ஈச்சம்பாய்/மருமகள்

மருமகள்

கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர்—கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின் மகன் முனுசாமியிடம், கிராம சேவக்கும், சேவிகையும் விளக்கமாக எடுத்துரைத்து, பொன்னம்மாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மருமகள்காரி வாசல் வரை வந்தாள். மாமியாரை ஜீப்பில் பார்த்ததும், தனக்கும் வயதாகி, கண்ணும் கெட்டிருந்தால், இந்த ஜீப்பில் எறியிருக்கலாமே என்று ஏங்கியவள் மாதிரி, பெருமூச்சு விட்டாள்.

ஏதோ ஒரு வழியாக, கண் சிகிச்சை முகாம் துவங்கியது. அந்த டிவிஷனைச் சேர்ந்த ஆறு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களும், இதர அதிகாரிகளும், கோட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையில், அந்தப் பஞ்சாயத்து யூனியனை முற்றுகை இட்டார்கள். யூனியன் ‘கவுன்சில் ஹால்’ ஆபரேஷன் தியேட்டராகியது. சென்னையிலிருந்து வந்த கண் டாக்டர்கள், கொண்டு வரப்பட்ட முதியவர்களின் சிலரது கண்கள் ‘இன்னும் பழுக்கவில்லை’ என்று கூறி, அவர்களைத் தள்ளி விட்டார்கள். அப்படியும் நூற்றைம்பது கிழவர்—கிழவியர் தேறினர். இவர்கள் அனைவருக்கும் கண் புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இது துவங்கியதிலிருந்து முடிவது வரைக்கும்—நான்கு நாட்களும்—நல்ல சாப்பாடும், ஆரஞ்சு, ஆப்பிள், அது இது என்றே ஏக அமர்க்களம். யூனியன் அருகே பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்காக இருந்த ‘சென்ட்ரல் கிச்சனில்’ சமையல் செய்யப்பட்டது.

கிழடுகளுக்கு அந்த நாளும் வந்தது. அன்று மாலையில் ஒவ்வொருவருக்கும் கலெக்டர், கண்ணாடி வழங்க வேண்டும். டி.வி. வரும். ரேடியோக்காரர்கள் வருவார்கள். மேடையில் பேகவதற்குச் சொற்பொழிவாளர்கள் வருவார்கள்.

கிராம சேவக் சீனிவாசனை, ஆணையாளர் தம் அறைக்குள் வரவழைத்தார்.

“சபாஷ் சீனி.... நாமதான் அதிகமாகப் பிடிச்சிருக்கோம். ஆனா குவான்டிட்டி மட்டும் போதாது, குவாலிட்டி ஆப் சர்வீஸ் முக்கியம். அதனால கலெக்டர் ஏதும் கேட்டால், நம்ம ஆட்கள், அவங்கள நல்லா கவனிச்சதாச் சொல்லணும், சொல்ல வைக்கணும். இந்தக் கலெக்டர் ரொம்ப இண்டலிஜன்ட் மேன். பல ஊர் தண்ணிய குடிச்ச மனுஷன். எந்தச் சமயத்துல என்ன கேட்பார்னு தெரியாது. அதனால பெரிசுகள உஷாரா கவனிச்சுக்கோ. புரியுதா? யாரும் கம்ப்ளெயிமனட் பண்ண மாட்டாங்களே? எதுக்கும் நீ சரிக்கட்டுற விதமாச் சரிகட்டு, போய்யா கண்ணு.”

சீனிவாசன் ‘சரிக்கட்டப்’ போனார். “தாத்தாமாரே, பாட்டிமாரே, கலெக்டர்கிட்ட நாங்க நல்லா கவனிச்சதாசி சொல்லணும்.” என்று மன்றாடினார். அப்படி மன்றாடியது தப்பாய்ப் போயிற்று.

“யோவ்... நீ கொடுத்த அழுவுன ஆரஞ்சி இங்கதான் இருக்கு, கலெக்டர்கிட்ட காட்டப்போறேன்” என்றார் ஒருவர். “சோறுல.... இருந்த கல்லுங்களப் பொறுக்கி வச்சிருக்கேன். கலெக்டர்கிட்ட காட்டப் போறேன்” என்று ஒரு படுகிழவி பல்லவி பாடினாள்.

