ஈட்டியெழுபது

ஒட்டக்கூத்தர் எழுதிய ஈட்டியெழுபது.

விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

கடவுள் வாழ்த்து

தொகு

(நேரிசை வெண்பா)
நாட்டிலுயர் செங்குந்தநாயகர் மீதிற்சிறந்த
வீட்டியெழுபதினைப்பாடக் - கோட்டிற்
பருமாவரை யதனிற்பாரத நூறீட்டுங்
கரிமாமுகன்கழலே காப்பு.

தற்சிறப்புப் பாயிரம்

தொகு

(கட்டளைக் கலித்துறை)
பூவார் புவனையிற் சோமன் றரும்பழி போனபின்பு,
நாவாணர் போற்றிய நாடகங்கேட்ப நலமுடனே,
யாவாணர் செங்குந்தராயிரத் தெண்டலை கொய்திரத்தப்,
பாவாடை யிட்ட துலகமெல் லாம்புகழ் பாலித்ததே.

நூல்

தொகு

பூதலம்வாழ்ககுந்தர்பொலிவுடன்விளங்கநான்கு,
வேதமெந்நாளுமோங்கவேதியர்பசுக்கள்பல்க,
மாதவர்வளவன்செங்கோல் வளமைகுன்றாதுநிற்க,
வோதமே யறையும்பொன்னி யுறந்தையுஞ் சிறக்கமாதோ. (1)

இஃது மங்கலமுதலிய சப்தபொருந்தங்களுமமைய வாழ்த்துக்கூறியது.

கோட்கவிகொண்டுமாக்கள் கொடுந்தமிழ்கூறநீத்துத்
தாட்கவிப்புதியவாட்டந்தலைக்கடைதுரந்துசாட
வாட்கவிகொண்டமன்னன்வளவனுமகிழநாமே
நாட்கவிபாடுநாட்போலிருப்பதுபெரியநாடே. (2)

இஃது இவ்வீட்டியெழுபதென்னும் பிரபந்தத்தைக் கல்வித்திறமுடைய சோழனு மகிழ்ந்து கேட்டா னென்பதை விளக்கியது.

விடங்கமேழாதிவீதிவிடங்கமாரூர்வெண்காடு,
நடங்கொளுந்தில்லைமூதூர் பஞ்சநன்னதிசாய்க்காடு,
மிடங்கொள்மாகாளமேழு மிடைமருதூர்செங்காடுங்,
தொடங்கியதருமவாட்சிச் செங்குந்தர்தொகுதிவாழி. (3)

இஃது செங்குந்தத்தலைவர்களிச் சிவத்தலங்களுக்கெல்லாந் தருமகர்த்தர்களென்பதை விளக்கியது.

பாதநூபுரத்திற்றேவிசாயைகண்டமலன்கொண்ட
காதலாற்கருப்பமாகுங்கதிர்நவமணிமாதர்க்கண்
மேதகுவீரத்தோடுமென்மீசையோடும்வந்த
மாதவவீரவாகுத்தலைவரித்தலைவர்மாதோ. (4)

இஃது காந்தபுராணத்திலுள்ளபடி சுப்பிரமணியக்கடவுள் வீரவாகுதேவர் முதலிய நவவீரர்கள், இலட்சங்கணங்கள் இவர்களுற்பத்தி கூறியது.

பிறந்தவொன் பதின்மர்குந்தப் பெருமையாம் பேசமாட்டோம்,
பறந்தன கழுகும்பாறும் பயிரவிகாளியஞ்ச,
மறந்தமவுணராட்ட மடங்கினமகிழ்ச்சியால்வாய்,
திறந்தனவலகையீட்டஞ் செய்யவாய்ச் சிறுவரோடே. (5)

இஃது செங்குந்தத்தினது வல்லமை கூறியது.

