இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/இஸ்லாம் - ஆன்மீக மார்க்கமா, அறிவியல் மார்க்கமா?
ஆன்மீக மார்க்கமா,
அறிவியல் மார்க்கமா?ஈமான் அமைப்பின் சார்பில் துபாய் பெரிய பள்ளியில் நடைபெறும் இம்மீலாது விழாவில் நான் பெருமகிழ்வோடு கலந்து கொள்ள இருபெரும் காரணங்கள் உண்டு. முதற்காரணம் துபாய் நாட்டைப் பற்றி எனக்கு எப்போதும் ஒரு மரியாதை கலந்த மதிப்பு உண்டு. நான் துபாய் நாட்டிற்குப் புதியவன் அல்ல; ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லுகின்றபோதும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்புகின்றபோதும், சிலபோது 'உம்ரா' செய்து திரும்புகிறபோதும் இந்தத் துபாய் மண்ணிலே இரண்டொரு நாட்கள் தங்கி, நண்பர்களையெல்லாம் சந்தித்து, அளவளாவி மகிழ்ந்து செல்வது வழக்கம். ஆனால் இது போன்ற பெருங்கூட்டங்களிலே உரையாற்றுகின்ற வாய்ப்பை இதுவரைப் பெற்றேனில்லை.
சமய, சமூக நல்லிணக்கத்துக்கோர் சவால்!
அமீரகத் துபாயைப் பற்றி மிக உயர்வான எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் சமய, சமூக நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமீரகத் துபாய் நெடுங்காலமாக விளங்கி வருகிறது. இங்கே வாழுகின்ற, தொழில் செய்கின்ற மக்களில் பெரும் தொகையினர் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்; பல்வேறு சமயச் சார்புள்ளவர்கள்; பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்; பல்வேறு பண்பாடுகளை, நடையுடை பாவனைகளைப் பேணி நடப்பவர்கள். இவர்களெல்லாம் ஒருங்கிணைந்து வாழக் கூடிய இனியதோர் சூழ்நிலையைத் துபாய் நாடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இஸ்லாத்தினுடைய சமய, சமூக நல்லிணக்கக் கொள்கைகளின், மனிதநேய நல்லிணக்கக் கோட்பாடுகளின் அடையாளச் சின்னமாகவே இந்நாட்டைக் காண்கின்றேன். ஈமான் அமைப்பின் இணையிலாப் பணி இரண்டாவது காரணம். இந்த விழாவை இனிது நடத்திக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்போடு நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்காவிட்டாலும், இவ்வமைப்பு நீண்ட காலமாக ஆற்றிவரும் அரும்பணிகளைப்பற்றி நான் நன்கறிவேன். 1978இல் நான் முதன் முறையாக இத்துபாய் மண்ணில் கால் வைத்த போதிருந்தே இந்த அமைப்பைப் பற்றி, அது ஆற்றி வருகின்ற இஸ்லாமியப் பணிகளைப்பற்றி நான் மிகத்தெளிவாகவே அறிவேன்.
இஸ்லாமிய மார்க்கத்துக்கு மட்டுமல்ல; இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் நலத்துக்காகவும் இந்த அமைப்பு அரும்பாடுபட்டு வருவதை நான் நன்கறிவேன். இஸ்லாமிய அறிஞர்களின், அவர்தம் திரண்ட சக்திகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவற்றை ஒருமுகப்படுத்துவதில் தனி வரலாறு படைத்து வருகிறது. சமுதாயத்தில் எழுச்சியோடு வாழத்துடிக்கின்ற, கல்வி கற்க வாய்ப்பில்லாமல் துவண்டு கிடக்கின்ற இளைஞர்களையெல்லாம் உசுப்பி, அவர்கட்கு உதவி செய்கின்ற முறையில் பல வழிகளில் பல பயனுள்ள திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றி வருகிறார்கள். அவைகளைப் பத்திரிகைகளிலே ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அவர்கள் அறிமுகப்படுத்துகின்றபொழுது, அதைக் கண்டு உண்மையிலேயே நான் மகிழ்ந்து போவேன். ஏனென்றால், நம்மில் பல பேருக்குச் சம்பாதிக்கத் தெரியும். ஆனால், உரிய முறையில் சம்பாதித்த பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பது தெரியாது. அந்த சூட்சமத்தை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் நல்ல இதயங்கள் இந்த நகரத்தில் குறிப்பாக, இந்த அமைப்பிலே இருப்பதை எண்ணி நான் பெரு மகிழ்வடைகிறேன்.
'மீலாது விழா' ஏன்?
அது மட்டுமல்ல, துபாயில் இருக்கக்கூடிய சமய நல்லிணக்க உணர்வு படைத்த இந்த மக்கள் உரத்த சிந்தனையாளர்கள் என்பதும் தெரியும். நீங்களெல்லாம் ஏதோ விஷயம் தெரியாமல் இங்கு வந்து குழுமியிருப்பது போலவும், நான் ஏதோ விஷயங்களையெல்லாம் தெரிந்து உங்களுக்குச் சொல்ல வந்திருப்பது போலவுமான ஒருவித மனப்பிரமை இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எல்லா வகையிலும் உரக்கச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்; காலத்தினுடைய போக்குக்கும் தேவைக்குமேற்ப, எந்த முறையில் இஸ்லாமியச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலே உங்களுக்கு எப்போதும் ஒரு துடிப்பு உண்டு என்பதை நான் நன்கறிவேன். அப்படிப்பட்ட நல்ல இதயங்களோடு ஒரு சில மணித்துளிகள் உறவாடி மகிழ்வதை நான் பெருமையாகவும், பெரும் பயன் எனக்குத் தருவதாகவும் கருதி நான் இங்கே வந்து நிற்கிறேன்.
எனக்கு முன்னால் இங்கே பேசிய மார்க்க அறிஞர்கள் 'மீலாது விழா' கொண்டாட வேண்டிய அவசியத்தைப் பற்றி மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள். 'மீலாது விழா' என்பது சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தொடங்கப்பட்ட விழா. விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட இவ்விழாவின் முக்கியத்துவம் காலப்போக்கில் இப்போது வெகுவாக உணரப்பட்டு வருகிறது. அதன் இன்றியமையாத தேவை நாளுக்கு நாள் வலுவாக அறியப்பட்டு வருகிறது.
நம்மைப் பொறுத்தவரை ஆண்டு முழுமையும் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் நினைவுகூரப்படுவதோடு, அதனை முழுமையாக வாழ்வில் கடைப்பிடிக்கப்படவும் வேண்டும். இம்மாதிரி விழாக்களின் போது, அதை ஆண்டுக்கொரு முறை கணக்கெடுத்து லாப, நட்டமறியும் காலமாகக் கருத வேண்டும். சென்ற மீலாதிலிருந்து, இந்த மீலாதுவரை பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் எந்த அளவுக்குப் பின்பற்றியொழுகி வாழ்ந்திருக்கிறோம், எங்கெங்கே சறுக்கியிருக்கிறோம்; வழுக்கியிருக்கிறோம், அதற்கு உள்ள காரணம், அக்காரணங்களை அடித்தளமாகக் கொண்டு, இவ்வாண்டில் நேரிய முறையில் பெருமானாரின் பெரு வாழ்வு ஒளியில் வாழ்ந்து வளம் பெறுவது எப்படி என்ற சிந்தனையின் அடிப்படையில் செயல்படுவது பற்றி ஆயும் நாளாக - உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாக இந்நாளைக் கருதுதல் வேண்டும்.
மீலாது விழா காலக் கட்டாயம்
சவூதி அரேபியாவிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும் பெருமானார் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழா 'மீலாது பெருவிழா' வாகக் கொண்டாடப்படுவது இல்லைதான். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மைச் சமுதாயத்தினராக முஸ்லிம்கள் பெரும்பான்மை ஹிந்து சமயத்தவரிடையே வாழுகின்ற நிலையில் தங்கள் மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகளை பிற சமய மக்களும் அறிந்து கொள்ள, உணர்ந்து தெளிய வாய்ப்பேற்படுத்தும் வகையில் இம்மாதிரி 'மீலாது விழா'க்களைக் கொண்டாடுவது அவசியமாகவும் ஒரு வகையில் காலக் கட்டாயமாகவும் அமைந்துள்ளதெனலாம்.
அனைவர்க்கும் பொது விழா
தமிழகத்தைப் பொருத்தவரை மீலாது விழா பெரு நகரங்கள் முதல் சாதாரணச் சிற்றூர்வரை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருவதும் அவ்விழாக்களிலே பேசுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் எண்ணத்தக்கதாகும். இத்தகைய விழாக்களில் முஸ்லிம்களோடு முஸ்லிமல்லாதவர்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கு பெறுவது, பெருமானர் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பற்றி பிற சமய மக்களிடையே கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளக் கிடைக்கும் அரிய வாய்ப்பாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர் அல்லர்; அவர் மனித குலம் முழுமைக்கும் இறைநெறி புகட்ட வந்த இறை தூதர் ஆவார். எனவே, அவர் பிறந்தநாளைக் கொண்டாட முஸ்லிம்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவுக்கு உரிமை பிற சமய மக்களுக்கும் உண்டு.
இஸ்லாமியக்கொள்கை, கோட்பாடுகளை அண்ணலார் வாழ்க்கை வழியே பிற சமயத்தவர் மத்தியில் எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த வாய்ப்பை இத்தகைய மீலாது விழாக் கூட்டங்கள் எளிதாக நமக்கு ஏற்படுத்தித்தருகின்றன என்பதிலும் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் எங்கேனும் மீலாது விழாக்களில் பங்கேற்க யாரேனும் அழைத்தால், அவர்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள், நடத்துகின்ற மீலாது கூட்டத்தை பிற சமயத்தவர்களும் செவிமடுக்கும் வகையில் முச்சந்திகளில் நடத்துங்கள். நான் தாராளமாக வந்து கலந்து கொள்கிறேன். பள்ளிவாசல் வளாகங்களில் முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் மீலாது விழா நடத்துவதாக இருந்தால் மௌலவிகளை அழையுங்கள் என்று கூறி விடுவேன். ஏனெனில், முஸ்லிமல்லாதவர்களிடையே இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய காலக் கட்டாயம் நமக்குள்ளது.
இன்னும் சொல்லப் போனால், என்னைப் பொருத்த வரையில் 'மீலாது விழா' சமயத்தில், 'தினமணி' போன்ற வெகுஜன பத்திரிகைகளிலே 'ஓம் சக்தி' போன்ற பிற சமய இதழ்களிலே, இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பல்வேறு கோணங்களில் கட்டுரை எழுதி விளக்கிச் சொல்ல முடிகிறது. சகோதர சமயத்தவர்கள் இஸ்லாத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித குலத்துக்கு வகுத்தளித்த வாழ்வியல் நெறிமுறைகளை, அதற்கு மூலமாகவுள்ள திருமறையாகிய திருக்குர்ஆனின் இறை வசனங்களை நாம் மக்களிடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும் அரிய வாய்ப்பை நமக்கு நல்கிறது. இஸ்லாத்தை அறிந்த முஸ்லிம் பெருமக்களுக்கு நினைவூட்டுகிறோம். இஸ்லாத்தைப் பற்றிச் சரிவரத் தெரியாதவர்களுக்கு புதிய செய்தியாக நாம் சொல்ல முயற்சி செய்கின்றோம்.
இஸ்லாமியப் பெருமக்களிடையே நான் மனம் திறந்து பேச விழைகிறேன். நான் கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். முடிந்தவரை மக்களின் நாடி, நரம்புகளையெல்லாம் தொட்டுப் பார்க்கக்கூடிய பத்திரிகைத் தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக.
இயலாமைக்குக் காரணம் தேடும் இஸ்லாமியர்கள் !
இஸ்லாத்தை முழுமையாக, சரியான கோணத்திலே புரிந்து கொண்டவர்கள் இன்று எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். புரிந்து கொண்டுவிட்டதாக மனப்பிரமை கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தங்களுடைய விருப்பு வெறுப்புகளை, எண்ணங்களை, சிந்தனைகளை, தங்களால் செயல்படுத்த இயலாதவைகளை தவிர்ப்பதற்கு காரண காரியங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்தான் 'முஸ்லிம்கள்' என்ற பெயரில் மிக அதிகமாக இருந்து கொண்டு, தாங்கள் சொல்வதுதான் இஸ்லாம் என்ற முறையிலே எழுதி, பேசி வருகிறார்கள். ஒருவகையில் இவர்கள் இஸ்லாத்தைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒருவித வண்ணக்கண்ணாடி போட்டுக் கொண்டு, அதன் வழி பார்த்து, அப்படி பார்த்த மாத்திரத்திலே வண்ணக் கண்ணாடி வழியே தங்களுக்குத் தெரிகின்ற தோற்றத்தை மற்றவர்களுக்குச் சொல்வதிலே கவனம் செலுத்துகிறார்கள். ஆகவே, வண்ணப் பூச்சற்ற உண்மையான இஸ்லாத்தை - இறை நெறியை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை - தேவை நமக்கு மட்டுமல்ல, மேனாட்டினருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்கள், சரியான கோணத்தில், சரியான விளக்கமுறைகளில் இன்றைக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு கசப்பான உண்மையாகும்.
கேட்பவர் உண்டு ; கொடுப்பவர் இல்லை !
அப்படி சரியான தகவல்களை சரியான முறையில் கூறினால் அதனை ஏற்றுப்போற்ற சகோதர சமயத்தவர்கள் தயங்குவதே இல்லை. இதனை நான் எத்தனையோ சம்பவங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். நான் ஒரு சிறு சம்பவத்தின் மூலம் இதனை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மீலாது விழாவையொட்டி, 'தினமணி' தலையங்கப் பகுதியில் வெளியிடுவதற்கென 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற பெயரில் கட்டுரையொன்றை எழுதியனுப்பியிருந்தேன். அதன் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் அக்கட்டுரையைப் படித்திருக்கிறார். நான் கட்டுரையை மாலை ஐந்து மணிக்கு அனுப்பினேன். அதைப் படித்த அவர் இரவு ஒன்பது மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் முன்பு மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். நன்கு படித்த மேதை. ஒன்பது மணிக்குத் தொலைபேசியில் பேசும்போது என்னிடத்தில் சொன்னார். "உங்கள் கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். நீங்கள் வெறும் கட்டுரை எழுதவில்லை. என் மனதிலே இருந்த தூசிகளைத் துடைத்து எறிந்திருக்கிறீர்கள். பெருமானார் பிற சமயங்களைப் பற்றிக் கொண்டிருந்த கண்ணோட்டத்தை, அவர்கள் பிற சமயங்கள் மீது காட்டிய சமய நல்லிணக்கத் தகவல்களை சரியான முறையில் முன்பே மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால், 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற கட்டுரையிலே நீங்கள் ஆதாரபூர்வமாகக் கொடுத்திருக்கக்கூடிய செய்திகள் உரிய முறையிலே மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டிருந்தால், இஸ்லாமியர்களைப் பற்றி ஹிந்துக்களும் மற்றவர்களும் கொண்டிருக்கும் மாசு படிந்த எண்ணங்கள், தவறான கருத்துகள், உணர்வுகள் எப்பொழுதோ துடைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரையை நாளைக்கே வெளியிட விரும்புகிறேன். நீங்கள் வெறும் கட்டுரை எழுதியதாகக் கருதவில்லை. இன்றைய நிலையில் எது மக்களுக்கு இன்றியமையாத் தேவையோ அந்த சமூகப் பணியை ஆற்றியிருப்பதாகவே கருதுகிறேன். உங்கள் நல்ல முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மூச்சு விடாமல் பேசி முடித்தார். என் கட்டுரை பற்றி அவர் கருத்துக் கூறிய பாங்கு எனக்குப் பெரு மகிழ்வளித்தது.
மறுநாளே கட்டுரை வெளி வந்தது. அதன் பிறகு அது தொடர்பான இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.
கட்டுரை வெளியான சில நாட்களில் கட்டுரை பற்றி அபிப்பிராயம் கூறும் வாசகர்கள் கடிதங்கள் பல வெளிவந்திருந்தன. அவற்றில் ஒன்று பெருமாள் தேவர் எனும் வாசகரால் எழுதப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் அந்த வாசகர் தன் மன உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.
"பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம் எனும் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பு இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகத்தைப் பற்றியும் மிகத் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமயங்களையெல்லாம் - மதங்களையெல்லாம் அழிக்க வந்த மார்க்கம் இஸ்லாம் என்று கருதிக் கொண்டிருந்தேன். அதனால் இஸ்லாத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாகவும் கொண்டிருந்தேன். இதற்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலே என்னை இணைத்துக் கொண்டேன். ஏனென்றால், இஸ்லாமிய சமயத்தைப் பற்றி எனக்கு அப்படிப்பட்ட கருத்துகள்தான் ஊட்டப்பட்டிருந்தன. 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர்தான், எல்லா சமய அடிப்படைகளும் ஒன்றே என்பதும் அவை இறைவனால் இறை தூதர்களுக்கு அருளப்பட்டவை என்பதும், எல்லா மதங்களும் ஒருங்கிணைந்து வாழக்கூடிய சரியான ராஜபாட்டையைக் காட்டிக் கொண்டிருப்பது இஸ்லாமிய நெறி மட்டுமே என்பதையும் நான் உணர்ந்து தெளிந்தேன். ஆகவே, இஸ்லாத்தின் மீது எனக்கு இருந்த வெறுப்பு என்னைவிட்டு அகன்றது மட்டுமல்ல; அதன்மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டு விட்டது. நான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இப்படிப்பட்ட பயனுள்ள கட்டுரையை வெளியிட்ட உங்களைப் பாராட்டுகிறேன்" என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதச்சாரத்தை அவர் தினமணி வாசகர் பகுதியில் வெளியிட்டார்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், சரியான தகவல்களை சரியான முறையிலே, சரியான இடத்திலே நாம் கொண்டு போய்ச் சேர்ந்தோமேயானால் அதனை ஏற்றுக் கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் பல சகோதர சமய உள்ளங்கள் காத்திருக்கின்றன. ஆனால், அந்தக் காரியத்தை நாம் செய்யவில்லை. நமக்கு நாமே சொல்லிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களிடத்திலே இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் சொல்வதில்லை.
