இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/இஸ்லாம் தரும் ஆக்கச் சிந்தனை

இஸ்லாம் தரும் ஆக்கச் சிந்தனை

பெருமானாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்போது அண்ணலார் வாழ்வையும், வாக்கையும் அலசி ஆராயும் அரிய வாய்ப்பைப் பெறுகிறோம். அப்போது நாம் அண்ணலார் பற்றி அறிந்திராத அல்லது அறிந்தும் மறந்துவிட்ட பல பயனுள்ள செய்திகளை, நினைவுகளை இத்தகைய விழாக்கள் மூலம் மீண்டும் பெற வாய்ப்பாயமைகின்றது. மீலாது விழாவை முஸ்லிம்கள் மட்டும் கூடும் கூட்டமாக அமைக்காமல் பல்வேறு சமயத்தினரும் பங்கேற்கும் கூட்டங்களாக அமைக்கப்பட வேண்டும் என்பதில் நான் பேரார்வம் கொண்டவன். ஏனெனில் நாயகத் திருமேனியும் அவர் வாயிலாக உலகுக்கு வழங்கப்பட்ட இறைவேதமான திருக்குர்ஆனும் முஸ்லிம்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை. உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி இறைத் தூதர், இறுதி வேதம் என்பதை நாம் உணரவேண்டும். இதை நம்மைவிட நம் சகோதர சமயத்தவர்கள் இன்று மிக நன்றாகவே உணர்ந்து வருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இஸ்லாத்தை அறியப் பேரார்வம்

என்றுமில்லாத அளவுக்கு பிறசமயச் சகோதரர்கள் இஸ்லாத்தை அறியவும் ஆராயவும் முற்பட்டுள்ளனரே ஏன்?

இன்று உலகெங்கும் வாழும் படித்தவர்கள், அறிவாளிகள், அறிவியல் வல்லுநர்கள் குறிப்பாக மேற்குலகைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இன்று சமுதாய உணர்வோடு அறிவியல் சிந்தனையுடன் விஞ்ஞான பூர்வமாக இஸ்லாத்தை காணவும் ஆராயவும் முற்பட்டுள்ளனர் என்பதுதான் உணமை.

இன்றையச் சூழலில் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு அண்ணலார் மூலமும், அவர் மூலம் இறைவன் வெளிப்படுத்திய திருமறையின் வாயிலாகவும் தீர்வுகாண முற்படுகின்றனர். இதை ஒருவகை விழிப்புணர்வு என்றே கூறலாம்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் பெறவேண்டிய, நம்முன் உள்ள பொறுப்புகள், கடமைகள் என்ன என்பதையும் இந்நேரத்தில் சிந்திக்கவும் செயல்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்

பெருமானார் பிறந்தநாள் விழாவிலே கலந்து கொள்ளும் நாம், இறுதி நபி இறுதி வேதம் வழி வாழ்ந்து காட்டிய ‘அழகிய முன்மாதிரி'யான வாழ்வியல் நெறி முறைகளை நினைந்து, அதன்படி வாழ உறுதி கொள்கிறோம். அதற்காக வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி 'இறை நெறி பேணும் எங்களுக்கு வெற்றியைத் தர' வேண்டுகிறோம்.

பிறர் கண்ணோட்டம் என்ன?

இதே சமயத்தில் மற்றொன்றைப் பற்றியும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்மைச் சுற்றி வாழ்வோரில் ஒரு சிலர் நம்மைப்பற்றி, நாம் பேணி வாழும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பற்றி என்ன கருதுகிறார்கள், அவர்கள் கண்ணோட்டம் என்ன என்பதைப் பற்றியும் நாம் கருதிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். 

மாற்றார் நம்மைப்பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினால் நம் வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களைப் பற்றி ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். மற்றவர்கள் உண்மை தெரியாமல் நம்மைப் பற்றி தவறான கண்ணோட்டம் செலுத்துவதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என சொல்லுவது சரியான போக்கு அன்று. அந்தத் தவறான உணர்வுகளைப் போக்குவதும் உண்மைகளை அறிந்துணரத் தூண்டுவதும் நம் கடமையாகும். ஏனெனில், பிற சமயத்தவர் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நிலை. மாற்றாரின் தவறான கண்ணோட்டங்களை அலட்சியப்படுத்திவிட முடியாது.

ஒருபுறம் அண்ணலார் வாழ்வையும் வாழ்க்கையையும் அதற்கு அடித்தளமான இறுதித் திருமறையையும் அறிவியல் அடிப்படையில் ஆய முனையும் அறிஞருலகம், மற்றொரு புறம் சமய மாச்சரியங்கட்கு ஆட்பட்டு, உண்மையறிய விழையாது இஸ்லாத்தின் மீது மாசு கற்பிக்க முனையும் கூட்டம். இதை நாம் முழுமையாக அலட்சியப்படுத்தாது, அவர்கள் வீசும் தூசிகளை அப்புறப்படுத்த உண்மையை உணர்த்துவது நம் கடமையாகும். 'அல்லாஹ் பார்த்துக் கொள்வான்’ என்று வீணே இருப்பது தவறு. அவன்தான் அத்தகைய தூசிகளைத் துடைப்பதற்கான அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளான் என்பதை மறக்கக் கூடாது. நாம் நடந்து செல்லும் பாதையில் கல்லையும் முள்ளையும் போடுகிறார்கள் என்றால் போட்டுவிட்டுப் போகட்டுமே என்று வெறுமனே இருக்க முடியுமா? அவற்றை அப்புறப்படுத்தத்தானே அறிவும் சிந்தனையும் இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வாதிகளா? பழமை வாதிகளா?

இஸ்லாத்தின் உண்மைத் தன்மைகளை, அடித்தளப் பண்புகளை, உயிரோட்டமான தத்துவ நுட்பக் கருத்துகளை உணர்ந்து தெளிய இயலாத சிலர், இஸ்லாத்தைத் தவறான கண்ணோட்டத்தில் விமர்சிக்க முற்படுகின்றனர். அதற்கு அவர்கள், கையாலும் சொல் FUNDAMENTALIST எனும் சொல்லாகும். இதற்கு 'அடிப்படைவாதிகள்' என்பது சரியான பெயர்ப்புப் பொருளாகும். மற்ற சமயங்ளெல்லாம் காலப்போக்கில் செல்வாக்குப் படைத்த ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, மாற்ற திருத்தங்களை ஏற்றுச் சில அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுத்து மனித விருப்பங்களுக்கேற்ப மாறி விடுகின்றன.

ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைநெறியாக இறைவனால் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் மூலம் வகுத்தளிக்கப்பட்ட வாழ்வியல் நெறியாக அமைந்திருப்பதால் தனிப்பட்ட மனித விருப்புகளுக்கு இம் மார்க்கத்தில் அறவே இடமில்லாமல் போகிறது. இறைநெறியாதலால் மாற்ற திருத்தமில்லாத தூயநெறியாக விளங்குகிறது. முஸ்லிம்கள் இறைநெறியின் அடிப்படைகளைப் பேணிக்காப்பதை உயிரினும் மேலாகக் கருதுவதால் அவர்களை அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத 'அடிப்படைவாதிகள்’ எனக் கூறுவதில் தவறில்லை.

என்றாலும் சிலர், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஏசவும் பழிக்கவும் Fundamentalist என்பதை பழமைவாதிகள் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஆன்மீகத்தோடு அறிவியல் போதித்த அண்ணலார் வழி வாழும் முஸ்லிம்களை, இன்றைய அறிவியல் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்த இஸ்லாமியர்களை, பத்தாம் பசலிகள் என்னும் பொருள்பட பழமைவாதிகள் எனக் குறிப்பிடுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அன்று எகிப்து, பாபிலோன் போன்ற பகுதிகளில் முகிழ்த்தெழுந்த கணிதம், வானியல், மருத்துவம் போன்ற துறைகள் முளைவிட அவற்றிற்கு அரிட்ஸ்டாடில், பித்தகோரஸ் போன்ற கிரேக்கர்களும் யூக்ளிடு, தாலமி போன்ற எகிப்திய, அலெக்ஸாண்டிரிய அறிஞர்களும் கொள்கை வடிவம் தர, அவற்றையெல்லாம் அரபி மொழியில் பெயர்த்த முஸ்லிம்கள், அத்தனை அறிவியல் துறைகளுக்கும் செயல் வடிவம் தந்து இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வழிகோலிய முஸ்லிம்களா பழமைவாதிகள்?

அரபுகள் கண்டறிந்த கண்டுபிடிப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து, இன்றைய தொழிற்புரட்சிக்கு வழி கோலினர் மேலைநாட்டினர். இவ்வாறு இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு - தொழிற்புரட்சிக்கு ஆதார சுருதியாயமைந்த முஸ்லிம்கள் பழமைவாதிகளா?

'எம்மதமும் சம்மதம்' - சரியா?

இதேபோல அண்மைக் காலமாக முஸ்லிம்களை நோக்கி ஒரு முழக்கம் முன் வைக்கப்படுகிறது. ‘எம்மதமும் சம்மதம்’ என்பதே அந்த முழக்கம். இஸ்லாத்தை மட்டும் ஏற்று, பின்பற்றி வாழாது எல்லாசமய நெறிமுறைகளையும் முஸ்லிம்கள் ஏற்று பின்பற்றி வாழ முற்பட வேண்டும் என்பதே இம்முழக்கத்தை முழங்குவோரின் உட்கிடக்கை. இதற்கு மாறுபாடான உணர்வை வெளிப்படுத்தினால், மதச் சகிப்புணர்வு இல்லாதவன், சமய நல்லிணக்கச் சிந்தனையற்றவன் என நம் மீது அவதூறு கூறி புழுதி வாரித் தூற்றுவதுதான் அவர்கள் நோக்கம்.

'எம்மதமும் சம்மதம்’ என்ற கோட்பாட்டை ஏற்றால் வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட நிலையில் செளஜன்யமாக வாழ முடியும். வேற்றுமை உணர்வே இல்லாமல் எல்லோரும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்றெல்லாம் கவர்ச்சியான விளக்கம் தரத் தவறுவதில்லை.

ஆனால், ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தால் இக்கோட்பாடு எவ்வளவு அபத்தமானது என்பது தெளிவாகும்.

ஒரு மார்க்கம் சொல்லுகிறது "இறைவன் ஒருவனே; அவன் இணை துணை இல்லாதவன்; பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; அவன் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியும் இல்லை; அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை; அவன் எந்தத் தேவையும் இல்லாதவன்; அவன் கொடுப்பவனே தவிர எதையும் பெறுபவன் இல்லை.” என்று கூறுகிறது.

மற்றொரு மதம் "இறைவன் ஒருவரல்ல; பலர். இறைவனோடு இறைவியும் உண்டு. இறைவனுக்கு மனைவி, மக்கள் உண்டு. உற்றார் உறவினர் உண்டு” என்று சொல்லுகிறது. எதிர் எதிரான இவ்விரு இறைக் கோட்பாடுகளும் எப்படி ஒன்றாகும்.

இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள், இஸ்லாம் மார்க்கம் மனிதனுக்கு இறப்புக்குப் பிறகு பிறவி இல்லை என்கிறது. உயிரோடு வாழும்போதே அவனுக்குப் பிறவி உண்டே தவிர இறப்புக்குப்பிறகு அவன் மறுபிறவி எடுப்பதே இல்லை. எண்ணிப் பாருங்கள், நாம் வாழும் காலத்திலேயே மனைவியின் உறுதுணையோடு மகனாகவும் மகளாகவும் பிறவி எடுக்க முடிகிறது. கணவனின் இந்திரியத் துளியிலிருந்து உருவாகி வெளிப்படும் ஓர் உயிரணு மனைவியின் யோனிக் குழாயில் உருவாகியுள்ள முட்டையோடு சேர்ந்து, கருப்பையினுள் புகுந்து சிசுவாக வளர்ந்து வெளிப்படுகிறது. இவ்வாறு கணவனும் மனைவியும் உயிர் வாழ்கிறபோதே தங்கள் சந்ததிகளை பிறவி எடுக்க வைக்கிறார்களே தவிர இருவரும் இறந்த பின் ஏதும் உருவாவதில்லை என்பது அறிவியல் சித்தாந்தம்.

இறப்புக்குப்பின் அவன் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மை தீமைகளுக்கேற்ப உயர் பிறவியாகவோ அல்லது பூச்சி, புழு போன்ற தாழ்ந்த பிறவியாகவோ பிறப்பார்கள் என்பது பிற சமயங்கள் கூறும் அழுத்தமான கோட்பாடு.

இவ்விரண்டு கோட்பாடுகளும் எப்படி ஒன்றாக முடியும்?

