ஈச்சம்பாய்/உயிர் ஊஞ்சல்

உயிர் ஊஞ்சல்

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும்’ பழமொழியை ‘குதிரை தேய்ந்து கழுதையாகும்’ என்று புதுமொழியாய் சொல்லலாம் போல், கருப்புக் கண்ணாடிப் பாளமாய் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில், குதிரைப் பாய்ச்சலாய் ஓடி வந்த அந்த வேன், அந்தச் சாலையில் கிளை பிரிந்த கப்பிச் சாலையில் நொண்டியடித்தது.

உள்ளுக்குள் சுமார் இருபது பேர் இருக்கலாம். அத்தனை பேர் கால்களிலும், கைகளிலும் உழைப்பின் முத்திரைகளான கன்னங்கரேல் காய்ப்புகள்; ஆனாலும், சிறிது வெள்ளையும், சொள்ளையுமாய்தான் காணப்பட்டார்கள்.

பாம்படம் போட்ட கிழவிகள் இரண்டு பேர். கம்மல் வைத்த நடுத்தரப் பெண் ஒருத்தி, மதர்ப்பான இளம் பெண் ஒருத்தி, அவள் மடியில் கன்னங்குழியச் சிரித்து, ஓரம் சாய்ந்துச் சிரிக்கும் அலங்காரப் பொம்மை போன்ற இரண்டு வயதுக் குழந்தை. இரண்டு, மூன்று சிறுவர், சிறுமிகள்… தள்ளாடும் தாத்தாக அவருக்கு மகனாய்த் தோன்றிய அறுபது வயதான காந்தி வேட்டிக்காரர். எஞ்சியவர்கள் இருபதுக்கும், நாற்பதுக்கும் இடையே… மூன்று தலைமுறைக்காரர்கள்… ஏதோ ஒரு பட்டியில் நடக்கும், கல்யாணத்திற்குப் போவதாக இருக்கலாம்.

மாப்பிள்ளை மிடுக்கில் ஒரு இளைஞன்; ஜரிகை ஊடகமான பட்டு வேட்டியில், பட்டுச் சட்டையோடு இரவில் நடப்பதற்கு, பகலில் ஒத்திகை கொடுப்பது போல் தோன்றியது… அந்தச் சமயம் பார்த்து, ‘அந்த அரபிக் கடலோரம்’ பாட்டு: அதற்கு ஏற்றாற் போல், சிறுவர்கள் ஆடுகிறார்கள்.

அவர்களோடு ஆடப் போவதற்கு முயற்சித்த சிறுமிகளின் எலிவால் பின்னல்களை, தாயோ, பாட்டியோ இழுத்துப் பிடிக்கிறார்கள். ஆனாலும், அந்தச் சிறுமிகள் பாட்டிற்கேற்றபடி உடலாட்டி, பாட்டிகளையும், தாய்களையும் ஆட்டுவிக்கிறார்கள்.

அந்தத் தொண்டுக் கிழவர் மட்டும் டிரைவரின் இடதுபக்கமுள்ள வேன் தளத்தில் வைக்கப்பட்ட டிரங்க் பெட்டிகளையும், பூக்கூடைகளையும் அடிக்கடிப் பார்த்துக் கொள்கிறார். 'நீயெல்லாம் ஒரு பிள்ளையா' என்பது போல் குறட்டை விட்டுத் தூங்கும் அறுபது வயது மகனை கண்களால் கொத்தப் பார்க்கிறார்.

அந்த வேன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அங்குமிங்கும் சிதறிக் கிடந்த செங்கற்சூளைகளையும், சின்னச் சின்ன வீடுகளையும், மக்கிப் போன தேங்காய் நார் குவியல்களையும் கடந்து கப்பிச் சாலை முடியும் கரடுமுரடான மண்சாலைக்குள் திரும்பியதும் வாயாடியவர்களை, வாயடைத்துப்போக வைக்கும் கற்றுப்புறச சூழல்...

அந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும், எங்கிருந்து வந்தாலும் வெளியூர்க்காரர்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்திவிடும். புறம், அகத்தைத் தீர்மானிக்கும் ஒரு பொல்லாங்குச் சூழல்.

