இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா/எங்கே போகிறோம்?



எங்கே போகிறோம்?

அபுதாபி முஸப்பா பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஈ.டி.ஏ. மெல்கோ கேம்ப் வளாகத்தில் நடைபெறுகின்ற மீலாது விழாவிலே கலந்த கொள்ளப் பேராவலோடு வந்தேன். ஆனால், விழா தொடங்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு எங்கும் இருள் கவிந்துவிட்டது. இருளிலே நாமெல்லாம் சிறிது நேரம் இருக்க நேரிட்டது. எனினும், சிறிது நேரத்தில் மின்தடை சரி செய்யப்பட்டு எங்கும் ஒளி பரவ இவ்விழா இனிது தொடங்கியது. இருள் கவிந்திருந்த நேரத்தில் உன் சிந்தனை, உணர்வு அனைத்தும் பெருமானார் (சல்) பிறந்து வளர்ந்து வந்த அந்த நாட்களை நோக்கிச் சென்றது. ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னர் அறியாமை இருள் கவிந்து, மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மக்களை இஸ்லாம் எனும் இறைநெறி தீபம் ஏந்தி, அறிவு வெளிச்சத்துக்கு அரபு மக்களை அழைத்து வந்த அண்ணல் நபிகள் நாதர் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை இன்று பெரு மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டுள்ளோம்.

இருளகற்றிய ஏந்தல்

அனல் பரக்கும் இந்தப் பாலைப் பகுதியில் மின் விசிறி ஏதுமில்லாமல் இருளில் இருந்த, இந்தக் கொஞ்ச நேரத்தில் நாமெல்லாம் வெப்ப தகிப்பினால் துடித்துப் போய்விட்டோம். அந்தச் சிறிது நேரத்தில் என் சிந்தனை அண்ணலார் இஸ்லாமிய தீபத்தைக் கையிலேந்திய அந்த நாட்களுக்குச் சென்றது. சிறிது நேர வெக்கையை அனல் தகிப்பைத் தாங்க முடியாது தவிக்கிறோமே இஸ்லாமியச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க, தகிக்கும் வெயிலைத் தாங்கிக் கொண்டு, ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே பிரச்சாரம் செய்தபோது பெருமானார் பட்ட வேதனை என் கண் முன்னே படமாக விரிந்தது. பொன்னைவிட மேம்பட்ட பொருளாகத் தண்ணீரைக் கருதிய மண்ணில், அனலைத் தவிர வேறு எந்த வசதியும் இல்லாத பாலைப்பகுதியில், இந்த இறைநெறியை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பட்ட பாடுகள், அடைந்த வேதனைகள் இவற்றையெல்லாம் ஒரு கணம் என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த அரைமணி நேர அசௌகரியத்தையே நம்மால் தாங்க முடியவில்லையே, அண்ணலார் தம் வாழ்நாள் முழுமையும் எப்படியெல்லாம் துன்பத்தைத் தாங்கியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே உள்ளம் நடுங்குகிறது.

பூரிப்பூட்டும் பொது விழா

பெருமானார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இங்கே பேரார்வப் பெருக்கோடு வந்து குழுமியிருக்கும் நீங்களெல்லாம் கடும் உழைப்பாளிகள். நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுக்கச் செல்லாமல் அண்ணலாரின் வாழ்வையும் வாக்கையும் செவிமடுக்க இங்கே வந்து, இப் புழுக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அறிவு வேட்கையைப் பாராட்டுகிறேன். தீனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறேன்.

இந்த விழாவில் இன்னொரு சிறப்பையும் காண்கிறேன். கடும் உழைப்பாளிகள் நிரம்பிய இம் மீலாது விழாவுக்கு முனைவர் துரை நடராசன் தலைமை தாங்கி நடத்துவதைக் காண பெருமையாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துச் சகோதர சமயத்தவர்களும் குழுமியிருக்கிறீர்கள். நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித குலம் முழுமைக்காகவும் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர். அவரது வாழ்வும் வாக்கும் மனித குலம் முழுமைக்கும் சொந்தமானது. எனவே, மீலாது விழா எம் முறையில் - அனைத்துச் சமயத்தவர்களும் பங்கேற்கும் பொது விழாவாகக் கொண்டாடப்பட வேண்டுமென விரும்புகிறேனோ அம் முறையில் அமைந்த சர்வ சமயத்தவர்கள் கொண்டாடும் பெரு விழாவாக இம் மீலாது விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உழைப்பைப் போற்றிய உத்தமர்

எல்லாவற்றையும்விட வேறொரு சிறப்பும் இம் மீலாது விழாவுக்கு உண்டு. பெருமானார் (சல்) அவர்கள் பெரிதும் மதித்த விரும்பிய உழைப்பாளிகளால் கொண்டாடப்படும் விழா என்பதுதான் அது. பெருமானாரைப்போல் உழைப்பை மதித்தவர்களை, உழைப்பாளிகளைப் போற்றியவர்களை உலக வரலாற்றிலேயே காண்பது அரிது.

சாதாரணமாக அண்ணலார் அவர்கள் பள்ளிவாசலிலே அமர்ந்திருக்கும்போது, பள்ளிக்கு வரும் தொழுகையாளிகள் பெருமானார் (சல்) அவர்களின் கரத்தைப் பற்றி முத்தமிட்டுச் செல்வது வழக்கம். அண்ணலார் புன்முறுவலோடு அம் முத்தங்களை ஏற்றுக் கொள்வார்களே தவிர யார் கரத்திலும் பதில் முத்தமிடுவது வழக்கமில்லை.

ஒரு சமயம் பள்ளிக்குத் தொழ வந்த நாட்டுப்புற அரபி ஒருவர் மற்றவர்களைப் போல் பெருமானாரின் கையை முத்தமிடக் குனிந்தார். பெருமானார் (சல்) அவர்களின் கையைப் பற்றி அவர் முத்தமிடுவதற்கு முன்னதாக அந்நாட்டுப்புற அரபியின் கையைப் பற்றியவராக மூன்று முறை முத்தமிட்டார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். அந்நாட்டுப்புற அரபியும் அண்ணலார் கையில் முத்தமிட்டவராக அங்கிருந்து அகன்றார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நபித் தோழர்கட்கு அண்ணலார் நாட்டுப்புற அரபி கைக்கு முத்தமிட்ட செய்தி, புதியதாகவும் புதுமையாகவும் இருந்தது.

"நாங்களெல்லாம் முத்தமிட எத்தனையோ முறை உங்கள் கரத்தை பற்றியிருக்கிறோம். அப்போதெல்லாம் நீங்கள் சும்மா இருந்து விடுவீர்கள் நாங்கள் தான் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த நாட்டுப்புற அரபி உங்கள் கையைப் பற்றியவுடன் அவர் கையில் மூன்று முறை மாறி மாறி மகிழ்வு பொங்க முத்தமிட்டீர்களே அதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?” என்று கேட்டார்கள்.

அப்போது அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள் :

“நீங்களெல்லாம் என் கையைப் பற்றுவீர்கள். அப்போது உங்கள் உள்ளங்கை பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். அதைக் கொண்டு நீங்களெல்லாம் உழைக்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வேன். ஆனால், அந்த நாட்டுப்புற அரபி என் கையைப் பற்றியபோது முரடாக இருந்தது. அவரது உள்ளங்கையைத் தடவிப் பார்த்தேன். கரடு முரடாக காய்த்து இருந்தது. எந்த அளவுக்கு அவர் உழைத்திருந்தால் அவருடைய கை இந்த அளவுக்குக் காப்புக் காய்த்து முரடாகப்போயிருக்க முடியும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தபோது, உழைத்த கரத்தை முத்தமிடுவது, இறைவனுக்கு நான் செலுத்துகின்ற நன்றியாக, இறைவனுடைய புகழைப் பாடுவதாக எண்ணி அவர் கையை நான் முத்தமிட்டேன்” என்று கூறினார்கள் என்றால் உழைப்புக்குப் பெருமானார் அவர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்படிப்பட்டவருடைய பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் உரிமையும் தகுதியும் மற்றவர்களைவிட உங்களுக்கே அதிகம் என்பதில் ஐயமில்லை.

உழைப்பாளரின் 'சொர்க்க' முன்னுரிமை

இச் சந்தர்ப்பத்தில் பெருமானாருடைய பெருவாழ்வில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுவது சாலப்பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒருவர் பள்ளிவாசலில் உண்ணும் நேரம், உறங்கும் நேரம் போக மீதமுள்ள நேரமெல்லாம் தொழுது கொண்டேயிருப்பார். ஆனால், அவருடைய சகோதரர் வக்து நேரத்திற்கு - தொழுகை நேரத்திற்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருவார். பர்ளு தொழுகையை மட்டும் தொழுது விட்டு அவசர அவசரமாக வெளியேறி விடுவார். இது நீண்ட நாட்களாகப் பள்ளி வாசலில் நடந்துவரும் நிகழ்ச்சி. இதை ஒரு சஹாபி - நபித் தோழர் கவனித்துக் கொண்டே வந்தார்.

ஒரு நாள் அவர் அண்ணல் நபி (சல்) அவர்களிடத்தில் இதைப் பற்றிய ஐயத்தைக் கேள்வி வடிவில் கேட்டார்: “அல்லாஹ்வின் இறைத்துதர் அவர்களே! ஒருவர் பள்ளி வந்து தொழுது கொண்டேயிருக்கிறார். உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வெளியே செல்கிறார். மற்ற நேரமெல்லாம் இறை வணக்கம்தான். மற்றொருவர் அவருடைய சகோதரர். அவர் வக்து நேரத்திற்கு மட்டும் பள்ளிக்குத் தொழ வருகிறார். வேகவேகமாகத் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். இந்த இருவரில் யார் சொர்க்கத்திற்கு முதலாவதாகச் செல்பவர்?" என்று வினாவெழுப்புகிறார்.