சுருங்கச் சொன்னால் 'எம்மதமும் சம்மதம்’ எனும் கோட்பாடு நீ தொப்பியும் வைத்துக்கொள்; நாமமும் தரித்துக் கொள்; பொட்டும் வைத்துக் கொள்; பட்டையும் தீட்டிக் கொள் என்று சொன்னால் அத்தோற்றம் எவ்வளவு விகாரமாக இருக்குமோ அதைப் போன்றதுதான் இக் கோட்பாடு. இந்த நவீன காலத்தில் தங்கள் பரந்த மனப்பான்மையை, விரிந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்த, சமய சகிப்புத்தன்மையோடு ஒருங்கிணைந்து வாழ முயற்சிப்பது போல, சமய நல்லிணக்கத்தைத் தூக்கி நிறுத்த முயல்வது போன்ற தோற்றத்தை உண்டு பண்ண, குறிப்பாக ஆழ்ந்த சிந்தனையோ அனுபவமோ அற்ற இளைஞர்களை ஈர்க்க இக்கோட்பாடு அடிக்கடி முழங்கப்படுகிறது.

அதைவிடச் சிறந்த கோட்பாட்டை இஸ்லாம் உலகுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. அதுதான் “உங்கள் மதம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்ற முழக்கம்.

எல்லா மதத்தையும் நாம் மதிப்போம். மதிப்பது வேறு, ஏற்று நடப்பது வேறு.

எல்லா மதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவைகளே. அனைத்து வேதங்களும் இறைவனால் தரப்பட்டவைகளே. ஆனால், அனைத்து மதங்களும் வேதங்களும் மனித விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் அவை தங்கள் தனித்துவத்தை இழந்து பாதை மாறி இருட்கிடங்குகளாக மாறிவிட்ட நிலையில் அவையும் ஒளிப்பிழம்பாயுள்ள மார்க்கமும் ஒன்றே என்பது ஏற்கத் தக்கதன்று. ஆனால், அனைத்து மதங்களும் வேதங்களும் இறைவனால் வழங்கப்பட்டவை என்ற உண்மையை ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதற்காக பிற மதங்களை வெறுக்க வேண்டுமென்பதில்லை. அப்படி வெறுத்தால் அவன் முஸ்லிமே அல்ல. மதிக்க வேண்டும். இறைவன் தன் திருமறையில்,

"எம்மால் அனுப்பப்படாத இறை தூதர்கள் இல்லை” எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் நாம் தூதர்களையும் அவர்களுக்கு வேதத்தையும் அருளியிருக்கிறோம்” என்று தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆனால், இறை தூதர்களின் மறைவுக்குப் பின்னர் மனிதர்கள் தங்கள் சொந்தச் சிந்தனைகளை, விருப்பு வெறுப்பு உணர்வுகளை வேதங்களில் ஏற்றி மாசுப்படுத்தியும் இறை தீர்க்கதரிசிகளின் மறைவுக்குப் பின்னர், இறந்த நபி மீது கொண்ட பற்றாலும் பாசத்தாலும் இறைத் தன்மைகளை அவர் மீது ஏற்றி இறைவனாக்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது, மீண்டுமொரு இறைதூதர், மீண்டும் மூல வடிவில் இறை வேதம் இறைவவனால் உலகுக்க வழங்கப் படலாயிற்று. அவ்வகையில் வந்த இறுதித் தூதரே நபிகள் நாயகம் (சல்) அவர்களும் அவர்கட்கு வல்ல அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆனும். அவ்விறுதி வேதத்தில் இடம் பெற்ற இறைவாக்கே,

“உங்களுக்கு உங்கள் மதம்; எங்களுக்கு எங்கள் மார்க்கம்” என்ற சமயக் கோட்பாடு.

அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். மதாச்சாரியர்களான மத தீர்க்கதரிசிகளையும் மதிக்கிறோம். அம்மதங்களைப் பின்பற்றுபவர்களையும் மதிக்கிறோம். இதில் எந்த மாறுபாடும் வேறுபாடும் இல்லை.

மாற்று மதங்கள் அல்ல; சகோதர சமயங்கள்

மாற்றுமதம் என்பதே தவறான சொற்பிரயோகமாகும். அனைத்துச் சமயங்களும் இஸ்லாம் உட்பட இறைவனால் அருளப்பட்டமையால் 'சகோதர சமயங்கள்’ என்பதே பொருத்தமான சொற்பிரயோகம் ஆகும். அனைத்துச் சமயங்களயும் அனைத்து வேதங்களையும் மதிக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கற்றுத்தந்த பாடமும் கூட. இதைத் தெளிவாக விளக்கவல்ல நிகழ்ச்சியொன்று பெருமானாரின் பெருவாழ்வில் நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்துள்ளது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்ததைத் தொடர்ந்து அவரது அன்பு மகள் அஸ்மாவும் இஸ்லாத்தில் இணைந்தார். ஆனால், அஸ்மாவின் தாயார் இஸ்லாத்தில் இணையாமல் சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்தார். ஆகவே, அவரோடு இணைந்து ஒரே வீட்டில் வாழவிரும்பாமல் தந்தையும் மகளும் தனியே வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் அஸ்மாவின் தாயார் தன் அன்பு மகளைப் பார்க்க பரிசுப் பொருளோடு வந்தார். அவர் வாசற்படியில் கால் வைக்கும் முன்பே தன் தாயாரைப் பார்க்க விரும்பாத மகள் அஸ்மா கதவை அடைத்துத் தாளிட்டு விடுகிறார். தன் அன்பு மகளைப் பார்த்து, பரிசுப் பொருள் தந்து மகிழ்வித்து உறவாட வந்தவருக்கு பெரும் மன வருத்தம் ஏற்பட்டாலும் மகள் மனம் மாறி தாயின் மீது அன்பு சுரக்கும் என்ற நம்பிக்கையில் வாயிலில் காத்திருந்தார்.

இச் செய்தி உடனடியாகப் பெருமானார் காதுகளுக்கு எட்டியது. மாற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகத் தன் தாயாரை வெறுப்பது பெரும் தவறு என்பதை அஸ்மாவை அழைத்து உணர்த்துகிறார். தாய் என்பதற்காக மட்டும் அல்ல, சகோதர சமயத்தைச் சார்ந்தவரை மதிப்பதும் ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை என்பதை அஸ்மாவுக்கு உணர்த்தி, சகோதர சமயத்தைச் சார்ந்த தாயாரை வரவேற்று கண்ணியப்படுத்தச் செய்தாரென்றால் ஒரு முஸ்லிம் பிறமதத்தவர்களை மதிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவே அமைந்துள்ளது என்பதை உணர்ந்து தெளியலாம். 