இருபக்கமும், பாதைக்கு வேலியான தாவரக் குவியல்கள். ஈச்ச மரங்களும், பனை மரங்களும் இடித்துக் கொள்கின்றன. கோணல் தென்னை மரங்கள், ஒன்றுடன் ஒன்று குஸ்திக்குப் போவதுபோல் முனைப்போடு நிற்கின்றன. கரடிப் பயங்காட்டும், கன்றுப் பனைகள்..... பழுத்த நரை விழுந்த கிழவன் போல், புழுத்த ஓலைகளோடு நிற்கும் பனை மரங்கள்... இவற்றில் சில, இடி விழுந்த உச்சிப் பொந்துகள்... முட்பாம்புகளாய் படமெடுக்கும் கருவேல மரங்கள் - அவற்றின் மேல் படர்ந்து, உடம்பை சிதைத்துக் கொள்ளும் ஊணான் கொடிகள்... மற்போர் செய்வதுபோல் நெக்கி அடித்து நிற்கும் சப்பாத்திக் கள்ளிகள், கற்றாழைகள்... இடைவெளிகளை இட்டு நிரப்பும் கடுகாட்டு எருக்கஞ் செடிகள்...

உடும்போ, பெருச்சாளியோ, உள்ளிருக்கும் மண் பாதாளக் குகைகள்... கரையான் அமைத்து, கருநாகம் குடிபுகுந்த செதிர் மண் புற்றுக் கோபுரங்கள்... இதற்கு சுற்றுப்புற வேலிகளான பாறைக் குவியல்கள்... சவுக்குத் தோப்பு நரிகள்.... எதிரும் புதிருமான ஒரு ஓணான். ஒரு காக்கா... காக்கா ஓணானைக் கொத்தப் போகிறது... ஓணான் அதன் காலைக் கடிக்கப் போகிறது.

பனைப் பொந்திலிருந்து மேலே எழும்பி, புறாக்கள் பதறி அடிக்கின்றன... ஏழைகளின் உடைபோல், இலை கிழிந்த கல்வாழையில் ஏறி நின்ற அணில், மூக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்துகிறது.

அந்த வேன் ஒரு 'விலக்கில்' ஆமையாய் ஊர்ந்து மறுபக்கமாய்த் திரும்பிய, பாதையற்ற வழித்தடயத்தில் ஒப்புக்கு கழுதைபோல் ஒரு கனைப்பு கனைத்துவிட்டு ஓடிய சக்கரங்களை நடக்க வைக்கிறது.

'போயும், போயும் இந்தப் பக்கமா பொண்ணு எடுக்கணும்' என்று மைத்துனன் காதில் விழவேண்டும் என்பதற்காகவே ஓங்கிக் கத்திய கைக் குழந்தைக்காரி, மூக்கைப் பிடித்துக் கொள்கிறாள், சிறிது வினாடிகளில்.... சில மீட்டர் தூரத்தில், அழுகிப் போன ஒரு நாய் கவிழ்ந்து கிடக்கிறது. தலை சப்பிப் போய், தரையோடு தரையாய் கிடக்கிறது. அதன் பிட்டம், ரத்தக் கட்டிகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன.

பறவைகள், அதை இரையாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை வயிற்றைக் கொத்திய சிட்டுக் குருவிகளை விரட்டும் மைனாக்கள்: மைனாக்களை விரட்டும் காகங்கள்: அவற்றை விரட்டும் கரிச்சான்கள்: அந்தக் கரிச்சான்களோடு மல்லுக்குப் போக மனமில்லாமல் விலகி நிற்கும் பருந்துகள்.

இந்த வீச்சமிக்க பகுதியைத் தாண்டுவதற்காக, வேகப்பட்ட அந்த வேன், டிரைவரின் ஆணையில்லாமலே கரா முரா சத்தத்தோடு நிற்கிறது. பராக்கு பார்த்த டிரைவர், “என்ன இழவு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து எம்பிப் பார்க்கிறார்... வேனுக்கு முன்னால் பாதையடைத்த பாறாங்கற்கள், அத்தனையும் மூன்றுபேரால்கூட தூக்கவோ, இரண்டு பேரால் கூட நகர்த்தவோ முடியாத பாறாங்கற்கள்... இடையிடையே செங்குத்தாய் நட்டு வைக்கப்பட்ட கற்றாழை முட்கள்.. கருவேல முட் குவியல்கள்.

