெலாம் நபிமார்கள்

இன்றைய உலகில் மக்கள் பேணும் மதங்கள் பல உள்ளன. இவற்றுள் சில காலத்தால் முற்பட்டவை. இன்னும் சில காலத்தால் பிந்தியவை. இஸ்லாம் நிலை பெறுவதற்கு முன் உலகப் பெரும் சமயங்களாக யூத, கிறிஸ்தவ, இந்து, சமண, பௌத்த சமயங்கள் உலகில் நிலவி வந்தன. இன்னும் சொராஸ்டிரியம் போன்ற சிறு சிறு சமயங்களும் உலகில் ஆங்காங்கே இயங்கி வந்தன எனலாம்.

இச் சமயங்களின் தோற்றத்திற்கு மூலவர்களாக விளங்கியவர்கள் அந்தந்த பகுதிக்குள் அடங்கியவர்களாகவே இருந்தார்கள். யூத, கிருஸ்தவ சமயாச்சாரியர்கள் அனைவருடைய தோற்ற வரலாறுகளும் பாலஸ்தீனத்துக்குள் அடங்கியதாகவே உள்ளது. அந்நாட்டிற்கு வெளியே அவர்கள் யாரும் தோன்றியதாக வரலாறு இல்லை. அதேபோன்று இந்து மத, சமண, பௌத்த சமயங்களைத் தோற்றுவித்த இறை அவதாரங்கள், ரிஷிகள் எல்லோருமே இந்திய மண்ணோடு சரி. பாரத மண்ணிற்கு வெளியே அவர்களில் யாருமே தோன்றியதாக எந்த வரலாறும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் பரவி, பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கௌதம புத்தர் உட்படச் சமயச்சாரியர்கள் அனைவருமே இந்தியாவுக்குள் மட்டுமே தோற்றம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

ஆனால், இஸ்லாமிய மரபுப்படி, இறைவனால் படைக்கப்பட்ட மனித சமுதாயத்துக்கு இறைவனின் நேர் வழி உணர்த்தி வழிகாட்டிட, இவர்கள் உட்பட அனுப்பப் பட்ட ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்கள் உலகெங்கும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும், எல்லா மொழிகளிலும் பிறந்துள்ளார்கள். இவர்களில் சிலர் ஒரு நாட்டு மக்களை இறை நெறியில் வழி நடத்தியிருக்கிறார்கள். வேறு சில நபிமார்கள் குறிப்பிட்ட இன மக்களை நல்வழியில் செலுத்தியிருக்கிறார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கு இறை நெறியைப் புகட்டி வழிகாட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இறை தூதர்கள் தோன்றாத நாடோ, இனமோ, மொழியோ இருந்ததாக வரலாறு இல்லை எனலாம். இதையே திருக்குர்ஆன்,

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வருப்பாரும் பூமியில் இருக்கவில்லை” (திருக்குர் ஆன் 35-24)

எனத் திருமறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.