மேற்கொண்டு பேசாமல் சீனிவாசன், வெறுப்போடு வெளியே வந்து முனங்கினார். கல்லைப் பொறுக்குகிற அளவுக்கு இதுங்களுக்குப் பார்வை கொடுத்தது எவ்வளவு பெரிய தப்பு! அட கடவுளே...

யாரோ தன் கையைப் பிடிப்பதைப் பார்த்து, அவர் திடுக்கிட்டார். பொன்னம்மா பாட்டி வெற்றிலை வாயுடன் அங்கே வந்தாள்.

"ஏண்டாப்பா, அந்தக் கிழடுங்கள விடு. ஒன்னப்பத்தி நான் கலெக்டர் கிட்ட நல்லா சொல்றேன்... கவலப்படாத ராசா-"

"ரொம்ப ரொம்ப நன்றி பாட்டி, ஒனக்காவது நன்றி இருக்கே ."

"ஆனால் ஒண்ணு, நான் அப்படிச் சொல்லணுமுன்னா நீ எனக்கு மூணு ஆப்பிள் தரணும். எட்டணா கையில் கொடுக்கணும்."

"லஞ்சமா?"

“அப்படித்தான் வச்சிக்கயேன்."

"பாட்டி, இது அநியாயம்..."

"எதுடாப்பா அநியாயம்? நீ எத்தன பேருகிட்ட எவ்வளவு லஞ்சம் வாங்கியிருப்பே? அதுலதான் கேக்கேன். இப்பவே கொடுக்கணும். அப்பதான் நல்லபடியாச் சொல்லுவேன். இல்ல."

சீனிவாசன் மார்பில் அடித்துக்கொண்டே, அதே மார்புப் பையிலிருந்த எட்டணாவை எடுத்துக் கொடுத்தார். கோட்ட வளர்ச்சி அதிகாரிக்கு வைத்திருந்த அத்தனை ஆப்பிள் பழங்களையும் பாட்டியிடம் கொடுத்துவிட்டார். பாட்டி பழங்களை முந்தானைக்குள்ளும், காசை அதன் முனைக்குள்ளும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

மாலை வந்தது. கலெக்டர் வந்தார். கண்ணாடிகள் தந்தார். சீனிவாசன் பயந்ததுபோல் அங்கிருந்த எந்த ஒரு கிழவரோ அல்லது கிழவியோ குறை சொல்லவில்லை. பொன்னம்மா கிழவிக்கு அவசரப்பட்டுக் காசையும் ஆப்பிள்களையும் கொடுத்துவிட்டோமோ என்று சீனிவாசன் 'பின்யோசனை' செய்தார்.

கண் சிகிச்சை முகாம் ஒரு வழியாக முடிந்தது. கிழவர்-கிழவியரும் யூனியன் ஜீப்பில் ஏற்றப்பட்டு, அன்று இரவே தத்தம் வீடுகளில் இறக்கப்பட்டார்கள். மிகப் பெரிய கல்யாணம் ஒன்று நல்ல விதமாக நடந்து முடிந்த திருப்தி.

மறுநாள், கமிஷனர் எல்லோரையும் கூப்பிட்டார்.

இந்த முகாம்ல நாமதான் முதல்ல வந்திருக்கோமாம். கலெக்டர் சொல்லிவிட்டாராம். டிவிஷனல் ஆபீஸ்ல இருந்து சொன்னாங்க. நாளைக்கு ஷீல்டு வருமாம். ஒங்க எல்லோருக்கும் நன்றி. பப்ளிஸிட்டி ஸார், இதக் கண்டிப்பா பேப்பர்ல போடணும். வாங்கப்பா. இந்தச் சந்தோஷமான சமாசாரத்த கொண்டாடாம விடக் கூடாது. நைட்ல எங்கயாவது போயி டின்னர் சாப்பிடலாம். டி.டி.ஓ.வையும் வரச் சொல்லலாம். சீனி, பணத்த கலெக்ட் பண்ணுய்யா. ஒனக்கு உண்மையிலேயே மோதிரம் போடணுமுய்யா - பித்தளையிலாவது."

'கலெக்க்ஷன்' நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் வெளியே இருந்து கத்திக்கொண்டே உள்ளே வந்தார். பொன்னம்மா பாட்டியின் மகன்.

"யோவ்! எங்க அம்மா எங்கய்யா? அவள என்னய்யா செய்திங்க? சொல்லுங்கையா. எல்லார் அம்மாவும் வந்தர்ச்சு. எங்கம்மா மட்டும் வரல... என்னய்யா பண்ணுனிங்க? பாவிங்களா..."