அப்போது அண்ணலார் அவர்கள் சஹாபியை நோக்கி! “வக்து நேரத்திற்கு மட்டும் தொழுதுவிட்டு செல்கிறாரே அவர் என்ன செய்கிறார்?” என்று கேட்டார். "மரம் வெட்டிப் பிழைக்கிறார். மரம் வெட்டும் வேலைக்கு இடையேதான் வக்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இவர் வருமானத்தில்தான் இவர் சகோதரர் வாழ்கிறார்” என்று பதிலளித்தார் சஹாபி. இதைக் கேட்ட அண்ணலார் அவர்கள் “அவசர அவசரமாக வந்து தொழுகையை அதிலும் பர்ளுத் தொழுகையை மட்டும் நிறைவேற்றிச் செல்கிறாரே அவர்தான் சொர்க்கத்திற்கு முதலில் செல்வார். எந்நேரமும் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருப்பவர் இவருக்குப் பின்னால்தான் சொர்க்கம் புகுவார்" எனப் பதிலளித்தார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

இதைக் கேட்ட சஹாபி மேலும் குழப்பமடைந்தவராகப் பெருமானாரை நோக்கி “எப்போதும் தொழுது கொண்டிருப்பவரை விட வக்து தொழுகையை மட்டும் அவசர அவசரமாகத் தொழுதுவிட்டுச் செல்பவருக்குச் சொர்க்கத்தில் இவ்வளவு பெரிய சிறப்புக் கிடைக்க முடியுமா?” எனக் கேட்கிறார். கேள்வி கேட்டவரின் உட்கிடக்கையைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மிகப் பொறுமையாகவும் அதே சமயத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும் விளக்கிக் கூற முனைந்தார் :

“ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் விதித்த கடமைகள் உண்டு. அக் கடமைகளின் நிறைவேற்றத்திற்கிடையே தான் அவன் இறை வணக்கத்தையும் நிறைவேற்றக் கூடியவனாக இருக்கின்றான். இறை வணக்கத்திற்காக மட்டும் நேரத்தைச் செலவு செய்து கடமையை மறந்து விட்டால், அவன் உலகியல் வாழ்வையும் குடும்ப வாழ்வில் இறைவன் விதித்த கடமைகளையும் நிறைவேற்றத் தவறியவனாகி விடுகிறான். ஆகவே, இறைவன் தனக்கென விதித்த கடமைகளைச் செய்து கொண்டு, அதற்கிடையே தொழுகைக் கடமைகளை நிறைவேற்றி வருவதே சிறப்பு. மரம் வெட்டும் வேலைகளுக்கிடையே தொழுகைக் கடமையையும் நிறைவேற்றியவராக, மரம் வெட்டும் வேலையால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தின் பசித் துன்பத்தைப் போக்கி, தன் இல்லறக் கடமைகளை இனிதே நிறைவேற்றும் அந்த மரம் வெட்டிக் குத்தான் சொர்க்கம் செல்லும் இருவரில் முதலாவதாக சுவர்க்கத்தில் புகும் பேறு கிட்டும்” என்று கூறியதன் மூலம் உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகிறார் வள்ளல் நபி (சல்) அவர்கள். அண்ணலார் உழைப்புக்குத் தரும் மரியாதை உழைக்கும் உழைப்பாளி மக்களுக்கு உத்வேக மூட்டக் கூடியதாக உள்ளது.

இந் நேரத்தில் ஒரு இலக்கியச் செய்தி என் நினைவுக்கு வருகிறது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருங் கடலுள் 'ஆயிரம் மசலா' என்றொரு சிறந்த இலக்கியம் உண்டு. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே முதலாவது இலக்கியம் இது என்ற பெருமையும் அதற்கு உண்டு. வண்ணக் களஞ்சியப் புலவர் என்று அழைக்கப்படும் சையது இபுறாஹீம் புலவரால் இயற்றப்பட்டதாகும்.

விந்தைக் கேள்வியும் விவேக பதிலும்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் முனைப்போடு ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், அக்காலத்தில் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்ட யூத சமயத்தைச் சார்ந்த இப்னு சலாம் என்பவர் பெருமானார் (சல்) அவர்களை அணுகி உங்களை இறுதி இறைத்தூதர் என்கிறீர்களே! உங்கள் மூலம் இறைச்செய்தி வந்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்களே! நான் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு உரிய விடையளித்தால், தான் இஸ்லாமிய நெறியை ஏற்பதாகக் கூறுகிறார். இதற்குச் சம்மதித்த பெருமானாரை நோக்கி ஆயிரம் கேள்விகளைத் தொடுக்கிறார். அவற்றில் ஒரு கேள்வி,

‘மண் தரைக்குள் ஏறாது

வானிலிருந்து ஓடாது

அந்தரத்தில் ஓராறுண்டது
எமக்குக் கூறுமென
சுந்தரத்தோள் இபுனு சலாம்
சுருதி வழியே கேட்க,’

என்று கேட்டதாக பாடல் வருகிறது.

மண்ணிலிருந்தும் ஓடவில்லை. விண்ணிலிருந்தும் விழவில்லை. ஆனால், அந்தரத்தில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆறு என்ன ஆறு? என்று கேள்விக் கணை தொடுக்கிறார். அதற்கு மறுமொழியாக, 'அந்தரத்தில் ஓடுகின்ற அந்த ஆறு, உழைக்கும் மக்களின் முதுகிலிருந்து சரம் சரமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறதே வியர்வை நீர், அது தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆறு' எனப் பதிலளித்ததன் மூலம் உழைப்பின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்தினார் என்றால் இதற்கு மேல் உழைப்பின் பெருமையை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.

மீலாது விழாவும் கய விமர்சனமும்

பெருமானாரின் பிறந்த நாள் விழாவிலே அவரை, அவரது பணிகளை வெறுமனே புகழ்ந்துரைத்து விட்டுப் போவதில் எந்தப் பயனுமில்லை என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய மீலாது விழாக்கள் உண்மையிலேயே மிகு பயன் விளைவிப்பதாய மைய வேண்டு மெனில், வள்ளல் நபி (சல்) தம் வாழ்வில் வெளிப்படுத்திய உணர்வுகள், சிந்தனை வழிப்பட்ட கருத்துகள், அக் கருத்துகளினடிப்படையிலான செயல்கள், வாழ்ந்து காட்டிய வழிமுறைகட்கு ஏற்ப, இறை மறையாம் திருமறையிலே சொல்லப்பட்ட நெறிமுறைகளுக்கு ஒப்ப நாம் எந்த அளவு வாழ்ந்திருக்கிறோம்; அல்லது வாழ இயலாமல் போயிருக்கிறோம் அல்லது ஆங்காங்கே ஏற்பட்ட சறுக்கல் கள், வழுக்கல்கள் எவை என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் ஆய்வு விழாவாகவும் மீலாது விழா அமைய வேண்டும் என்பதுதான் என் வேணவா. இத்தகைய அறிவுப் பூர்வமான சுய விமர்சனங்கள் நிச்சயம் நம் வளர்ச்சிக்கு வழியாயமையும் என்பதில் ஐயமில்லை.

அண்ணலார் அதிகமதிகம் கேட்ட துஆ

பெருமானாரின் வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப்பார்க்கும்போது அவர்கள் தம் வாழ்நாளில் மிக அதிகமதிகமாகக் கேட்ட துஆ 'இறைவா என் அறிவைப் பெருக்குவாயாக' என்பதுதான். இதைப் போலவே இபுறாஹீம் (அலை) அவர்களும் தம் வாழ்வில் அதிகமதிகம் கேட்ட துஆ 'இறைவா! என் அறிவைப் பெருக்குவாயாக!' என்பதுதான். திருமறையும் பெருமானார் (சல்) அவர்களும் அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் வலியுறுத்தியுள்ளார்களோ அதில் இன்னும் பின்னடைவும், மிகமிகப் பின்னடைவாக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை தருவதாக உள்ளது. அதுதான் கல்வி வளர்ச்சி.

அறிவைப் பெறுவதற்கு அடித்தளமாக அமைவது கல்வியாகும். கல்வியின் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஏனோ அதை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு மற்ற காரியங்களையெல்லாம் சிறப்பாகவே செய்து வருகிறோம்.

அறியாதவற்றை அறிய

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை வஹீயாகப் பெறுகிறார்கள். அவர்கட்கு இறைவன் முதல் செய்தியாக அறிவித்தது எது என்று உங்களிலே பல பேருக்கு நன்றாகத் தெரியும். அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான கல்வியைப்பெறத் துணைக் கருவியான எழுதுகோலைக் கொண்டு இறைவன் கல்வி கற்பித்த பாங்கை அறிவிப்பதே அந்த முதல் வஹீ. அறியாதவற்றை யெல்லாம் அறியச் செய்வது கல்வி. திருமறையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பே 'அல் கலம்' (எழுதுகோல்) என்பதாகும்.

நான் இங்குக் குறிப்பிடுவது உலகியல் கல்வி மட்டுமல்ல. முறையாக மார்க்கக் கல்வி பெறுவதிலும்கூட நாம் பின் தங்கியே இருக்கிறோம் என்பதை என்னால் எடுத்துக் கூறாமல் இருக்க முடியவில்லை.

சமுதாய முன்னேற்ற அளவுகோல்

சமுதாய முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கருதப்படும் கல்வியறிவு பெறுவதில் நாம் தாழ்ந்திருப்பதால் நம் சமுதாய மக்களின் முன்னேற்றம் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். போதிய கல்வியறிவு பெறாததால் தேக்க நிலை அடைந்திருக்கிறோம்.

அண்மையில் நான் கெய்ரோவிலிருந்து துபாய் வருகின்றபோது நான் வந்த விமானம் தோஹா விமான தளத்தில் இறங்கியது. நீண்ட நேரம் நின்ற விமானத்திலிருந்து தோஹா பயணிகள் இறங்க துபாய் பயணிகள் விமானத்திலேயே அமர்ந்திருந்தோம். அப்போது விமானத்தைச் சுத்தப்படுத்த சில இளைஞர்கள் உரிய சாதனங்களுடன் வந்தனர். அவர்கள் தமிழில் பேசிக் கொண்டதால் 'நீங்களெல்லாம் எந்த ஊர்?’ என்று கேட்டேன். உடனே அந்த இளைஞர்கள் ஏதோ நான் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட்டாற்போல, அரபியில் சில வார்த்தைகளையும், இந்தியில் சில வார்த்தைகளையும் உச்சரித்தவர்களாக விரைந்து சென்று விட்டார்கள் என்று சொல்வதை விட ஓடிவிட்டார்கள். தேள் கொட்டியவர்களைப் போல் ஏன் இந்த இளைஞர்கள் இப்படி ஓடுகிறார்கள்? தொடக்கத்தில் எனக்குப் புரியாவிட்டாலும் பிறகு இதற்கான காரணம் எனக்குத் தெளிவாகப் புரியவே செய்தது. 