அது மட்டுமல்ல, பிற சமய தீர்க்கதரிசிகளை, நபிமார்களை யாரும் குறைந்து மதிப்பிட்டுப் பேசுவதைப் பெருமானார் அவர்களால் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை. முந்தைய நபிமார்கள் அத்தனை பேர்களையும் முஸ்லிம்கள் மதித்துக் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். இதை விளக்கும் நிகழ்வொன்று அண்ணலார் வாழ்வில் நிகழ்வுற்றது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணலாரின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். ஒரு சமயம் கடை வீதிக்குச் சென்று யூதர் கடை ஒன்றில் பொருளின் விலையைக் கேட்டார். பேரம் பேசிய போது ஒரு குறிப்பிட்ட தொகையை விலையாகக் கூறியதுடன் இதற்குமேல் குறைக்க முடியாது எனக் கூறினார். அதோடு நிற்காமல் அவ்விலையை அதற்கு மேல் குறைக்கவியலாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், 'மனிதர்களிலேயே மகோன்னதனமான மனிதராகிய, இறைவனால் பெருமளவு மதிக்கப்பட்ட, உயர்த்திச் சிறப்பிக்கப்பட்ட அந்த மூஸா அவர்களின் மீது ஆணையாகச் சொல்கிறேன், இதற்கு மேல் குறைத்துக் கொடுக்க இயலாது' எனக் கூறினார்.

மூஸாவை வானளாவ புகழ்வதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கட்கு கோபம் வந்துவிட்டது. நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறுதிப் பெரு நபியாக, நபிகளுக்கெல்லாம் நாயகமாக இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இறுதி வேதமான திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூஸா அவர்களை உலகத்திலிருக்கும் மனிதர்களிலேயே உயர்ந்தவராக எப்படிக் கூறலாம். இதன் மூலம் பெருமானாரை தாழ்த்தி மூஸாவை உயர்த்திக் கூறுவதா எனக் கருதி யூதரை ஓங்கி அறைந்து விட்டார். அந்த யூதர் நேரடியாகப் பெருமானாரிடம் சென்று நடந்ததைக் கூறினார். இதைக் கேட்டு மனம் வருந்திய பெருமானார் உடனே அபூபக்ரை அழைத்து, என்னைத் தாழ்த்தி மூஸா (அலை) அவர்களை உயர்த்திப் பேசினார் என்பதற்காக அறைந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் என்று கூறி யூதரிடத்திலே அண்ணலார் வருத்தம் தெரிவித்தார். இதன் மூலம் பிற சமயங்களைப் பழிக்கக் கூடாது, பிற சமயங்களைச் சார்ந்தவர்களை மதிக்க வேண்டும். பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதிக்கப் பணிப்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு என்பதை நாம் உணர வேண்டும்.

பிற சமயத்தவர் நம்பிக்கைகளை, சமய உணர்வுகளை மதிப்பது ஒரு முஸ்லிம்களின் அடிப்படைப் பண்பு என்பதை அழுத்தமாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சி அவுரங்கசீப் ஆலம்கீர் வாழ்க்கையில் நடந்ததாக வரலாறு சாட்சியம் கூறிக் கொண்டுள்ளது.

அவுரங்கஸீப் ஆலம்கீரும் சிவாஜியும் அரசியல் விரோதிகளாவர். அவர்களுக்கிடையே மதத் தகராறு எதுவும் இல்லை. அவுரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்ட மராட்டியப் பகுதியைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முயன்றவர் சிவாஜி. போரின்போது கைதான சிவாஜி சிறை வைக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. அவர் பின்பற்றி வந்த இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் மதுராவில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்குச் சில குதிரைகளைத் தானமாகத் தந்தால் தனக்கேற்பட்டுள்ள நோய் போய்விடுமெனவும் அவ்வேண்டுகோளை ஏற்று, அவுரங்கஸீப் மன்னர் நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் சிறையிலிருந்தவாறே சிவாஜி வேண்டினார். அவுரங்கசீப்புக்கு அத்தகைய நம்பிக்கை அறவே இல்லையென்றாலும் சிவாஜியின் சமய நம்பிக்கையை மதித்து, மதுராவிலுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு குதிரை வழங்கினார் அவுரங்களஸீப் என்பது வரலாறு. இதிலிருந்து பிற சமயத்தவர் நம்பிக்கைகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது இஸ்லாமியனின் இன்றியமையாக் கடமை என்பது தெளிவு.

அது மட்டுமல்ல, சமயம் கடந்த நிலையிலே பிற மதத்தவர்களோடு நட்புணர்வு பாராட்ட வேண்டும் என்பது இஸ்லாமியக் கோட்பாடு. உயிர் சிநேகமாக நாம் எந்தச் சமயத்தைச் சார்ந்தவரோடும் இருக்க முடியும். மதம் வேறு, நட்பு வேறு. இதற்கு வாழும் சான்றாக விளங்குவது தேசிங்கு ராஜன் மஹ்மூத் கான் நட்புணர்வு. இவர்களின் நட்பு, நட்புக்கே இலக்கணமாகும். மஹ்மூத் கானின் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. தாலி கட்டும் நேரம். படையெடுப்பு என்று செய்தி வருகிறது. தாலி கட்டியவுடன் மனைவி முகத்தைக்கூட காணாமல் நண்பன் தேசிங்கு ராஜனோடு போர்முனை புகுந்தான் என்பது வரலாறு.

மனிதத்துவத்திற்கே மரியாதை

மதம், ஜாதி, இனம், மொழி பார்க்காமல் மனிதன் என்ற அளவில் பார்க்கச்சொல்வது இஸ்லாம். அம்மனிதனிடம் மனிதத்துவம் இருக்கிறதா? எனக் கவனிக்கச் சொல்வது இஸ்லாம். அப்படியிருந்தால் அவனிடத்தில் அன்பு, பாசம் காட்டப் பணிப்பது இஸ்லாம். இதற்கு மதுரை மன்னன் ஜாதவர்மன் சுந்தரபாண்டியனும் அவன் படைத்தளபதி சையத் தகியுத்தீன்கானும் வாழும் சான்றாக வரலாற்றில் மின்னிக்கொண்டுள்ளார்கள்.

பாண்டிய மண்டலத்தின் கடைசி மன்னனாக மதுரையிலிருந்து ஆட்சி செய்தவன் ஜாதவர்மன் சுந்தரபாண்டியன். அப்போது அவன் படைத்தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் சையத் தகியுத்தீன் கான் எனும் முஸ்லிம். இஸ்லாத்தை உணர்ந்து தெளிந்தவர்; அதன் கொள்கை, கோட்பாடுகளை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்து வாழும் பெற்றியினர். அப்போது பாண்டிய மன்னனின் தளபதியாக மட்டுமல்லாது முதன் மந்திரியாகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றியவர். அவரை நம்பி நாட்டையே அவரிடம் ஒப்படைத்திருந்தான் ஜாதவர்மன் சுந்தர பாண்டியன். அப்போது பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க முனைகிறான் மாலிக்கபூர். படை புறப்படுமுன் பாண்டிய நாட்டின் தலைமைத் தளபதியும் தலைமையமைச் சருமான தகியுத்தீனுக்கு ஒரு இரகசிய செய்தி அனுப்புகிறான். "நீயும் முஸ்லிம் நானும் முஸ்லிம். நான் படை யெடுத்து வருகிறேன். அப்போது நீ என் படையை எதிர்த்து போரிடாது ஒதுங்கிக் கொள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றி உன்னிடத்தில் ஒப்படைத்துவிடுகிறேன்” என ஆசைக் காட்டி ஓலை அனுப்பினான்.