மீலாது விழாவின் அடிப்படை நோக்கம்
மீலாது விழாக்களின் அடிப்படை நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? பெருமானாரின் பெருவாழ்வு ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நாயகத் திருமேனி (சல்) அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமே இஸ்லாத்தைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களை நாடிச் சென்றார்கள். அங்கே அவர்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். ஆனாலும், இறைநெறியாகிய இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டிய முறையிலே எடுத்துரைத்து, அவர்களையெல்லாம் மனந்திருந்தியவர்களாக இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தார்கள். அதன் விளைவாகத்தான் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தார்கள். அண்ணலார் வழிவந்த, அவருடைய உம்மத்துக்களாகிய நாம் அந்தக் காரியத்தை முனைப்போடு இப்போது செய்வதில்லை. முஸ்லிம்கள் மத்தியிலே மட்டும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டுள்ளோம். சொல்ல வேண்டியதுதான். அவர்களுடைய உணர்வைப் புதுப்பிப்பதற்கும் புதுக் கருத்துகளை, தகவல்களை அவர்களுடைய நெஞ்சத்திலே ஏற்றி வைப்பதற்கும் இப்படிப்பட்ட சொற்பொழிவுகள் தேவைதான். ஆனால், நம்முடை நோக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்த இறைச்செய்தியை - இஸ்லாமிய நெறியை - நபிகள் நாயகம் (சல்) அவர்களுடைய வாழ்வையும் வாக்கையும் உரிய முறையில் மற்றவர்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அண்மையிலே 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்' என்று ஒரு புத்தகம் எழுதியிருந்தேன். அந்நூலின் அச்சுப்படியை முன்னாள் மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர ஆளுநருமாக இருந்த திரு சி. சுப்பிரமணியம் அவர்களிடத்திலே கொடுத்து அதற்கு முன்னுரை எழுதித் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் இந்நூலை மகிழ்வோடு வாங்கிக்கொண்டார்.
திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் என்மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். அந்நூலை அவர் பத்து நாட்களில் படித்துவிட்டு, தொலைபேசியில் என்னை அழைத்தார். அப்போது அவர், "நூலின் முன்னுரையை எழுதிவிட்டேன். இப்படிப்பட்ட ஒரு நூலை சில ஆண்டுகட்கு முன்னதாக நீங்கள் எழுதியிருந்தால் எவ்வளவோ தீமையான காரியங்கள் நடைபெறாமல் தடுத்து இருக்க முடியும். எவ்வளவோ உணர்வுகள் தவறான பாதையில் செல்லாமல் தடுத்திருக்க முடியும். உங்கள் நூல் அப்படிப்பட்ட செய்திகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நீங்கள் வந்து உங்கள் நூலுக்கான முன்னுரையை பெற்றுச் செல்லுங்கள்" என்று பணித்தார். இஸ்லாம் பிற சமயங்களுக்கு மதிப்பளிப்பதையும் அனைத்து விவகாரங்களுக்கும் அப்பால் மனித நேயம் மாண்புற இஸ்லாம் வகுத்தளித்த நெறிமுறைகளையும் வெகுவாகப் பாராட்டி முன்னுரை எழுதியிருந்தார்.
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம்
இஸ்லாத்தை உரிய முறையில் மற்ற சமயத்தவர்களிடையே எடுத்து வைக்காததினால் நம்மைப் பற்றித் தவறான உணர்வுகள், கருத்துகள் எங்கும் பரப்பப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்நிலை இங்கு மட்டுமில்லை, மேனாடுகளில், சிலுவைப் போருக்குப்பின், மிகத்தவறான பிரச்சாரம், அரசுகளின் ஆதரவோடு பரப்பப்பட்டது. மக்களின் மனதிலே இத்தவறான எண்ணங்கள் அழுத்தம் பெறச் செய்யப்பட்டது. இன்றும் தொய்வில்லாமல் அக்காரியம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
எனினும், இன்றைய விஞ்ஞான யுகத்தில், அறிவுலகம் விழித்துக் கொண்ட நிலையில், பழைய போக்குகள் கதிரவனைக் கண்ட பனிபோல் மறைந்து வருகின்றன. அதனை விரைவுப்படுத்தும் வகையில் அறிவுலகம் தன் செயல்பாடுகளை உருவாக்கிக்கொண்டு வருவது நமக்கெல்லாம் மகிழ்வூட்டும் செய்தியாக உள்ளது.
இவ்வாறு அறிவுலகில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மைச் சிந்தனைகள், கருத்துகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட முயற்சியில் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சி ஈடுபட்டது. 'Islam Faith and Power' எனும் பெயரில் ரோஜர் ஹார்டி என்பவரைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழச்சிக்காக ரோஜர் ஹார்டி உலகம் முழுவதும் பயணம் செய்தார். இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் சந்தித்து உரையாடினார். இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கொண்டவர்களையும் கண்டு பேசினார். முஸ்லிம், முஸ்லிமல்லாத பொதுமக்களையும் பேட்டி கண்டார். தான் சந்தித்து உரையாடிய பலதரப்பட்ட மக்களின் நாடி, நரம்புகளையெல்லாம் தொட்டுப் பார்த்தார். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியிலே அவருள் ஒரு உணர்வு அழுத்தமாகப் பதிந்தது. அதுதான் 'உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' என்ற உணர்வு. இதை வெளிப்படையாக நிகழ்ச்சியின் இறுதியில் வெளிப்படுத்தவும் செய்தார். இவ்வாறு இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில், தவறான கருத்துகள் பலவற்றை இஸ்லாத்தின் பெயரால் பரப்பப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவைகளை விவரம் புரியாத நம்மவர்களும், இஸ்லாமிய அறிவுக்குறைவால் மறுதளிக்கத் தவறியதன் காரணமாக, அத்தவறுகள் உண்மை எனும் போர்வையில் மக்களிடையே நிலைபெறுவது தவிர்க்க முடியாததாகியது. இத்தகு போக்குகளை மாற்றவும் உண்மைக் கருத்துகளும் இஸ்லாமியச் சிந்தனைகளும் மக்களிடையே நிலை பெறவும் இத்தகைய மீலாது விழாக்கள் கட்டாயத் தேவையாக அமைந்து வருகின்றன. பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கை வழி - அவர் வகுத்தளித்து முறைப்படுத்திய இறைநெறிகளை உரிய முறையில் இனங்கண்டு தெளிவு பெற இத்தகைய விழாக்கள் இன்றியமையாத் தேவை என்பதைக் கூற வேண்டியதில்லை.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு
நீங்கள் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பப்பட்ட இறுதித் தூதர். அவர் மூலம் மனித குலத்துக்கு இறைநெறி புகட்டும் இறுதி வேதம் திருமறையாகிய திருக்குர்ஆன். இதன் மூலம் இனி, இறைத்தூதரோ இறைவேதமோ உலக மக்களுக்கு வரப்போவதில்லை. இறுதித்தூதர், இறுதி வேதம் என்றால் எக்காலத்திலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தக்க தீர்வு வழங்க வேண்டும். இதன் நேற்று - இன்று - நாளை என முக்காலத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை பெருமானாரின் வாழ்விலும் திருமறையிலும் தேடிப் பெற வேண்டிய கட்டாய நிலை.
தனி மனிதனும் சமுதாய மனிதனும்
இந்த உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரு பெரும் பிரிவுகளாகத்தான் பிரிக்க முடியும். ஒன்று அகவாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். மற்றொன்று புற வாழ்வுத் தொடர்பான பிரச்சினைகள்.
அகவாழ்வுப் பிரச்சினை என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்வின் - குடும்பம் தொடர்பான பிரச்சினைகள். புறவாழ்வுப் பிரச்சினை என்பது ஒருவனது புறவாழ்வின் - குடும்ப வாழ்வுச் சூழலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பதாகும்
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் ஒருவன் தன் வீட்டிலிருக்கும்வரை தனி மனிதர். அவர் வாசற்படியைவிட்டு இறங்கி சாலையில் கால் வைத்தவுடன் அவர் சமுதாய மனிதராகி விடுகிறார். இவ்வாறு ஒரே சமயத்தில் ஒவ்வொருவரும் தனி மனிதராகவும் சமுதாய மனிதராவும் இரு நிலைகளில் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை
அக - புறப் பிரச்சினை தீர, ஆன்மீக - அறிவியல் வழிகள்
இத்தகு பிரச்சினைகள் இரண்டும் சேர்ந்ததுதான் ஒட்டுமொத்தமான உலகப் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி?
இதற்கு இஸ்லாம் மிக அற்புதமாக வழி வகுத்துத் தந்துள்ளது. அக, புற வகைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இருவகைத் தீர்வு முறைகளை இஸ்லாம் வகுத்தளித்துள்ளது
அகவாழ்க்கையினுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்றால், அக வாழ்க்கை செழுமையாக அமைய வேண்டுமென்றால், அகவாழ்க்கையிலே இன்பம் பூத்துக் குலுங்க வேண்டுமென்றால் அதற்கு ஆன்மீக அடிப்படையில் தீர்வு காண முயல வேண்டும். அதற்கான தீர்வினைக் கண்டு விட்டால் நம் வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கும் இன்பச்சோலையாக மாறிவிடும்
அதே போன்று புற வாழ்க்கையிலே ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அறிவியல் அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் புறவாழ்க்கைப் பிரச்சினைகள் எளிதாகத் தீர்க்கப்பட்டு விடும். இதுதான் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பிரச்சினை தீர்வு முறை.ஆன்மீகமும் அறிலியலும் வெவ்வேறல்ல
ஆன்மீகமும் அறிவியலும் நேர்மாறானவை என பலரும் நினைக்கிறார்கள். ஆன்மீக அடிப்படையிலான மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் நேர்மாறானவை, எதிரி எனக் கருதுவோரும் உண்டு. சுருங்கச் சொன்னால் விஞ்ஞானம் வேறு; மெய்ஞ்ஞானம் வேறு என்பதில்லை. இரண்டும் இரு கண்களைப் போன்றது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப்பது.
வீட்டிலிருக்கும் வரை நான் தனி மனிதன். ரோட்டில் கால் வைத்துவிட்டால் நான் சமுதாய மனிதன். இருவகைகளும் எப்படி ஒன்றுக்கொன்று எதிரானதாய் இருக்க முடியும். ஒரே மனிதன் இரண்டு விதங்களிலே - இரண்டு முறைகளிலே - பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்ற ஒரு சூழலைத்தான் இஸ்லாம் மிக அழகாக வகுத்தளித்துள்ளது. அகவாழ்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆன்மீக - மெய்ஞ்ஞான முறையை எடுத்துக்கொள். புறவாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியலை - விஞ்ஞான முறையை எடுத்துக்கொள் என்று அழகுபடக் கூறுகிறது.
மனிதனை ஆய்வது மெய்ஞ்ஞானம்
உலகை ஆய்வது விஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம் என்பது தத்துவார்த்தமானது. 'தத்துவம்' என்றாலே சிலருக்கு மலைப்பு. ஒருவன் தத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கூறும் முறையில் இருட்டறையில் இல்லாத கறுப்புப் பூனையைக் கண்ணை மூடிக் கொண்டு தேடுவதற்குப் பெயர்தான் தத்துவம்' என வேடிக்கையாகப் பொருள் விளக்கம் கூறினான். அதே போன்று மெய்ஞ்ஞானம் என்றால் ஏதோ ஒன்று என்று கருத வேண்டியதில்லை. மெய்ஞ்ஞானம் என்பது மனிதனை ஆய்வது, விஞ்ஞானம் என்பது உலகைப் பற்றி ஆய்வது என்று மிகச் சுருக்கமாகச் சொல்லலாம். இதைப்பற்றி பெருமானார் (சல்) அவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும், 'உலகத்தைப் பற்றிய அறிவு மரணத்தோடு உங்களை விட்டுப் பிரிந்துவிடும். உங்களைப் பற்றிய அறிவோ மரணத்திற்குப் பின்னரும் உங்களுக்குத் துணையாக வரும்' என அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்கள்.
இறப்புக்குப் பின்னும் தொடரும் மெய்ஞ்ஞானம்
என்னதான் அணு ஆராய்ச்சி செய்திருந்தாலும் என்னதான் செய்தித் தொடர்புத்துறையில் புரட்சி செய்திருந்தாலும், வியக்கத்தக்க வகையில் புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடித்திருந்தாலும், புதிய புதிய எந்திர நுட்பங்களைக் கண்டுபிடித்து போக்குவரத்துத் துறையில் மாபெரும் மாற்றமேற்படுத்துவதன் மூலம் உலகத்தையே ஒரு கிராமம் போல் சுருங்கிய வடிவிலாக்கிய போதிலும், அவையெல்லாம் நம் இறப்புக்குப் பின் நம்மைத் தொடர்வதில்லை. அவையெல்லாம் மரணத்திற்குப் பின் இவ்வுலக அளவில் நின்று விடுகின்றன. விஞ்ஞான ஆராய்ச்சியால் விளைந்த பயன், விஞ்ஞான முன்னேற்றத்தால் பெற்ற பயன், அதனால் நாம் பெற்ற ஆராய்ச்சியின் அரும் பெரும் பயன்கள், அறிவுப் பெருக்கம் அனைத்துமே இவ்வுலகோடு சரி. ஆனால், உங்களைப் பற்றிய அறிவானது. உங்கள் மரணத்திற்குப் பின்னரும் உங்களைத் தொடர்ந்து உங்களுக்குத் துணையாக வரும். இந்த உலகத்தில் வாழும்போது உங்களைப்பற்றிய ஆராய்ச்சி, ஆன்மீக அடிப்படையில் நீங்கள் பெறுகின்ற மெய்ஞ்ஞானப் பயன், உங்கள் மரணத்திற்குப் பின்னும் உங்களைத் தொடர்வதோடு, கியாமத்து நாள்வரை உங்களைத் தொடர்ந்து வரும். நாளை மஹ்ஷர் மைதானத்தில், இறைவன் முன்னிலையில், உங்கள் நன்மை தீமைகள் தராசுத் தட்டில் வைத்து கணக்கு வழக்குப் பார்த்து நீதி வழங்கும்போது, நீங்கள் வாழும்போது, உங்களைப் பற்றி ஆய்வு செய்து பெற்ற மெய்ஞ்ஞானப் பயன்கள் உங்களுக்குப் பெருந்துணையாயமைந்து இறையருளைப் பெற்றுத் தரும் சாதனமாக அமைகிறது எனலாம்.
பல்வேறு சமயங்கள் சுட்டிக்காட்டுவது போல் மனிதன் என்பவன் ஏதோ ஒரு உயிரினம் மட்டுமில்லை. சில சமயங்கள் சொல்வதுபோல் பாவப் பிண்டமும் அல்ல; இன்னும் ஒரு சில சமயங்கள் கூறுவதுபோல் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா எனப் பண்டாரப் பாட்டுத் தத்துவப் பொருட்கள் அல்ல; இஸ்லாம் கூறும் மனிதக் கணிப்பு மிக அற்புதமானது.
இறை ஆத்மா பெற்றவன் மனிதன்!
இஸ்லாமிய மார்க்கம் மனிதனைப் பொருத்தவரை மிகப் புனிதமானவனாகக் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் இறையம்சம் பொருந்தியவனாகக் கருதப்படுகிறான். இறையம்சமாகவே உருவாக்கப்பட்டவன். ஆம்! மனிதன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்பதுதான் இஸ்லாமியக் கொள்கை.
மனிதனை உருவாக்க விழைந்த இறைவன் ஐம்பூதச் சேர்க்கையோடு கூடிய மண்ணால் உருவைச் சமைத்து அதனுள், தன் ஆத்மாவிலிருந்து ரூஹை ஊதி, மனித உருவுக்கு உயிர் கொடுத்தான். இறை ஆத்மாவின் ஒரு பகுதி மண்ணாலான மனித உடலுக்குள் புகுத்தியதனால் இறைவனுடைய அம்சத்தைப் பெறுவது தவிர்க்க முடியாததாகியது.
ஆனால், மனித உடலுள் இறைவனால் புகுத்தப்பட்ட ஆத்மா சிப்பிக்குள் போடப்பட்ட முத்து போல் இருக்கிறது. பளிச்சென்று இது வெளிப்படுவதுமில்லை; தெளிவாக, வெளிப்படையாகத் தெரிவதுமில்லை. அதனால் இறைவன் அளித்த ஆத்மாவின் தன்மைகளை நம்முடைய அறிவால் உய்த்துணர்ந்து, தெளிந்து இறைவனளித்த ஆத்மாவின் ஆற்றல் எந்த அளவுக்கு நம்மிடம் பொதிந்துள்ளது என்பதை ஆய்ந்து தெளிய வேண்டும். மனித ஆத்மாவின் வீரியத்தை வெளியே கொண்டு வருவதற்காக நாம் செய்யும் முயற்சி வினையே மெய்ஞ்ஞானம். அதுவே மெய்யான ஞானம். அதுவே ஆன்மீக உணர்வின் முழுமையான வெளிப்பாடு.