ஓதியவேள்வியினுவப்பநாரதன்
போதவேதகர்தனைப்பொங்குதீத்தர
வேதனைப்படுப்பதைவிரைந்துகட்டியே
சேதனக்குதவினதிருச்செங்குந்தமே. (6)

இஃது செங்குந்தர் முருகக்கடவுளுக்கு ஆட்டுக்கடாவை வாகனமாக உதவினமை கூறியது.

பொதியமால்வரைக் குறுமுனி தேறவும் பொருள்சொன்ன,
மதியையாறென வுடையவோர் மூவிருவதனத்தான்,
கதியையாற்றியுங் குணத்தொடு பழகியுங்காணா,
விதியைமேவலர் நடுங்கிடத்தளையிடுமிளிர்குந்தம். (7)

இஃது செங்குந்தர் பிரமனுக்கு விலங்கிட்டமை கூறியது.

வனமுறுவாசமாவைகல்விட்டியா
சனமுறவிண்ணிடந்தனிவைகுந்தமு
மினனுறுபங்கயமூவர்க்கெய்தவே
சினமுறுதாருகற்செறிசெங்குந்தமே. (8)

இஃது செங்குந்தர் தாருகசம்மாரஞ்செய்தமை கூறியது.

பூட்டியதேரோடும்பொலிந்தபாநுவை
யீட்டியதொட்டிலினிறுக்குமைந்தனை
மூட்டியசமரிடைமுடித்துமாசறத
தீட்டியவீரர்கைச்சிறந்தகுந்தமே. (9)

இஃது இத்தன்மையையுடைய பாநுகோபனையும் இக்குந்தஞ் செயித்ததெனக் கூறியது.

பங்கமிலரிமுகப்பஃறலைக்கிளை
மங்கவே நூறியோர்வாகைமாலையை
யெங்கள்வேற்படைதனக்கென்றுசூட்டியொண்
செங்கடம்பணியுமால்செய்யகுந்தமே. (10)

இஃது சிங்கழகாசுரன் வதை கூறியது.

வனப்புறுமிளவலும்வரச்செவ்வேற்குகன்
கனப்பகலாறினிற்கலாபமேறியே
யினப்புகழ்சேவலங்கொடிதற்கேற்றுவெஞ்
சினப்புலிக்கொடிதரச்செறிசெங்குந்தமே. (11)

இஃது சூரபதுமாசுரன்வதை கூறியது.

குறையினைக்கடவுளர்கூறக்கேட்டவர்
துறையினைநிறுவியேசூர்தடிந்துநான்
மறையினைவழுவறவளர்த்துத்தேவர்தஞ்
சிறையினைமீட்டதுதிருச்செங்குந்தமே. (12)

இஃது செங்குந்தர் தேவர்சிறை மீட்டமை கூறியது.

தாருவுஞ்சுரபியுந்தவளவேழமுந்
தாருடைப்புரவியுஞ்சசியுங்கைம்மிசைப்
போருடைவச்சிரவாளும்பொன்னகர்ச்
சீருறும்படியவுண்செறிசெங்குந்தமே. (13)

இஃது தேவேந்திரனுக்குப் பொன்னுலகச்சீர் நிலை பெறச்செய்த்து செங்குந்தமென்பதை விளக்கியது.

முன்பகையாவையுமுடித்துக்கூரெயிற்
றன்பகையாவையுந்தடிந்துசந்ததம்
பின்பகையில்லதாப்பெற்றிசெய்ததா
மொன்பதினோர்கரத்தொளிருங்குந்தமே. (14)

இஃது செங்குந்தராகிய நவவீரர்கள் தேவர்பகை யாவையும் ஒழித்தனரென்பதை விளக்கியது.

வெள்ளிமால்வரைசூழ்காப்பு மிளிர்மணிச்சிகரக்காப்பும்,
பள்ளிமால் வரையின் காப்பும்பைம் பொனாபரணக் காப்பும்,
வள்ளிதாக் கைக்கொளென்று மகிழ்நீற்றுக் காப்புமிட்டுத்,
தெள்ளிதா யுமையாடந்த செங்குந்தம் போலுமுண்டோ. (15)

இஃது செங்குந்தர் கைலைமுதலிய விடங்களைக் காக்கப்பெற்றமை கூறியது.