செய்தி பெற்ற தகியுத்தீன் கொதிப்படைகிறார். இஸ்லாமிய நெறிக்குப் புறம்பாக ஆதிக்க வெறிபிடித்த மாலிக் காபூரின் இழிசெயலைக் கண்டு, கடுஞ்சினத்துடன் பதில் மடல் வரைகிறார். "இது ஒரு முஸ்லிம் செய்யும் இழி செயல். நான் இந்தப் பாண்டிய நாட்டின் உப்பைத் தின்று கொண்டிருப்பவன். இங்கு வீசும் காற்றைச் சுவாசித்து வாழ்பவன், நான் இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேனே தவிர, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக உனக்குச் சாதகமாக நடந்து கொள்வேன் என்று கனவிலும் கருதாதே. நீ இப்படி எண்ணிய மறு விநாடியே 'முஸ்லிம்' என்ற உன்னத இடத்தை இழந்துவிட்டாய். அவ்வாறு இழக்க நான் விரும்பவில்லை. எனவே உன் படைகளைப் போர்க்களத்தில் சந்திப்பேனே தவிர நீ கருதுவது போன்று இஸ்லாத்துக்குப் புறம்பான, நன்றி கெட்ட இழி செயலில் ஈடுபடமாட்டேன். போர்க்களத்தில் உன்னை சந்திக்க விழைகிறேன்” என மடல் வரைந்து, இன்று வரை நட்புக்கும் நன்றியுணர்வுக்கும் வாழும் எடுத்துக்காட்டாக வரலாற்றில் திகழ்கிறார் சையத் தகியுத்தீன் கான்.

அன்று மட்டுமல்ல ; இன்றும்

அன்று பாண்டிய நாட்டின் பாதுகாப்புக் கேடயமாக தகியுத்தீன் விளங்கியது போன்று இன்று இந்தியாவின் முழுப் பாதுகாப்புக்கும் அறிவியல் பூர்வமான பாதுகாப்புக் கேடயமாக விளங்குகிறார் இந்திய ஏவுகணை பிதாமகர் பாரத ரத்னா அபுல் கலாம் என்ற அற்புத விஞ்ஞானி. இது வளரும் வரலாறு.

இதற்கெல்லாம் அடித்தளக் காரணம் இஸ்லாம் போதிக்கும் உணர்வு, கொள்கை, கோட்பாடு. ஒரு முஸ்லிம் எந்த மண்ணில் வாழ்கிறாரோ அந்த மண்ணுக்கு நன்றியுள்ள வராக வாழவேண்டும். அந்த மண்ணில் வாழும் மக்களிடத் திலே உள்ளன்பு காட்ட வேண்டும். எந்த மண்ணின் ஆட்சியில் நீ வாழ்கிறாயோ அந்த மண்ணின் ஆட்சிக்கு நீ உண்மையாக இரு என்பதுதான் இஸ்லாமிய போதனை, பெருமானார் வாழ்ந்துகாட்டிய வாழ்வியல் முறை.

ஒரு மனிதனிடம் நன்றியுணர்ச்சி இருக்கிறதென்றால் அவனுக்கு நிச்சயம் மனசாட்சி இருக்கும். அவ்வுள்ளத்தில் நீதி, நேர்மை பொங்கும். அத்தகைய உள்ளத்தின் மூலம்தான் இறைத் தொடர்பு ஏற்படுகிறது.

இஸ்லாத்தின் உயிரோட்டமான நீதி நேர்மை என்ற உணர்வுகள் மனச்சாட்சியைத் தூண்டும் ஊக்கிகளாகும். இதற்கு இலக்கணமாய் அமைந்த நிகழ்வு ஒன்றை இங்குக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்

அலீ (ரலி) ஓர் அரிய சான்று

அலீ (ரலி) அவர்கள் நான்காவது கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரிடத்திலே ஒரு இரட்டை வாள் இருந்தது. அது. அவரிடத்திலே இருந்தவரை அவரை யாராலும் வெல்லமுடிந்ததில்லை. அவ்விரட்டை வாள் எப்படியோ கை மாறி ஒரு யூதன் கைக்குப் போய்விட்டது. அவ்வாள் தன்னிடம் இருந்தால்தன் பரம்பரைக்கே பெருமையாக அமையும் எனக் கருதி, அவ்வாளை மறைத்து விட்டான். ஆனால், நாட்டின் ஆட்சியாளரான கலீஃபா அலீ (ரலி) அவர்கட்கு வாள் இருக்கும் ரகசியம் தெரிய வருகிறது. அவர் நினைத்திருந்தால் தன் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களுக்குள் இரட்டைவாளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அவர் அறவே விரும்பவில்லை. பின் என்ன செய்தார்?

தன் வாளை முறைப்படி பெற நீதி மன்றத்தை அணுகுகிறார்.

“என் இரட்டை வாளை யூதர் ஒருவர் கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளார். அந்த வாளை, நீங்கள் விசாரித்து, வாங்கித் தர வேண்டும்"

என்று நாட்டையே ஆளும் கலீஃபா சாதாரண குடிமகனைப் போன்று நீதி மன்றத்தை அணுகி நீதி கேட்கிறார்.

அவ்வழக்கு மன்றத்தின் நீதிபதியாக ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி வாதி, பிரதிவாதி இருவரை ஒருசேர வழக்கு மன்றம் அழைத்து விசாரணை நடத்துகிறார்.