ஆத்மாவின் வீரியத்தை அறிதலே மெய்ஞ்ஞானம்
இறைவனின் பிரதிநிதியான மனிதன் தன்னுள் இறைவனால் பொதியப்பட்ட ஆத்மாவைப் பற்றிய ஆய்வின் மூலம் - பயிற்சி வாயிலாக ஆன்ம ஆற்றலை முழு வீச்சில் வெளிப்படுத்தும் ஆத்ம சோதனை முயற்சியில் ஈடுபட்டவர்கள்தான் சூஃபிமார்கள். இந்த ஆத்ம சோதனை முயற்சிக்கே தங்கள் முழுவாழ்வை ஒப்படைத்து, இறையுணர்வு வளத்தால் இறை நெருக்கம் பெற்றவர்கள் இம்மெய்ஞ்ஞான மேதைகள்.
உள்ளத்துள் பொதிந்துள்ள ஆத்ம ஆற்றலைப் புரிந்து கொண்டால் இறைவனையே எளிதாக அறிந்து கொள்ளலாம். எனவேதான் நாயகத் திருமேனி (சல்) அவர்கள் 'தன்னை உணர்ந்தவனே தலைவனை உணர்வான்' எனத் தெளிவாகக் கூறினார்கள். இதனை பெருமானார் (சல்) அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெளிவாக உணர்ந்தறியலாம்.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில், தான் பெற்ற இறைச் செய்தியின் அடிப்படையில் ‘இறைவன் ஒருவனே; உருவமற்றவன்; ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை; அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை. அவனுக்கு இணையுமில்லை; துணையுமில்லை. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணங்குதற்குரியவன் வேறு யாருமில்லை; என்று மக்களிடம் உபதேசித்து வந்தார்கள். விக்கிரக ஆராதனை செய்யும் குறைஷிகள் இப்பிரச்சாரத்தை அறவே விரும்பவில்லை. ஆனால், அண்ணலார் தன் ஓரிறைப் பிரச்சாரத்தை நிறுத்தவே இல்லை.
குறைஷிகளில் சிலர் இப்பிரச்சினையை வேறு விதமாக அணுகத் தொடங்கினார்கள். அக்காலத்தில் அவர்களிடையே பெரும் மேதையாகத் திகழ்ந்தவர் அபுல் ஹிகம் என்பவராவார். அபுல் ஹிகம் என்றால் 'அறிவின் தந்தை' என்பது பொருள். அவர் வாதத் திறமைமிக்கவர். அவரை அண்ணலாரிடம் அனுப்பி ஓரிறைப் பிரச்சாரத்தை நிறுத்தவும் விக்கிரக ஆராதனையைப் பெருமானாரை ஏற்குமாறு செய்யவும் முயற்சி மேற்கொண்டனர். குறைஷிகளின் விருப்பத்திற்கிணங்க இது தொடர்பாக அபுல் ஹிகம் பெருமானாரை அணுகி விவாதிக்கலானார்.
பெருமானார் (சல்) அவர்களின் மனதை மாற்றும் வகையில் தன் விவாதத்தைத் தொடங்கினார் அபுல் ஹிகம்,
"ஒரே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவ்விறைவன் எங்கும் உள்ளான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்று பெருமானாரை நோக்கி வினாத்தொடுத்தார்.
"ஆம், இறைவன் எங்கும் நிறைந்துள்ளான்" என்றார். அண்ணலார் அவர்கள்,
"அவ்வாறாயின் எங்குமுள்ள இறைவன் இக்கற்சிலைக்குள்ளும் இருக்கலாமல்லவா?" என்று எதிர்வினாத் தொடுத்தார் அபுல் ஹிகம்.
புன்முறுவல் பூத்தபடி பெருமானார் "கல்லுக்குள் இருப்பதாக நீங்கள் நம்பும் இறைவன், அவன் படைப்பான உங்களுக்குள்ளும் இருக்கலாமல்லவா?" என அண்ணலாரும் எதிர் வினாத் தொடுத்தார். "நிச்சயமாக என்னுள்ளும் இறைவன் இருக்கிறான்" எனப் பதிலளித்தார் அபுல் ஹிகம்.
"அப்படியானால் உங்களுக்குள் இருக்கும் இறைவனைத் தேடாமல் எங்கோ இருக்கும் கல்லுக்குள் ஏன் இறைவனைத் தேடி அலைகிறீர்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய இறைவனது தன்மையை - இறைவனது சக்தியை, இறைவன் உங்களுக்களித்த ஆத்மாவின் ஆற்றலை, உய்த்துணர்ந்து, அதனை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அதனை வாழ்க்கையில் பயன்படுத்தி, இறையுணர்வோடு ஒன்றி, இறை நெருக்கம் பெறும் ஆற்றலைப் பெற்று, இறையருளைப் பூரணமாகப் பெற்றுய்யலாமே" என்று பெருமானார் (சல்) அவர்கள் விளக்கிக் கூறியதைக் கேட்ட, 'அறிவின் தந்தை'யாகப் போற்றப்பட்ட அபுல் ஹிகம்' "இதுதான் சத்தியவாதம் - உண்மை" என உணர்ந்து இறுதித் தூதரையும் அவர் மூலம் வெளிப்பட்ட இறைச் செய்தியையும் போற்றிச் சென்றார் என்பது வரலாறு.
உள்ளத்துள் பொதிந்துள்ள ஆத்மாவின் ஆற்றலை அறிந்துணர்வது எப்படி?
ஒரு இருட்டறையில் ஒரு பொருள் உள்ளது. இருளடர்ந்த அவ்வறையில் உள்ள பொருளைத் தெளிவாகக் கண்டறிய வேண்டுமானால், அவ்வறையினுள் வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். அறையினுள் வெளிச்சம் செல்லச் செல்ல இருள் அகலும், உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரியும். இத்தகு ஒளியையே 'உள்ளொளி' என்று கூறுவர். ஆத்மாவினுடைய அந்தரங்கமான இவ்வாற்றலை அறிந்துணர வழிகாட்டும் உள்ளொளியைக் கொண்டு, கன்மம், மாயை என்று சமஸ்கிருதத்திலும் தமிழில் கூறப்படும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற அறியாமைக் குணங்களை, அறிவு என்னும் உள்ளொளி கொண்டு போக்க வேண்டும். அப்போது நம் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவுபெறும். அங்கே ஆன்ம வெளிச்சம் வெளிப்பட இறையுணர்வு பொங்கிப் பொழியும். இதுவே இறை நெருக்கம் பெற நமக்கு வாய்க்கும் ராஜபாட்டை.
இவ்வாறு மாசு மறுவற்றதாக உள்ளத்தை செம்மையாக வைத்து, உள்ளொளி பெருக்கி இறை நெருக்கம் பெறுதலே ஆன்மீக நோக்கம் என்பர் மெய்ஞ்ஞானியர்.
எனவே, மனதில் எழக்கூடிய தீய உணர்வுகள், தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள் அத்தனையையும் மனத்திலிருந்து துடைத்தெறிந்து விட்டு, உள்ளத்தைத் தெள்ளத் தெளிவான பளிங்கு போல் ஆக்கிக் கொள்வதற்கான முயற்சியிலே ஈடுபட்டால், இறையருள் பொங்கும் இடமாக உள்ளம் மாறினால் இறை நெருக்கம் பெறுதல் மிக எளிதாகும்.
இதே கருத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துணரும் வகையில் மெய்ஞ்ஞான மேதை குணங்குடி மஸ்தான் ஒரு பொருள் பொதிந்த காட்சியை நம்முன் படம் பிடித்துக்காட்டி தெளிவுபடுத்துகிறார்.
வேட்டை நாயா, வெறி நாயா?
காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறவர் தனக்குத் துணையாக ஒரு வேட்டை நாயையும் கைக்கொண்டு செல்வார். வேட்டையின் போது ஏதாவது முயல் கைக்குக் கிடைக்காமல் ஓடும் போது, முயல் பிடிக்க ஓடும் வேட்டைக்காரனுக்கு முன்னால் அவனைவிட வேகமாகப் பாய்ந்து சென்று வேட்டைப் பொருளான முயலைக் கவ்வி பிடித்துவந்து வேட்டைக்காரனிடம் சேர்ப்பிக்கும். இது வேட்டை நாய்க்குண்டான குணம். அதே சமயம் வேட்டைக்குச் செல்கின்றவர் வேட்டை நாயைக் கொண்டு செல்லாது, வேட்டை நாய் என்கிற பெயரில் வெறி நாயைக் கைக்கொண்டு சென்றால், அது வேட்டைப் பொருளை தேடிச் செல்வதற்குமாறாக, வேட்டைக்கு ஏவிய வேட்டைக்காரனையே முதலில் கடித்துக் குதறிவிடும். இதையே அழகிய உவமான, உவமேயத்தோடு பொருள் பொதிந்த கவிதை வரிகளாக,
"வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைக்கொண்டு காட்டிற் புகலாமோ கண்மணியே ரகுமானே."
எனக் குணங்குடி மஸ்தான் கூறித் தெளிவுபடுத்துகிறார்.
இறைவனுடைய அருளைப் பெற வேண்டும்; அதற்காக இறை நெருக்கம் அடைய வேண்டும்; அப்போது இறைவன் தரும் வெகுமதிகளை நாம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக் கூடியவர் தன் உள்ளத்தை வேட்டை நாயாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உள்ளத்தில் எந்த விதமான தவறான உணர்வு, தவறான சிந்தனை, எண்ணங்களுக்கு, செயல்களுக்கு இடமே இருத்தல் கூடாது. இதயம் மாசு மறுவற்ற பளிங்கு போல் இருக்க வேண்டும். அப்போது, அந்த இதயமே வேட்டை நாயாக அமைந்து இறையருளைப் பெற்றுக் கொண்டு வந்து தரும். மாறாக உள்ளத்தில் காம, குரோத உணர்வுகளை வளர்த்துக் கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற உணர்வுகளை நிறைத்துக் கொண்டு, 'நான் இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்' என்றால், அவனை அவனது தீய உணர்வுகளும் சிந்தனைகளுமே பலி கொண்டு விடும். இத்தகையவர்கள் இறையருளை அறவே பெற முடியாது என்பதைத்தான் குணங்குடியார் தெளிவாக்குகிறார். ஆன்மீக உணர்வு பொங்க வாழ்வதே இறையருள் பெறும் பெரு வழி.
ஆன்மீகம் பற்றி அனைத்து நபிமார்களும்
இந்த ஆன்மீக உணர்வு பொங்க வாழும் வாழ்க்கை முறையைத்தான் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னதாக வந்த நபிமார்கள் உலகுக்கு உணர்த்திச் சென்றார்கள்.
முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) முதல் ஈசா (அலை)வரை உலக மக்களுக்கு இறைநெறி புகட்ட வந்த நபிமார்கள் அனைவருமே ஆன்மீக வாழ்வு பற்றி மட்டுமே பேசியிருக்கிறார்கள்.
ஆன்மீகத்தோடு அறிவியல் பேசியவர் அண்ணலார்
ஆனால், இறுதி இறைத் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மட்டுமே ஆன்மீகத்தையும் பேசினார்; அறிவியலைப் பற்றியும் பேசினார் என்ற பேருண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆன்மீகமும் அறிவியல் தொடர்புடையதேயாகும் என்பதை இன்றைய நவீன விஞ்ஞான ஆய்வு புலப்படுத்தி வருகிறது. ஆன்மீக உணர்வைப் பெருக்கும் வழியாகத் ‘திக்ர்' செய்கின்றோம். அப்போது, இறையுணர்வூட்டும் வாசகங்களையும் சொற்களையும் உள்ளும் புறமுமாக தொடர் ஒலி எழுப்பி உணர்வோட்டம் பெறுகிறோம். அப்போது இறையின்ப உணர்வு நெஞ்சமெல்லாம் நிறைகிறது.
இதைப்பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்ந்த ஜப்பானிய விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு உண்மைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள். 'திக்ர்' செய்யும் போது உச்சரிக்கப்படும் ஒலிகள் தொடர்ந்து மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாக்கி அதிர்வுண்டாக்குகிறது. அந்தப்பகுதியில் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக ஒருவித ஆன்மா உணர்வு எதிர் லய உணர்வாக அவனுள் எழுந்து, அவனை ஆழ்மன உணர்வாளியாக ஆக்குகிறது என்பது அவர்தம் கண்டுபிடிப்பாகும்.
இனி, இந்த உலகுக்கு இறைத் தூதர் எவரும் வரப்போவதில்லை. இனி எந்த வேதமும் இறைவனிடமிருந்து வெளிப்படப் போவதில்லை. இறுதி நபியாக அண்ணலாரும் இறுதி வேதமாக புர்கானும் மனித குலத்துக்கு வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்டு விட்டது.
எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் எல்லா மொழிகளிலும் தோன்றிய இறைத் தூதர்கள் அனைவரும் ஆன்மீகம் பற்றி மட்டு பேசியிருக்க, இறுதித் தூதராக அமைந்த நபிகள் நாயகம் (சல்) அவர்களும் இறுதி வேதமான திருக்குர்ஆன் திருமறையும் அறிவியலைப் பற்றி மிக அதிகமாக பேசுவதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
அறிவியல் பெட்டகம் அல்-குர்ஆன்
அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் அறிவியல் பூர்வமானவை. திருமறையாகிய திருக்குர்ஆன் அறிவியல் துறையின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி, அறிவியல் ஆய்வுப் பெட்டகமாகவே விளங்கி வருவதாக இன்றைய விஞ்ஞான உலகம் வியப்போடு கண்டு வருகிறது.
மற்ற நபிமார்களெல்லாம் அகவாழ்வின் செழுமைக்கு ஆதாரமான ஆன்மீகம் பற்றியே பேசியிருந்த போதிலும் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அகவாழ்வுக்கு ஆதாரமான ஆன்மீகத்தைப் பற்றி பேசியதோடு புறவாழ்வில் வளமான வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக அமைந்துள்ள அறிவியல் பற்றிப் பேசி மனித வாழ்வை நிறைவு செய்துள்ளார்.
இன்றைக்கு விஞ்ஞானம் வானளாவ வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைக்குச் செய்தித் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சி உலகத்தை மிகக் குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவந்து விட்டது. பரந்து கிடக்கும் உலகம் மிகச் சிறு கிராமம் போல் இன்று காட்சியளிக்கிறது. வளர்ந்து வரும் கணினித்துறை உலகை உள்ளங்கையில் சுழலச் செய்கிறது. அந்த அளவுக்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி உலகிலுள்ள பல பெரும் மதங்களை ஆட்டங்காண வைத்துள்ளது. சில சமயங்களுடைய அடிப்படைக் கருத்துகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. சுருங்கக் கூறினால், மதங்களுக்கும் அறிவியலுக்குமிடையே நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஒரு மாபெரும் போராட்டமே இன்று நடந்து கொண்டுள்ளது.
நீக்கமற நிறைந்துள்ள அறிவியல் தாக்கம்
அறிவியல் அனைத்து மட்டங்களிலும் தன் செல்வாக்கை, ஆதிக்கத்தை அழுந்தப் பதித்துக் கொண்டுள்ளது. அறிவியலின் துணையின்றி அரையங்குல வாழ்வைக்கூட நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை முறையாக காலையில் எழுந்ததிலிருந்து ஒரு மணி நேரம் அறிவியலின் துணையின்றி என் வாழ்க்கையை நடத்திக் கொள்வேன் என உறுதியெடுத்துக்கொண்டு செயல்பட்டுப் பாருங்கள். பல் துவக்க பிரஷை எடுக்காமல், பேஸ்டைத் தொடாமல், ஹீட்டரைப் போடாமல், கேஸைப் பற்றவைக்காமல், குக்கரை கேஸ் அடுப்பில் ஏற்றாமல் இப்படியே அறிவியலால் விளைந்த சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் நம் அன்றாட வேலைகளை அரையங் குலம்கூட நகர்த்த முடியாமல், உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்தபடியே இருக்க முடியுமே தவிர வேறு எதுவுமே செய்ய இயலாது. அந்த அளவுக்கு அறிவியலினுடைய தாக்கம் இன்றைக்கு நம் வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்டது.
இணைய முடியா இணைகோடுகளா?
அறிவியலின் வளர்ச்சி கண்டு பிற மதங்களெல்லாம் மிரண்டு கொண்டிருக்கின்றன. ஏனெனில், மதங்களுக்கும் அறிவியல் வளர்ச்சிக்குமிடையே ஒரு மாபெரும் இடைவெளி ஏற்பட்டிருப்பதோடு, மேலும் அந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது தவிர்க்க முடியாததாகவும் அமைந்து வருகிறது. மதங்கள் விவரிக்கும் தத்துவங்கள் ஒரு புறம், அறிவியல் வளர்ச்சியால் உருவாகி வரும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஒருபுறம். இரண்டும் இணைய முடியாத இணைகோடுகளாகவே இருந்து வருகின்றன. இரண்டும் ஒத்திணங்கிச் செல்ல இயலா நிலை.