சலம்பிரியாதசூட்டுச்சாவற்கேதனமெஞ்ஞான்றும்,
வலம்பிரியாத செவ்வேட் குறுதுணையாக மன்னுட்,
குலம்பெபறவந்தாரென்றங் கொடியுமைதந்தவீட்டி,
நலம்பெறுமிந்தக்குந்தர்ப் பரிசுபோனாட்டிலுண்டோ (16)

இஃது குந்தர்கள் சிவனது மரபினரென்றும் உமையவளாற் கைவேலைப்பெற்றனரென்றுங் கூறியது.

பருப்பதமேரகம்பரங்குன்றம்பழம்
பொருப்பதமாவினன்குடிசெந்திற்பொது
விருப்பெனக்குன்றுதோறாடலாமெனுந்
திருப்பதிதமிலமர்செய்யகுந்தமே. (17)

இஃது செங்குந்தம் இத்தலங்களில் விசேடமாகப் பூசிக்கப்படுமென்பதை விளக்கியது.

தேடுவார் வலமாய்வந்து தெரிசிப்பார் சென்னிமீது,
சூடுவார்மலரேதூவித் தொழுதகைகூப்பிநிற்பார்,
பாடுவார் காவென் றெம்மைப் பரிவினானந்தமாக,
வாடுவார்குகன்கைச்செவ்வேற் கருந்துணைக்குந்தமென்றே. (18)

இஃது குந்தத்தினது மகிமை கூறியது.

ஆலங்காட்டினிலரனுடனன்றுவாதாடுங்
கோலங்காட்டிய காளிதன்கொற்றம்போய்வெள்கப்
பாலங்காட்டிய பன்மணித்தாளமேபறித்துச்
சீலங்காட்டிய குந்தர்நற்பெருமையார்தெரிப்பார். (19)

இஃது செங்குந்தர் காளியின் கைத்தாளத்தைப் பறித்தமை கூறியது.

செங்களம் பொருதிய திருந்தலாருர
வங்கமே மண்மிசையாக்கியாவியைச்
செங்கதிர் வழியிடைச் செலுத்தித்தேவர்க
டங்களை வான்புகத்தருஞ் செங்குந்தமே. (20)

இஃது செங்குந்தம் தம்மோ டெதிர்த்த பகைவரைச் சுவர்க்கத்தி லடைவிக்குமெனக் கூறியது.

பரகதிவேள்வி பண்ணுமிருடிதன் பான்மைபாரா
வரகதி தந்தையேவும மரரைமடியநூறி
யிரதமோடிவுளி வேழமியாக தானத்துக்கீந்து
சிரமணி மகுடம்பெற்ற செங்குந்தர் போலுமுண்டோ. (21)

இஃது தவத்துக்கிடையூறு செய்தார் யாரேனும் அவரையச் செங்குந்தர் வருத்துவ ரென்பதை விளக்கியது.

அம்பாழிமூழ்கியொரு கற்பமெலாங்
      கிடைக்கினுமென் னழலினின்று,
வெம்பரமே வெளிக்காலுண்டுட்காலை
      வெளியில்விடா திருந்தாலென்னே,
வம்பாருமிதழியணி வேணியனார்வேதமலை
      வலம்வந்தீண்டுஞ்,
சம்பாதிக்கமுதளிக்குஞ சயக்குந்தம்
      போல்வினவத் தாராவன்றே. (22)

இஃது செங்குந்தம் தபோபலத்தைக் கொடுக்குமென்பதை விளக்கியது.

உருக்கொடுபணியாதாரை யுளத்திலைந்தெழுத்தையுன்னிப்,
பெருக்கொடு தவளநீற்றைப் பேணியே யணியாதாரைத்,
தருக்கொடு நின்றுகண்ணீர் ததும்பமுன்னாடாதாரைத்,
திருக்கோயில்வலம்வாராரைச் சினத்தொடு பொருஞ்செங்குந்தம். (23)

இஃது செங்குந்தத் தலைவர்கள் சிவசமய பரிபாலரெனக் கூறியது.

