ஈசுரமாலை
எழுதியவர்: ஔவையார்

ஔவையார் அருளிய ஆத்திசூடி ஆதியாம் நூல்களில் ஒன்று ‘ஈசுரமாலை’. சிவபெருமானுடைய திருமேனித் தோற்றங்களையும் இயல்புகளையும் அருட்செயல்களையும் அடிதோறும் விளக்கி அகர வரிசையாய் அமைந்திருப்பது இந்நூல்

காப்பு தொகு

விரும்பித் தொழுவார் வினைதீர்க்க முக்கட்
கரும்பிற் பிறந்த களிறு

நூல் தொகு

அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய கடவுள்
இறையவன் மறையவன் இமையவர் தலைவன்
ஈசன் மழுப்படை ஏந்திய கையன்
உம்பர் தலைவன் உயர்கயி லாயன்
ஊழி ஊழி காலத்து ஒருவன்
எங்கள் நாயகன் கங்கை வேணியன்
ஏழ்உல குஆளி இமையவர் தலைவன்
ஐங்காத்து ஒருகோட்டு ஆனையை ஈன்றவன்
ஒன்றே ஊரும் ஒற்றி ஊரான்
ஓங்கா ரத்துஉட் பொருளாய் நின்றவன்
ஓளவனத் தில்லையின் ஆடல் உகந்தவன்
அக்கு மாலை அரவோடு அணிந்தவன்
கண்மூன்று உடையவன் கால காலன்
ஙகரமும் நடுவு ஒருதூணி நிற்பவன்
சம்பு மறையவன் சம்பந்த நாதன்
ஞயநிறை பூரணன் ஞான நாயகன்
இடம்பெறு ஞானியர் நெஞ்சத்து இருப்பவன்
இணங்கரர; புரம்மூன்று எரித்த பரமன்
தக்கனுக்கு உதைத்துத் தலையை அணிந்தவன்
நன்மங்கை பாகன் அயன்மூன்று உடையோன்
பஞ்ச முகத்தோன் பரமன் ஆதி
மதியே சூடி மதியில் இருப்பவன்
இயல்பொடு பிட்சை ஏற்கும் எம்பிரான்
அர எனும் அஞ்செழுத்தாக நின்றவன்
இலங்கை வேந்தன் எடுத்த மலையன்
வடமரத்து அடியில் மாமறை ஓதி
அழகிய திருமறை ஆடல் உகந்தவன்
இளமையும் முதுமையும் மூப்பும்இல் லாதவன்
அறம் பொருள் இன்ப முத்தி ஆனவன்
அனந்த கோடி யுகத்திற் பழையவன்
கங்கைக்கு இறைவன் ஏகம்ப வாணன்
காலம் மூன்றும் கடந்து நிற்பவன்
கிள்ளைக் குலத்தில் வள்ளல் ஆனவன்
கீதப் பிரியன் வேத பூரணன்
குருந்தடி தன்னில் குருவாகி நிற்பவன்
கூடல் தெருவில் குதிரையை விற்றவன்
கெட்ட வேடன் எச்சிற் பிரியன்
கேது வேணியன் மாது பாகன்
கைதொழும் அடியவர் கடிவினை தீர;ப்பவன்
கொலைக்கண் வேடன் மலைக்கண் உற்றவன்
கோலக் கூற்றை காலால் உதைத்தவன்
சமயம் ஆறும் தானாகி நின்றவன்
சாதி பேதம் இல்லாத சங்கரன்
சினப்புலி உரியைச் சிற்றாடை உடுத்தவன்
சீரங்க(ம்) இராயன் தேடற்கு அரியவன்
சுருதி மூன்றும் சுடர் மூன்றும் ஆனவன்
சூரன் மார;பைத் துளைத்தவன் தாதை
செம்பொன் அம்பலத்து ஆடிய செல்வன்
சேல்படு(ம்) கண்உமை செம்பாதி ஆனவன்
சைவா கமங்கள் தானே ஆனவன்
சொக்க நாயகன் சுந்தர் வேடன்
சோம வேணியன் மாது பாகன்
தலையோடு ஏந்திய சாம வேதன்
தாயும் தந்தையும் தானே ஆனவன்
தினகரன் பல்லைத் தீரத் தகர்த்தவன்
தீரா முதலைவாய்ப் பிள்ளை அழைத்தவன்
துறைதுறை தோறும் தோற்றமாய் நின்றவன்
தூரர;க்குத் தூரன் அணுகினர்க்கு அணுகினன்
தென்னவர; கோமான் அடிபோற்ற நின்றவன்
தேர்ஒன்று ஏறித் திரிபுரம் எரித்தவன்
தைப்பூசம் ஆடத் தகும்தகும் என்றவன்
தொம்தொம் தித்தி என்று ஆடிய சோதி
தோகைமார் கைவளை சோர நடந்தவன்
நரிபரி ஆக்கிய நல்ல வாரியன்
நான்மாடக் கூடல் வழுதி ஆனவன்
நிருபாவி கபாலி நிருவாணி ஆனவன்
நுளைய னாய்வலை வீசிய வள்ளல்
நூல்பல ஓதி வள்ளலுக்கு அளித்தவன்
நெற்றிக் கண்ணாற் காமனை எரித்தவன்
நேரார; புரம்மூன்று எரித்த பரமன்
நைஞ்சம் பிறக்கும் நாகம் அணிந்தவன்
நொடிவரை தன்னில் படிமுழு தாளி
நோக்கியும் நோக்கொணா நுண்ணிய பழம்பொருள்
பழையன் ஊரன் திருவாலங் காடன்
பார்த்தனுக்கு அன்றுபாசுபதம் அளித்தவன்
பிராயம் தவிர;ந்த பிறவி மருந்து
பீறிய கோவணம் பிரியமாய் உடுத்தவன்
புண்ணியர; நெஞ்சின் மேவிய புனிதன்
பூங்கொடி உமையாள் பாகம் பிரியாதவன்
பெருந்துறை மேவி அருந்துறை ஆனவன்
மாவடி தன்னின் மகிழ்ந்தே அமர்ந்தவன்
மிஞ்சிய சமயம் ஐந்தும் படைத்தவன்
மீனவன் வையை அடைத்து அடி பட்டவன்
முயலகன் முதுகில் அடியுற மிதித்தவன்
மூவா யிரவரில் ஒருவ னாய் நின்றவன்
மென்றிஇடும் வேடன் எச்சிற் பிரியன்
மேலோகம் பரவும் சிவலோக நாதன்
மைவிழி உமையாள் மங்கை பாகன்
மொய்த்த செம்பொன் அம்பல வாணன்
மோகம் தவிர்ந்து யோகம் இருப்பவன்
வள்ளல் இருபத் தொன்றே ஆனவன்
வாத வூரன் திருவாசகப் பிரியன்
வித்தும் வேரும் விளைவும் ஆனவன்
வீரட் டானம்மேவி இருப்பவன்
உற்றது கூறுவார்க்கு உறுதிப் பழம்பொருள்
ஊமையைப் பேசுவிக்கும் உபாயக் காரன்
வௌ்ளி மால்வரை மேவி இருப்பவன்
வேதாந் தத்துள் பொருளாகி நின்றவன்
வையகம் உய்ய மையணி கண்டன்
ஒண்டொடி உமையாள் பாகம் பிரியாதவன்
ஓதும் பதினெண் புராணம் ஆனவன்

:ஈசுரமாலை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈசுரமாலை&oldid=1526107" இலிருந்து மீள்விக்கப்பட்டது