யூதரிடம் இருப்பதாகக் கூறும் வாள் உங்களுடையது தான் என்பதற்கு ஆதாரம், சாட்சி கேட்கிறார் நீதிபதி ஹாரிஸ். உடனே அலீ (ரலி) என் மகனை அழைத்துக் கேளுங்கள் என்று கூறுகிறார். தந்தையின் வழக்கில் பிள்ளையின் சாட்சியை ஏற்பதற்கில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்கிறார். வேறு வழியின்றி நீதிபதியின் தீர்ப்பை ஏற்று கலீஃபா அலீ (ரலி) வழக்கு மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்

நாட்டை ஆளும் கலீஃபாவாக இருந்தும் சாதாரண குடிமகனைப் போல் கோர்ட்டில் வழக்குத் தொடுத்ததும், போதிய சாட்சியமில்லா நிலையில் நீதிபதி தந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதும் யூதரின் மனச் சாட்சியை உறுத்தத் தொடங்கியது. கலீஃபா நினைத்திருந்தால் என்னை அடித்தோ உதைத்தோ வாளை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், சரியோ தவறோ நீதிக்கு மரியாதை கொடுத்த அலீ (ரலி) அவர்களின் செயல்பாட்டைக் கண்ணுற்ற யூதர்,இவ்வளவு உயர்ந்த உத்தமரின் புகழ்மிக்க உடமையான இரட்டை வாளை இனியும் தம் வசம் வைத்திருப்பது மிகக் கேடான செயலாகும். இதனால் நமக்கு நரகம்தான் கிடைக்கும் எனக் கருதி, மனச்சாட்சியின் உந்தல்படி, வாளை எடுத்து வந்து அலீ(ரலி) அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினார் யூதர். அலீ(ரலி) அவர்களின் செயல் யூதரின் மனச் சாட்சியைத் தூண்டுவதாக அமைந்தது.

நீதி, நேர்மை செம்மையாகச் செயல்பட அவரவர் மனச்சாட்சி தூண்டுதல் பெறுவதை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளதே இஸ்லாமிய ஷரீயத் சட்டம்.

நீதியும் நேர்மையும் இஸ்லாத்தின் இரு கண்கள்

நீதியையும் நேர்மையையும் இரு கண்களாகக் கருதும் இஸ்லாம், அவரவர் பின்பற்றும் சமய அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் விதிக்கிறது. அவ்வகையில் இஸ்லாமிய நெறி அடிப்படையில் நீதி வழங்க உருவானவையே ஷரீயத் சட்டங்கள்.

ஜஹாங்கீர் மாமன்னரின் அன்பு மனைவி நூர்ஜஹான். மிகச் சிறந்த அழகி மட்டுமல்ல, அறிவாற்றலும் செயல்திறனும் நிர்வாகத் திறமையும் நிறைவாக வாய்க்கப்பெற்றவர். ஜஹாங்கீர் ஆட்சி செய்து வந்தார் என்ற போதிலும் உண்மையாக ஆட்சியை நடத்தி வந்தவர் அவர் மனைவி நூர்ஜஹான் தான் என்று கூறினால் அஃது மிகையில்லை.

ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் வில் வித்தை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எய்த அம்பு வேகமாக மதில் சுவரைத் தாண்டி வெளிச் சென்றது. அப்போது அவ்வழியே சென்று கொண்டிந்த சலவைத் தொழிலாளி ஒருவர் உடலில் பாய, அவர் அங்கேயே பிணமாகச் சாய்ந்தார். இந்தக் கொலை வழக்கு சக்கரவர்த்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொலைக் குற்றவாளியாக அவர்முன் அவரது அன்பு மனைவி நூர்ஜஹான் நிறுத்தப்பட்டார்.

வழக்குமன்ற விசாரணைக்குப் பின் ஷரீயத் சட்ட அடிப்படையில் தன் மனைவியென்றும் பாராமல் மரணதண்டனை விதிக்கிறார் மாமன்னர் ஜஹாங்கீர். ஒருவரைக் கொன்றுவிட்டால், கொன்றவர் மரண தண்டனைக்கு உட்பட வேண்டும் என்பது ஷரீயத் சட்டம். ஆனால், அவரைச் சுற்றியிருந்த அரசு அதிகாரிகளுக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியளித்தது. தன் அன்பு மனைவி, தன்னைவிட ஆற்றலுள்ள பெண்மணி, அரசுக்கு வழிகாட்டியாக விளங்கவல்ல திறனாலி மரண தண்டனைபெறுவதை விரும்பவில்லை. ஏதேனும் ஒரு வகையில் தண்டனையைக் குறைக்கச் செய்யுமாறு மாமன்னரை வேண்டுகின்றனர். இஸ்லாமிய நீதி காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த ஜஹாங்கீர் மாமன்னர் சட்ட அறிவு நிறைந்த முஸ்லிம்களையும் இஸ்லாமிய ஞானமிக்க வரையும் ஒருசேர அழைத்து ஷரீயத் சட்டப்படி ஏதேனும் விதி விலக்கு அளிக்க முடியுமா என ஆராயச் சொன்னார். விதி விலக்கு இல்லையெனில் மரண தண்டனையை நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.

ஷரீயத் சட்ட நுணுக்கங்களையெல்லாம் அலசி ஆராய்ந்த போது, 'யார் கொல்லப்பட்டாரோ, அவருடைய அடுத்த வாரிசு, கொன்றவர்க்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம், அத்தண்டனைக்குப் பரிகாரமாக பிணையத் தொகை கொடுத்துவிட்டால், மரண தண்டனை பெற்ற தண்டனையாளியை விடுதலை செய்து விடலாம்' என்ற விதி விலக்கை எடுத்துக் கூறினார்கள். உடனே மன்னர் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறார்.'ஆட்சியாளர்கள் யாரும் இறந்தவரின் வாரிசான அவர் மனைவியை அணுகி பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு அரசிக்கு விடுதலை வழங்குமாறு எக்காரணம் கொண்டும் கோரக் கூடாது. அந்தப் பெண்ணாக முன்வந்து யாருடைய வற்புறுத்தலும் இல்லாது, 'பிணையத் தொகையை வாங்கிக் கொண்டு கொலையாளியை விடுவிக்கிறேன்' எனக் கூறினால் மட்டுமே கொலையாளிக்கு விடுதலைச் சலுகை வழங்க முடியும் 'எனக் கூறிவிட்டார்.

இக் கட்டளையின் விளைவாக அரசு காவலர்கள் யாருமே இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. எனினும், பொது மக்களில் சிலர் சலவைத் தொழிலாளியின் மனைவியிடம் சென்று எதிர்பாரா நிலையில் உன் கணவன் இறக்க நேரிட்டது. அரசி வேண்டுமென்று இக்கொலையைச் செய்யவில்லை. மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியை மன்னித்து விட்டதாகவும் பிணையத் தொகை தந்தால் போதும் என்று நீ கூறினாலொழிய அரசி கொலைத் தண்டனையிலிருந்து மீள வழியேயில்லை எனக் கூறி வேண்டினர்.