பாவம்! அந்த இளைஞர்கள் தங்கள் உறவினர்களிடம் ஊர்க்காரர்களிடம் ஏதேனும் பெரிய வேலையில் சேர்ந்து பணி செய்வதாகக் கூறி வந்திருப்பார்கள். அவர்கள் எந்த ஊர் என்பதை எனக்குக் கூறினால், அந்த ஊர்க்காரர்களை நான் சந்திக்கும்போது, உங்கள் ஊர்ப் பையன்கள் தோஹா வரும் விமானங்களில் 'தோட்டி' வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் தான் அவர்கள் ஓட்டத்துக்குக் காரணம்.

முன்பு இதே போல் இன்னொரு சம்பவம். நான் சில ஆண்டுகட்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொண்டு மதீனாவில் இருந்தபோது, அங்குள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒருவர் கழிவறை சுத்தம் செய்யும் கருவிகளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகில் சென்றபோது, தெரிந்த முகம் போல் தென்படவே, சற்று உற்று நோக்கினேன். எனக்கு 'திக்’ என்றாகி விட்டது. என்னை ஏறிட்டுப் பார்த்த அந்த நபர் மயக்கம் போட்டு விழாத குறையாகப் பேயறைந்தவர்போல் நின்றிருந்தார். இருவருமே ஏதும் பேச இயலாதவர்களாக சில நிமிடங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் என் நெருங்கிய உறவுப் பையன்.

அவன் சவூதிக்கு வேலைக்குச் சென்றபோது எங்களிடம் கூறியது தான் ஒரு பெரிய பழ மண்டியில் மேலாளராக இருப்பதாக. ஆனால், இங்கு உண்மையிலே பார்க்கும் வேலை கழிவறைகள் சுத்தம் செய்யும் தோட்டி வேலை. எந்தத் தொழிலையும் தாழ்த்திச் சொல்லவில்லை. எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு பார்ப்பவன் இல்லை. எல்லாமே தொழில்தான். அவன் துப்புறவுப் பணி செய்கிறான். நான் பத்திரிகைத் துறையில் எழுத்துப் பணி செய்கிறேன். இருவர் செய்யும் பணிக்காக மாத ஊதியம் பெறும் ஊழியர்கள்தான். இதில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

ஆனால், போதிய படிப்பறிவு பெற்றதால் ஏர்கண்டிஷன் வசதிகளோடு கூடிய சூழலில் பணியாற்றி பெருந்தொகையை ஊதியமாகப் பெற முடிகிறது. படிப்பறிவு இல்லாத காரணத்தினால் எவ்வித வசதியும் இல்லாத சூழலும் தரம் தாழ்ந்த நிலையில், மிகக் குறைந்த ஊதியம் பெறக் கடுமையாக உழைக்க நேரிடுகிறது. இதைக் கௌரவமாக வெளியே சொல்ல இயலாததால் தோஹா நண்பர்கள் ஓடவும், மதீனா நண்பர் திகைத்து நிற்கவும் நேரிடுகிறது.

பாலையாகும் இளமை வாழ்வு

நம் மக்களில் பெரும்பாலோர் திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப நீண்ட தொலைவுக்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்கப் பெரிதும் விரும்புகிறார்கள். நம் அரைகுறைப் படிப்பின்போதே அந்த ஆசை நம் குடும்பத்தவர்கட்கு வந்து விடுகிறது. எட்டாம் வகுப்பை எட்டிப் பிடிப்பதற்கு முன்பே நம் சம்பாத்தியத்தை நம் குடும்பங்கள் எதிர்பார்க்கவும் தொடங்கி விடுகின்றன. போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால் கடின உழைப்பு வேலைகளே நமக்குக் கிடைக்கின்றன. அந்தக் கடின உழைப்பை வெளி நாட்டில் செய்தால் இன்னும் அதிக வருமானம் கிடைக்குமே என்று கருதி இங்கே வந்து விடுகிறோம். நம் ஊரைவிட வளைகுடா அதிக வருமானம் தருகின்ற காரணத்தால் இந்தக் கொடிய வெயிலையும் தகிப்பையும் பொறுத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்து, நம் வாழ்வின் மையப் பகுதியை இப்பாலைப் பகுதியிலே தொலைத்துவிட நேரிடுகிறது. இளம் மனைவியோடு, பிஞ்சுக் குழந்தைகளோடு கொஞ்சி வாழும் இனிய வசந்த காலம் பல இளைஞர்களுக்கு வறண்ட காலமாகவே போய்விடுகிறது என்பது ஒரு நிதர்சன உண்மை.

இதற்கெல்லாம் எதை அடிப்படைக் காரணமாகக் கருதுகிறீர்கள்? பணம் சம்பாதித்தால் போதும் என்ற நினைப்புத்தான். பணம் மட்டுமே வாழ்க்கைப் பாதுகாப்பு என்ற எண்ணமே பலரிடமும் அழுத்தமாக இருந்து வருகிறது. நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றுள் பணம் முக்கியமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால், பணமே வாழ்க்கை என்று எண்ணுவது அறிவீனம். நமது வாழ்க்கைக்குப் பாதுகாப்பு பணமல்ல; கல்வியே உண்மையான பாதுகாப்புக் கவசம். இதை அலீ (ரலி) அவர்கள் அற்புதமாக விளக்கிக் கூறியுள்ளார்கள். “பணத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால், கல்வி உங்களைப் பாதுகாக்கிறது” என்பது அவரது பொருள் மொழியாகும்.

எது பாதுகாப்பு?

இந்தப் பேருண்மையைச் சற்று ஆழ்ந்து பார்த்தால் அதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகப் புரியும். நண்பர்களே! நீங்கள் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நாம் படாத பாடுபட்டுப் பணத்தைச் சம்பாதித்து, நீண்ட நாளைக்குப் பிறகு பதினைந்து நாள் விடுமுறையில் ஊர் திரும்புகிறோம். மற்றவர்கள் மத்தியில் நம் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக தடபுடலாகச் செலவு செய்கிறோம். பிள்ளைகளுக்குச் 'சுன்னத்' (கத்னா) செய்யும் நிகழ்வைக்கூட தெருவடைத்து பந்தல் போட்டு, பாட்டுக் கச்சேரியோடு நடத்துகிறோம். ஊர் விருந்து தந்துப் பாராட்டுப்பெற விரும்புகிறோம். சம்பாதித்துச் சென்ற பணத்தையெல்லாம் ஆடம்பர, டாம்பீகச் செலவுகளில் தொலைத்து விட்டுப் பழைய ஃபக்கீரைப் போல மீண்டும் பாலைவன நாடுகட்கு பழையபடி பாடுபட திரும்புகிறோம். சிலர் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊரிலே நிலமாகவும் வீடாகவும் தோப்புகளாகவும் வாங்கிப் போடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். இவைகளெல்லாம் ஊரிலே உள்ளக் குடும்பத்துக்கும் தனக்கும் தக்க பாதுகாப்பாக

இருக்கும் என்ற நினைவாலேயே இக் காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால், உண்மையிலே இவையெல்லாம் தக்க பாதுகாப்புத்தானா? இவைகளை நாம் பாதுகாக்கும் வரைதான், இவை நமக்குப் பயன்படும், பாதுகாப்பளிக்கும். இவை நமக்குப் பாதுகாப்புப் பொருள்கள்போல் தோற்றமளிப்பனவே தவிர நிரந்தரமான பாதுகாப்புக் கேடயங்கள் அல்ல. காலப் போக்கில் இவை கைமாறிக் கொண்டே இருக்கக் கூடியன வாகும்.

ஆனால், ஒரேயொரு பாதுகாப்பு மட்டும்தான் தேடிய காலத்திலிருந்து நாம் மண்ணறைக்குள் செல்லும்வரை அல்லும் பகலும் ஒரு விநாடியும் நம்மைவிட்டுப் பிரியாது, எலும்பும் சதையும்போல் நம்மோடு இரண்டறக் கலந்து இணைந்து நின்று பாதுகாப்பளிக்கும் ‘கல்வி’தான் அந்தப் பாதுகாப்பு.

அந்தக் கல்வியை முறையாகத் தேடிப் பெற்றவர்கள், கற்றுத் தேர்ந்தவர்கள் உயர் வருமானம் தரக் கூடிய பணிகளில் எளிதாக அமர்கிறார்கள். குளிர் பதன அறைகளில் அமர்ந்தவர்களாக பெரும் வருவாயை ஈட்டுகிறார்கள். சுகவாசிகளாக மாறுகிறார்கள். போதிய கல்வியைப் பெறாதவர்கள் பாலை வெயிலில் வெந்து நோகிறார்கள்.

நத்தை வேகம் புலிப் பாய்ச்சலாகும் விந்தை

உயர் கல்வி பெற பொருளாதார வசதியும் சூழலும் முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவையிரண்டும் சரிவர வாய்க்கப் பெறாதவர்களும் தங்கள் தன் முனைப்பால், இடையறா முயற்சியால், கடும் உழைப்பால் உயர் கல்வி பெற்று, சாதனை புரிகிறார்கள். இதன் மூலம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தங்கள் குடும்பப் பொருளாதார இடர்பாட்டை முற்றாகப் போக்கி, விரைந்து முன்னேற்றங்காண வழி வகுக்கிறார்கள். அத்தகையவர்

களில் ஒருவனாகத்தான் நான் இன்று உங்கள் முன் ஒரு

உதாரணமாகவே நின்று கொண்டிருக்கிறேன்.