இந்து மதத் தத்துவங்கள் சிறந்தவைதான். அதில் இருக்கிற அடிப்படைத் தத்துவங்கள் தவிர, மற்றவையெல்லாம் அவ்வப்போது அவரவர் விருப்பத்திற்கேற்ப கொண்டு வந்து சேர்க்கப்பட்டவைகளாகும். இந்து சமயத்தத்துவ விளக்கமாகப் புராணங்கள், இதிகாசங்கள், அவற்றின் கதைகள், கதை மாந்தரின் செயல்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்து சமய இளைஞர் ஒருவர் - அறிவியலை ஆழக்கற்றறிந்த ஒருவர் - தான் சார்ந்த இந்து சமயத் தத்துவங்களை விளக்கும் புராணக் கதைகளைப் படிக்கும் போது, பிரத்தியட்ச உண்மைகளுக்கும் புராணச் சம்பவங்களுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லாததைக் கண்டு மலைப்பும் திகைப்பும் அடைகிறார். உண்மைக்கு முற்றிலும் புறம்பாக அமைந்திருப்பதைக் கண்டு மிரண்டு போய் விழிக்கிறார். சான்றாக, 'அசுரன் உலகைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்' என்று புராணக் கதை கேட்கும் போது கடலே உலகத்தில்தானே இருக்கிறது. பின் உலகைப் பாயாகச் சுருட்டும் போது, சுருட்டிய பாய்க்குள்தானே கடலும் இருக்க முடியும். பின், எந்தக் கடலுக்குள் சென்று ஒளிய முடியும்?' என்று வினாத் தொடுத்தபடி ஏதும் புரியா நிலையில் திணறுகிறார்; திகைக்கிறார். ஒன்றோடொன்று ஒட்டி வரவில்லையே என்று விழிக்கிறார். இங்கு மட்டுமில்லை, ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைதான் நிலவியிருந்தது. அறிவியலுக்கும் கிருஸ்தவ சமயத்துக்கும் ஏற்பட்ட மோதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வரலாறு இன்றும் விவரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
சான்றாக, கோப்பர்நிக்கஸ் எனும் வானவியல் விஞ்ஞானி தொலைநோக்கியாகிய 'டெலஸ்கோப்'பைக் கண்டுபிடித்திருந்தார். அதனைக் கொண்டு ஆய்வு செய்து, கிருஸ்தவ சமயம் கூறுவது போல் உலகம் தட்டையானது அல்ல, அது உருண்டையானது. ஆப்பிள் வடிவில் அமைந்துள்ளது என்பதை கண்டுபிடித்திருந்த போதிலும், கிருஸ்தவத்துக்கு நேர் எதிரான இந்தக் கண்டுபிடிப்பை - உண்மையைக் கூற தைரியமில்லாமல், அந்தப் புதிய கண்டுபிடிப்பை - கருத்தை - விஞ்ஞானிகள் மத்தியிலே மட்டும் பரவ விட்டிருந்தார்.
அவருக்குப் பின் கலீலியோ என்னும் இத்தாலிய வானவியல் விஞ்ஞானியும் ஆற்றல்மிக்க தொலை நோக்கியைக் கண்டுபிடித்து ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின் முடிவில் உலகம் உருண்டை எனும் உண்மையைக் கண்டு பிடித்ததோடு கோப்பர்நிக்கஸ் கண்டறிந்து கூறிய 'உலகம் உருண்டையானது' என்ற கண்டுபிடிப்பு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை உலகுக்குப் பறை சாற்றினார். நான் கண்டுபிடித்ததும் கோப்பர்நிக்கஸ் கண்டுபிடித்ததும் ஒன்றேயாகும். உலகம் உருண்டையானதுதான் என்பதை கலீலியோ கூறினதைக் கேட்டதும் கிருஸ்தவ உலகம் மருண்டது. விவிலியத்துக்கு எதிராகக் கூறுவதா? உலகம் தட்டையானது என்றல்லவா விவிலியம் கூறுகிறது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் உலகம் உருண்டை எனக் கூறுவதா என வெகுண்டெழுந்து, கலீலியோவை சிறையில் அடைத்தது. விவிலியத்திற்கு நேர்மாறான இந்தக் கருத்தைக் 'கண்டுபிடிப்பு' என்ற பெயரில் கூறியதற்காக உன்னைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் அவரை மிரட்டியதோடு நீண்ட காலம் அவருக்குச் சிறைவாசம் தந்து வருத்தினார்கள். மூப்பின் எல்லைக் கோட்டில் நின்றிருந்த கலீலியோ தன் இறுதி நாட்களை ஓரளவு நிம்மதியோடு கழிக்க விரும்பினார். தான் கண்டறிந்த 'உலகம் உருண்டை' என்ற உண்மையை - தன் மனசாட்சிக்கு விரோதமாக - உண்மைக்குப் புறம்பாக அவரே மறுத்துக் கூற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வழக்கு மன்றத்தில் "உலகம் தட்டைதான்" என்று கூறிய கையோடு, இந்தப் பொய்யைச் சொல்வதற்காக இந்தக் கோர்ட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன், 'உலகம் உருண்டைதான்' என்று முணுமுணுத்துக் கொண்டே கீழே இறங்கினார்.
ஏனென்றால் பெரியவர்களால், அறிவாளிகளால், உண்மையைக் கண்டறியும் விஞ்ஞானிகளால் தாங்கள் கடும் ஆராய்ச்சி செய்து கண்டறியும் உண்மைக் கண்டுபிடிப்புகளை மறைத்துப் பேசவே முடியாது. ஏன்? அந்த அரிய உண்மையைக் கண்டறிவதற்காக அவர் எவ்வளவு காலத்தை - சக்தியை - பொருளை, செலவு செய்திருப்பார். இத்தனைக்கும் பிறகு இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு எவரோ ஒருவர் சமயக்கருத்தைக் காரணம் காட்டி, 'மதக் கட்டுப்பாட்டுக்காகக் கண்டறிந்த உண்மையை வெளிப்படுத்தாதே' என எவ்வளவுதான் வற்புறுத்திய போதிலும் ஏதோ ஒப்புக்காக மாற்றம் சொல்ல உதட்டளவால் முயல்வாரே தவிர உள்ளத்தளவில் அவர் மறுத்துரைக்க மாட்டார். அப்படித்தான் முதிய வயது விஞ்ஞானி கலீலியோ கோர்ட்டில் உண்மைக்குப் புறம்பாகக் கூறியதையும் உண்மையை சற்று உரக்கவே முணுமுணுத்துக் கூறியதையும் அக்கால வழக்கப்படி ரோமர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் மதத்தின் பெயரால் விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்தினார்கள். இதனால் அந்த மதத்திற்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உண்மைகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இடைவெளி இட்டு நிரப்பப்படாமலே, நிரப்புவதற்கான வழியே இல்லாமல் போய்விட்டது.
அறிவியல் வளர வழிகாட்டும் அல்குர்ஆன்
அதே சமயத்தில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆனுக்கும் அறிவியலுக்குமிடையே மிகப் பெரும் நெருக்கம் உள்ளது. அது மட்டுமல்ல திருமறை அறிவியலை ஆதரிப்பதோடு வலுவாக வளர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறி வழிகாட்டுகிறது.
ஒரு வகையில் பார்த்தால் திருக்குர்ஆன் திருமறை முழுவதும் அறிவியல் அடிப்படையிலேயே பேசுகிறது எனக் கூறலாம். இதை நான் ஏதோ இஸ்லாத்தை, இறைமறையை, பெருமானாரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை.
திருக்குர்ஆனில் எந்த ஆயத்தை எடுத்துக் கொண்டாலும் அது 'சைன்டிஃபிக் அப்ரோச்' எனப்படும் அறிவியல் கண்ணோட்டத்தோடு, அறிவியல் அணுகுமுறையோடு அமைந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். ஆனால், அந்தக் கண்ணோட்டத்தோடு நாம் திருமறை வசனங்களை அணுகுவதே இல்லை.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு இருக்கிற அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இஸ்லாமியத் திருமறையான திருக்குர்ஆன் இறை வசனத் தொகுப்பு முழுமையாக ஆதரிக்கிறது. ஆதரிப்பது மட்டுமல்ல, ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சி போதாது; இன்னும் மேற்கொண்டு வெகுதூரம் போக வேண்டும். மிகு வளர்ச்சி காண வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்துவதோடு, விரைந்து விஞ்ஞான ஆய்வில் ஈடுபட கட்டளையிடுகிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி திருக்குர்ஆனிலே சொல்லப்பட்டிருப்பதிலே பத்து சதவீதம் கூட உலகினரால் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் எப்படிப்பட்ட இஸ்லாமிய அறிவியல் நுட்பங்களையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் அறிவியல் போக்கு இன்று உலகெங்கும் ஒரு புதிய போக்கு உருவாகி உரம் பெற்று வருகிறது. அதுதான் எந்தவொரு சிறு விஷயமானாலும் பிரச்சினையானாலும் அதனை சைன்டிஃபிக் அப்ரோச் (Scientific Approach) கொடுத்து ஆயும் மனப்போக்கு. அறிவியல் அணுகு முறையும் அறிவியல் கண்ணோட்டமும் இன்றைய மேலோட்ட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ள பெரும் பண்பாகும். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடமும் இதே மனப் போக்குத்தான் இன்று வளர்ந்து வளம் பெற்று வருகிறது. அறிவியல் கோணத்திலிருந்து பார்த்தால்தான் எதுவுமே புரிகிற - நம்புகிற மனநிலை.
ஆனால், அத்தகைய அறிவியல் கண்ணோட்ட உணர்வு நம்மிடத்திலே இருக்கிறதா என்றால் 'இல்லை' என்றே கூற வேண்டிய நிலை. இன்னும் சொல்லப்போனால் நாம் இன்னும் அந்த உணர்வுக்கே ஆட்படவில்லை என்றுதான் வேதனையோடு குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்தச் சமயத்தில் நான் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
அண்மையில் என் நண்பர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களை அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு அருகில் உள்ள பால்டிமோரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி உங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆதாம் (அலை) தொடங்கி 1975 வரை உலகத்தில் பிறந்த மாமனிதர்களில் தங்களின் தனித்த செல்வாக்கினால் உலகத்தின் வரலாறையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தவர்களில் நூறு பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்குள்ளும் முதலாமவர் யார், இரண்டாமவர் யார் என அவர்களை வரிசைப்படுத்தி, 'Ranking of the most influential persons in the History "The 100" என்ற தலைப்பில் நூல் எழுதிய உலகப் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர். அந்த நூலில் நூறு உலக மாமேதைகளில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முதலிடம் தந்த பேராய்வாளர். அவரை - அவரது பெயரைக் கொண்டு - அவரையொரு கிருஸ்தவராகவே கருதுகின்றார்கள். நான் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன். பலரும் நினைப்பது போல் அவர் கிருஸ்தவரல்ல. யூதர் - இருப்பினும் மோசஸ் என்றழைக்கப்படும் மூஸா (அலை) அவர்கட்கு முன்னதான முதல் இடத்தைப் பெருமானார் (சல்) அவர்கட்கு வழங்கியதற்கு அவர் கூறும் காரணங்கள் உலகத்தவரின் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அதாவது ஆய்வு முடிவு அறிவுலகத்தை வியப்பிலாழ்த்தியது. பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதி முடிவாக, பெருமானாரால் நேற்றைய உலக வரலாறு மாறியது, இன்றும் மாறிக் கொண்டுள்ளது; நாளைய உலக வரலாறும் அவரது செல்வாக்கால் மாறும். இவ்வாறு நேற்றை, இன்றைய, நாளைய உலக வரலாற்றின் மாற்றத்துக்கு அச்சாணியாக விளங்கவல்லவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களே என்பதை காரண, காரியங்களோடு உலகுக்கு உணர்த்தியவர்; மெய்ப்பித்துக் காட்டி, தன் வாதத்தை நிலை நிறுத்தியவர்.
அவரோடு அண்மையில் பால்டிமோரில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு செய்தியைச் சொன்னார்: "நான் சமீபத்தில் கெய்ரோவில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அக்கூட்டத்தில் பேசிய இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இஸ்லாத்தை ஒரு ஆன்மீக மார்க்கம் என்ற அடிப்படையில் - உணர்வில் பேசினார்களே தவிர, அறிவியல் போக்கில் யாருமே பேசாதது எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இஸ்லாத்தில் ஆன்மீகம் ஒரு பகுதி மட்டுமே. மற்றபடி அறிவியல் போக்கிலான மார்க்கமே இஸ்லாம் என்பது எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமல்ல; உண்மையும் கூட. ஏனோ, இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பக்கமே போக மாட்டேன் என்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் இஸ்லாத்தை விளக்கினால் அல்லவா இஸ்லாத்தினுடைய சிறப்பு மட்டுமல்ல, பெருமானாரின் வாழ்வும் வாக்கும் எந்த அளவுக்கு உலகுக்கு வழிகாட்டும் தன்மையுடையதாக விளங்குகிறது என்பது புலப்படும். நீங்களாவது அந்தக் காரியத்தை முனைப்போடு செய்ய முன்வாருங்கள்' என்று கூறி எனக்கு, என் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். மைக்கேல் ஹெச்-ஹார்ட் பேசும்போது உச்சரித்த "Islam is a scientific way of life" என்ற வாசகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு யூதராக இருந்தும் இஸ்லாத்தின்மீது இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உடையவராக இருப்பதோடு, தன் உள்ளத்து உணர்வுகளைப் பிசிறில்லாமல் பதிவு செய்ய முற்படும் அவரது நடுவு நிலைப்போக்கு, அவரின் மீது எனக்கு மிகுந்த மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.
மைக்கேல் ஹெச் - ஹார்ட்டின் வேண்டுகோளை ஏற்கும் முறையில் நான் “அண்ணலாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் நூல் எழுதியிருப்பதை விவரித்தபோது, மகிழ்ச்சி பொங்க நம் இருவரின் சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகக் கூறிச் சிரித்தார்.
முழுமையாக அறிய முக்கோண வழிகள்
இஸ்லாத்தைச் சரியான கோணத்தில் தெளிவாக அறிய வேண்டுமானால் அதனை மூன்று கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அப்போதுதான் இறைநெறியாகிய இஸ்லாத்தை முழுமையாக அறிந்துணர முடியும். முதலாவது உளவியல், இரண்டாவது ஆன்மீகம், மூன்றாவது அறிவியல். இம்முக்கோண அணுகுமுறை மூலமே இஸ்லாத்தை முழுமையாக அறிய முடியும் என்பது என் திடமான நம்பிக்கை. அம்முறையிலேயே நான் இஸ்லாத்தை அணுகி அறிந்து கொள்ள முயன்று வருகிறேன்.
அவ்வாறு அறிய முற்படாவிட்டால் "தோள் கண்டார் தோளே கண்டார்; தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே" என்று கம்பர் கூறியபடி ஒரு பகுதி மட்டுமே அறிந்தவர்களாவர் என்பது திண்ணம்.
இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ள சில நிகழ்ச்சிகளைச் சான்றுகளாகக் காட்ட விரும்புகிறேன்.
பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற கூரியர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அது பன்னாட்டளவில் ஒருவார காலம் நடைபெறும் மாநாடு. வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம் பிரதிநிதிகள் ஜும்மா தொழுகை தொழச் செல்ல வசதியாக காலையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மாநாட்டை முடித்து மாலையில் ஒரு மணி நேரம் தாமதமாக மாநாட்டைத் தொடருவோம். அப்படி ஒரு வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பாரிஸ் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மசூதிக்குச் சென்று விட்டு, மாநாட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த போது, எனக்கும் முன்னதாக வந்து அங்கே அமர்ந்திருந்த பிரேசில் நாட்டுப் பிரதிநிதி பெனடிக்டோ சில்வா என்பவர் என்னை நோக்கி, "நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குச் செல்கின்றோம். ஆனால், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுது இறை வணக்கம் புரிகிறீர்களே, இதனால் நேரம், சக்தி விரையமாகிறதே. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நேரம் தொழுகை செய்தால் போதாதோ" எனப் பாமரத் தனமாகக் கேட்டு என்னையே பார்த்தார்.
அவர் இப்படி ஒரு கேள்வி கேட்டது எனக்கு ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இன்று நம் இஸ்லாமியச் சமுதாய இளைஞர்களில் சிலர் இப்படிக் கேள்விகளைக் கேட்கும் மனநிலைக்கு ஆளாகி வருகிறார்கள். தராவீஹ் தொழுகையில் ஏன் இருபது ரகாஅத்துகள் தொழ வேண்டும். எட்டு ரகாஅத்துகள் போதாதோ என்கின்றனர். பர்ளுத் தொழுகைக்கு மேல் சுன்னத்து, நஃபில் தொழுகையெல்லாம் ஏன் தொழ வேண்டும்? என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தயங்குவதில்லை. இன்னும் ஒரு சிலர் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக முஸ்லிம் என்ற பெயரை மட்டும் தாங்கிக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக உலாவும் பெயர் தாங்கி முஸ்லிம் இளைஞர்களில் சிலர் ஏன் ஐவேளைத் தொழுகை? வெள்ளிக் கிழமைத் தொழுகை மட்டும் போதாதோ? என்றெல்லாம் எண்ணத்தான் செய்கின்றார்கள். இது அவர்கள் தவறல்ல; இளமை முதலே முறைப்படி இஸ்லாத்தைக் கற்பிக்கத் தவறிய நம் குறைதான் இதற்குக் காரணம். நாம் தான் குற்றவாளி.