அந்த வேனின் பயணிகள் எழுந்து நின்று எட்டிப் பார்த்தபோது, திபுதிபுவென்று ஆயுதம் தாங்கிய ஆட்கள் ஓடி வருகிறார்கள். இதைப் பார்த்த உடனே டிரைவர் உட்பட நான்கைந்துபேர், முன்பக்கமும், பின்பக்கமுமாக குதித்து புதர்களுக்குள் ஓடுகிறார்கள். டிரைவர் சப்பாத்திக் கள்ளிகளையே செருப்புகளாக்கி, வேதனையற்றுப் போய் ஓடுகிறார்...

இதற்குள் ஆயுதம் தாங்கிகளின் தலைவன்போல் ஒரு கையில் வேல் கம்பையும், இன்னொரு கையில் அரிவாளையும் வைத்திருந்த ஒரு சண்டியன், ஒரு சிலர் காதுகளில் ஊதுகிறான். உடனே அவர்கள் அந்தச் சாலையின் முன்பக்கத் திருப்பத்திற்கும், பின்பக்கத் திருப்பத்திற்கும் ஓடுகிறார்கள்... இந்த வேவு போதாது என்பதுபோல் இரண்டுபேர். அருகிலுள்ள ராட்சத கல் மேட்டிலும் ஏறுகிறார்கள்.

அந்த வேனுக்குள் ஒரே கூக்குரல்கள். “எம்மோ... எய்யோ” என்ற புலம்பல்கள். சிறுவர்கள், இருக்கைகளுக்குள் பதுங்குகிறார்கள். பாம்படக் கிழவிகள் தலைக்கு மேல் கைதூக்கி, கடலைமாடனையும் மயான புத்திரனையும் கூப்பிடுகிறார்கள்... கைக்குழந்தைக்காரி குழந்தையை மாராப்புக்குள் மறைத்துக் கொண்டு, அந்த ஆயுதங்களைப் பார்க்கப் பயந்து கண்களை மூடிக் கொள்கிறாள்.

அதற்குள் உச்சி முதல் பாதம் வரை அழுத்தம் திருத்தமாக இருந்த சண்டியன், தொண்டர்களான குண்டர்களை அதட்டுகிறான். ரத்தக்கட்டிகளே, அவன் வார்த்தைகளாயின.

“ஏமுல பித்துப்பிடிச்சு நிக்கீக... ஆம்பளையா இல்லாதவன் மட்டும் கீழ நிக்கட்டும்... கலப்பட ஜாதிப் பயகளும் சேர்ந்து நிக்கட்டும்.... மத்தவங்க, மேலே ஏறுங்க. எதிர்ச்சாதிப் பயலுக, நம்ம சாதியில இந்த வட்டாரத்துல மட்டும் இருபதுபேரக் கொன்னுட்டான். நாம பத்துப் பேரைத்தான் கொன்னுருக்கோம். இன்னைக்கு, குறைஞ்சது பதினோரு பேரையாவது கொல்லணும். சட்டுப்புட்டுன்னு காரியத்தை முடிப்போம்.

“நேத்தே நம்ம சாதி இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிட்டேன். சீக்கிரமா முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டார். இன்னும் ஏண்டா யோசிக்கீக? வழக்கு, கிழக்குன்னு எதுவும் வராம, நம்ம சாதி தலைவன்க பார்த்துக்குவாங்க. வேலையை முடிப்போம்.”

இறக்கை கிழிந்த குருவியைப் பார்த்து நடக்கும் பூனையைப் போலவே, அந்த ஆயுத பாணிகள் அசாத்தியமான நம்பிக்கையோடு அந்த வேனிற்குள் ஏறினார்கள். அவர்களில் இரண்டிரண்டு பேர் முன் வாசலையும், பின் வாசலையும் உடம்புகளைச் சாத்தி அடைத்துக் கொண்டார்கள். மற்றவர்கள் அரிவாள்களை ஓங்கியும், வேல் கம்புகளை தடவிவிட்டும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தார்கள்.