குடத்து விளக்கு துலக்கம் அடைய

பிறக்கும் ஒவ்வொருவரையும் இறைவன் அறிவுக் குறைபாடுடையவர்களாகப் படைப்பதில்லை. இறைவனின் ஆத்ம அம்சத்தைப் பெற்றவனாகப் பிறக்கும் ஒவ்வொருவரிடமும் அறிவாற்றலுக்கான கருவை உட்கொண்டே பிறக்கிறான். ஆனால், அவ்வறிவு குடத்துள் இட்ட விளக்குபோல் துலக்கமற்றதாக இருக்கிறது. வேறொரு முறையில் சொல்வதென்றால் கூர்மையிலா வாள் போல் அவன் மன உறையுள் பொதியப்பட்டுள்ளது. கல்விப் பயிற்சி எனும் சாணை அவ்வறிவாற்றலைக் கூர்மைப் படுத்துகிறது. இவ்வாறு கூர்மையடையும் அறிவு, சிந்தனையை வளர்க்கிறது. அறிவாற்றலும் சிந்தனைத் திறமும் பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துகிறது. இதன் மூலம் துலங்காததெல்லாம் துலக்கமாகிறது. புரியாததெல்லாம் புரிகிறது. இருட்டுக்குள் இருந்த உண்மைகளெல்லாம் வெளிச்சத்துக்கு வர, அவன் அகவாழ்வும் புறவாழ்வும் செப்பமடைகிறது; செழிப்படைகிறது.

நீரின் அளவே நிராம்பல்

பிற உயிரினங்களிலிருந்து நம்மை வேறுபடுத்துவது இப் பகுத்தறிவுதான். மற்ற உயிரினங்களுக்கு ஐந்து வகையிலான அறிவுத் தன்மைகளை அளித்த வல்ல அல்லாஹ், மனிதனுக்கு மட்டும் சிறப்பறிவாக பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவைக் கொடுத்துள்ளான். எதையும் பகுத்துப் பார்த்து உண்மைத் தன்மையை உணர்ந்து தெளியும் இந்தப் பகுத்தறிவை மேலும் மேலும் கூர்மைப் படுத்துவதுதான் கல்விப் பயிற்சி. நீரின் அளவே நிராம்பல் இருப்பதுபோல் ஒருவன் கல்விப் பயிற்சிக்கேற்ப அவன் பகுத்தறிவு அவன் வாழ்வின் வழிகாட்டுதலுக்குரிய ஒளி விளக்காக அமைய முடியும்.

மற்ற உயிரினங்களிலிருந்து மேம்பட்டவனாக மனிதனைக் காட்டும் அளவுகோலே, அவனுக்கு இறைவன் அளித்த பகுத்தறிவுதான் என்று கூறினேன் அல்லவா? அதைப் பற்றிச் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் அதன் தனித்துவம் நமக்கு நன்கு விளங்கும்.

மனிதன் உலக உயிரினங்களில் பலமிக்கவனா என்றால் இல்லை. அவனைவிட உலகிலே மிகப் பலம் வாய்ந்த உயிரினம் யானையாகும். அதற்குள்ள உருவ அளவும் உடல் வலுவும் வேறு எந்தஉயிரினத்துக்கும் இல்லை. ஆனால் நோஞ்சானான ஒரு யானைப் பாகன், யானையின் கழுத்திலே - அதன் மத்தகத்திலே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு, தன் இஷ்டப்படியெல்லாம் யானையை ஆட்டுவிக்கிறான். தன் கையில் ஒரு சிறிய குச்சி வடிவிலான அங்குசத்தை வைத்துக் கொண்டு, தான் ஏவுகின்ற வேலையையெல்லாம் செய்யச் செய்கிறான். அவன் விருப்பப்படியெல்லாம் அம் மாபெரும் மிருகம் ஒடியாடி வேலை செய்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? போதிய பலமில்லா மனிதனுக்கு பலமிகுந்த யானையை ஆட்டிப் படைக்கும் வல்லமையைத் தந்தது எது? அவன் பெற்றுள்ள புத்தி பலம் தான். யானையை ஆட்டிப் படைப்பதற்கான உத்தியைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன்படி அதைச் செயல்படுத்தி, யானையை அடக்கி, தன் விருப்பம்போல் ஆட்டிப் படைக்கிறான்.

சிங்கம், புலிகளைவிட வலிமை மிக்கவனா மனிதன் என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. சிங்கமோ புலியோ ஓங்கி அறைந்ததென்றால் மனிதனின் பற்களெல்லாம் பொல பொலவென்று கொட்டி விடும். அவ்வளவு உடல் பலம் உள்ளவை. என்றாலும் அவைகளை சர்க்கசில் ஒரு சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு ‘ரிங் மாஸ்டர்’ பல சிங்கம், புலிகளை ஒரே நேரத்தில் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க

முடிகிறதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? கொடிய மிருகங்களான சிங்கம், புலிகளை எவ்வகையில் செயல்பட்டால் ஆட்டிப்படைக்கலாம் என்ற உத்தியைக் கையாளக் கற்றிருப்பதுதான். இதுதான் அவனுக்குள்ள மாபெரும் பலம். இத்தகைய வல்லமையை அவனுக்கு அளித்திருப்பது அவன் பெற்ற கல்வியறிவு. கல்வி என்று நான் இங்கே குறிப்பிடுவது வெறும் ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல; அனுபவப்பூர்வமாக கற்றுத் தேர்ச்சி பெறும் பட்டறிவும் ஒருவகைக் கல்விதான்.

‘உம்மி’ நபி உணர்த்தும் உயர் கல்வி

மண்ணுள் மறைந்து கிடக்கும் வைரக் கட்டிகளைப் பார்த்தால் அவை அந்த நிலையில் அதிகம் ஒளி பாய்ச்சுவதில்லை. பழுப்பு நிறக் கற்கள் போன்று இருக்கும். அவைகளை அளவான துண்டுகளாக வெட்டி, அவற்றை உரிய முறையில் உரிய வடிவில் இயந்திரம் மூலம் பட்டை தீட்டும் போதுதான் அவை ஒளியுமிழும் வைரக் கற்களாக வடிவம் பெறுகின்றன. எத்தனை பட்டைகளை, எந்த வாட்டத்தில் வடிவமைத்தால் அவை ஒளியை பீச்சியடிக்கும் என்ற நுட்ப முறைகளை நன்கு கற்றுணர்ந்த பட்டை தீட்டும் வல்லுநரால் அதை சாதிக்க முடிகிறதென்றால், வைரத்தின் தன்மைகளையும் பட்டை தீட்டும் தொழில் நுட்ப முறைகளையும் நன்கு அறிந்திருப்பதுதான் காரணம்.

எழுத்து வாயிலாகக் கற்றறியும் கல்வியாக இருந்தாலும் தொழில்முறை மூலம் அறிந்துணர்ந்து தெளியும் பட்டறிவாக இருந்தாலும், ஒருவனது அறிவை வளர்த்து வளப்படுத்துவதாகவே அமைகிறது. இவ்விரு முறைகளும் கல்வி என்றே அழைக்கப்படுகிறது. இவற்றுள் படிப்பறிவு மூலம் பெறுகின்ற கல்வி, அனைத்துத் துறை அறிவையும் நூல்கள் மூலம் தொடர்ந்து எந்நிலையிலும் பெற இயல்வதால் இஃது மிகவும் முக்கியத்துவமுடையதாகக் கருதப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை மற்றவர்களைவிட

மிகவும் உணர்ந்ததோடு, அதனைச் செயல்படுத்திக் காட்டியவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களாவர். தான் எழுதப் படிக்கக் கற்காத ‘உம்மியாக நபி’ இருந்தபோதிலும் கல்வியின் பெரும் பயனை இவரளவுக்கு உணர்த்தியவரை வரலாற்றில் காண்பதரிது.

சிந்தனை ஊற்றுக்கண்

அது மட்டுமல்ல, இறைமறையாகிய திருமறை

“........ ஒரு சமுதாயம் (நல்லறிவாலும் நற்செய்கையாலும்)
தன்னை மாற்றிக் கொள்ளாதவரை இறைவனும்
அதனை நல்லருளால் மாற்றி விடுவதில்லை.”(13:11)

என உறுதிப்படக் கூறுவதிலிருந்து மனித வாழ்வின் உயர்வுக்கு, நலம் பயக்கும் நற் சிந்தனைகளுக்கு, அதன் வழிப்பட்ட அருஞ்செயல்களுக்கு உர மூட்டும் உந்து சக்தியாக, பெருகி வரும் ஆற்றல்களுக்கு ஊற்றுக் கண்ணாக கல்வியே அமைய இயலும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ளத் தெளிவாகிறது.

அன்றைய சமுதாயச் சூழலில் போரில் தோல்வியுற்று போர்க் கைதிகளாகப் பிடிபடுபவர்கள் விடுதலை பெற வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிணையத் தொகையாகத் தந்தால் விடுதலை பெற முடியும். இதுவே அக்காலத்திய நிலை. ஆனால், கல்வியின் முதன்மைத் தன்மையை நன்குணர்ந்த நாயகத் திருமேனி, போரில் சிறைப்படும் கைதிகளில் கற்றவர் யாரேனும் இருந்தால் அவர் பிணைத் தொகை தந்து விடுதலை பெறாமல், கல்வியறிவு பெறாத குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் கல்வி கற்பித்தால் போதும், அவர் பிணைத் தொகை கட்டாமலேயே விடுதலை பெற முடியும் என்ற புது முறையைப் புகுத்தினார்கள் என்றால், கல்வியறிவின் இன்றியமையாத் தேவை எத்தகையது என்பதை இச்செயல் மூலம் அற்புதமாகப் புலப்படுத்தினார்கள் பெருமானார்.

மறுமைக்கும் தொடரும் கல்விப் பயன்

படிப்பின் பயன் எதுவரை ரொம்பப் பேர் நினைக்கிறார்கள், என்னதான் முயன்று படித்தாலும், அப்படிப்பு இந்த வாழ்வு முடியும் வரைதான். நம் வாழ்வு முடியும்போது நம் படிப்பும் முடிந்து விடுகிறது. எனவே, நாம் வாழும் காலத்தில் வளமோடு வாழ பொருள் தேடவும் புகழ் பெறவும் மட்டுமே இப்படிப்பு நமக்கு உதவுகிறது என எண்ணுகிறார்கள். இந்த எண்ணமே தவறானதாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இந்த உலகக் கல்வியால் விளையும் பயன்களைப் பற்றி மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த உலகில் நீங்கள் பெற்றுள்ள கல்வியை, நீங்கள் கூர்மைப்படுத்திக் கொண்ட நுண்ணறிவை உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பயன்படுத்தினால் அதன் பலன்களை இந்த உலக வாழ்வில் மட்டுமல்லாது அந்த உலகின் மறுமை வாழ்விலும் முழுமையாய் அனுபவிப்பீர்கள் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கமுதாகும். இதன் மூலம் போதிய கல்வியறிவு பெறும் இறைவனின் நல்லடியார் நன்மையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் என்பதுதான் உண்மை.