இறையச்ச உணர்வூட்டும் ஐவேளைத் தொழுகை
வினா தொடுத்த டிசில்வாவை நோக்கி நான் விளக்கமளிக்க முயன்றேன். "நீங்கள் எண்ணுவது போல் இறைவணக்கத் தொழுகை என்பது ஏதோ போகிற போக்கில் செய்துவிட்டுப் போகிற ஒரு சமயச் சடங்கு அல்ல. தொழுகையின் அடிப்படைத் தத்துவமே உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளது. வைகறையில் கண்விழத்தெழும் ஒரு முஸ்லிம் தொழுகையாளி உடல் சுத்தம், உள்ளச் சுத்தம் என்ற முறையில் ஒலுச்செய்து கொண்டு, தூய்மையான முசல்லா விரிப்பின் மீது மக்காவிலுள்ள காபாவை முன்னோக்கி அமர்கிறார். இப்போது அவர் அனைத்துச் சிந்தனையும் உணர்வும் இறையில்லத் திசையின்பால் திருப்பப்படுகிறது. காபா இறையில்லமே தவிற இறைவனல்ல என்பதை உணர்ந்தே அதை நோக்கி அமர்கிறார். அவருள் அழுத்தமாக எழும் மற்றொரு உணர்வு இறைவன் தம்முன் இருப்பது போலவும் அவன் முன்பாக மண்டியிட்டுத் தொழுது, அவனது பேரருளை வேண்டித் தொழுவது போன்ற மன உணர்வை அழுத்தமாக உருவாக்கிக் கொண்டு தொழத் தொடங்குகிறார். அப்போது தொழுகைப் பாடத்துக்கும் அப்பால் அவர் மனவுணர்வு முழுமையும் இறை அச்சத்துக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இறை நெறி பேணி நடந்தால் இறையுவப்பும் இறையருளும் கிட்டும், இல்லையெனில் இறைவனின் தண்டனையிலிருந்து தான் தப்பவே முடியாது என்ற அச்ச உணர்வே அவர் நெஞ்மெல்லாம் நிறைந்திருக்கிறது. இந்த இறையச்ச உணர்வு பொங்கிப் பொழியும் நிலையில் அவர் தன் வைகறைத் தொழுகையை நிறைவேற்றுகிறார். பிறகு உணவு உட்கொண்டு, தன் அன்றாடக் கடமைகளில் முழு வீச்சுடன் ஈடுபடுகின்றார். இப்போது அவருள் பரவியிருந்த இறையச்ச உணர்வு கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது. முழுதும் குறைவதற்கு முன்னதாகத் தன் நண்பகல் தொழுகையை நிறைவேற்றுகிறார். மீண்டும் நெஞ்சமெல்லாம் இறையச்ச உணர்வு நிறைய, இறை நெறி பேணி நடக்க முனைகிறார். பின் நண்பகல் உணவுக்குப் பின் பணி முனைப்பில் அவர் உள்ளத்து இறையச்ச உணர்வு குறையத் தொடங்குகிறது. முழுமையும் குறையுமுன் அவர் பிற்பகல் தொழுகையைத் தொடங்கி நிறைவேற்றுகிறார். பின் மீண்டும் பணி, இறையச்சக் குறைவு. மீண்டும் இறையச்சத்தைப் புதுப்பிக்க அந்தி நேர மக்ரிஃப் தொழுகை. பின், இறுதியாக இரவுப்படுக்கைக்குச் செல்லுமுன் இஷாஅத் தொழுகை. இவ்வாறு வைகறையில் கண் விழித்தது முதல் இரவு கண் மூடி உறங்கச் செல்லும் வரை இடையறாது இறையச்ச உணர்வோடு வாழ ஐவேளைத் தொழுகைகளே ஆதார சுருதியாக அமைகின்றன.
ஒரு மனிதன் தவறான வழியில் சென்றால் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது என்ற இறையச்ச உணர்வோடு நேரான வழியில் முறையான வாழ்க்கை வாழ, உளவியல் அடிப்படையில் நமக்கு நாமே கடிவாளமிட்டுக் கொண்டு, நேர் வழியில் நடக்க உறுதுணையாயமைந்துள்ள செயல்பாடுகளே ஐவேளைத் தொழுகைகளே தவிர, அவை வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் அல்ல" என விளக்கிக் கூறியதைக் கேட்ட நண்பர் டிசில்வா விரைந்து எழுந்து வந்து, இரு கைகளைப் பற்றி குலுக்கியவராக, ஒரு மனிதன் தனக்குத்தானே அச்சவுணர்வோடு, செம்மையாக, வாழ்க்கைச் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இதைவிடச் சிறந்த வழி வேறு எதுவுமே இருக்க முடியாது. உங்கள் ஐவேளைத் தொழுகை முறைக்கு இப்படியொரு உட்பொருள் உளவியல் அடிப்படையில் உட்பொதிந்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன் எனக் கூறி, கைகுலுக்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.
ஒவ்வொரு முஸ்லிமும் இறையச்சத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் இறை நியதி. இறையச்ச உணர்வு நெஞ்சம் நிறைந்திருக்கும் வரை ஒரு முஸ்லிம் இறை நெறி பிசகி வாழ இயலாது.
இவ்வாறு இருபத்தி நான்கு மணி நேரமும் இரவு பகல் இடையறாது இறையச்சத்துடன் வாழவே ஐவேளைத் தொழுகையுடன் நள்ளிரவுத் தொழுகையான 'தஹஜ்ஜத்' தொழுகையையும் பேணி நாம் தொழுது வருகின்றோம்.
ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இறையச்ச உணர்வு இருக்கும் வரை அவன் மனம் தவறான எண்ணங்களுக்கு அறவே இடம் தராது. இந்த அச்ச உணர்வே அவனைத் தடுத்து நிறுத்தி நல்ல எண்ணங்களிலும் நற்செயல்களிலும் நம்மைக் கொண்டு செல்லும். 'இது தப்பான காரியம், இதைச் செய்தால் இறைவன்கிட்ட மாட்டிக் கொள்ளும்படியாகிவிடும். இறைவனுடைய கோபம் பொல்லாதது. கடுமையான தண்டனைக்கு நம்மை ஆளாக்கி விடும், என்றெல்லாம் அவன் மனதிலுள்ள இறையச்ச உணர்வு மனச்சாட்சி வடிவில் அவனை மிரட்டிக் கொண்டிருப்பதனால் அவன் எந்தத் தீங்கும் செய்யாதவனாக - எவ்விதத் தீய உணர்வுக்கும் இடம் தராதவனாக வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தொழுகையாளி எந்தத் தவறுதலுக்கும் இடம் தராதவனாகத் தன் வாழ்க்கைத் தேரை நகர்த்த வேண்டியதாகிறது என மேலும் நான் விவரித்த என் விளக்கத்தைப் பொறுமையாகச் செவிமடுத்த டிசில்வா அகமகிழ்ந்தவராக, "அறியாத்தனமாக அப்படியொரு கேள்வியைக் கேட்டு விட்டேன். ஒரு மனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளையும், தனக்குத்தானே கடுமையான விதிமுறைகளையும், தனக்குத் தானே கடிவாளமாக போட்டுக் கொண்டு, நெறி பிறழா வாழ்வு வாழ இத்தொழுகை முறையைத் தவிர வேறு எந்த முறையும் இருப்பதாகத் தெரியவில்லை. உன்னதமான கொள்கையும் உன்னதமான தத்துவமும் உன்னதமான முறைகளும் உங்கள் தொழுகை முறையில் அமைந்திருப்பதை மிகவும் உணர்கிறேன்" எனக் கூறித் தன் மகிழ்வைப் புலப்படுத்தினார்.
இதை வேறு ஒரு முறையில் உணர்ந்து தெளியும் வாய்ப்பு எனக்கு ஒரு முறை சென்னையில் வாய்த்தது.
ஒரு நாள் மாலை தலைமைச் செயலகம் சென்றிருந்த நான், அங்கிருந்த திரு ராமகிருஷ்ணன் எனும் அரசு அதிகாரியை சந்திக்கச் சென்றிருந்தேன். பிராமண குலத்தைச் சார்ந்த அவர் என் மீது அன்புமிக்கவர். நான் சென்ற நேரம் அவர் வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவருடன் அவர் துணைவியாரும் இருந்தார். என்னையும் தன்னோடு வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நானும், அவர்களுடன் சென்றேன். நாங்கள் சென்ற கார் வழியில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் கடைமுன் நின்றது. 'ஹாதி ஸ்டோர்' என்ற அந்தக் கடை ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமானது. இவர் காரைக் கண்டவுடன் கடைப் பையன் ஒரு பெரிய மளிகைச் சாமான்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கி வந்து கார் டிக்கியில் வைத்தான். பின் கடைக்காரப் பையன் தந்த பில்லுக்குண்டான பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவன் பணத்தைப் பெற்றுச் சென்றான். அவர் காரைக் கிளப்பினார். கடைப்பையன் சாமானைக் கொண்டு வந்ததிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுச் செல்லும் வரை அவர் அருகில் உட்கார்ந்திருந்த அவர் மனைவி அவரிடம் எதையோ சொல்வதற்குப் பலமுறை முயன்றார். அவர் அதைக் கவனிக்கவில்லை. பின் அப்பெண்மணி வாய் திறந்து கேட்டே விட்டார். "ஏங்க! சாமானும் பில்லும் சரியா இருக்கான்னு பார்க்க வேண்டாமோ?" வினாத்தொடுத்த மனைவியை வெறித்துப் பார்த்தார். "சாயபு கடையிலே சாமான் வாங்கினா சந்தேகப்படக் கூடாது. அவங்க ஆண்டவனுக்கு ரொம்பப் பயந்தவங்க. அஞ்சு நேரம் நமாஸ் பண்றவங்க. வியாபாரத்திலே மோசம் செய்தா நேரா நரகம்தான்'னு நம்புறவங்க" என்று அவர் கூறியபோது எனக்குப் புல்லரித்து விட்டது. தொழுகை மூலம் ஒரு முஸ்லிம் பெறுகின்ற இறையச்ச உணர்வு அவனை எவ்வளவு தூயவனாக, நேர்மையாளனாக உலக மக்களுக்கு இனங்காட்டிக் கொண்டிருக்கிறது. தொழுகையாளி தவறு செய்ய மாட்டான் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக மற்றவர்கள் மத்தியில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கையைத் தோற்று வித்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
இவ்வாறு நாம் மேற்கொள்ளும் மார்க்கக் கடமைகள் ஒவ்வொன்றுமே இறையச்ச உணர்வூட்டும் செயல்பாடுகளாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்ல, அவை ஆன்மீக உணர்வோட்டத்தையும் அறிவியல் அடிப்படையையும் கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்குமே இதை உணர்த்துவதாக உள்ளதை நம்மால் அறிந்தின்புற முடிகிறது. இந்தச் சமயத்தில் அண்ணலார் வாழ்வில், அவர் கூறிய ஒரு வாக்கில் எவ்வளவு அரிய, பெரிய விஞ்ஞான உண்மை பொதிந்துள்ளது என்பதை எண்ணும் தோறும் மயிர்க்கூச்செரிகிறது. அண்ணலார் வாக்கில் காணும் அறிவியல் அடிப்படை
"நாற்பது நாட்கள் வெறுங்காலுடன் செருப்பணியாமல் பொதுச் சாலைகளில் ஒருவர் நடந்திருந்தால் அவரது சாட்சியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்", என்று பெருமானார் (சல்) அவர்கள் கூறியதாக அல் ஹதீஸில் ஒரு குறிப்பு வருகிறது.
சாதாரண நிலையில் இவ்வாறு கூறியிருக்கும் கருத்தை எண்ணிப் பார்த்தால் செருப்பணிந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வும் சுத்தம் சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவன் கூறும் சாட்சியமும் பொறுப்புணர்வுமிக்கதாக இருக்க இயலாது; ஆகவேதான் இவ்வாறு அண்ணலார் கூறியுள்ளார் என்றே எண்ணத்தோன்றும். ஆனால் அவ்வாறு கூறியதற்கு இது வல்ல காரணம்.
நாம் ஏன் காலில் செருப்பு மாட்டிக் கொண்டு வெளியில் நடக்கிறோம். வீட்டிலும்கூட மல ஜலம் கழிக்கும் கக்கூஸ் போன்ற இடங்களுக்குச் செருப்பு இல்லாமல் நாம் செல்லுவதே இல்லை. காரணம், அங்கேயெல்லாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமிகள் படிந்திருக்கும். அவற்றின் மீது கால் பதித்தால் அவை நம் கால்வழி உடலுக்குள் ஊடுருவிச் சென்றுவிடும்; அவை உடலுள் பல நோய்களைத் தோற்றுவித்து விடும் என்பதனாலேயே செருப் பணிந்து நடமாடுகிறோம்.
பலரும் நடமாடும் பொதுவிடங்களிலும் பொதுச் சாலையிலும் எத்தனையோ பேர் காரி உமிழ்ந்திருக்கலாம். இவ்வாறு காரி உமிழ்ந்தவர்களில் பலவிதமான கொடிய நோயுள்ளவர்களும் இருக்கலாம். சிலர் மலமோ சிறுநீரோ கூட கழித்திருக்கலாம். அவை காய்ந்து போயிருப்பினும் கூட, அவற்றிலுள்ள நுண்கிருமிகள் உயிரோடு மண்ணோடு கலந்திருக்கலாம். அவை செருப்பணியாமல் ஒருவர் வெறுங்காலுடன் நாற்பது நாட்கள் நடந்திருந்தால் நிச்சயம் அந்நுண்கிருமிகள் கால் வழி உடலுள் புகுந்து, அவனறியாமல் பல நோய்களை உருவாக்கியிருக்கலாம். அதனால் அவர் மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருக்கக் கூடும்.
சாதாரணமாகக் காற்றின் மூலம் சளிக்கிருமிகள் பரவுகின்றன. அதனால் தும்மல் வரும்போது சிறு துண்டை அல்லது கைக்குட்டையால் அல்லது குறைந்தபட்சம் கையால் வாயைப் பொத்தி, அக்கிருமிகள் தும்மல் மூலம் வெளியேறி மற்றவர்களைப் பீடிக்காமல் தடுக்க முயல்கிறோம். அதையும் மீறி சளிக் கிருமிகள் நம்மைத் தாக்கி, சளியுண்டாக்கும் போது மிகவும் சங்கடப்படுகிறோம். அப்போது பேச நேரிட்டால் எரிஞ்சு விழுகிறோம். அந்த அளவுக்கு சளிக்கிருமிகளால் ஏற்பட்ட உபாதை நம் மன நிலையையே பாதித்து விடுகிறது.
ஆனால்; நாற்பது நாட்கள் நச்சுக் கிருமிகளுக்கிடையே நடமாடியவனின் உடலுள் புகுந்த நச்சுக் கிருமிகள் எத்தனையோ உபாதைகளை அவன் உடலுள் உருவாக்கி மன நிலையைப் பாதித்திருக்கலாம். அதுவும் அவனறியாமலே ஏற்பட்டிருக்கலாம். இந்நிலையில் ஒருவன் சாட்சி சொல்ல முயன்றால் பாதிப்புக்குள்ளான மன நிலை, அவன் அளிக்கும் சாட்சியத்தையும் பாதிக்காமல் இருக்காது. அச்சாட்சியம் நேர்மையாகவும் நீதியாகவும் இருக்காது. அதனாலேயே அத்தகைய சாட்சியத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என நபிகள் நாயகம் (சல்) கூறினார்கள். இவ்வாறு வள்ளல் நபி பெருமானார் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றின் மீதும் அறிவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சி ஆராய்ந்து பார்ப்போமேயானால் அவையனைத்துமே அறிவியல் அடிப்படையில் அமைந்திருப்பதை உணர்ந்து தெளியலாம்.
அறிவியலுக்கு விளக்கம் தரும் அல்- குர்ஆன்
இன்னும் சொல்லப்போனால், விஞ்ஞான உலகோடு கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக நெருக்கம் கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் ஒரு கருத்தை மிக உரமாக உங்களிடம் சொல்ல முடியும். அதுதான் திருமறையான திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகளுக்கு விளக்கம் தரும் முறையிலேயே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன என்ற கருத்தே அது.
திருமறை ஆயத்துகள் ஒவ்வொன்றுமே நம்மை அறிவியல் உணர்வும் சிந்தனையும் கொண்டிருக்கப் பணிக்கின்றன. இதைத் திருமறையிலுள்ள இறை வசனங்கள் முழுமையும் காண முடிகிறது.
மனிதத் தேவையும் பிற உயிர்த் தேவையும்
சாதாரணமாக ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், மனிதத் தேவைக்கும் பிற உயிர்களின் தேவைக்குமுள்ள வேறுபாட்டை ஆராய்ந்து பார்த்தாலே, இறைவன் அறிவியல் ஆராய்ச்சியில் முனனப்புடன் ஈடுபட, பயன்களை அனுபவிக்கப் பணித்திருப்பதை ஒருவாறு உணர்ந்து தெளிய முடியும்.
மனிதனைத் தவிர்த்துள்ள பிற உயிரினங்களின் தேவைகள், குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. மிக மிகக் குறைந்த அளவுடன் அமைந்திருப்பவை. ஒரு மாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதுக்கு வேண்டிய தேவை மிகச் சில. அத்தேவைகளும் அதன் கண்ணுக்கு முன்னாலேயே காணும் வகையில் அமைந்துள்ளன. தன் கண் முன்னே காணும் புல்லை மேய்கிறது. அருகில் இருக்கும் குட்டையில் நீர் குடிக்கிறது. தாகம் தீர்ந்தவுடன் அருகில் உள்ள மர நிழலில் படுத்து ஓய்வெடுக்கின்றது. அசைபோட்டு உண்டதை ஜீரணிக்கிறது. தன் இணையைக் காணும் போது உடலுறவுக் கொண்டு தன் இனவிருத்திக் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறது. இதற்கு மேல் அதற்கு எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை . இதே போலத்தான் பறவை இனங்கள், வீட்டு விலங்குகளிலிருந்து காட்டு விலங்கு வரை அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைத் தேவைகளும் அவற்றைப் பெறும் வகைகளும் அமைந்துள்ளன.
