ஈச்சம்பாய்/பதிப்புரை
சு. சமுத்திரத்தின் வாடாமல்லியும், பாலைப்புறாவும் இன்றைய சமூக இயக்கங்களுக்கு பயன்பாட்டு இலக்கியமாய் மாறி உள்ளன. இவரும், வாடாமல்லிக்கு அமரர் ஆதித்தனார் பரிசாகக் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில், இந்த நாவலின் தாக்கத்தால் ஏற்பட்ட அரவானிகள் சங்கத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். ஒரு எழுத்தாளன் எந்த மக்களை அடித்தளமாக வைத்து எழுதுகிறானோ, அந்தப் படைப்பிற்கு பரிசு கிடைத்தால், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது ஏகலைவனின் கருத்துமாகும். இந்த எளிய பணி தொடரும்.
சு. சமுத்திரம், பயன்பாட்டு இலக்கியத்தைப் படைப்பதாக இந்த நூலின் பின் அட்டையில் தெரிவித்தக் கருத்து, இதற்கு ஆய்வுரை எழுதிய முனைவர் இரா. இளவரசு அவர்களின் பார்வைக்கு சென்றதில்லை. ஆனாலும், அவரும், பயன்பாட்டு இலக்கியம் என்ற சொற்பதத்தை சு. சமுத்திரத்திற்குப் பொருத்தியிருப்பது ஒரு ஒருமையைக் காட்டுகிறது. படைப்பாளியும், ஆய்வுரையாளரும் தங்களையறியாமலே ஒன்றிப் போகும்போது, அதுவே இலக்கியச் சிறப்பாகிறது.
ஏகலைவனின் ஆறாவது வெளியீடான இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு, ஆய்வுரை வழங்கிய முனைவர் இரா. இளவரசு அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் ஒய்வுபெற்ற போராளித் தமிழாசிரியர். இந்த ஒய்விற்குப் பிறகும், ஒய்வு கிடைக்காமல் சமூக பணிகளையும், இலக்கியப் பணிகளையும் கண்துஞ்சாது, மெய் வருத்தம் பாராது இயக்கும் நேர்மையான சிந்தனையாளர். இந்த ஆய்வுரையே இவரது உழைப்புக்கு கட்டியம் கூறும். இவரது ஆய்வுரை, பதிப்பகத்திற்கும், படைப்பாளிக்கும் கிடைத்த ஒரு இலக்கிய கௌரவம்.
பேராசிரியர் இரா. இளவரசைப்போலவே, மிகச்சிறந்த சிந்தனையாளரும், மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளருமான பேராசிரியர் மெய்யப்பன் அவர்களும், இந்தப் பதிப்பகத்தின் நிர்வாகி குருமூர்த்தி அவர்களும் இந்தத் தொகுப்பிற்கு அச்சுரதம் கொடுத்தவர்கள். இதற்கு முகப்போவியம் தந்த ஒவியப் போராளி புகழேந்தியும் மிகச் சிறந்த சமூகச் சிந்தனையாளர். இவர்களின் ஒத்துழைப்போடு இந்தத் தொகுப்பு வெளிவருகிறது. இது வெற்றிபெறுவதில் வியப்பேதுமில்லை.
ஏகலைவன்
"