நாம் பெறுகின்ற கல்வி, அதன் விளைவால் வளர்த்துக் கொள்ளும் அறிவு வெறும் பண்ம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்லாது, செல்வச் செழிப்பைப் பெருக்கிக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தாது, இறைக் கடமைகளையும் நாம் செவ்வனே நிறைவேற்றி மறுமைப் பேறுகளையும் இவ்வுலக வாழ்வின்போதே பெறுகின்ற முயற்சியிலேயும் முனைப்பாக ஈடுபட, அக் கல்வி பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும். அழுத்தமான இறை நம்பிக்கையும் அதை வலுப்படுத்தும் ஐவேளைத் தொழுகையும் நோன்பும் ஜகாத்தும், இறையில்லம் ஏகலும் மறுமைப் பெரு வாழ்வுக்கு நம்மை விரைந்து அழைத்துச் செல்லும் ராஜபாட்டைகளாகும். அப் பெருவழியில் நம்மை வெற்றி

நடைபோட வழிகாட்டும் ஒளி விளக்கே நாம் பெறுகின்ற கல்வி.

இவ்வுலக வாழ்வில் உண்மையான நிலையான சிறப்பையும் உயர்வையும் உருவாக்கித் தருவதே நாம் பெறுகின்ற கல்விதான். கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு என்பது பழம்பெரும் பழமொழி.

குறுகி வரும் உலகு

உலகில் உருவாகி நிலை பெறும் மாற்றங்களுக்கு வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாயமைபவர்கள் படித்தவர்களே, அவர்தம் சிந்தனைத் திறமே என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித குல வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எத்தனையெத்தனையோ மாற்றங்கள், மாற்றங்களின் தொடர் நிகழ்வால் ஏற்பட்ட வளர்ச்சி. இறைவன் தந்த அறிவை கல்வியை மனிதன் பெருக்கிக் கொண்டதன் விளைவால் புதியனவற்றை எளிதாக புனைய முடிந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க இயன்றது. புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகின் உருவையே தலைகீழ் மாற்றமடையச் செய்ததோடு, பரந்து பட்ட உலகை குறுக்கியும் விட்டது. போக்குவரத்துச் சாதனங்களின் துரித வளர்ச்சி உலகின் தூரத்தை மைல்களாக - கிலோ மீட்டராகக் கணக்கிட்ட நிலையிலிருந்து மாறி மணிக் கணக்கில் கணக்கிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து இந்தியாவை எத்தனை மணியில் அடைய முடியும். இங்கிலாந்து செல்ல எவ்வளவு நேரம், அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு என்று கணக்கிடும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கம்யூட்டர் என்று சொல்லப்படும் கணினிக் கருவியும் அதனுள் செயற்படும் இன்டர்நெட் என்று அழைக்கப்படும் இணையமும் இன்று உலகையே உள்ளங்கையில் சுழலச் செய்யும் நிலை. விரல் நுனியில் சுழலச் செய்யும் வியக்கத்தக்க நிலை உருவாகியுள்ளது. பரந்து பட்ட உலகம்

ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். இன்றும் இந்தக் கசப்பான உண்மையை நம் சமுதாயம் முழுமையாக உணர்ந்து தெளியவில்லை. உணர்ந்தவர்கள் காரிலே சென்று, குளிப்பதன அறைகளிலே தம் வாழ்க்கையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், தகிக்கும் வெம்மையில் வெறும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி கைக்கும் வாய்க்கும் எட்டாதவர்களாக வாழ்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு முடிக்குமுன் அபுதாபி

எந்தக் கல்வி அவன் வளர்ச்சிக்கு வளமான வாழ்வுக்கு ஏணியாக அமைகிறதோ அந்த ஏணியில் ஒரிரு படிகள்கூட ஏற முற்படுவதில்லை. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாமலே அபுதாபிக்குப் பிழைப்புத் தேடி ஒட முற்பட்டு விடுகிறான். சிலர், பள்ளிக்கூடத்தின் படியைக்கூட மிதிக்க முற்படாமல் தன் உடல் வலுவை மட்டுமே நம்பி, துபாய்க்கும் அரபு நாடுகளுக்கும் பயணப்பட்டு விடுகிறார்கள். இங்கு கொளுத்தும் வெயிலிலும் தகிக்கும் தணலிலும் புழுவெனத் துடித்து பொருளிட்ட முற்படுகிறார்கள். அவன் மட்டுமல்ல, அக் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் படித்து மேல்நிலை பெற எண்ணுவதுமில்லை.

ஊரிலே முன்னூறு ரூபாய் வருமானம் பெற முடியாத நிலையில், துபாயில் முன்னூறு திர்ஹம் அதாவது மூவாயிரம் ரூபாய் கிடைக்கிறதே என்று மட்டுமே எண்ண முடிகிறதே தவிர, ....... கல்வியறிவு பெற்றிருந்தால் மாதம் மூவாயிரம் திர்ஹம் அதாவது முப்பதினாயிரம் ரூபாய் வருமானம் பெறக் கூடிய நிலை பெற்றிருக்கலாமே என்று எண்ணுவதே இல்லை.

ஆண் மக்களின் நிலையே இதுவென்றால் நம் பெண் மக்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என இஸ்லாம் போதிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கல்வியை இருவருக்கும் கட்டாயமாக்கியுள்ளது. நம்

இன்று சின்னஞ்சிறிய கிராமமாக உருமாறி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், மனிதன் பெற்ற கல்வியறிவும் அதனை ஆதாரமாக் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகளுமேயாகும்.

விரிந்து வரும் அறிவு

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அறிவை அளித்திருக்கிறான். ஆனால், அவ்வறிவு குடத்துள் வைக்கப்பட்ட குத்து விளக்காக உள்ளது. ஆனால், மனிதன் தன் முயற்சியால் - உழைப்பால் குடத்துள் வைக்கப்பட்ட அறிவை குன்றின் மேல் ஏற்றப்பட்ட பேரொளியாக வளர்த்து, வளப்படுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதன் கையிலேதான் உள்ளது. அறிவை வளர்க்கும் அற்புதச் சாணையாக சிந்தனா சக்தி அமைய வேண்டும். உலக உயிர்களிலே சிந்திக்கும் சக்தியை - பகுத்தறியும் பண்பை இறைவன் மனிதனுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். அப்பகுத்தறிவை வளர்த்து வளப்படுத்தும் வளர்ப்புப் பண்ணையே கல்விக் கூடங்கள். கல்வி பெறும் கடமையை ஆணுக்கு மட்டுமல்ல, பெண்ணுக்கும் கட்டாயக் கடமையாக்கியுள்ளான் வல்ல அல்லாஹ். ஆனால், நம்மில் ஒரு சிலர்தான் அக் கடமையை ஒரளவு நிறைவேற்றி வாழ்வில் நலமும் வளமும் பெறுகிறோம். இதனை சில சமுதாயங்கள் திறம்படச் செயல்படுத்தி தங்கள் நிலையை தொடர்ந்து மேம்படுத்தி மேட்டுக் குடியினராக ஆகிவிடுகின்றார்கள். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணத் தக்க விழுக்காட்டினரே போதிய அளவு கல்வியறிவு பெற்று வாழ்வின் உயர் நிலையை அடைகிறார்கள். படித்தவர்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கிச் சமுதாயத்தில் உச்ச நிலை பெறுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணத்தக்கதேயாகும்.

கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை இன்றும் நம் இஸ்லாமிய சமுதாயத்தில் போதிய விழிப்புணர்ச்சி

சமுதாயத்தில் இன்னும் பெண் கல்வி பின் தங்கியதாகவே உள்ளது. ஒரு ஆணை விட, பெண் படித்தால் அக் குடும்பத்திலே விரும்பத்தக்க மாற்றங்கள் விரைந்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஒரு பெண் படித்தவளாக இருந்துவிட்டால், அவள் சந்ததி முழுவதும் கல்வி எனும் ராஜபாட்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட விலக இயலாது. குடும்பத்தின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்படுவது எளிதாகி விடும். குடும்பத் தலைவன், தலைவியாகிய ஆணும் பெண்ணும் கல்வி கற்றவர்களாக அமைந்து விட்டால் அக்குடும்பத்தின் அகவாழ்விலும் புறவாழ்விலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட, வெற்றியின் உச்சத்தை நோக்கி அக்குடும்பம் செல்வதை யாரும் தடுக்கவியலாது.

அக, புற மாற்றங்களுக்கு அடிப்படை

எனவே, மாற்றத்திற்கு அடிப்படை அம்சம் கல்வியாகும். கல்வி வளர்ச்சியே அக, புற மாற்றங்களுக்கு அடிப்படை. இதை நாம் நன்கு உணர்ந்து தெளிய வேண்டும். இறைவன் மிகத் தெளிவாகத் தன் திருமறையில் 'நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதற்கு நான் துணையிருப்பேன். உங்கள் நற் செயல்களால், நீங்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால் நானும் உரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டேன்’ எனக் கூறுவதிலிருந்து நம் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முதல் பங்களிப்பு நம்மிடமிருந்துதான் வர வேண்டும்.


இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் வல்ல அல்லாஹ் அளித்துள்ள அறிவைக் கொண்டு நாம் நான்கு தப்படி எடுத்து வைத்தால் வல்ல அல்லாஹ் பதினாறு தப்படி எடுத்து வைப்பதற்கான உத்வேகத்தையும் ஆற்றலையும் அளிக்கிறான். மாறாக, நாம் எதுவுமே முன் முயற்சி எடுக்கவில்லையென்றால் இறைவன் நமக்காக

எதுவுமே செய்வதில்லை. நம் வாழ்க்கை சலனமற்று, ஆணி அடித்தாற் போன்ற தேக்க நிலையைப் பெற்று விடும் என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

எனவே, இயல்பாக இறைவன் நம்முள் பொதிந்து வைத்திருக்கும் அறிவை கல்வியின் மூலம் வளர்த்து, வளப்படுத்திக் கொண்டால் நாம் வளரவும் வாழவும் அற்புதமான வழியேற்படும். எனவேதான், அண்ணலார் வரை வந்த நபிமார்கள் அனைவருமே இறைவனிடம் அதிகமதிகம் கேட்ட துஆ ‘இறைவனே என் அறிவைப் பெருகச் செய்’ என்பதுதான். இறைவன் தந்த அறிவைப் பெருக்குவதன் மூலமாக நம் திறமையை வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அச் சாதனைகள் பொருளை மட்டும் கொண்டு வந்து சேர்ப்பதில்லை; புகழையும் கொண்டு வந்து சேர்க்கும்.