ஆனால், மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்துள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. காரணம், மனிதனைத் தவிர்த்து பிற உயிரினங்களின் தேவை மிக மிகக் குறைவு. ஆனால், மனிதனின் தேவை மிகமிக அதிகம். மனிதத் தேவைக்கும் - தேவையை விரும்பும் மன நிலைக்கும் அளவே இல்லை. எவ்வளவு தேவைகள் நிறைவு செய்யப்பட்டாலும் மனித மனம் நிறைவடைவதே இல்லை. மேலும் மேலும் தேவைகளை உருவாக்கிக் கொள்ளவும். அவைகளைப் பெறுவதற்கான வழிகளைக் காணவும் அவாவிய வண்ணமே இருப்பது மனித இனத்தின் இயல்பாகும். ஐந்து கார் வைத்திருந்தால் கூட, அமெரிக்காவில் ஒரு புதுவகைக் காரை உருவாக்கி வெளியாக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், வசதியுள்ள பணக்காரன் அந்தக் காரை வாங்கிப் போர்ட்டி கோவில் நிறுத்திய பிறகே நிம்மதியடைகிறான். ஏனென்றால் இவனுடைய ஆசைக்கு அளவேயில்லை. ஆசைக்கேற்ப தேவையை வளர்த்துக் கொண்டே செல்வது மனித இயல்பு.
மனிதத் தேவை மண்ணிலும் விண்ணிலும்
எல்லா உயிரினங்களுக்கும் தேவையானவற்றைக் கண்ணுக்கு முன்னால் காட்டிய இறைவன் மனிதனுக்குத் தேவையான பலவற்றை கண்ணுக்கு நேராகக் காட்டாமல் அவற்றை மறைபொருளாக மண்ணுக்குள்ளும் கடலினடியிலும் விண்ணிலுமாக வைத்திருப்பதன் உட்பொருள் என்ன?
மற்ற உயிரினங்கள் அதிகபட்சமாக ஐந்தறிவைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை - சிந்திக்கும் திறனை - ஆற்றலை வேண்டிய அளவுக்குக் கொடுத்துள்ளான். இவ்வாறு இறைவன் தந்தருளிய பகுத்தறிவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்து, இறைவன் மறை பொருளாக விண்ணிலும் மண்ணிலும் பொதிந்து வைத்துள்ள அனைத்தையும் கண்டறிந்து, அவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும்.
"வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையும் (உங்கள் நன்மைக்காக) தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான். சிந்தித்து ஆராயும் மக்களுக்கு இதில் நிச்சயமாகப் பல படிப்பினைகள் இருக்கின்றன." (45:12:13)
தரைக்கு மேல் உள்ள அனைத்தையும் அனுபவித்த மனிதன் மண்ணைத் தோண்டி உள்ளே இருக்கும் தங்கம் முதலாக நிலக்கரி ஈராக அனைத்தையும் தோண்டியெடுத்து அனுபவிக்கத் தவறவில்லை. மண்ணுக்கடியில் தேங்கி நிற்கும் நீரை மட்டுமா வெளிக் கொணர்ந்தான். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாக மண்ணுள் புதையுண்டு போய் மனித, விலங்கு, தாவர உயிரினங்களின் சாராக உருமாறியுள்ள பெட்ரோலையுமல்லவா வெளிக்கொண்டு வந்து, பல்வேறு பொருள்களாக உருமாற்றிப் பயன்படுத்தி வருகிறான். இவைகளை மண்ணுக்குள்ளிலிருந்து மட்டுமா பெறுகிறான். ஆழ்கடலின்னுள்ளிருந்தும் பெட்ரோலையும் பிற உலோகங்களையும் மீன் போன்ற உயிரினங்களையும் வேண்டிய மட்டும் கண்டறிந்து, சேகரித்து, பயன்படுத்தி மகிழ்கிறான். இதற்கெல்லாம் ஆதாரமாக - அடிப்படையாக அமைந்திருப்பது அவனது பகுத்தறிவுச் சிந்தனையேயாகும்.
மண்ணினுள், கடலுள் மட்டும் ஆராய்ச்சி செய்வதோடமையாது விண்ணிலும் தம் ஆய்வைத் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளான். நிலவில் தன் கால்தடம் பதித்த ஆய்வாளன் இன்று சுக்கிரன். சனிக் கோள், வியாழன் கோள் என்று தன் ஆய்வுக் களங்களை விரிவுபடுத்திக் கொண்டே போகிறான். சூரிய மண்டலம் முழுவதிலும் தன் ஆய்வுத் தடங்களைப் பதித்த மனிதன் இன்று சூரிய மண்டலத்திற்கு அப்பாலும் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்த முனைந்து விட்டான்.
ஏழு வானமும் பயோனீர் ஆய்வும்
பல ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆய்வதற்காக அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்ட 'பயோனீர்' ஆய்வு விண்கலம் இன்று சூரிய மண்டலத்திற்கு அப்பால் சென்று தன் ஆய்வைத் தொடர்ந்து கொண்டுள்ளது. சூரிய மண்டலத்தைப் போல் பல வான மண்டலங்கள் இருப்பதாகக் கருதும் விஞ்ஞானிகளின் அனுமான அறிவு இன்று பயானீர் விண்கல ஆய்வு மூலம் உண்மையாகி வருகிறது. 'ஏழு வான மண்டலங்கள்' உண்டு என்று கூறும் குர்ஆனிய கருத்து, வான மண்டல. ஆய்வே கால்கோள் செய்யப்படாத காலத்தில், திருமறை மூலம் இறைவனால் உணர்த்தப்பட்டிருப்பதை விஞ்ஞான உலகம் கண்டு வியந்து போய் நிற்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படையாய் அமைந்திருப்பது எது?
இறைவனின் படைப்பு ரகசியங்களை, இறைவனின் கட்டளைப்படி, மனிதன் அறிந்து கொள்ள முற்பட்டதன் விளைவுதான், இத்தகைய ஆய்வு வேட்கையும், புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் இடையறா முயற்சிகளும் ஆகும்.
ஆராயத் தூண்டும் அரும் மறை
திருமறை முழுவதும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் இறை வசனங்களால் நிறைந்துள்ளது. சில ஆயத்துகளின் இறுதி வாசகத்தின் பொருள் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சில வசனங்களின் இறுதியில் "இவ்வாசகத்தின் உட்பொருளை அறிய முற்படுவோர்க்குப் பல உண்மைகள் புலப்படும்" என்றும் இன்னும் பல வசனங் களின் இறுதிப் பகுதியில் "இவ்வசனங்களை உய்த்துணர்ந்து ஆய்வோர்க்குப் பல அரிய செய்திகள் தெரிய வரும்' என்றும் இன்னும் சில வசனங்களின் இறுதியில் "இதை ஆராய்ந்து பார்ப்போர்க்கு பல அற்புத புதியன கண்டறியும் பொருள்நுட்பம் புலப்படும்" என்றெல்லாம் கூறியிருப்பதைக் காணலாம். இறை வசனங்களின் அடிப்படையில் மனிதன் சிந்திக்கவும், சிந்தித்தவைகளின் அடிப்படையில் புதிய புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புதியன புனையும் புதுப்புது ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும் தூண்டுவதாயுள்ளன.
இதையே பெருமானார் (சல்) அவர்கள் இறைவன் மனிதனுக்காக மண்ணிலும் விண்ணிலும் கடலடியிலும் பொதிந்து வைத்திருக்கும் இரகசியங்களைத் தன் ஆய்வறிவால் ஆராய்ந்து பெற "இறைவன் மனிதனுக்களித்த மறை பொருள் ரகசியத்தை அறிய ஒரு விநாடி சிந்திப்பது 70 ஆண்டுத் தொழுகைக்குச் சமம்" என நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறி, சிந்திப்பதன் சிறப்பை - ஆராய்ச்சியின் அவசியத்தை அவனிக்கு உணர்த்தினார். அண்ணலெம் பெருமானார் (சல்) அவர்கள் இறைவன் மனிதனுக்காகத் தந்தவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். தன் ஆராய்ச்சி மூலம் அவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ வேண்டும் என்பது இறைக் கட்டளையாகும்.
அறிவியல் என்றால் என்ன?
"மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப் புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும் அவற்றில் மறைபொருளாய் அமைந்துள்ள ரகசியங்களையும் தன் சொந்த முயற்சியால், அறிவின் துணைகொண்டு சோதனைகளின் உதவியோடு தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் முயற்சியே அறிவியலாகும்".
ஆய்வே அறிவியலுக்கு அடிப்படை
இம் முறையில் மனிதன் மேற்கொண்ட ஆராய்ச்சி முயற்சிகள் தான் இன்று அறிவியல் ஆய்வுகளாக - விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளாக வளர்ந்து வளம் பெற்று வருகின்றன. இவ்வகையில் அமையும் அறிவியல் ஆய்வுக்கு முடிவே இல்லை. 'கியாமத்து நாள்' என்று கூறப்படும் உலக இறுதி நாள்வரை நீளுகின்ற ஒரு முயற்சி. மனிதன் இறை ரகசியங்களை அறிய எவ்வளவுக்கவ்வளவு முயல்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் பயன்களைப் பெற்று அனுபவித்து மகிழலாம். இம்முயற்சியில் முஸ்லிம்கள் தொய்வின்றித் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது திருமறை தரும் அறிவுரையாகும். இதுவே பெருமானார் பெரிதும் வற்புறுத்தி வந்த வாக்கமுதுமாகும்.
சீனாவுக்குச் செல்லப் பணித்தது ஏன்?
நான் நினைத்துப் பார்க்கிறேன். இஸ்லாமியக் கூட்டங்களில் பேசும் பலரும் பெருமானார் கூறிய புகழ் பெற்ற ஒரு வாசகத்தைக் கூறுவார்கள். அது தான் 'சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக' என்ற வாசகம். கல்வியின் முக்கியத்துவத்தை மட்டும் எடுத்துக்கூறும் வாசகமாக பலரும் கருதும் வகையில் நான் இவ்வாசகத்தைக் கருதவில்லை. நான் எப்போதுமே நாயகத் திருமேனி கூறிய வாக்குகளை அப்படியே பார்ப்பதில்லை. ஏன் இப்படிக் கூறியுள்ளார்? இதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா? எனப் பல கேள்விக் கணைகளை எழுப்பி, அவற்றிற்கு விடை காணும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுவேன். அப்போதுதான் அவர் கூறிய வார்த்தைகளின் பொருள் நுட்பம் திட்டமாக நமக்குப் புலனாகும். பெருமானார் (சல்) அவர்களின் சொல்லமுதுகளையும் நாம் முழுமையாகப் புரிந்தின்புற முடியும். ஏனெனில் பெருமானார் வாழ்வும் வாக்கும் ஆய்வுக்குரிய திறந்த புத்தகமாகும்.
இந்தக் கோணத்தில் "சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக" என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டு ஏன்? எப்படி? எதற்காக? கூறியுள்ளார் என்று பல கேள்விக் குறிகளோடு ஆராய்கிறபோதுதான் பெருமானார் கூறியதன் பொருள் நுட்பம் நமக்குத் தெளிவாய் புலப்பட முடியும்.
கல்வியறிவு பெற சீனாவுக்கு ஏன் செல்லப் பணிக்கிறார். கல்வி எங்கிருந்தாலும் அதைப் பெற எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும், துன்பம் தொடர்ந்தாலும் கல்வியைத் தொடர்ந்து பெற முயல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு கூறியிருப்பாரா? அல்லது நீண்ட நெடுந்தொலைவுக்கப்பால் உள்ள சீனாவுக்கு பல மலைகளை, பாலைவனங்களை, காடு வனாந்தரங்களை, ஆறுகளை, கடல்களையெல்லாம் கடந்து சென்றாவது கல்வியைப் பெற முயல வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறியிருப்பாரா?
நல்ல கல்வி என்றால் அதைப் பெற உலகின் நாகரிகத் தொட்டிலாக அன்று புகழ்பெற்று விளங்கிய எகிப்து நாட்டுக்குச் செல்லப் பணித்திருக்கலாமே? தத்துவச் சுரங்கமாக விளங்கிய கிரேக்க நாட்டிற்குப் போகச் சொல்லியிருக்கலாமே? தவ்ஹீதின் பிறப்பிடமாக, ஏகத்துவத்தின் தாயகமாக பெருமானாரால் போற்றிப் புகழப்பட்ட இந்தியாவிற்குச் சென்று கல்வி கற்க அறிவுறுத்தியிருக்கலாமே? இங்கேயெல்லாம் இல்லாத அப்படி என்ன சிறப்புக் கல்வி சீனாவில் இருந்தது?
இந்தக் கண்ணோட்டத்துடன் சீனாவின் அன்றைய நிலையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்கிறபோதுதான் பெருமானார் (சல்) அவர்கள் சீனா செல்ல வற்புறுத்திக் கூறியதன் பொருள் நுட்பம் நமக்குத் தெளிவாகப் புரியத் தொடங்குகிறது.
ஆய்வுத் தொட்டிலாய் மலர்ந்த அன்றைய சீனா
பெருமானார் (சல்) அவர்கள் இக்கருத்தைக் கூறிய அதே காலகட்டத்தில் சீனாவின் நிலை, குறிப்பாக அங்கு அறிவு வளர்ச்சி - ஆராய்ச்சி நிலை எவ்வாறு இருந்தது என்பதை வரலாற்று அடிப்படையில் - அறிவியல் ஆய்வு வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது அன்று அங்கிருந்த நிலை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
'சீர் கல்வி' பெற ஏன் சீனாவைத் தேர்ந்தெடுத்தார்? என்பதும் தெளிவாகிறது. அண்ணலார் கூறிய அன்றைய கால கட்டத்தில் எத்தனை விதமான விஞ்ஞான ஆராய்ச்சிகள் உண்டோ அவ்வளவு ஆராய்ச்சிகளும் மும்முரமாக சீன நாட்டிலே நடந்து கொண்டிருந்த நேரம். அச்சுப் பாளமுறை அப்போதுதான் அங்கே கண்டறியப்பட்டிருந்தது. எழுதுகிற தாள் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அச்சடிப்புக்குப் பயன்படுகிற மையையும் தாளில் எழுதுவதற்கான மையையும் மசி கொண்டு எழுதும் எழுதுகோலையும் கண்டறிந்திருந்தார்கள். அறியப்பட்டிருந்த அத்தனை நோய்களுக்கும் நிவாரணமளிக்கக்கூடிய மூலிகைகளும் அவற்றால் பலவிதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த கால கட்டம். உடம்பில் ஓடும் நாடி நரம்புகளில் எந்த இடத்தில் ஊசி குத்தினால் எந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதையெல்லாம் உள்ளடக்கிய 'ஊசி குத்து' மருத்துவ முறையான 'அக்குப்பஞ்ச்சர்' முறை அறியப்பட்டிருந்த கால கட்டம். பட்டுப் பூச்சியின் உடலிலிருந்து கசிந்து வெளிவரும் ஒருவகை திரவத்திலிருந்து உருவாகும் பட்டு நூலைக் கொண்டு அழகான ஆடை நெய்யும் முறை செயலாக்கப்பட்டிருந்த கால கட்டம் அது. சுருங்கச் சொல்வதென்றால் அறிவு வளர்ச்சி - ஆராய்ச்சி முயற்சி - அவற்றின் அடிப்படையிலான அறிவியல் கல்வி வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது அன்றைய சீனத்தில். இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிக் கல்வியை - விஞ்ஞானக் கண்டு பிடிப்பு முயற்சிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை ஊட்டுகின்ற முறையிலேயே சீனாவுக்குச் சென்று சீர்கல்வி பெறத் தூண்டினார் பெருமானார் (சல்) அவர்கள்.
ஆய்வு வேட்கை கொண்ட அரேபியர்
அண்ணலார் அறிவுறுத்தியதன் உள் கருத்தை - நோக்கத்தை உய்த்துணர்ந்த அரபிகளில் சிலர் சீன நாடு சென்றனர். அங்குக் கண்டுபிடிக்கப்பட்டவைகளையும், கண்டுபிடிப்பு முயற்சிகளையும் நேரில் கண்டு வியப்படைந்தனர். அவைகளைத் தாங்களும் கற்க முயன்றனர். ஆனால், அந்த விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்தவோ அவற்றின் ஆய்வு முறைகளைக் கற்பிக்கவோ சீனர் மறுத்து விட்டனர். இதனால் சினமுற்ற அரபிகள் தாள் செய்யும் வித்தை தெரிந்த சில சீனர்களைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு, அரபகம் திரும்பினர். தாள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுத்தால் விடுதலை வழங்குவதாக வாக்களித்தனர். இதை ஏற்ற சீனர்கள் அரபுகளுக்கு தாள் செய்யும் கலையைக் கற்றுக் கொடுக்க முன்வந்தனர்.
ஆனால், தாள் செய்வதற்குத் தேவையான மரக் கூழ்களை உருவாக்குவதற்கான மூங்கில்களோ பிற மரங்களோ அரேபிய பாலைவனத்தில் இருக்கவில்லை. பேரீச்ச மரங்களும் காய்கறிச் செடிகளும் ஒருவகை முட்செடிகளும் மட்டுமே அங்குக் கிடைத்தன.