கூவிளையிதழிதும்பை கொண்டரிச் சித்தபேர்க்கு,
மூவர்தம்பாடலோதி முன்னின்று பணிந்தபேர்க்கு,
மாவலோ டைந்தெழுத்தை யகத்துள்ளே நினைந்தபேர்க்குந்,
தேவர் நாடாளவைக் குந்திருக்கை வேற்றுணைச்செங்குந்தம். (24)

இஃது செங்குந்தம் இவ்வாறு செய்த வடியார்களை சிவலோகத்தை யாளவைக்குமெனக் கூறியது.

ஆலமார் மிடற்றாராடு மாடலேயாடலம்மை
யேலவார் குழலாளங்கைத் தாளமேதாளமேந்துஞ்
சூலமாகுவதன்னான்கைக் சூலமேசூலமற்றிக்
கோலம் வாழ்வீரர்கையிற்குந்தமே குந்தமாகும். (25)

இஃது குந்தத்திற்கு ஒப்பின்மை கூறியது.

ஆதிநாளுமைய வளளித்தகுந்தமே
சாதிநாலுவப் புடன்றலைக்கொள்குந்தமே
காதிமேவலரையுங் கல்லுங்குந்தமே
கோதினம்பாடலே கொள்ளுங்குந்தமே. (26)

இஃது குந்தப்பெருமை இத்தன்மைத்தெனக் கூறியது.

கருதலர் பொடிபடக் கருதுங்குந்தமே
விருதுடைச்சூர் முடிவெட்டுங்குந்தமே
பொருதனிப் புலிக்கொடி புனையுங்குந்தமே
தருதலத் தருவெனத்தருஞ் செங்குந்தமே. (27)

இதுவுமது

கைலைமால்வரையையுங் காக்குங்குந்தமே
யயிலை நற்றுணையென வாக்குங்குந்தமே
வெயிலைமன்மணிகளின் மிளிருங்குந்தமே
மயிலைவாகனமென வாக்குங்குந்தமே. (28)

இதுவுமது

இந்திரனயன் மாறேவர்யாவர்க்கு முதன்மையாக
வந்தபான்மையினாற் சூலமழுப்படையத்தனார்க்கு
முந்தியநாமந்தானு முதலியராகையாற்செங்
குந்தர் சந்ததிக்குமப்பேர் முதலியரென்றுகூறும். (29)

இஃது செங்குந்தர்களுக்கு முதலியரென்னு நாமம் வந்ததற்குக் காரணங் கூறியது.

முந்தைநோன்பினான் முருகவெண்முசு
குந்தனுக்கொன்பான் குமரரைத்தர
வந்தவீரரிவ்வகிலம் வென்றிசை
தந்தகுந்தரித்தகு செங்குந்தமே. (30)

இஃது முசுகுந்தச்சக்கரவர்த்தி தவஞ்செய்து வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களைத் துணைவராகப் பெற்றனென்பதூஉம், அந்த நவவீரர் சந்ததி வருக்கங்களே இந்தச் செங்குந்தத் தலைவர்க ளென்பதூஉங் கூறியது.

விண்டுமார்பத் திடையிருத்தி வேலைக்கௌரிபணிமாறப்,
பண்டுபூசித் திடுங்காலை யாகண்டலன்போய்ப் பாற்கடலின்,
வண்டுழாய்மாயனைவணங்கி வானிற்பழிச்சுந்தியாகரைமேற்,
கொண்டுபோந்துபாரின்முசு குந்தற்குதவுஞ செங்குந்தம். (31)

இஃது செந்குந்தத் தலைவர்கள் சத்ததியாகரையுங் கொண்டுவந்து உலகத்தில் தாபித்தமை கூறியது.