ஆணையாளர் திடுக்கிட்டார், நழுவப் போன பப்ளிசிடி ஆபீசரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே, 'நேத்து நைட்லயே ஜீப்ல அனுப்பிட்டோமே... என்னய்யா இது, பெரிய இழவாப் போச்சு. சீனி! வாய்யா டிரைவர கூட்டியாய்யா. சீக்கிரமா கூப்பிடுங்யா. கூப்புடு கூப்புடு.' என்றார்.

டிரைவர் வந்த கையோடு, விளக்கினார். "ஓ. ம்ஞ்சப் புடவை பாட்டியா? ஜீப்ல ஏறமாட்டேனுட்டு இந்த ஊரிலயே மகள் வீடு இருக்கதாச் சொல்லி, அங்க போறேன்னு பிச்சிக்கிட்டு..."

"பிச்சுப்புடுவேன் பிச்க. எங்கம்மாவுக்கு நான் ஒருத்தன்தான் பிள்ள. பொண்ணுங் கிடையாது, மண்ணுங் கிடயாது, என்னய்யா பண்ணுனிங்க? பாவிங்களா.. கொன்னுட்டீங்களா? லாரிக்குக் குறுக்கே தள்ளிப்பிட்டிங்களா? என்னய்யா பண்ணுனிங்க... அம்மா. அம்மா... யோவ்! இன்னும் அரை மணி நேரத்துல அம்மாவக் காட்டலன்னா, நான் கலெக்டர்கிட்ட போவேன்... இல்லன்னா அண்ணங்கிட்ட (மந்திரி) போகட்டுமா?"

கமிஷனர் எள்ளுங்கொள்ளுமாகப் பேசினார். "நீ யாருகிட்டயும் போகவேண்டாம். என்கிட்டயே வா. யோவ் சீனி! சைக்கிள்ல வடக்குப் பக்கமா போ. ஜல்தி... என்ஜினியர் ஸார், உங்க மோட்டார் சைக்கிள்ல கிழக்கா போங்க. ஒங்க காண்ட்ராக்டர ஸ்கூட்டர்ல தெற்கா போகச் சொல்லுங்க. இந்தாப்பா டிரைவர்! நீ மேற்காப் போ. பப்ளிஸிடி ஸார்! ஒங்க காரை கொஞ்சம் குடுக்கிறீங்களா' காமாட்சி! நீ பஜார்ல போயி தேடு. ஒரே பேஜாரு போச்சு.... சீக்கிரம்.... அவசரம்... போங்க... ஆளோடு வரணும். வெறுங்கையோட வரக்கூடாது. போங்கய்யா. சீக்கிரமா.... ஜல்தியா..... குயிக்கா.... போங்கய்யா... போங்க. இந்தாப்பா, ஏய்யா அழுவுற? ஒம்மா கிடச்சிடும்... நானிருக்கேன்."

"நீ எதுக்குய்யா? எனக்கு அம்மாதான் வேணும்."

ஒருமணி நேரம் உருண்டோடியது.

வெறுங்கையோட வர விரும்பாதவர்கள்போல் அத்தனை பேரும் தத்தம் வாகனங்களில் ஆளுக்கொரு கிழவியாகக் கொண்டு வந்தார்கள். அத்தனை கிழவிகளும், 'இந்த அநியாயத்தக் கேக்க ஆளில்லயா? அட கடவுளே, சும்மா போய்க்கிட்டிருந்த எங்கள இழுத்துக்கிட்டு வந்தா என்னடாப்பா அர்த்தம். நாங்க என்ன தப்பு பண்ணினோம்? அநியாயமா கொண்டாறதுக்கு எத்தனாவது சட்டத்துல இடமிருக்கப்பா?" என்று கேட்டபோது, ஆணையாளருக்கு மூளை குழம்பியது.