மனமிரங்கிய இறந்த சலவைத் தொழிலாளியின் மனவிை மன்னரிடம் சென்று, 'பிணையத் தொகை போதும், அரசியை மன்னிக்கிறேன் எனக் கூற, மன்னரும் அரசிக்குத் தண்டனையில் இருந்து விலக்கு அளித்தார் என்பது வரலாறு. எனவே, நீதியை நிலைநாட்டுவதில் சாதாரண குடிமகனிலிருந்து மாமன்னர் வரை முஸ்லிம்கள் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக, கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வரலாற்று நிகழ்ச்சி ஓர் உன்னதமான சான்றாகும். நீதி நேர்மையின் அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், தவறான கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஜிஹாது என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டது போலவே 'ஜிஸ்யா' வரியைப் பற்றியும் தவறான கருத்தோட்டங்களைக் கூறி இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க சிலர் தயங்குவதே இல்லை.

ஜகாத்துக்கு ஈடாக ஜிஸ்யா

'ஜிஸ்யா எனும் வரி முஸ்லிம் மன்னர்களால் முஸ்லிமல்லாத பிற சமயத்தவர்களிடம் கட்டாய வரியாக, கொடுமை யான முறையில் வசூலிக்கப்பட்டது ' என நீண்ட காலமாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியாகும்.

ஜிஸ்யா வரி எதற்காக வசூலிக்கப்பட்டது?

ஏழையின் பங்கு எனக் கூறப்படும் ஜகாத் தொகை, முஸ்லிம்களிடமிருந்து வசூலித்து,அரசே அத்தொகையை ஏழை எளியவர்களிடம் முறையாகச் சேர்த்து விடுகிறது. ஆனால்,முஸ்லிமல்லாத பிற சமய மக்கள் இதுபோன்ற சமுதாய நன்மைகளைப் பெறமுடியாமல் போகிறது. எனவே அந்தக் குறையைப் போக்க உருவாக்கப்பட்டது தான் முஸ்லிமல்லாதார் வழங்கும் ஜிஸ்யா வரி. முஸ்லிம்கள் வழங்கும் ஜகாத் வரி நிகர வருமானத்தில் இரண்டரை சதவீதம். ஆனால், முஸ்லிமல்லாதவர்கள் வழங்கும் ஜிஸ்யா வரி அதைவிடவும் மிகக் குறைவானதாகும்.

ஜிஸ்யா வரி முஸ்லிமல்லாதவர் என்பதற்காகப் போடப்பட்ட வரி அல்ல.

அரசாங்கம் ஒரு முறையை வைத்திருந்தது. ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, எல்லோரும் போர்ப் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அது. இது எல்லா அரசாங்கமும் கடைப்பிடிக்கும் சாதாரண நடைமுறையும் கூட.

எனினும் முஸ்லிம் அரசாங்கப் படையில் சேர்ந்து பணியாற்ற விருப்பமில்லையென்றால் அவர் சிறு தொகையை அரசுக்குச் செலுத்தி விதி விலக்குப் பெற முடியும். இவ்விதி விலக்கு வரியே 'ஜிஸ்யா' என்று அழைக்கப்பட்டது. அதிலும் கூட, பாதிரியார்களுக்கு, பார்ப்பன அர்ச்சகர்களுக்கு, வயோதிகர்களுக்கு, பெண்களுக்கு விதி விலக்கு உண்டு. சிறுவர்கட்கும் நோயாளிகட்கும் விதி விலக்கு உண்டு. மீதமிருப்பவர்களுக்கு மட்டுமே ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

வசூலிக்கப்படும் ஜிஸ்யா வரியும் எக்காரணம் கொண்டும் அரசு நிர்வாகச் செலவுகட்குப் பயன்படுத்தப்பட மாட்டாது.இஸ்லாமிய மார்க்கப் பயன்பாட்டுக் காரியங்களுக்கு இத் தொகை அறவே பயன்படுத்தக் கூடாது; தொடவே கூடாது.

பின் இத் தொகை எதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது?

முஸ்லிம் அல்லாதவர்களுடைய கோயில்கள், வழிபாட்டிடங்கள், சமயத் தொடர்பான விடுதிகள், மடங்கள் இவற்றின் சீரமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அங்கே இருக்கக் கூடிய ஏழை எளியோர்க்கு, முதியோர், நோயாளிகட்கு இத்தொகை செலவிடப்படும். இத்தொகைக்கு நிகராக அரசும் தொகை வழங்கும். இவ்விரு தொகைகளும் ஒன்றிணைக்கப்பட்டு மேற்கூறிய காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதுதான் உண்மை நிலை. அந்த உண்மையை அறிந்துணராதவர்கள், அறிந்தும் முஸ்லிம்கள் மீது மத வாதத்தை ஏற்படுத்த முனைபவர்கள் ஜிஸ்யா வரி குறித்த தவறான தகவல்களைத் தந்து வந்தார்கள்; தற்போதும் தந்து வருகிறார்கள். இப்பழிகள் இப்போது துடைக்கப்பட்டு வருகிறது

புரட்சிகரப் பொருளாதாரத் திட்டம்

இஸ்லாமிய சமூக, பொருளாதாரக் கொள்கைகள் இன்றைய உலகை விழிப்படையச் செய்து கொண்டுள்ளன. அந்த அளவுக்குப் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைத் தன்னுள் கொண்டதாக இஸ்லாம் விளங்குகிறது.

நிலச் சீர்திருத்தம் இன்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது. 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்பது இன்று எங்கும் கேட்கும் புரட்சிகரமுழக்கமாகும். இந்த முழக்கத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு உலகுக்கு வழங்கியவர் உமர் (ரலி) என்றால் எல்லோருக்கும் வியப்பாக இருக்கும்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல புதுமையான, மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்துக்குப் பெரும் பயன் அளிக்கவல்ல பல திட்டங்களைக் கொண்டுவந்து சட்டமாக்கினார். அவற்றில் ஒன்று நிலச் சீர்திருத்தச் சட்டம்.

இரண்டு ஆண்டுகள் யாரவது தங்கள் நிலத்தைப் பயிரிடாமல் தரிசாகப் போட்டிருந்தால், அந்த நிலத்தினுடைய உரிமையை அவர் இழந்து விடுவார் என்பது சட்டம். அந்த நிலத்தை எவரொருவர் பயிரிட முன் வருகிறாரோ அவருக்கு அந்நிலத்தின் அனுபோக பாத்தியதை போய்விடும் என்பது விதி.