பிள்ளையாருயிர்க் குறுந்துணையாத்தனிப்பேறெய்துங்,
கிள்ளையாரிவண் கொடுவரு கென்றுடலங்கீறிக்,
கொள்ளையாருயி ரெரிநரகுறவடுங்கூற்றுயிர்நனிசோர,
வள்ளியாவரு நடுக்கத்தந் திருமுகமே செலுத்தொண்குந்தம். (32)

இஃது செங்குந்தத் தலைவர்கள் கிளிப் பிள்ளையின் பொருட்டு இயமனுக்குத் திருமுகஞ் செலுத்தினமை கூறியது.

வடிவேலெடுத்த மனுதுங்க
      வளவன்றேவி வெதுப்பாற,
முடிவேள்வியிற்செந் தீத்தருகான்
      முளைமாங்கனிக்காக் குடநாட்டைச்,
செடிவேரறுத்துச்சிறையிட்டுச்
      சென்னிவியப்பத்திறைபோலக்,
கொடிவாண்முரசு களிறுபரி யிரதங்
      கொடுக்குஞ் செங்குந்தம். (33)

இஃது செங்குந்தத் தலைவர்கள் கோனதேசத்தாரனை வென்றமை கூறியது.

ஆழநீள்கடற் குமாங்கோரம்பிமேற் சென்றேயப்பாற்,
சூழ்திருச்செந்தூருற்ற சுபனென் பான்றுணையாக்கொண்டு,
வாழிராசாதிராச மன்னவன் மருவலான்ற,
னீழநாடொரு நாடன்னிற்றிறை கொண்டீண்டுற்றகுந்தம். (34)

இஃது செங்குந்தத் தலைவர்கள் யாழ்ப்பாண தேசத்தை வென்றமை கூறியது.

மச்சநாடுடையகோமேல் வங்கநாடாளுமன்னன்,
குச்சரவரசற்காக சமரமேற் கொண்டுகொற்றக்,
கைச்சலியாமற்கொல்லுங்காலையிற்கௌதனென்பான்,
உச்சினிதொடங்கிப்போர்செய் குந்தம்போலுலகிலுண்டோ. (35)

இஃது கௌதனென்னுஞ் செங்குத்தத் தலைவன் உச்சினி முதலிய தேசங்களை வென்றமை கூறியது.

இடைமரு தூரிற்சாப மேந்திய சிறக்கையானை,
புடைமரு தடியின்வீழப் பொருதியே புறங்கொடாது,
விடைமழுவுடையான்பாத மென்கமலத்திற்சேர்த்த,
படைமரு தன்கைக்குந்தம் போலினிப் பாரிலுண்டோ. (36)

இஃது படைமருதனென்னுஞ் செங்குந்தத்தலைவன் சிறக்கையானென்று ம்ரசனை வென்றமை கூறியது.

கூளிபாறினமிடங்கொண்டுசுற்றவே
காளிசாதகரெலாங்களத்திலாடவே
வாளிதொட்டெழுமொருவங்கக்கோவைமுன்
றோளிணையாற்பொருந்துங்கைக்குந்தமே. (37)

இஃது செங்குந்தத் தலைவர்கள் வங்கதேசத் தரசனை வென்றமை கூறியது.

வானைவென்று வரிசூழ்ந்த மண்ணைவென்றவுணரான,
கானைவென்றம்புராசிக் கடலைவென்றருங்கலிங்கன்,
சேனைவென் றலங்கன்மார்பஞ் செறியுமாமடங்கல்வையக்,
கோனைவென்றரியவாகை கொண்டெனத்திரியுங்குந்தம். (38)

இஃது செங்குந்தத் தலைவர்க்கு யாண்டு மெதிரின்மை கூறியது.