சீனர்களுடன் அரபிகளும் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். பல்வேறு ஆய்வு முயற்சிகளுக்குப் பின்னர், கிடைத்த மூலப் பொருள்களைக் கொண்டே மிகச் சிறந்த தாளை - அன்று சீனத்தில் உருவாக்கப்பட்டதை விட பல மடங்கு உயர்ந்த தாளை - பேப்பரை - அரபிகளால் உருவாக்க முடிந்தது. அன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த தாளைச் செய்யும் முறையைக் கண்டுபிடித்த பெருமை அரபிகளைச் சென்றடைந்தது. தொடர் முயற்சிகள் ஆங்காங்கே முளைவிட்டு வளமாக வளரத் தொடங்கின என்பது வரலாறு.
மலைப்பூட்டும் ஆய்வுப் பெருக்கை
மூடிமறைத்த சிலுவைப் போர்
இப்படி அன்றைய அரேபிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு முயற்சிகளும் அதன் விளைவாகக் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகளும் ஒன்றிரண்டல்ல. அண்ணலார் காலந்தொட்டு அக்கண்டுபிடிப்புகளின் - அவை சார்ந்த துறைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டபோது மலைத்தேன் என்று கூறுவதைவிட திகைத்து, வியப்பில் மூழ்கினேன் என்றுதான் கூற வேண்டும். சிலுவைப் போரின் விளைவாக இவ்விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் விபரங்கள் உலகுக்குத் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மட்டுமே உலகுமுன் பறைசாற்றப்பட்டன. அந்தத் தொழிற்புரட்சிக்கு ஆதாரமான அடிப்படைக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அரபு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டவை என்ற உண்மைகள் நீண்ட நெடுங்காலமாக மறைக்கப்பட்டு வருவதை இன்றைய அறிவுலகம் - ஆராய்ச்சியுலகம் கடுமையாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளன. அண்மை நிகழ்வுகள் பல இதை வெளிப்படுத்தி வருவதைக் காண முடிகிறது.
'உண்மை நெடுங்காலம் உறங்க முடியாது'
அண்மையில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் புருணைச் சுல்தானின் பெரும் நிதியுதவியைக் கொண்டு தொடங்கப்பட்ட "இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை" யைத் தொடங்கி வைத்த இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லஸ் பேசும்போது, "இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை அமைத்துத் தந்தவர்கள் முஸ்லிம்களே என்ற அடிப்படை உண்மையை இனியும் ஐரோப்பியர் மூடி மறைக்க முடியாது. நேர்மையுள்ளம் படைத்த ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் வரலாற்று ஆசிரியர்களும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்த முனைந்து விட்டனர். உண்மைகள் நெடுங்காலம் உறங்க முடியாது' என உலகை எச்சரிக்கும் முறையில் பேசியிருப்பது பல தகவல்களை - உண்மைகளைப் புரிந்து கொள்ள வழி வகுக்கிறது.
56 அறிவியல் பிரிவுகளை வளர்த்த
500 அரபி விஞ்ஞானிகள்
இவ்வாறு பெருமானார் (சல்) காலந்தொட்டு வளர்ந்த - வளர்க்கப்பட்ட அறிவியல் பிரிவுகள் 56-க்கு மேலாகும். இவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட விஞ்ஞானிகள் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள்.
பத்தாண்டுகட்கு முன்பு தமிழ் உட்பட உலகின் 30 மொழிகளில் வெளிவரும் சர்வதேசத் திங்களிதழான "யுனெஸ்கோ கூரியர்" சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டோம். மருத்துவ உலகின் தந்தையாகப் போற்றப்படும் அவிசென்னா என்றழைக்கப்படும் இப்னு - சினாவின் ஆயிரமாவது ஆண்டுச் சிறப்பிதழாகும் அது. அந்த இதழில் உச்சகட்டச் செய்தியாக இடம் பெற்றிருந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாக உலகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாக - மேதைகளாக - அறிவியல் ஆய்வறிஞர்களாக இருவர் மட்டுமே உலகில் சிறந்து விளங்கினர். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். ஒருவர் இப்னு - சினா. மற்றொரு வர் அல் - புரூனி. அவ்விதழில் இடம் பெற்ற அனைத்து அறிவியல் செய்திகளிலும் நீக்கமற நிறைந்திருந்தவை இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்களேயாகும்.
அறிவியல் சொற்களாக மலர்ந்த அரபுப் பெயர்கள்
அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்திருப்பது கணிதமாகும். கணித கலைச் சொற்களில் சைஃபர், ஸீரோ (0) போன்ற பல கலைச் சொற்கள் அரபிச் சொற்களாகவே அமைந்துள்ளன. அல்கோரிதம் என்ற கணிதவியல் 'அல்-குவாரிஸ்மி' எனும் கணித மேதையின் பெயர் அடிப்படையில் அமைந்ததாகும். 'அல்ஜீப்ரா' எனும் கணிதவியல் 'அல் -ஜாபர்' என்ற அறிஞரின் பெயர் திரிபாகும். அதே போன்று திரிகோணமிதி என்ற கணிதவியல் பிரிவையும் 'ஜாமெட்ரி' எனும் கணிதவியல் பிரிவையும் உருவாக்கி வளர்த்து வளப்படுத்தியவர் நஸ்ருத்தீன் எனும் கணிதவியல் வல்லுநராவார். யூக்ளிடின் கணிதவியல் அடிப்படைக் கோட்பாடுகளை அடியொற்றி, 'வடிவ கணித'க் கோட்பாடுகளை உருவாக்கியவர் உமர்கையாம் எனும் சூஃபிக் கவிஞர் என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே.
இன்றைய வளர்ச்சிக்கு அன்றே அடிப்படை
கணிதவியல் வளர்ச்சி, எந்திரவியல் வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக அமைந்தது. இயக்கம், ஈர்ப்பாற்றல், சக்தி, ஒளி, வெற்றிடம், ஒளியின் வேகம் முதலான அனைத்து அறிவியல் நுட்பங்களை விஞ்ஞான பூர்வமாகக் கண்டறிந்து உலகுக்குணர்த்தியவர்கள் இஸ்லாமிய விஞ்ஞானிகளேயாவர் என்பதை அறிவியல் வரலாறு என்ற நூலில் சார்ட்டன் என்பவர் தெளிவாக விளக்கியுள்ளார். நீர்ச்சுழல் எந்திரக் கருவி, காற்று எந்திரக் கருவி, இருசு, நெம்புகோல், கப்பித்தான், ஊசலாடும் பெண்டுலம், நீர்க்கடிகாரம் போன்ற எந்திரவியல் நுட்பங்களையெல்லாம் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே.
உலகம் உருண்டை என்பதை கோப்பர்நிக்கசுக்கும் கலீலியோவுக்கும் முன்னதாகக் கண்டறிந்து கூறியவர் அல்-பிரூனியே ஆவார். சந்திரனின் இயக்கத்தைக் கண்டறிந்து கூறியவர் அலி இப்னு அமாஜுர் என்பவரும் அபுல் ஹஸன் என்பவருமே ஆவர். முதன் முதல் வானவியல் ஆராய்ச்சிக் கூடத்தை கி.பி. 772-ல் நிறுவிய பெருமை இப்ராஹீம் அல் - பஸாரியையே சாரும். அதே போன்று மருத்துவத் துறையின் அனைத்து ஆய்வுகளையும் தொடங்கி வைத்தவர்கள் இப்னு சினா, அல்புரூனி, இப்னு அல்ஹைத்தாம் போன்ற மருத்துவ இயல் அறிஞர்கள் ஆவர். அறிவியல் வளர்ச்சிக்கு உயிரோட்டமாக பெருமானார் வாழ்வும் வாக்கும் திருமறையின் தூண்டுதலும் அறிவியல் அடிப்படையிலான இறை வசனங்களும் இவற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட இஸ்லாமியக் கல்வி முறையும் அமைந்திருந்தன.
பள்ளி வாசல் தோறும் ஆய்வரங்கு
1984ஆம் ஆண்டு நான் எகிப்து நாட்டுக்குச் சென்றிருந்தபோது இஸ்லாமியப் பண்பாட்டை விளக்கும் ஒரு அருங்காட்சியத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பகுதியில் பள்ளிவாசல் வடிவில் ஒரு அரங்கு இருந்தது. அதனுள் சென்ற போது, தொழுகை இல்லாத நேரங்களில் அம்மசூதி மதரஸாவாகப் பயன்படுத்தும் முறையில் அமைந்திருந்தது. உஸ்தாது முன்னால் அமர்ந்திருக்க முக்கால் வட்ட வடிவில் மாணவர்கள் அமர்ந்து பாடங்கேட்கின்றனர். அதற்கு அப்பால் ஒரு பெரிய நூலகம், அதனோடு இணைந்த நிலையில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஒரு ஆய்வுக்கூடம் இருந்தது. இவ்வாறு இறை வணக்கத் தொழுகைத் தலம், நூலறிவு புகட்டும் நூல் நிலையம், ஆய்வறிவு தரும் ஆய்வுக் கூடம் அனைத்தும் அமைந்த ஒரு பெரும் வளாகமாக அமைந்திருந்தன அன்றைய பள்ளி வாசல்கள். நாயகத் திருமேனியின் காலத்திற்குப் பின்னர் அமைந்த பள்ளிவாசல்களின் நிலையை அந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல; அருகில் அமைந்திருந்த அல்-அஸ்கர் பல்கலைக் கழகமும் இன்றும் வாழும் சான்றாக அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாக உருவாக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ள இப்பல்கலைக் கழகம், தொழுகைக்கான பகுதி, மாபெரும் நூலகம், அனைத்து அறிவியல் பிரிவுகளுக்கான ஆய்வுக் கூடங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற மாபெரும் வளாகமாக - பல்கலைக் கழகமாக இன்றும் புகழுடன் விளங்குகிறது.
இப்படியே அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமான இஸ்லாமியத் தகவல்களையும் முஸ்லிம்களின் பங்களிப்பையும் விளக்கிக் கொண்டே செல்ல முடியும். என்றாலும் நேரத்தின் அருமை கருதி, அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாக்கையும் திருமறையாம் திருக்குர்ஆனில் பொதிந்துள்ள அறிவியல் செய்திகளின் சிறப்பையும் ஓரளவு கோடிட்டுக் காட்டினால் போதும் எனக் கருதுகிறேன்.
விண்ணாய்வுக்கு 'விதி' கண்டவர்
இன்றைக்கு விண்ணிலே எண்ணற்ற விந்தைகள் நிகழ்ந்து கொண்டுள்ளன. நிலவிலே மனிதன் இறங்கி தன் காலடித் தடத்தை அழுத்தமாகப் பதித்து விட்டான். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நாட்களின் பெயர்களிட்ட கிரகங்களுக்கெல்லாம் செயற்கைக் கோள்களை அனுப்பி இடையறாது ஆராய்ந்து கொண்டுள்ளான். சிலவற்றில் ஆய்வுக் கலங்களை இறக்கி, அதிலுள்ள கருவிகளை இயங்கச் செய்து எத்தனை யெத்தனையோ ஆய்வுகளைச் செய்து, செய்தியைச் சேகரித்துக் கொண்டு வருகிறான். இத்தனை விண்வெளி ஆய்வுச் செயல்களுக்கும் வழிவகை செய்தது எது? இவ்வாராய்ச்சி முயற்சிகளுக்கு ஆதார சுருதியாக அமைந்தது எது? 'ஈர்ப்பு விசை' (Power of Gravity) என்ற ஆராய்ச்சி உண்மைதான் விண்ணியல் ஆய்வுக்கே மாபெரும் உந்து சக்தியாக அமைந்தது.
இதற்கும் அடிப்படையாயமைந்தது 'இயக்கவியல்' குறித்த ஆராய்ச்சிகளாகும். இத்துறையில் அடித்தளம் அமைத்த பெருமை முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும். இன்றைய வானவியல் ஆய்வின் முத்தாய்ப்பாக அமைந்துள்ள இயங்கு விசைக் கோட்பாட்டை வகுத்த பெருமை இப்னு அல்-ஹைத்தாம் அவர்களையே சாரும். ஈர்ப்பு விசை பற்றிய இவரது கோட்பாட்டை அடியொற்றி உருவானதே நியூட்டனின் புவியீர்ப்புக் கோட்பாடு.
'மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழ வேண்டும்?' என்ற கேள்வி எழுப்பி, பூமியின் ஈர்ப்பு விசையினால்தான் இது ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து கூறியவர் நியூட்டன். அவரது ஆராய்ச்சியை அடியொற்றி விண்ணிலுள்ள கிரகங்களுக்கிடையிலான இழுப்பு விசையின் அளவுகளை ஆராய்ந்து, கண்டறிந்து கணித்தவர் ஐன்ஸ்டீன் எனும் இயற்பியல் விஞ்ஞானி.
அன்றே குர்ஆனில் 'சார்புக் கொள்கை'
ஐன்ஸ்டீன் கண்டறிந்த இழுப்பு விசையை அதாவது 'Theory of Relativity' அதாவது 'சார்புக் கொள்கை' எனக் கூறினார். இதன் அடிப்படையிலேயே இன்று செயற்கை கோள்கள் பலவற்றை விண்ணுக்கனுப்பி, விண்கோளாய்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. "அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்றுதான் என்னால் வானத்தையே ஆய முடிகிறது" என்று நியூட்டன் கூறியது போலவே, ஐன்ஸ்டீனும் நியூட்டனின் தோள்களில் நின்று தான் என்னால் வானத்தை - கோள்களிடையிலான ஈர்ப்பு விசையை - அவை ஒன்றோடொன்று சார்ந்துள்ள இழுப்பு விசையை கண்டறியவும் கணிக்கவும் முடிந்தது என்று கூறியுள்ளது நினைக்கத் தக்கதாகும்.
வானவியலின் உயிர் நாடியான ஈர்ப்பு விசை - சார்புக் கொள்கையையே திருமறையாம் திருக்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறி விளக்குகிறது.
"சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்ட வரைக்குள் நீந்திச் செல்கின்றன." (36:40)
எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
சூரியனை மையமாகக் கொண்ட சூரிய மண்டலக் கோள்கள் அனைத்தும் தங்களுக்கிடையேயும் தங்களுக்கும் சூரியனுக்கிடையேயும் உள்ள ஈர்ப்பாற்றல் விசையின் காரணமாக ஒன்றையொன்று நெருங்கவோ அல்லது ஒன்றை விட்டு ஒன்று தூரமாக விலகிச் செல்லவோ இயலாமல் ஒன்றையொன்று ஈர்த்தபடி, அவை தத்தமக்குரிய, வரையறுக்கப்பட்ட வட்ட வரைக்குள் நீந்திச் சுற்றிச் சுழன்று கொண்டுள்ளன. இதனால், சூரியன் சந்திரனை அணுக முடியாது. பூமி சூரியனையோ அல்லது சந்திரனையோ அல்லது வேறு கிரகங்கள் எதனையுமோ நெருங்கவோ அல்லது விலகிச் செல்லவோ இயலாது எனத் திருமறை தெளிவாகக் கூறி அறிவுறுத்துகிறது.
இவ்வாறு சூரியனும் மற்ற கோள்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கக்கூடிய ஈர்ப்பு விசையாகிய இழுப்பாற்றலையே - அது தொடர்பான கொள்கையையே 'சார்புக் கொள்கை' (Theory of Relativity) எனக் கூறினார் வானியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இவர் இன்று கூறிய - கண்டறிந்து விளக்கிய சார்புக் கொள்கை இறைவாக்காகப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னதாகவே திருமறையில் இடம் பெற்றுள்ளது என்ற செய்தி இன்றைய விஞ்ஞான உலகை வியப்பிலாழ்த்துவதாக உள்ளது.
இவ்வாறு சூரிய மண்டலக் கோள்கள் பூமி உட்பட அனைத்துக் கிரகங்களின் ஈர்ப்பாற்றலைத் துல்லியமாகக் கணக்கிட்டு 'சார்புக் கொள்கை' (Theory of Relativity)யை அடிப்படையாகக் கொண்டே இன்று செயற்கைக் கோள்கள் யாவும் விண்ணிலே வலம் வந்து, இன்று தங்களின் பன்முக ஆராய்ச்சியைத் திறம்படச் செய்து வருகின்றன.
சூரிய மண்டலத்திற்கு அப்பாலும்
அது மட்டுமா? நாம் இதுவரை அறிந்ததெல்லாம் சூரிய மண்டலம் ஒன்றைப் பற்றி மட்டுமே. சூரிய மண்டலத்தைத் தவிர்த்து வேறு எந்த மண்டலம் பற்றியும் மனித குலத்துக்கு அறவே தெரியாது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், வான ஆராய்ச்சிக்காக அமெரிக்கா பயோனீர் என்ற விண்கோளை அனுப்பியது. அது அற்புதமான முறையில் சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கோள்களையும் அவற்றின் தன்மைகளையும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக விரிவாக ஆராய்ந்து பல அரிய தகவல்களைத் தந்துதவியுள்ளது. இறுதியாக அது சூரிய மண்டலத்தைக் கடந்து, அதற்கு அப்பாலும் தன் ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தது. சூரிய மண்டலத்துக்கு அப்பால் அது கண்டறிந்த தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அத்தகவல்களை அமெரிக்காவிலுள்ள வானவியல் விஞ்ஞானிகள் கண்டு வாயடைத்துப் போனார்கள். காரணம், வானத்திலுள்ள சூரிய மண்டலம் போலவே, சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் அதே போன்று பல மண்டலங்கள் இருப்பதாகத் தகவல் அனுப்பியதுதான்.