முகம் தெரிந்த எவரையும் காணோம் - குய்யோ, முறையோ என்று கூப்பாடு போட்டவர்கள்: அப்போதே செத்தவர்கள் போல் மூர்ச்சித்து கிடந்தவர்கள் : செத்துப் பேயாகி கத்துவதுபோல் கத்தியவர்கள்

இதற்குள் வெளியே தப்பித்து ஓடிய, தொண்டுக் கிழவரின் மகன், “எய்யா... எய்யா” என்று வேனுக்கருகே வருவதும், பிறகு ஓடுவதுமாக இருந்தார். ‘என்னையும் கொல்லட்டும்’ என்று முண்டியடித்த கல்யாண மாப்பிள்ளையை கக்கத்தில் அடக்கிக் கொண்டார். அதற்குள் இரண்டு பேர் கீழே குதித்து அந்த இருவரையும், வேல் கம்புகளை முதுகில் போட்டு அந்த வேனுக்குள் திணித்தார்கள்.

வேன்வாசிகள் ஆளுக்கு ஆள் முறையிட்டார்கள். “எங்க முகத்தப் பாருங்கையா... நாங்கெல்லாம் ஒங்களுக்கு எதிரியாய்யா? என்ன தப்புயா செய்தோமி? அதையாவது சொல்லிட்டு வெட்டுங்கையா.”

சண்டியர் தலைவன் ஒரு குரூரப் புன்னகையோடு கொடூரமாக விளக்கமளித்தான்:

“ஒங்க சாதிக்காரன், எங்க சாதிக்காரங்கள வெட்டிக் கொன்னா, எங்க கையி புளியங்காயா பறிக்கும்?”

“எங்க சாதி என்ன சாதின்னு தெரியாமலே கொல்ல வர்றது நியாயமா? நாங்க ஒங்க சாதியாக்கூட இருக்கலாமே....”

வேல் கம்புகள், இடுப்போடு தொங்கின. தலைக்கு மேல் போன வெட்டரிவாள்கள் வயிற்றைத் தொட்டன. சூரிக்கத்திகள் குறி விலகி நின்றன. அந்தச் சமயம் பார்த்து அந்த இளம் பெண்ணின் மாராப்பிலிருந்து திமிறி வெளிப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை, ஒரு வேல் கம்பனைப் பார்த்து, கழுத்தைச் சாய்த்து ஒய்யாரமாகச் சிரித்தது. அந்தக் கம்பைப் பிடித்து ‘தாத்தா’ என்று இழுத்தது. கைக்குழந்தைக்காரி விக்கலும், விம்மலுமாய் அழுதழுது சொன்னாள்:

“நீங்க எங்க அய்யா மாதிரி, அதான் இவா தாத்தா மாதிரி இருக்கீக. அதனாலதான் இவா இப்படிச் சிரிக்கா.... வேணு முன்னா வெட்டிட்டுப் போங்கய்யா. ஆனாலும் ஒரே வெட்டா வெட்டுங்க. வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணும். கை போயி, கால் போயி, எங்கள முடமா மட்டும் விட்டு வைக்காதீங்க.”

தாத்தா பட்டம் வாங்கிய வேல்கம்பருக்கு என்னவோ போலிருந்தது. அவர் பேத்தியும் இவள் மாதிரிதான். மகள் கூட, அந்தக் குழந்தையின் அம்மா சாயல்தான். சண்டியன் தோளில் கைபோட்டு, தோழமையாய் யோசனை சொன்னார்:

“ஒருவேள இவங்க நம்ம சாதியா இருக்கலாம்... பாண்டவர்கள் அரவான பலி கொடுத்தது மாதிரி, நாம கொடுத்துடக் கூடாது. ஏமுல நீங்க எந்த சாதிடா?”

வேன் பொறிக்குள் சிக்கியவர்கள் பதிலளிக்கும் முன்பே, சண்டியன் பதிலளித்தான்.