பிலால் (ரலி) அவர்கள் போர்களில் முனைப்புடன் போரிட்டதற்காக ஒரு நிலப்பகுதி அவருக்கு அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிலால் (ரலி) அவர்கள் அந்நிலத்தில் பயிரேதும் செய்யாமல் இரண்டரை வருட காலம் தரிசாகப் போட்டிருந்தார். இதை ஒரு முஸ்லிம், உமர் (ரலி) அவர்களிடம் வந்து "உமர் அவர்களே, இரண்டாண்டுகள் தொடர்ந்து பயிரிடப்படாமல் நிலத்தைத் தரிசாகப் போட்டிருந்தால், அந்த நில உரிமை போய்விடும். பயிரிடக் கூடியவர் பயிரிடலாம் எனச் சட்டம் வைத்துள்ளீர்கள். ஒருவருடைய நிலம் இரண்டரை ஆண்டுகளாகப் பயிரிடப்படாமல் தரிசாகக் கிடக்கிறது. பலபேருக்கு உணவு தரக் கூடிய அந்தத் தரிசு நிலத்தை எனக்கு அளித்தால், மக்களுக்கு உணவு அளிக்க வாய்ப்பேற்படுமே" என்று கூறியதைக் கேட்ட உமர் (ரலி) அந்த நிலத்தை யார் நிலம் என்றுகூட பாராமல் பயிரிடக் கோரியவருக்கே கொடுத்தார். அவரும் பயிரிடலானார்.

பிலால் (ரலி) அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பிய போது, யாரோ தன் நிலத்தில் பயிரிட்டிருப்பது கண்டு பதைத்தார். உடனே உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறையிடுகிறார். 'எனக்குப் பெருமானார் (சல்) அவர்களால் அளிக்கப்பட்ட நிலம் அது. அதில் யாரோ ஒருவர் பயிர் செய்து கொண்டுள்ளார். அதனை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியபோது 'உழுபவருக்கே நிலம் சொந்தம்' என்ற சட்டம் அமுலிலிருந்தும் அதைத் தெரிந்து கொள்ளாமல், அமுல்படுத்தாமல் இருந்தால் நீங்கள் அந்தச் சட்டத்தை மதிக்கவில்லை என்பது தானே பொருள். இந்தச் சட்டத்தை நீங்கள் பின்பற்றாததால் பயிரிடக் கூடிய ஒருவருக்குச் சட்டப்படி அந்நிலம் உடமையாகி விட்டது' எனக் கூறி அனுப்பி விட்டார் என்பது வரலாற்றுக் குறிப்பு.

அது மட்டுமல்ல, மக்கா நகரத்திலும் மதினா நகரத்திலும் ஒருவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருக்கலாம். இரண்டு வீடுகள் இருந்தால், மற்றொரு வீடு, வீடற்றவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல புரட்சித் திட்டங்களை, சமதர்மப் பொதுவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியவர் உமர் (ரலி) அவர்கள்.

அதனால், விடுதலைப் போராட்ட காலத்திலேயே, அண்ணல் காந்தியடிகள் 'நாடு விடுதலை பெற்றவுடன் உமர் அவர்களின் ஆட்சி முறை இந்தியாவில் அமைய வேண்டுமெனக் கனவு காண்கிறேன்’ என்று கூறினாரென்றால் இஸ்லாமிய நெறிமுறைகள் எவ்வளவு உன்னதமானவை என்பதை நாம் உணர்ந்து தெளியலாம்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கொள்கைகளில் ஒன்றான ஜகாத் முறை இன்றையப் பொருளாதார பேரறிஞர்களை வியப்பிலாழ்த்தும் கோட்பாடாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமான நிகரத் தொகையிலிருந்து இரண்டரைச் சதவீதத்தை ஏழை எளியவர்களின் பங்காக, தானே கணக்கிட்டு, தன் கையாலேயே இடது கைசெய்வது வலது கைக்குக்கூட தெரியாது, விளம்பரம் ஏதுமின்றி அளிப்பது, அற்புதமான பொதுவுடைமைத் திட்டமாகும். எந்த வகையிலும் பொருள் குவிவதைத் தடுக்கும் அருமையான சமதர்மத் திட்டமாகும்.

இன்றையப் பொருளாதாரக் கொள்கைகளின் போக்கு என்ன?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் கடைப்பிடிக்க விழைவது முதலாளித்துவ பொருளாதார முறை. இக் கொள்கையில் மையமாக அமைவது மனிதனை முதலுக்கு அடிமையாக்கும் போக்காகும்.

சீனா போன்ற பொதுவுடைமைக் கொள்கை பேசும் நாடுகளில் இக் கொள்கையின் மையமாக அமைவது என்ன? மனிதரை உழைக்கும் வர்க்கம் என்ற போர்வையில் அரசுக்கு, அரசின் கொள்கை, கோட்பாடுகளுக்கு அடிமைப்படுத்துவதுதான். மனிதன் கடுமையான அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டவனாக எந்திரத்தோடு எந்திரமாக மாறுவதற்கு மேல் அவனுக்கு எந்தத் தனிச் சுதந்திரமுமில்லா நிலை.

அதே சமயத்தில் இஸ்லாத்தின் சமூக, பொருளாதாரக் கொள்ககைள் மனிதப் புனிதமாக மாறி, அதன்விளைவாக இறைவனின் இனிய அடிமையாக மாறி, வாழ்வு பெற்றதின் முழுப் பயனை இம்மையிலும் மறுமையிலும் பெறக் கூடிய பேறு பெறுகிறான்

இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், இறைவனுக்கு நன்றி கூறி, வல்ல அல்லாஹ்வின் அடிமையாக வாழ்வதன் மூலம் இந்த உலக இன்பத்தை விட பல கோடி மடங்கு மறுமைப் பேரின்பத்தை நிலையாகப் பெறக் கூடியவனாகிறான். அதற்கான பயிற்சி பெறும் களமாக அமைந்திருப்பதே இவ்வுலக இஸ்லாமிய வாழ்கை முறை. அதற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்திருப்பதே அண்ணலாரின் வாழ்வையும் வாழ்க்கையும் விரித்துரைக்கும் ஹதீஸும் அதற்கு மூலாதாரமாக அமைந்த திருக்குர்ஆன் திருமறையும்

இறைவன் அளித்துள்ள அருட்கொடையான இந்த வாழ்வை இறைநெறியில், ஏந்தல் நபியின் இனிய வழிகாட்டுதலில் அனைத்துப் பயனும் பெற்றுய்ய முயலவேண்டும். இம் முயற்சிக்கு வேகமூட்டும் முறையில், ஆன்மீக அடிப்படையில் அறிவியல் விளக்கம் தந்து, இஸ்லாமிய நெறிமுறையின் மேன்மையை ஆய்வுகள் மூலம் அறிவுலகம் வெளிப்படுத்த விழைந்து நிற்கிறது. அதனை அறிவின் துணை கொண்டு ஏற்று, இறைவழியில் உய்திபெறுவோமாக.

(22.7.98 அன்று துபாய் கோட்டைப் பள்ளியில் அமீரக ஜமாத் சார்பில் நடைபெற்ற மீலாது விழாவில் ஆற்றிய உரைச் சுருக்கம்)