இந்த அமளிக்குள், ஊர்நல ஊழியர் சீனிவாசன், திமிறிக் கொண்டிருந்த பொன்னம்மா பாட்டியை, சைக்கிள் கேரியரில் பலவந்தமாய்ப் பிடித்து வைத்துக்கொண்டே, சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தார். முனுசாமி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தான். தாயும் தனயனும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். சீக்கிரமாய் வீட்டுக்குப் போக நினைத்து, ஜீப்பில் போகாமல், டிரைவரிடம் அவளை முட்டாள்தனமாக ஒப்படைத்த சீனிவாசனுக்கு நிம்மதி. கமிஷனருக்குச் சந்தோஷம். பப்ளிசிடி ஆசாமிக்குத் தன் கார் திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இதற்கிடையே,, பலவந்தமாகக் கொண்டு வரப்பட்ட கிழவிகளின் கூக்குரல் அதிகமாகியது. ஒரு பாட்டி, வாயில் அடித்துக் கொண்டாள். இன்னொரு கிழவி வயிற்றில், "அய்யய்யோ... அம்மம்மோ- அக்கிரமக்காரங்களக் கேக்க ஆளு இல்லியா' நாசமாப் போற பயலுகளா. எதுக்குடாப்பா, இப்டி அக்ரமம் பண்றீய? அழிஞ்சிப் போயிடுவிங்கடா அநியாயக்காரப் பாவிங்களா..." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஆணையாளர் ஆணையிட்டார்.

"யார் யார் எந்தெந்தப் பெரியம்மாக்கள் எந்தெந்த இடத்துல பிடிச்சிங்களோ... அந்தந்த இடத்துல அதுங்கள விட்டுட்டு வாங்க. உம்.. ஜல்தி... குயிக்..."

கிழவிகள் காரிலும் ஸ்கூட்டரிலும் சைக்கிளிலும் பறந்தார்கள். பொன்னம்மா பாட்டி மட்டும் மகனோடு அங்கே நின்றாள். அவள் முந்தானை கனத்திருந்தது. ஆணையாளர் கத்தினார்.

"பாட்டி! ஒனக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? பொறுப்பில்லாம நீ பாட்டுக்குப் போயிட்டால் என்ன அர்த்தம்? யூஸ்லஸ்... கலெக்டரு என் தாலிய அறுத்தால், நீயா திருப்பிக் கட்டுவ? என் பதவிக்கு உலை வைக்கப் பாத்துட்டியே. யோவ் சதுரவட்டை! ஒன் அம்மாவ நாங்க ஏதோ கடத்தனதுமாதிரி குதிச்சியே! இப்போ என்ன சொல்லுற... சிரிக்காதய்யா...... அசிங்கமா இருக்குது."

"கோவிச்கச்காதப்பா! நீ மவராசனா இருக்கணும். என்னோட மருமகள் மச கையா இருக்கா. இந்த ஆப்பிள் பழத்தைக் கொடுத்தா, ஆசையோட திம்பா. அதுக்காவத்தான் அடாவடியா பஸ் சார்ச்சிக்கு எட்டணா வாங்கிக் கிட்டுத் தலமறவாயிட்டேன். ஆனா பஸ் எங்க நிக்குமுன்னு.. தெரியாம ராத்திரி முழுதும் கத்திக்கிட்டே இருந்துட்டேன். கோவிச்சுக்காதப்பா!"

"ஆமா. ஜீப்ல போனால் என்ன? எதுக்காவ பஸ்ல போக நினைச்சே?"

"ஜீப்ல இருக்கிறவங்க பழத்த பிடுங்கிக்கிட்டா, மருமவகிட்ட குடுக்க முடியுமா? டிரைவரே பழத்தைத் தந்திடுன்னு கேக்கலாம். கோவிச்கக்காதப்பா. இந்தா, பழஞ் சாப்பிடு. முனியா! ஏண்டா அழுவுற? நான் தான் வந்துட்டேனே.... அவா- மூளியலங்காரிமூதேவி சண்டாளி... உன் பொண்டாட்டி... எப்படிடா இருக்கா? அவளுக்காவ இம்மாம் பழத்தையும் ஒளிச்சி வச்சிருந்தேன். வா போவலாம். அவா தேடிக்கிட்டு இருப்பாள். மசக்கக்காரி... சீக்கிரமாப் பழத்தக் குடுக்கணும்."

ஆணையாளர் சிரித்தார். அவர் சிரித்ததைப் பார்த்து, சீனிவாசன் சிரித்தார். காமாட்சியும், சிரித்தாள். விவகாரம் சிரிப்பாய் சிரிக்காமல் நல்லபடியாய் முடிந்ததற்காக எல்லோரும் சிரித்தார்கள்.



- குமுதம், 9-3-78

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈச்சம்பாய்/மருமகள்&oldid=1664566" இலிருந்து மீள்விக்கப்பட்டது