“இதுகூடவா ஒனக்கு தெரியல நம்ம சாதி உயரம்... இவனுக குள்ளம். நாம பெரிய பெல்ட்டா போட்டிருக்கோம்... இவனுக சின்ன பெல்ட்டா போட்டிருக்கானுக. நம்ம சாதி எதிர்த்து நிற்கிற சாதி... இவனுக பிச்சைக்காரன் மாதிரி கெஞ்சுறான். சட்டுபுட்டுன்னு முடிச்சுடணும்.”

அரிவாளை ஓங்கி ஒருவருக்கு குறிபாத்த சண்டியனின் கையை வேல்கம்பர் பிடித்துக்கொண்டு கெஞ்சாமலும், மிஞ்சாமலும் பேசினார்:

“பொறுப்பா- நான் இவனுக எந்த சாதின்னு கண்டுபிடிச்சு சொல்றேன். பெல்ட்டுன்னு பாத்தா, அதோ அந்த கிழவர் பெரிசா போட்டிருக்கார். உயரமுன்னு பாத்தா அதோ ஒரு ஒட்டடைக்கம்பன். உயிருன்னு வந்துட்டா... அதுவும் நிதானமான கொலைன்னு வந்துட்டா, ஒருத்தன் எந்த சாதியா இருந்தாலும், கதறுவான்: காலைத் தொட்டு கும்புடுவான். ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் பொறு.”

“போலீஸ்காரங்க வந்து நம்மள விலங்கு போட்டு இழுத்துட்டு போகணுங்கிறியா?”

சண்டியருக்கு, ஒரு குயுக்தி. அந்த சாதிப் பயகள வெட்டுற சாக்குல, இந்த சொந்த சாதிப் பயலையும் வெட்டிக் கொல்லணும்; இல்லாட்டா பிழைக்க விடமாட்டான். ஒவ்வொரு தலைக்கும் ஐயாயிரம் ரூபாய் தலைவர் தந்திருக்கார். இந்தக் கொலை செய்தி பேப்பர்ல பாத்ததும் இன்னும் ஐயாயிரம் தருவார். இப்போ எந்த சாதியை வெட்டணும் என்கிறது முக்கியமல்ல... எத்தனை பேரை வெட்டணும் என்கிறதுதான் முக்கியம்.

‘ஏலே! நீங்க ஆம்புளைங்களா.. இல்ல பொம்பளைங்களா...

“பொறுண்ணே ... மனுசங்களா விசாரிப்போம். அப்புறம் இருக்கவே இருக்கு, அரிவாள். ஏமுல... நீங்க எந்த சாதிடா?”

வேல்கம்பர் அந்த வாசிகளில் ஒரு நடுத்தர வயது நோஞ்சான் மனிதரை உற்றுப் பார்த்துக் கேட்டார். உடனே அந்த நோஞ்சான் எழுந்து பதிலளித்தார்:

“சாதின்னு பாத்தா, இதுல பாதிபேரு இரண்டு சாதிக்கும் பிறந்தவங்கன்னு வச்சிக்கலாம். மத்தவங்க இருக்காங்களே... அந்த மத்தவங்க...”

“ஏய்! பாசாங்கா செய்யுற..? உன் சாதியை நானே கண்டுபிடிக்கேன். மத்தவங்க கம்மா இருக்கணும். இந்தாடா நீயே சொல்லு, ஒங்க குலதெய்வம் எதுடா? சொல்றியா? இல்லே ஒரே வெட்டா...”

“சொல்லுறேன்.. அய்யா சொல்லுறேன்.. எங்க குலதெய்வம் சுடலைமாடன்.. வீட்டுத் தெய்வம் மாரியம்மன்- ஊர் தெய்வம் மயான புத்திரன்.”

“ஒங்க பொழப்பு என்னடா?”

“கொஞ்ச நஞ்சை நிலம்... கூலிக்கு விவசாய வேலை. காலையில கஞ்சி... சாயங்காலம் சாராயம். நம்புனவனுக்காவ தலையைக் கொடுக்கிறது. நம்பி நம்பியே ஏமாந்து போறது. இதுதான நம்ம ஜாதியோட குணம்.”

வேல்கம்பரை ஒரு தள்ளு தள்ளிவிட்டு சண்டியன் அரிவாளை தடவி விட்டபடியே கேட்டான்:

“சரி... ஒங்க சாதியைச் சொல்லவேண்டாம். எங்க சாதியாவது எந்த சாதின்னு சொல்லுங்க, பார்ப்போம்.”