அண்ணலார் தந்த அரும்பெரும் அறிவுரை

கல்வியின் பெருமையைப் பற்றி திருமறை மட்டுமல்ல, நபிகள் நாயகம் (சல்) அவர்களும் எடுத்துக் கூறி விளக்கியிருக்கும் ஒவ்வொரு வாசகமும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கனவாக அமைந்துள்ளன. 'கல்வி எங்கிருந்தாலும் அதனை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்’ என்பது அவரது பொன் மொழிகளுள் மிகப் பொருள் பொதிந்த வாசகமாகும். தொடர்ந்து மிக உயர்ந்த செயல்களையெல்லாம் யார் யார் தொடர்ந்து செய்ய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

“கல்வி எங்கிருந்தாலும் அதனை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்; கல்வியின் சிறப்பையும் பயனையும் எடுத்துக்கூறி விளக்குபவன், இறைவனின் புகழைப் பாடியவனாவான்; கல்வியை நாடிச் செல்பவன் இறை துதி செய்தவனாவான்; கல்வியைக் கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்; தகுதி மிக்க மக்களிடையே கல்வியை பரவச் செய்பவன் இறை

வணக்கம் செய்தவனாவான்” எனத் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இந்தப் பொன்மொழியைக் கூர்ந்து கவனித்தால் பல பேருண்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மாதா, பிதாவுக்கு அடுத்த சிறப்புமிகு இடத்தைக் குருவுக்கு - கல்வி கற்பிக்கும் ஆசானுக்கு அளிப்பது தமிழ் மரபு. ஏனெனில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அத்தகு சிறப்புக்குரியவராக விளங்குகிறார். 'கல்வி கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்’ என்று கூறுவதன் மூலம் கல்வி கற்பிக்கும் ஆசான் அறிவு வழி ஒழுகுபவன்; உண்மையான அறத்தைச் செய்யும் அறிவாளி; கல்வி கற்பிக்கும் அறச் செயல் மூலம், கற்போரையெல்லம் மனிதப் புனிதர்களாக மாற்றும் தகைமையுடையவர்களாக அமைகிறார்கள் என்பது எண்ணி மகிழத் தக்கதாகும்.

தகுதிமிக்க மக்களிடையே கல்வியைப் பரவச் செய்தவன் இறை வணக்கம் செய்தவனாவான்’ எனும் கருத்தும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். உண்மையான இறைவணக்கம் என்றால், நீ பெற்ற அறிவை, பெற்ற அனுபவத்தை, பெற்றுள்ள திறமையை, வளர்த்துக் கொண்ட தகுதியை, சிந்தாமல் சிதறாமல் மற்றவர்கட்குக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லாதவர்கட்கு அவை கிடைக்குமாறு செய்ய வேண்டும். மற்றவர்கட்கு அவற்றை ஈவதன் மூலம் அவர்களும் வளர, வளமோடு வாழ வாய்ப்பேற்படுகிறது. இந்தச் செயலில் எவன் ஒருவன் முழு மனதோடு ஈடுபடுகிறானோ அவனே உண்மையான இறை வணக்கத்தில் ஈடுபட்டவனாவான் என்பது பெருமானாரின் உட்கிடக்கையாகும்.

இறைவனே குருவான விந்தை

நான் நினைந்து நினைந்து வியந்து போகிறேன்.பிறந்தது முதல் கல்வி கற்கும் வாய்ப்பே பெறாத ஒருவரால் இந்த அளவுக்குக் கல்வி கற்பிப்பதன் மேன்மையை

இவ்வளவு வலுவாக, தெளிவாகக் கூறிய மற்றொருவரை வரலாற்றில் காணவே இயலாது என்பது ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பேருண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரெழுத்தும் கற்க இயலா ‘உம்மி’ நபியாக நாயகத் திருமேனி இருக்க வேண்டும் என்பது இறை நாட்டமாகும். பள்ளி செல்லும் பருவத்தை எட்டுவதற்கு முன்பாகவே தன் பெற்றோரை இழந்து, அநாதையாகி விடுகிறார். தன் தாத்தா, சித்தப்பா போன்றோரின் அரவணைப்பில் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இத்தகு சூழலை இறைவனே அண்ணலாருக்கு உருவாக்கியுள்ளான். கற்க வேண்டுமென்றால் ஒரு ‘உஸ்தாது’ விடம் செல்ல வேண்டும் ஒரு ஆசிரியரிடத்திலேதான் கல்வி கற்க முடியும். அதைத்தான் நீங்களும் நானும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் பெருமானாரின் நிலை முற்றிலும் வேறு. அவருக்கு இறைச் செய்தி 'வஹீ’ யாக வரவிருக்கிறது. அவர் ஒரு ஆசிரியரிடத்திலே, ஒரு மனிதரிடத்திலே அவர் கல்வி கற்றால் அம் மனிதர் அவருக்குக் ‘குரு’ ஆகிவிடுவார். ஆனால், அவருக்கு இறைவனே 'குரு'வாக அமைய வேண்டும் என்பது இறை நாட்டம். எனவேதான், இறைவன் நாயகத் திருமேனியை அவரது இறுதி வரையில் ஒரெழுத்தும் மனிதரிடம் கற்காத 'உம்மி’ நபியாகவே இருக்கச் செய்திருக்கிறான். இப்படிப் பட்ட 'உம்மி’ நபிதான், உலகத்தில் எவருமே வலியுறுத்தாத அளவுக்குக் கல்வியின் மேன்மையை, சிறப்பை சிந்தை கொள் மொழியில் செப்பிச் சென்றுள்ளார் என்பது எண்ணி வியக்கத்தக்கதாகும்.

ஆணினும் பெண்ணுக்கே

இன்னொரு உணர்வையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கல்வி என்றாலே நாம் ஆண் மக்களைத்தான் நினைக்கிறோம். பெண் மக்களைப் பற்றி



அதிகம் நினைப்பதுமில்லை. அவற்றைப் பற்றி அதிகம் சிந்திப்பதும் இல்லை. கல்வி என்பது அதிலும் வாழ்வியல் படிப்பு என்பது ஆண் மகனுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம். நம் எல்லோரிடமும் மேலோங்கியுள்ளது. பெண் மக்கள் மார்க்கக் கல்வி பெற்றாலே அதிகம் என்ற நினைவுதான் நம்மிடையே இன்றுவரை கோலோச்சிக் கொண்டுள்ளது. இஃது எவ்வளவு தவறான, இஸ்லாத்துக்குப் புறம்பான செயல் என்பதை யாரும் அதிகம் உணர்வதாகத் தெரியவில்லை. ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மகன் உயர்வு, மகள் தாழ்வு என்ற நிலை அறவே இல்லை. அப்படி எண்ணுவதே பெரும் தவறு. கையிலிருக்கும் ஐந்து விரல்களிலே கட்டை விரல் சற்று பருமனாக இருப்பதைப் போல், குடும்பத்தைக் காப்பவன் என்ற முறையில் கணவனுக்கு ஒருபடி மேலான நிலை உள்ளதே தவிர, மற்றபடி கையிலுள்ள விரல்கள் அனைத்தும் ஒரே நிலையுடையவைகளேயாகும்.

சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய நிலை என்பதை அண்ணலார் அளவுக்குத் தெளிவுபடக் கூறியவர் வேறு எவரும் இலர். நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள் ஆணும் பெண்ணும் என்பது பெருமானாரின் பொருள் மொழியாகும். உலகத்தில் எந்தச் சமயமும், எந்த மத ஆச்சாரியர்களும் இந்த அளவுக்கு ஆணையும் பெண்ணையும் சமநிலைப்படுத்திப் பேசியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

அன்றே பெண்ணுரிமை

இன்றைக்குப் பெண்ணுரிமை பற்றிப் பேசாதவர்களே இல்லை “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என புரட்சிக் கீதம் எங்கும் இசைக்கப்படுகிறது. சரி நிகர் சமானமாக வாழும் இந்த நாட்டிலே பட்டங்கள் பெறவும் சட்டங்கள் செய்யவும் அவற்றை வலுவாகப் பாரில் செயல்படுத்த பெண்கள் உள்ளோம் எனப்

புரட்சி முழக்கங்கள் முழங்கப்படுகிறது. பெண்களைத் தட்டி எழுப்ப, பாரதி எப்படியெல்லாம் முயன்றுள்ளார் என்பதைக் கண்டு பேருவகையடைகிறோம்.

ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை 1400 ஆண்டுகட்கு முன்பே ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான நிலையில் வாழும் வழி வகுக்கப்பட்டு விட்டது. ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து உருவானவர்கள். பெண்ணுக்கு ஆன்மாவும் உண்டு. அறிவும் உண்டு; ஆற்றலும் உண்டு. சொல், செயல், வீரம், விவேகம் எதிலும் பெண் ஆணுக்குப் பின் தங்கியவளல்ல என்பதை உலகுக்கு உணர்த்திய மார்க்கம் இஸ்லாம்.

இந்தச் சமயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை எனக் கருதுகிறேன். நாணயத்தின் இருபக்கமென ஆணையும் பெண்ணையும் உருவகித்து நாயகத் திருமேனி பேசிய காலகட்டத்தின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பெண்களை பிண்டப் பொருளாகக் கருதிய காலம். பெண்கள் கடுகளவு மரியாதையும் இல்லாமல் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட காலம். பெண் குழந்தை பிறந்துவிட்டதென்றால் அதை உடனே உயிரோடு புதைத்து மண்ணுக்கு இரையாக்கிவந்த காலம். வாலிபப் பெண்களைப் பந்தயப் பொருள்களாகக் கருதிச் சூதாட்டக் களத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காலம். உலகிலேயே மிக இழிவான பிறவி பெண்கள் என்ற எண்ணம் எல்லோரிடமும் அரசோச்சி வந்த கால கட்டம்.