செங்கோனடத்தும் வளவனிட்ட
      சிங்காதனத்திலினிதிருந்த,
நங்கோன்கவியே கவியென்று
      நாட்டிக்கவிபுன் களைகளைந்து,
வங்கோடீழங்கன்னாட
      மாராட்டிரங்குச் சரஞ்சீனங்,
கொங்கோடெங்குந்தரத்திறையே
      கொள்ளுமின்னார் செங்குந்தம். (39)

இஃதிச் செங்குந்தத் தலைவர்கள் ஒட்டக்கூத்தன் கவியையே சிறந்ததாகக் கொண்டாரென்பதூஉம், ஐம்பத்தாறு தேசங்களையும் வென்று திறை கொண்டாரென்பதூஉங் கூறியது.

கலிக்குறும்படு வளவனுக்குங்காதுசூர்
வலிக்குறும்படு தனிவாகைக் குந்தர்க்கும்
பலிக்கு நற்புகழெலாம்பாதியாதலாற்
புலிக்கொடி மரபிரண்டினுக்கும் போந்ததால். (40)

இஃது செங்குந்தர் மரபுக்கும் சோழன் மரபுக்கும் புலிக்கொடி யுண்டெனக் கூறியது.

தென்னனைச் சேரனைச் சிறுமைசொல்லவு
மன்னனை வளவனை மகிழ்ந்துபாடவும்
பன்னருஞ் சாரதிபடைத்த பான்மைபோ
லொன்னலர்க்குள்ளினத் துற்றகுந்தமே. (41)

இஃது செங்குந்த்த தலைவர் சோழராஜன் பகைவரை வெல்லுதற்குரிமை கூறியது.

சேல்வேறு புலிவேறாகுஞ்
      சேதுவி னளைவாய்ச்சென்னி,
கோல்வேறில்லாமலோச்சிக்
      கன்னியேகொள்வனென்றே,
மால்வேறுசிவன்வேறென்ன
      வழுத்திடா வண்மைபோல,
வேல்வேறு குந்தம்வேறென்
      றிருபொருள் விளம்பார்மேலோர். (42)

இஃது வேலுக்குங்குந்தத்திற்கும் வேற்றுமையின்மை கூறியது.

பூமாலைகடப்பந்தாமம் பூண்மணித் தெரியல்செய்ய,
பாமாலைதன்னைக் கைக்கொள் முதலியர்பங்கதாக்கி,
மாமாலையொல்லார்காலில் வழிதுழிக்குடரின்மாலை,
தேமாலையாகச்சூடுஞ் செங்குந்தம்போலுமுண்டோ. (43)

இஃது செங்குந்தத்தின் பெருமை கூறியது.

பற்றினும்பற்றுஞ்சென்னி பறிக்கினும் பறிக்கும்பாச,
மெற்றினுமெற்றுங்கூற்றை யீரினுமீரும்வாரிச்,
சுற்றினுஞ்சுற்றுமண்டந் துகளெழச் செயினுஞ்செய்யும்,
மற்றினுங்குந்தம்போற்றா திருப்பவருளரோமண்மேல். (44)

இதுவுமது.

போற்றியோ போற்றியென்று புதுமலர்தூவிச்சீற்ற,
மாற்றியே வந்தியாம லடையலர் வாழ்ந்திருந்தால்,
காற்றென வூழித்தீயிற் கடலெனக் கொடியகோபக்,
கூற்றெனத் திரிந்துசோரிக் குளித்துடன் களிக்குங்குந்தம். (45)

இதுவுமது இனி வல்லானை வென்ற பழவூர் வீரன் முதலிய பன்னிருவர் புகழ் கூறுகின்றது.

சூட்டும்வீரவாகுவெனச் சொல்லும்பழுவூர்வீரனமர்,
மூட்டுங்கால மூழிவெள்ள மூடுங்காலமாகாதோ,
வேட்டங்காலில் வீழாதார் மேலுமுளரோவீதியுலா,
யீட்டுங்காலங்குந்தங்கண் டெழுமேகழுகுபருந்துகளும். (46)

இஃது பழவூர் வீரனென்னுஞ் செங்குந்தத்தலைவன் புகழ் கூறியது.