“நம்ம சாதின்னு சொல்லுங்கையா... நெஞ்சு கொதிக்குதய்யா. நம்ம சாதி சனங்கள, அந்த சாதிப் பயல்க வெட்டிப் போடுறதை நினைச்சா ரத்தம் கொதிக்குதய்யா... அந்த சாதியில ஒருத்தன கொன்னுட்டுத்தான் மறுவேலைன்னு வைராக்கியம் “வச்சிருக்கேன்யா... நம்ம கண்ணே , நம்மள குத்திடக் கூடாதுய்யா ...”

“ஏலே... இந்தப் பசப்புற வேலை வேண்டாம். ஒரு நிமிஷம் டைம் கொடுக்கேன். எந்த சாதின்னு சொல்லு. இல்லாட்டா மாறு கை... மாறு காலுதான். ஏமுடா பாத்திட்டு நிக்கீக? இவனுக, எதிர் சாதிப் பயலுக. இதுக்கு மேல விட்டு வைக்கக்கூடாது.”

சில தாழ்ந்த அரிவாள்கள் மேலோங்கின. தொங்கிய வேல்கம்புகள் சாய்வாயின. ஓணானோடு விளையாடிவிட்டு, இறுதியில் அதைக் கடித்துக் குதறிப்போட, உடம்பை விறைக்குமே தெருநாய்... அந்த தெரு நாய்கள், வெறி நாய்கள் ஆனதுபோல் ஆயுதபாணிகளின் கண்களில் ஒரு செஞ்சிவப்பு: வாயில் ஒரு கொடூரப் புன்னகை. அந்தக் குழந்தை, வேல்கம்பர் பக்கம் தாவியது. அந்தக் கம்பை இழுத்துப் பிடித்து, தாத்தா.... தாத்தா.. என்று மாறி மாறிச் சொன்னது. உடனே அவர் ஓங்கிக் கத்தினார்:

“நாம எந்த சாதின்னு தெரியாததால, இவங்களும் சாதியை மறைக்காங்க, எனக்கு சந்தேகமே இல்லை, இவங்க நம்ம சாதிதான். வேணுமுன்னா இவங்களோட வேனை ஊருக்கு கடத்திக்கிட்டுப் போயி, அக்கம் பக்கம் விசாரிச்சு அப்புறமா கொல்லலாம். அதுவரைக்கும் நம்மகிட்டயே சிறை இருக்கட்டும்...”

“இந்தா பாரு சின்னச்சாமி அண்ணே ! நீ எங்களுக்குத் தலைவர்தான்... இல்லேங்கலெ... ஆனா இவங்களுல ஒருத்தன் தலையாவது உருண்டு, அது நம்ம சாதித் தலைன்னா, ஒன் தலை விழும்... குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் கம்பா நாம ஆயிடக்கூடாது. எதிர்ச் சாதிக்காரப்பயக இளக்காரமா சிரிக்கக் கூடாது.”

கொலையாளிகளுக்குள் சிறிது குழப்பம். போதாக்குறைக்கு அந்தக் குழந்தையின் வாயில் கொள்ளைச் சிரிப்பு... கண்களை ஓரம் சாய்த்து கைதட்டுகிறது: இடுப்பில் கை வைத்து கழுத்தை கேள்வியாக்கிச் சிரிக்கிறது. கள்ளச் சிரிப்போ... கேலிச் சிரிப்போ... ஆனாலும், கொள்ளைச் சிரிப்பு. ஒருத்தன் துண்டைப் பிடித்து இழுக்கிறது; இன்னொருத்தன் கையைப் பிடித்து செல்லமாகக் கடிக்கிறது.

அதற்குள் சாலையின் மேல் முனையில் உளவு பார்த்த இருவர் ஓடிவருகிறார்கள். ராட்சதக் கல்மேட்டில் நின்றவர்கள், எக்கி எக்கிப் பார்த்துவிட்டு கீழே குதிக்கிறார்கள். ஓடியபடியே கத்துகிறார்கள்... சொல்லி முடிக்காமலே புதர்களுக்கள் தாவுகிறார்கள். தலையை எடுப்பதைவிட, தலை தப்பித்தால் போதும் என்கிற உயிர்பயம். அல்லது உயிர் ஆசை... ஆசை, பயமான யதார்த்தம்.