இத்தகைய காலச் சூழலிலேதான் ஏந்தல் நபி (சல்) விண் முட்ட பெண்ணின் பெருமையைப் பேசியதோடு, செயல் வடிவில் பெண்களின் பெருமையை, மதிப்பை, மரியாதையை நிலை நாட்டினார். 'சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என வினா தொடுத்தவருக்கு 'உன் தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது’ என பதில் கூறி, பெண்ணின் பெருமைக்கு முரசு கொட்டியவர் பெருமானார் (சல்) அவர்கள்.



படித்த பெண்களைப் பார்ப்பதே குதிரைக் கொம்பாக இருந்த ஒரு பிற்போக்குச் சமூகத்தில் ஆண்களைப் போலவே அனைத்துப் பெண்களுக்கும் கல்வியைக் கட்டாயமாக்கியவர் அண்ணல்நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

ஒரு ஆண் படித்தால் அவனளவில் வளர்ச்சிக்கு வழி ஏற்படும். ஆனால் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட முடியும். ஒரு பெண் வீட்டில் படித்திருந்தால், அவள் படிப்பின் சிறப்பையும் மேன்மையையும் நிச்சயம் உணர்ந்தவளாயிருப்பாள். அக் குடும்பத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் திறம்பட வளர்த்து கல்வியறிவு மிக்கவர்களாக்குவாள். திட்டமிட்டுக் குடும்பத்தை சீரும் சிறப்புமாக செம்மையுற நடத்தி, வெற்றிப் பாதையில் குடும்பத்தை வழிநடத்திச் செல்வாள். அதனால்தான் பாரதிதாசன் ‘படித்த பெண்ணுள்ள குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ எனப் பாடி பெருமைப்படுத்தினார்.

பெண் கல்வி குடும்பத்தின் ஆணிவேராக அமைகிறது. ஆணி வேர் வளமாகவும் வலுவாகவும் இருந்தால் அம் மரத்திலிருந்து கிளைக்கும் கிளைகளும் வலுவோடும் வனப்போடும் அமைவது இயல்வு. பூக்கும் பூவும் காய்க்கும் கனியும் கண்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கே வனப் பூட்டுவனவாகும் என்பதில் ஐயமில்லை.

படித்தத் திறம்பட்ட பெண் தன் கணவனையே பிள்ளையாகக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யுமளவுக்கு ஆற்றல் பெற்றவளாகி விடுகிறாள். ஆண் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் தோன்றாத் துணையாக நின்று உதவுகிறாள். எனவேதான் ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற புது மொழியே உலகில் எழுந்துள்ளது.

பெண் படிக்காதவளாக அமைந்து விட்டால் அவ்வீடு இருண்ட வீடாக ஆகிவிடுகிறது. பெற்ற பிள்ளைகளைத்

தாயைப் போல் பேணி வளர்க்கத் தந்தையால் இயலாது. அதிலும் படித்த பெண், தாயாக அமைந்து விட்டால், அக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகட்கு அத் தாயே முதல் ஆசிரியையாக அமைந்து விடுகிறாள். அவளது பிள்ளைகள் பள்ளியில் ஐம்பது விழுக்காடு கல்வியும், தாயிடம் ஐம்பது விழுக்காடு கல்வியும் பெறுவதன் மூலம் நூற்றுக்கு நூறு விழுக்காடு கல்வி பெற்ற, நல்ல ஒழுக்கங் கற்ற பிள்ளைகளாக நம் பிள்ளைகள் அமைய அருமையான வாய்ப்பு உருவாகிறது. ஆண் பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகட்குக் கவனச் சிதறல் குறைவாக இருப்பதால், பள்ளி, கல்லூரிப் பாடங்களில் முழுக் கவனம் செலுத்தி, கல்வி கற்க, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பேற் படுகின்றது. இதனால்தான் இன்றும்கூட ஆண்டு இறுதியில் வெளிவரும் படிப்பு முடிவுகளில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அதிக விழுக் காட்டினராக வெற்றி பெறுகிறார்கள். ஏனெனில், பெண்கள் எப்போதுமே பொறுப்புணர்வு மிக்கவர்கள்.

உண்மைச் சேமிப்பு

இஸ்லாம் பெண்களுக்குப் பெருமையளித்தும் கட்டயாக் கல்வியைக் கடமையாக்கியிருந்தாலும் இன்னும் நம் சமுதாயம் பெண் கல்வியில் அதிக நாட்டமில்லாதிருப்பது வேதனைக்குரியதாகும். ஆணின் கல்வியிலேகூட அதிக ஆர்வமில்லாத நிலைதான் எங்கும் நிலவுகிறது.

நம் சந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சேமிப்பே அவர்கட்கு நாம் அளிக்கும் மார்க்க கல்வியும், சமுதாயக் கல்வியும், ஒழுக்கவியல் அடிப்படையிலான உண்மையான செயல்பாடுகளும்தான் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். தாய் படித்தவளாக அமைந்து விட்டால் அக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் படிக்காமல் போக வாய்ப்பில்லை. கல்வியினால் வாழ்க்கைத் தரமும் வாழ்க்கைப் போக்குமே மாறி

விடுகிறது. வாழ்க்கையில் மேலும் உயர முடியுமே தவிர தாழ வழியில்லை.

இதையெல்லாம் கேட்கும்போது உங்களில் சிலர் நினைக்கலாம். ஏதோ ஒரு சூழலில் படிக்க இயலாமல் போய்விட்டது. இங்கு வந்து கஷ்டப்படவேண்டியதாகி விட்டது. இனிமேல் நாம் படித்து முன்னேறவா முடியும்? நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்ற தொய்வு மனப்பான்மையில் தங்களுக்குள் குமையலாம். அப்படிக் குமையவோ மனத் தளர்ச்சி கொள்ளவோ வேண்டியதில்லை. படிப்புக்கு வயது வரம்பே கிடையாது. வாழ்நாள் முழுமையும் கல்வியறிவு பெற முடியும். வேண்டியதெல்லாம் எழுச்சி, உணர்வு, முயற்சி, உழைப்பு.

ன்றும் கல்வி

‘வாழ்நாள் கல்வி' என்ற முழக்கம் எங்கும் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் வளரா நாடுகளிலும் இம் முழக்கம் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. படிக்க இயலாமல் போனவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமல், தேர்வு எழுதி வெற்றியடைவதற்கு, பட்டம் பெறுவதற்கு பல்வேறு வாய்ப்புகளைப் பல்கலைக் கழகங்கள் இன்று உருவாக்கி உதவி வருகின்றன. அஞ்சல் வழிக் கல்வி என்பது பணியாற்றிக் கொண்டே, வாழ்க்கைக்கு வேண்டிய வருமானத்தைத் தேடிக் கொண்டே, மேன்மேலும் படிக்க, அதன் மூலம் உத்தியோகத்தில் உயர்ந்து கொண்டே செல்ல இனிய வாய்ப்பு இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்தி, அஞ்சல் வழிக் கல்வி மூலம் பட்டம் பெற்று, பணியில் உயர்ந்தவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். தாய் நாட்டில் வாழ்பவர்களுக்குத்தான் இந்த வாய்ப்புண்டு, வேற்று நாட்டில் வாடும் நம் போன்றவர்கட்கு அவ் வாய்ப்புக்கு வழியில்லை என்று

உங்களில் யாரும் கருதிவிட வேண்டாம். இந்தியப் பல்கலைக் கழகங்கள் குறிப்பாக தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு அத்தகைய வாய்ப்பை நல்கும் வகையில் தங்கள் அஞ்சல் வழிக் கல்வியை விரிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தவாறே தேர்வு எழுதி வெற்றி பெற்று பட்டங்களையும் அதன் மூலம் உயர் பதவிகளையும் எளிதாகப் பெற முடியும்.

கல்வி மூலம்தான் வாழ்வில் கரையேற, உயர்நிலை பெற முடியும் என்பதில் உறுதி கொண்டு, ஊரில் உள்ள நம் வீடுகளில் உள்ள படிக்கும் வயதுள்ள தம்பி தங்கைகளை, அண்ணன், அக்காள்களை தவறாமல் படிக்க உங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியைச் செலவிடுங்கள். உங்கள் வருவாயின் முதல் செலவு கல்விச் செலவாக இருக்கட்டும். வெறும் பணச்சேமிப்பு உங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பாக அமைவதைவிட நீங்கள் அளிக்கும் கல்விதான் அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பாக அமைய முடியும். இதை உணர்ந்து செயல்படுபவர்கள் நம் குடும்பங்களிலே மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். பாலைவனத் தணலிலே புழுங்கிச் சம்பாதித்து அனுப்பும் பணத்தைப் படாடோபமாகச் செலவிட்டு, தங்கள் வள வாழ்வைப் பிறருக்குப் பகட்டாகக் காட்டுவதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, இளம் சிட்டுகளின் கல்வி வளர்ச்சியிலே காட்டுவதில்லை. எட்டாம் வகுப்பை எட்டுவதற்கு முன்பே அரபு நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் வேலை தேடி அனுப்புவதிலே அதிகக் கவனம் செலுத்துகிறோம். போதிய கல்வி பெற்றால் அதிக வருமானம் தரவல்ல பணியில் அமரவும் அதிக உடல் உழைப்பு இல்லாமல் மன உழைப்பை மட்டும் செலவிட்டு, வளமாகவும் வசதியாகவும் வாழலாமே என்ற எண்ணம் நம்மிடத்திலே அழுத்தம் பெற வேண்டும். மனிதப் புனிதர் மாநபி (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் நினைவு

கூரும் இவ் விழாவிலே அதற்கான உறுதி மொழியை நீங்கள் எடுத்துக் கொண்டால், படித்த சந்ததிகள் உருவாக, எதிர் காலத்தில் வளமாக வாழ, வளர வாய்ப்பேற்படும்.