இதைக் கண்டு அமெரிக்க வானவியல் ஆராய்ச்சியாளர்களான விஞ்ஞானிகள் வேண்டுமானால் வியந்து போய், ஆச்சரியத்தால் வாயடைத்துப் போயிருக்கலாம். ஆனால், திருக்குர்ஆனைப் படித்தறிந்த ஒரு முஸ்லிம் வியப்படையவே மாட்டான். காரணம், சூரிய மண்டலத்தைப் போல் பல மண்டலங்கள், எண்ணிக்கை அளவில் ஏழு வானங்கள் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுதான்.
"அவன்தான் (பூமியையும் ) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி (யபோது) அவைகளை ஏழு வானங்களாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலுள்ள) யாவற்றையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." (2:29) என்றும்,
"(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன;' (23:17)
"ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? அவனே அவைகளில் சந்திரனை (பிரதிபலிக்கும்) வெளிச்சமாகவும் சூரியனை ஒரு (சுய வெளிச்ச முண்டாக்கிக் கொள்ளும்) மணியாகவும் (சிராஜ்) அமைத்தான்" (71:19,16).
"உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்." (78:12) என்றெல்லாம் 24 இடங்களில் ஏழு வானம் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. இதிலும்கூட 'ஏழு' என்பது 'பல' என்ற பொருளிலேயே அமைந்துள்ளதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு, திருக்குர்ஆனில் கூறப்படும் செய்திகள், அறிவியல் தகவல்களையே இன்னும் ஆய்வுலகால் முழுமையாக ஆராய்ந்தறியப்படவில்லை, அதற்கான காலக்கனிவோ ஆராய்ச்சி முதிர்வோ இன்னும் ஏற்படவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.
உலகம் பிறந்தது எப்படி?
இன்னும் ஒரு விந்தைமிருந்த விஞ்ஞான உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த வான மண்டலத்தில் சூரியன், சந்திரன், பூமி முதலாகப் பல்வேறு நட்சத்திரங்களும் கிரகங்கள் என்றழைக்கப்படும் கோள்களுமாக நிரம்பியுள்ளன. சூரியன் முதலாகவுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் சுய ஒளி கொண்டவை; பூமி, சந்திரன் முதலான கோள்கள் சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பவைகளாகும்.
ஆனால், இவ்வான மண்டல நட்சத்திரங்களும் கோள்களும் எவ்வாறு உருவாயின என்பதை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக ஆய்வு செய்து, அதற்கான மூல காரணங்களைத் தெள்ளத் தெளிவாகக் கண்டறிந்து உலகுக்குப் புலப்படுத்தியிருக்கிறார்கள்.
வானம் முழுவதிலும் ஹைட்ரஜன் (Hydrogen) எனும் வாயுவும், ஹீலியம் (Helium) எனும் வாயும் கலந்து பரவியிருந்தன. இவ்வாறு பன்னெடுங்காலமாக புகை மண்டலமாகப் பரவியிருந்த இவ்விரு வாயுக்களும் இணைந்து இறுக்கமடைந்து வந்தன. இறுக்கம் அடைய அடைய அவற்றின் அடர்த்தி அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கு மேல் இறுக்கமடைய இயலாது என்ற நிலை ஏற்பட்டபோது, அப்புகை மண்டலம் வெடித்துச் சிதறியது. இதையே பெரும் வெடிப்பு (Big Bang) என்றழைக்கப்படுகிறது. எப்போது வானத்தில் புகை மண்டலம் உருவாகியது என்பதை துல்லியமாகக் கணித்துக்கூற விஞ்ஞானிகளால் இயலாவிட்டாலும் 'பெரு வெடிப்பு' நிகழ்ந்த காலத்தை ஓரளவு அனுமானித்து, நட்சத்திர மண்டலம் உருவானது ஆயிரம் கோடி ஆண்டுகட்கு முன்பு இருக்கலாம் என்று அனுமானித்திருக்கிறார்கள்.
நட்சத்திரங்களைப் போன்ற ஒரு நட்சத்திரமே சூரியன். ஒரு கட்டத்தில் சூரிய நட்சத்திரம் வெடித்துச் சிதறியது. அச்சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பே பூமி. பின், பூமியிலிருந்து பிரிந்து சென்றதே சந்திரன். மற்ற கிரகங்கள் எனப்படும் கோள்கள் அனைத்தும் சூரிய தெறிப்பின் விளைவாக உருவானவைகளேயாகும். இவ்வாறு சூரிய வெடிப்பு நிகழ்ந்து 450 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
சூரியனிலிருந்து பூமி தெறித்து விழுந்ததனாலேயே இன்னும் பூமிக்குள் வெப்பம் கனன்று கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எரிமலைகளும், நில நடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படுவது தவிர்க்க இயலாததாகவும் இருக்கின்றது.
இத்தகைய பெரு வெடிப்புக் கொள்கையை விவரிக்கும் வகையில் திருமறையில்,
"ஆரம்பத்தில் எல்லாமே ஒரே புகை மண்டலமாக இருந்து, அதிலிருந்துதான் பல பாகங்களாக பல கால கட்டங்களில் பிரிந்து சென்றிருக்கின்றன" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதானது, இன்றைய விஞ்ஞானிகளை மேலும் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.
குர்ஆனில் கருத்தரிப்பு
இவையெல்லாவற்றையும்விட மிக அற்புதமான அறிவியல் செய்தியொன்று திருக்குர்ஆன் திருமறையில் காணக்கிடைக்கிறது. இச்செய்தி, மருத்துவ உலகையே மலைக்கச் செய்துள்ளது. இச்செய்தி டாக்டர் மாரிஸ் புகைல் போன்ற மருத்துவத் துறை பேரறிவாளர்களை - விஞ்ஞானிகளை இஸ்லாத்தின்பால் இணையச் செய்துள்ளது. அதுதான் கருத்தரிப்பு எப்படி நடைபெறுகிறது என்ற நுட்பமான செய்தி. திருமறையில்,
"அவனே, ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைத்தான்." (16:4)
"அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா?" (75:37)
"(பின்னர் ஆண்பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு, நிச்சயமாக நாம்தான் மனிதனைச் படைத்தோம்." (76:2)
என்ற இறை வசனங்கள் ஒரு துளி இந்திரியத் துளியைக் கொண்டு கருவறையில் அழகிய திருவுருவாக மனிதக் கரு உருவாகியதை அழகாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மனிதக்கரு எப்படி உருவாகிறது என்பது தெளிவாகத் தெரியாமலேயே இருந்தது. அதுவரை பெண் வயிற்றில் இயல்பாக உருவாகியிருக்கும் கரு வளர்ந்து குழந்தையாகப் பிறக்கிறது என்றே உலகம் கருதி வந்தது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் வில்லியம் ஹார்வி எனும் உயிரியல் விஞ்ஞானி தன் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் ஆணின் இந்திரியத் துளியிலுள்ள ஒரு உயிரணு பெண்ணின் யோனிக் குழாயிலுள்ள உயிரணு முட்டையோடு இணைந்து அவளது கருவறைக்குள் சென்று, பத்து மாதங்கள் படிப்படியாக வளர்ந்து, பத்தாவது மாதம் குழந்தையாகப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து கூறினார்.
ஆனால், எந்தப் புதிய ஆராய்ச்சி முடிவைக் கண்டறிந்து, பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் ஹார்வி கூறினாரோ, அதே தகவல் தெளிவாகவும் திட்பமாகவும் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளதெனில் இஸ்லாம் எவ்வளவு உயர்ந்த - சிறந்த அறிவியல் மார்க்கம் என்பதை நாம் உய்த்துணரலாம்.
அதிலும், இக்கரு வளர்ச்சியைப் பற்றிய செய்திகளெல்லாம் 'சதைக் கட்டி' (அலக்) என்ற தலைப்பிலான இறை வசனப் பகுதியிலேயே விவரிக்கப்படுகிறது. இச்சதைக் கட்டியைப் பற்றிய தெளிவை மேலும் அறியும் பொருட்டு டாக்டராக இருக்கும் என் மகனிடத்திலே விவரம் கேட்டபோது,
'கருவறையைச் சென்றடையும் கருவணுவோடு கூடிய முட்டை கருப்பைச் சுவற்றிலே நன்கு ஒட்டிக் கொள்ளும். அப்பசை அவ்வளவு வலுவானது. நாற்பது நாட்களில் கருப்பையில் வளரும் முட்டையின் வடிவமானது சிறிதளவு தசையை வாயில் போட்டு நன்கு மென்று துப்பினால் எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும். அப்போது அது ஒரு சதைக் கட்டி போன்றே தோற்றமளிக்கும். இவ்வுருவைப் பெற்ற பிறகே, அதிலிருந்து நரம்புகளும் எலும்புகளும் உருவாக முடியும்" என்று கூறியபோது, சதைக் கட்டி என்ற தலைப்பிலேயே இதை திருமறை விவரிப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதை நாம் உய்த்துணரலாம்.
இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் அறிந்து விஞ்ஞான உலகம் வியந்து கொண்டிருக்கிறது. ஏதேச்சையாக கருவளர் செயற்பாடுகளைத் திருக்குர்ஆன் விவரிக்கும் பாங்கை அறிய நேர்ந்த மருத்துவத் துறை வல்லுநரும் ஆய்வாளருமான டாக்டர் மாரிஸ் புகைல் அரபி மொழி கற்று, திருமறையை மூல வடிவில் படித்தபோது, இச்செய்திகளின் நுட்பங்கள் அவரை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கவே செய்தன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞான உலகம் கண்டறிந்த விஞ்ஞான உண்மை ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருமறையில் இடம் பெற்றிருக்கிறதென்றால், நிச்சயமாக இஃது மனிதனால் அனுமானிக்கப்பட்டு சொல்லப்பட்ட செய்தியாக இருக்கவே இயலாது. இறைவனால்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும்; சொல்லியிருக்க முடியும். ஆகவே, இது இறைவேதம் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனக் கருதி, இஸ்லாத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஈமான்தாரியாக - முஸ்லிமாக ஆகி, இஸ்லாமிய அழைப்புப் பணிக்குத் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
திருமறை தரும் பிற உயிரினத் தோற்ற வரலாறு
மனிதப் பிறப்பின் ரகசியம் மட்டுமா? மனிதனைத் தவிர்த்துள்ள அனைத்து உயிர் வர்க்கங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் உண்மைகளையும் திருக்குர்ஆன் தெளிவாக்கத் தவறவில்லை.
இன்று உயிர் வர்க்க தோற்ற வரலாற்றை ஆராய முற்படுவோர் டார்வின் தியரியை - டார்வினின் கொள்கைகளை துணைக்கக்கழைக்கத் தவறுவதே இல்லை.
டார்வினின் உயிரினத் தோற்ற வரலாறு பற்றிய கொள்கைகள் மிகச் சிறந்த கொள்கைகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், அக்கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள், சரியாகப் புரிந்து கொண்டார்களா என்பது தான் ஐயப்பாட்டிற்குரியது.
உயிரினத் தோற்ற வரலாற்றை ஆராய்ந்த டார்வின் 'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்' எனப் பலரும் கூறுவதுண்டு. இஃது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, சார்லஸ் டார்வினைச் சரியாக அறியாதவர்களால் கூறப்படும் கூற்றுமாகும். குரங்கிலிருந்து மனிதன் தோற்றம் பெற்றான் என்று ஒரு இடத்தில் கூட டார்வின் சொல்லியதாகத் தெரியவில்லை. அவர் கூறியதெல்லாம் மனிதனுக்கும் குரங்கிற்கும் நெருங்கிய அம்சம் உண்டு என்பதுதான். மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவனாக இருந்தால், உருமாறியவனாக இருந்திருந்தால் அந்த மூல வடிவிலான உயிர் - குரங்கு இந்நேரம் அழிந்திருக்க வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று உருமாறியிருந்தால் முன்னது அழிவதன் மூலமே பின்னது நிலைபெற இயலும். இது இயற்கையின் நியதி. ஆனால், மனிதனும் முழு உருவில் தெளிவாக இருக்கிறான். குரங்கும் முழு வடிவில் திரிந்து கொண்டுள்ளது. எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்திருக்க முடியும். இதிலிருந்தே இக்கொள்கை தவறாகப் பரப்பப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகவில்லையா?
நீரிலிருந்தே உயிர் வர்க்கங்கள்
மனிதனைத் தவிர, மற்ற உயிர் வர்க்கங்கள் அனைத்தும் நீரிலிருந்து தோன்றி வளர்ந்தன என்பதுதான் சார்லஸ் டார்வின் கண்டறிந்து கூறிய உயிரினத் தோற்ற வரலாறு.
தண்ணீரில் 'அமீபா' எனும் ஓரணு உயிரணுவிலிருந்தே எல்லா விதமான உயிரினங்களும் தோற்றம் பெற்றன. டார்வின் கண்டறிந்து கூறிய இதே உண்மையைத் தான் இறை வேதமாகிய திருக்குர்ஆனும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
"உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து படைத்தோம்." (21:30)
"உயிர்ப் பிராணிகள் ஒவ்வொன்றையும் அல்லாஹ் நீரைக் கொண்டே படைத்திருக்கிறான்." (24:45)
எனவே, நாம் பெருமானாருடைய வாழ்வையும் வாக்கையும் அவற்றின் அடிப்படையில் இறை நெறியாகிய இஸ்லாத்தையும் திறம்பட அறிந்து உணர்ந்து தெளிய வேண்டும் என்றால் உளவியலின் துணை கொண்டு ஆன்மீக, அறிவியல் ஒளிகளைப் பாய்ச்சி ஆராய வேண்டும். அப்போதுதான் இறைவாக்கின் உட்கருத்துகள் தெளிவாகும். அப்போதுதான் எல்லா உண்மைகளும் வெளிச்சமாகும்.
'அக வாழ்வைப் பொறுத்தவரை ஆன்மீகத்தைப் பின்பற்றி உன் வாழ்வை வளமாக்கிக் கொள். புற வாழ்வைப் பொறுத்தவரை அறிவியலைப் பயன்படுத்தி, அறிவியல் மூலமாக உன் புற வாழ்வைச் செழிமைப்படுத்திக் கொள்' என்பது பெருமானாரின் பெருவாழ்வும் திருமறையாம் திருக்குர்ஆனும் நமக்குப் புகட்டுகின்ற வாழ்வியல் உண்மைகள்.
இரு கண்களாக ஆன்மீகமும் அறிவியலும்
இந்த வகையில் ஆன்மீகமும் அறிவியலும் வேறுபட்டவைகளோ ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளோ அல்ல. இரண்டும் இரு கண்களைப் போன்றவை. ஆன்மீகம் ஒரு கண்; அறிவியல் இன்னொரு கண். இந்த இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் போதுதான், நம் பார்வை நேராக ஒரு பொருளில் போய் நிற்கும். அப்பொருளின் முழுமையான, தெளிவான தோற்றம் நம் கண்களுக்கு தெளிவாகத் தெரியும். ஆகவே, இஸ்லாத்தை சரியான கோணத்தில் புரிந்து கொள்வதற்கு ஆன்மீகமும் அறிவியலும் மிக அடிப்படையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய நெறி என்பது ஆன்மீக அடிப்படையில் உருவாக்கப்பட்ட, அறிவியல் போக்கிலான ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகம் இன்றைக்குத் தெளிவாகப் புரிந்து கொண்டு வருகிறது.
இதையே வேறு வகையில் கூறுவதென்றால் 'அறிவியல் இல்லாத ஆன்மீகம் குருடானது. ஆன்மீகம் இல்லாத அறிவியல் முடமானது' என்று கூறலாம்.
ஆலீம்களும் அறிவியலாளர்களும் ஒன்றிணைய
இத்தகைய தெளிவை உருவாக்க இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமா பெருமக்களும் அறிவியல் உணர்வும் அறிவும் நிரம்பப் பெற்ற அறிவியல் ஆய்வறிஞர்களும் இணைந்து பணியாற்றும் இனிய சூழலை உருவாக்க முன் வர வேண்டும்.
அப்போதுதான் இஸ்லாமிய நெறியின்பால் தங்கள் பார்வையைச் செலுத்த முனையும் பிற சகோதர சமயங்களைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தின் அதி உன்னதக் கருத்துகளை அறிந்துணர்ந்து தெளிய இயலும். இவ்வகையில் பெருமானாரின் பெரு வாழ்வையும் இறைமறையின் அருங்கருத்துகளையும் அறிய நேரும்போது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சொல்லப்படும் அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகட்கு முன்பே இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனில் ஆதாரபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளதே என்று வியப்படைவதோடு அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பும் மற்றவர்கட்கு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அந்த உந்துதலை ஏற்படுத்துவதற்கு இம்மாதிரி மீலாது விழாக்கள் பெரும் வாய்ப்பாயமைகின்றன. நாமும் நம் இஸ்லாமிய அறிவைப் புதுப்பித்துக் கொள்வதோடு பிறரும் சரியான கோணத்தில் இஸ்லாத்தை அறிய அரியதோர் வாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற மனநிறைவும் நமக்கு ஏற்படவே செய்யும்.
- (5.7.98 அன்று துபாய் ஈமான் சங்கச் சார்பில் துபாய் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற மீலாது விழா சொற்பொழிவுச் சுருக்கம்.)