“ஓடுங்க, ஓடுங்க... ஆயுதப்படை போலீஸ் வருது, துப்பாக்கி வேனுக்கு துருத்தி நிக்குது. ஓடுங்க. ஓடுங்க, ஏய் சின்னச்சாமி! கூட்டி வந்து கழுத்தறுத்திட்டியடா... ஊருக்கு வா , பாத்துக்கிறோம்... ஓடுங்கப்பா ஓடுங்க.”

அந்த வேனுக்குள் எல்லோரும், சண்டியரையும், வேல் கம்பரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். வெட்டிவிட்டு ஓடணுமா.. இல்ல வெட்டாமலே ஓடணுமா?

அந்தப் பயணிகளில் பாம்படக் கிழவி ஒருத்தி உறை நிலையிலிருந்து உயிர் நிலைக்கு வந்து, சண்டியனின் மோவாயைத் தாங்கியபடியே பேசினாள். அவளுக்குள் லேசான பயத் தெளிவு.

“இந்தாப் பாரு மவராசா... மாடு முட்டி மாடு செத்ததில்ல. மனுஷன் வெட்டி, மனுஷன் சாகலாமாய்யா?... வண்டியில வார போலீஸு, இரண்டு சாதியும் இல்லாம வேற சாதியா இருக்கும். கண்டவுடனே சுடுவானுக. நம்மள மாதிரி அவனுகளுக்கும் இத்தனை பேரைச் சுடணுமுன்னு ஒரு எண்ணிக்கை இருக்குதாம்.. மூட்டைப் பூச்சி கூட, அத நசுக்கப் போகும்போது செத்துப் போனது மாதிரி பாவலா செய்யும். உயிரோட மதிப்பு அதுக்குத் தெரியுது... நமக்குத் தெரிய வேண்டாமாய்யா? அதோ, போலீஸ் லாரி சத்தம் கேட்குது. ஒண்ணு ஓடுங்க... இல்லாட்டா, எங்ககூட வந்தது மாதிரி இதுல உட்காருங்க. ஒங்கள காட்டிக் கொடுக்க மாட்டோம்.”

நோஞ்சான் மனிதர் பாம்படக் கிழவிக்கு, பக்க பலமாகப் பேசினார்:

“ஆமாங்கய்யா. நாங்க உயிரோடு இருந்தாத்தானே ஒங்கள காட்டிக் கொடுக்க முடியாது? எங்க பிணம், ஒங்களுக்கு எதிரா சாட்சி சொல்லுமே! இதுக்கு பேர்தான் விதி அல்லது யதார்த்தம். நம்ம ரெண்டு சயிடும் உயிரோடு இருந்தாத்தான் ஒருத்தர் உயிரை இன்னொருத்தர் உயிரு, முட்டுக் கொடுக்கும். எங்க அக்கா சொன்னதைக் கேளுங்க. ஊர்ல அவளுக்கு வழக்காளின்னு பேரு. ஒரே சொல்லுல நிக்கிற அக்கா...”

போலீஸ் வாகனம் நெருங்கிக் கொண்டிருப்பதை அதன் குரல் காட்டியது. அந்த வேனுக்குள் நுழைந்தவர்களில் சண்டியன் உட்பட சிலர் வெளியே குதித்து ஓடினார்கள். வேல்கம்பர் உட்பட பலர், ஆயுதங்களைப் புதர்களுக்குள் எறிந்துவிட்டு, பால்குடிக்கத் தெரியாத பூனைகள்போல் இருக்கையில் உட்கார்ந்தார்கள். அந்த வேன்காரர்களோடு விரவிக் கிடந்தார்கள்.


தமிழன் எக்ஸ்பிரஸ் - பொங்கல் மலர் 1998

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈச்சம்பாய்/உயிர்_ஊஞ்சல்&oldid=1664563" இலிருந்து மீள்விக்கப்பட்டது