இங்கு வேலை தேடி வருபவர்கள் எல்லாம் எத்தனையோ இடர்ப்பாடுகளைத் தாண்டி வந்தவர்கள் என்பதை நான் அறிவேன். நிலபுலன்களை அடகு வைத்தும் கடன் வாங்கியும் இங்கு வந்துள்ளோம். அவற்றையெல்லாம் அடைத்தபின், நம் சம்பாத்தியத்தின் ஒவ்வொரு காசும் நம் குடும்பத்தின் உயர்வுக்கும், வளரும் சந்ததிகளின் உயர்வுக்கு உதவுவதாக அமைய வேண்டுமே தவிர அவை பெரும் விழலுக்கு இறைத்த நீராக, வீண் ஆடம்பர டாம்பீக வாழ்க்கைக்கு பயன்படுவதாக அமைந்து விடக் கூடாது. நாம் சம்பாதிப்பதில் எவ்வளவு நியாயம் தேடுகிறோமோ அதே நியாய உணர்வு அப் பணத்தைச் செலவு செய்வதிலும் காட்ட வேண்டும்.

மறுமைக்கு வழிகாட்டும் இம்மை எளிமை

எளிமையாக வாழ்ந்து வாழ்க்கையில் ஏற்றம் பெற வழிகாட்டியவர் ஏந்தல் நபி. வெளி நாட்டுக்குச் சென்றவரின் சம்பாத்தியம். நம் வீட்டிற்குள் நுழையும்போதே, ஆடம்பரத்தையும் டாம்பீகத்தையும் ஊதாரித்தனத்தையும் உடன் அழைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைகிறது. பிறர் மெச்ச பெருமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் படாடோபமாக வாழ முயல்கிறோம். இதனால் நியாயமான செலவுகள் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா’வாக ஆகிவிடுகின்றன. ஆனால், எவ்வளவு செல்வச் செழிப்பு ஏற்படினும், எளிமையாக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்க்கை ஒரு வழிகாட்டி நெறியாக நமக்கு இன்றும் திகழ்கிறது.

அரபகம் முழுமையும் அண்ணலாரின் ஆட்சியின் கீழ் வந்தபோதிலும் அண்ணலார் ஆடம்பரம் தலைகாட்ட

வாழ்ந்தாரில்லை. அவரது தனி வாழ்வில் எளிமையே அரகோச்சியது. அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் அண்ணலாரைக் காணவும், உரையாடி நட்பை வளர்த்துக் கொள்ளவும் நாட்டங்கொண்டு பரிவாரங்களோடு வந்து தங்கள் தகைமையை அண்ணலார் முன் நிலைநாட்ட முனைந்தனர். வருகிற மன்னர்கள், மன்னர்களுக்கேயுரிய நடையுடை பாவனைகளோடு, பந்தாவாக வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், மாமன்னர் நிலையிலிருந்த பெருமானாரிடம் எந்த மாற்றமும் இல்லை. மதினாவில் முதன் முதல் எத்தகைய ஆடையணிகளுடன் நுழைந்தார்களோ அதே எளிய உடையைத்தான் மன்னர்களைச் சந்திக்கும்போதும் அணிவதை வழக்கமாகக் கொண்டார். எளிய உடையுடன் ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்திருப்பதோடு வரும் மன்னர்களையும் அவ்வாறே அமரச்செய்வது வழக்கம். இக் காட்சி உமறு (ரலி) வுக்கு மனச் சங்கடத்தை உண்டாக்கும். உடையலங்காரத்துக்கும் பெருமானார் எளிய உடைகளுக்குமிடையே ஒரு மாபெரும் இடைவெளி - வித்தியாசம் இருப்பதைப் பலப்போதும் உமர் (ரலி) கண்டு, வேற்று நாட்டு மன்னர்களைச் சந்திக்கும்போதாவது பெருமானார் உயர்ந்த ஆடைகளை அணிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சந்திக்க வரும் மன்னர் பிரதானிகளும் மகிழ்வார்களே என எண்ணிக்கொள்வார். இதைப் பற்றி நாயகத் திருமேனியுடன் பேச வேண்டுமென விழைந்தாலும் கேட்கத் துணிவில்லாமல் இருந்து விடுவார்.

ஒருநாள் அண்ணலாரோடு தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும்போது, பேச்சு வாக்கில் இதைப் பற்றிப் பெருமானாரிடம் பேச விழைந்தார். 'பெருமானார் அவர்களே! மாமன்னர் நிலையிலிருக்கும் தாங்கள் ஆடம்பர ஆடையணிகளை அறவே விரும்புவதில்லை. ஒரு ஃபக்கீறைப்போல் ஆடையுடுத்தி, ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்தபடி வெளிநாட்டு மன்னர்களைச் சந்தித்து

உரையாடுகிறீர்கள். அவர்களும் உங்கள் விருப்பப்படி ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்து பேசிச் செல்கின்றனர். ஆனால், மன்னர் என்ற முறையில் உங்கள் ஆடைக்கும் அவர்கள் ஆடையலங்காரங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆடையலங்காரங்களைத் தாங்கள் விரும்பாவிட்டாலும் வரும் மன்னர்கள் அவற்றை விரும்பி எதிர்பார்க்கலாமல்லவா? அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவாவது, அவர்களைச் சந்திக்கும் சமயத்தில் டாம்பீகமான ஆடம்பர ஆடையணிகள் அணியா விட்டாலும் ஒரளவுக்கு சிறப்பான ஆடையணிந்து, வரும் மன்னர்களைச் சந்திக்காலாமே?” என்று கேட்டு விட்டார்.

இதைக் கேட்ட பெருமானார் (சல்) புன்னகையித்தவராக ‘என்ன, உமர் அவர்களே! ஆடையலங்காரத்துக்கு இவ்வளவு முதன்மைதர முனைந்து விட்டீர்கள். எவ்வளவு எளிமையோடு வாழ்கிறோமோ அந்த அளவுக்கு சொர்க்கத்தில் நிறைந்த வெகுமதிகளை வல்ல அல்லாஹ் அளித்து மகிழ்விக்கிறான் என்பதை நீங்கள், அறியவில்லையா? எனக்குக் கிடைக்கவிருக்கும் அந்த வெகுமதிகள் எனக்குக் கிடைக்கக் கூடாது என்பது உங்கள் விருப்பமா? எளிமையாக வாழ்ந்து அந்தச் சொர்க்கப் பேரின்பங்களைப் பெறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?’ என அண்ணலார் எதிர் கேள்வி கேட்டபோதுதான் எளிமையில்தான் இறைவனுடைய அருள் பூரணமாகப் பொழியும். அத்தகையவர்களுக்கே அல்லாஹ் அனைத்து வெகுமதிகளையும் தந்து மகிழ்விக்கிறான் என்ற பேருண்மை புரிந்தது. தனது ஆடம்பர உணர்வு எவ்வளவு தவறானது என்பதும் தெளிவாகிறது.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஆடம்பர - டாம்பீக வாழ்வை அனாவசியச் செலவுகளைக் கடிந்தார்களே தவிர அவசியச் செலவு செய்ய வேண்டுமெனப் பணித்தார்கள். அத்தகைய அவசியச் செலவுகளிலே

சிறப்பிடத்தைப் பெறுவது கல்விக்காகச் செய்யும் செலவாகும். நம் குடும்பத்தில், படிக்கக்கூடிய அனைவரையும் படிக்கச் செய்ய வேண்டும். அதற்காக நாம் எவ்வளவு முயற்சியை மேற்கொண்டாலும் - இன்னும் ஒரு படி மேலே போய் எந்தத் தியாகத்தைச் செய்தாலும் அஃது ஆயிரமாயிரம் மடங்கு பயனுள்ளதாகவே அமையும். அதுவே நம் புகழுக்கும் உண்மையான பெருமைக்கும் அடித்தளமாக அமையும் என்பதை மறக்க வேண்டாம்.

கல்லில் எழுத்தாகும் கல்விப் பணி

உலகிலேயே கல்விக்காகச் செலவு செய்தவர்களும் கற்றவர்களுக்காகச் செலவு செய்தவர்களும், கல்லில் எழுத்துப் போல நிலையான இடத்தைப் பெற்று விடுகிறார்கள் என்பதற்கு எத்தனையெத்தனையோ உதாரணங்கள் வாழ்விலும் வரலாற்றிலும் உண்டு.

அன்று கீழக்கரையில் வள்ளல் பெருந்தகை சீதக்காதி உமறுப் புலவருக்கு உதவி செய்தார். உமறுப் புலவர் அற்புதமான சீறாப்புராண பேரிலக்கியத்தை உருவாக்கினார். அதன் விளைவு? சீறாப் பாடல்களுக்கிடையே சீதக்காதியின் கொடைத் திறத்தைப் போற்றும் பாடல் வரிகள் இடம் பெற்றன. இதன் மூலம் தமிழ் இருக்கும்வரை - சீறா இருக்கும்வரை சீதக்காதியின் பெயரும் இருந்து கொண்டே யிருக்கும்.

அதைப் போல நீங்கள் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கல்விக்காகச் செலவு செய்தால் உங்களுடைய பேரும் புகழும் அழியாச் சாசனமாக அக் குடும்பத்தில் அழுத்தமாக நிலைபெறும். என் தந்தை, என் அண்ணன், என் தம்பி அரபு நாடு சென்று அரும்பாடுபட்டு பணம் சம்பாதித்து என்னைப் படிக்க வைத்தார். நான் படித்து, ஒரு உத்தியோகத்திற்குச் சென்றபின்தான் எங்கள் குடும்ப தரித்திரம் விலகியது. வசதி பெருகிறது. மற்றவர்க்கு இணையாக, ஏன், ஒருபடி மேலாக வாழ

முடிந்தது. எங்கள் கல்விக்கு மூலாதாரமான அவரே எங்கள் குடும்ப விளக்கு என்று உங்கள் உதவியால் படித்தவர்களெல்லாம் போற்றுவார்கள்; புகழ்வார்கள். இத்தகைய புகழுக்குரியவர்களாக ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதுதான் இறை நியதி; பெருமானார் பெருவழி. அத்தகைய புகழ்மிகு பெரு வாழ்வை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ மனிதப் புனிதர் மாநபி பிறந்த நாள் விழாவிலே உறுதி கொண்டு இறை வழியில் உய்தி பெறுவோமெனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

(16-7-98 அன்று அபுதாபி முஸப்பா பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஈ.டி.ஏ. மெல்கோ கேம்ப் வளாகத்தில் நடைபெற்ற மீலாது விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)