காராமுருவமொழிந்துபொன்னின் கவினார்பழுவை வளம்பதியில்,
நாராயணனேவிக்கிரம நாராயணனா மென்னாதார்,
வாராவழிவந் தோமென்றேவாயிற்புல்லைக் கவ்விவந்தச்,
சேரார்சேரா நின்றுதொழச் செய்யுமன்னான் செங்குந்தம். (47)


இஃது பழவை நாராயணனென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

இனிமாநிலத்திற் கண்டதில்லை
      கேட்டேயிருத்த லன்றிபெரும்,
பனிமால்வரையுமைநாக
      முன்பின்படைதானெடுத்தாலு,
முனிமாறுண்டோ நடுநின்று
      முடிப்பான்கச்சித் தனியன்வட்டத்,
தனிமாநிழற்கீழ்ச்செங்குந்தஞ்
      சரணாகதிக்கு வைகுந்தம். (48)

இஃது கச்சத்தனிய னென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

உடலமண்மேலுயிர்விண்மே
      லொல்லா ரொடுகவுதிரமொடு,
குடருங்கொழுவுங் கழுகோடுங்காள்ளை
      கொள்ளப் பரிந்தூட்டு,
மடல்வெண்டாழை முகமலர
      வாரிவாரித்திரைக் கரத்தால்,
கடல்வெண்ட்ரளவேயெறியு
      மொற்றியூரன் கைக்குந்தம். (49)

இஃது செங்குந்தத் தலைவனாகிய வொற்றியூரனது புகழ் கூறியது.

தளர்ந்தவருக்குத் திருவுருவந்
      தன்னையடையார்க் கொருசிங்க,
மிளந்தையவர்க்குச் சிலைவேணல்லிசையாற்
      பொற்பூதரமேயாம்,
வளர்ந்தசாலிவரம்பினில்வால்
      வளைகண் முத்தந்தரும் வளங்கூர்,
களந்தையாதிநகரரசன்
      கைக்குந்தம் போற்காணோமே. (50)

இஃது செங்குந்தத் தலைவனாகிய கனத்தூரசன் புகழ் கூறியது.

கற்றிடங்கொண்டவர் கவின்சொற்கொள்ளுமே
யுற்றிடங்கொண்டபேர்க் குலகைநல்குமே
வெற்றிடங்கொண்டமே வலரைவீட்டுமே
புற்றிடங்கொண்டவன் பொலிகைக்குந்தமே. (51)

இஃது புற்றிடங் கொண்டானெனனுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

மூளாவடவைச்சிகரகிரி
      முடிகம்பிக்குமாறுதஞ்செந்,
தாளான்மடங்க வொருகூற்றந்
      தனிமும்மதில்காய்ச்சிறுமூரல்,
வேளாருயிரைப் பேர்க்கவனற்
      கண்ணும்விளங்குமுருத்திரனேர்,
கோளாந்தகனொண்டோளான்கைக்
      குந்தம்வா கைக்குந்தமே. (52).

இஃது கோளாந்தக னென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

புண்டரீகமே குவளையே தளவமே பூமாவே,
பிண்டியேபெறுஞ் சித்தசன்றன்குணம் பிழையாவென்,
கண்டவீர கண்டன் புலியூர்த் தனிகாத் தேசீர்,
கொண்டபள்ளி கொண்டான் கரதலத்திடைக்கொளுங்குந்தம். (53)

இஃது புலியூர் பள்ளிகொண்டானெனுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

குணமார்தருமத் தெவ்வேந்தர்
      குலக்கோ ளரியே குலத்தருவே,
தணவாவண்மைச் சகம்பேசச்சகமே
      தாங்கும்பூதரமே,
பிணவாவென்று பகரார்வாய்
      பிளந்துசோரிப் பெரும்பூதக்,
கணம்வாய்நிரப்புங் குந்தன்போற்
      காணோங்கேளோங் கற்றோரே. (54)

இஃது பிணவனென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

மிண்டிடாமன் மேவலீர்விளம்பிடாமலோருமின்
றொண்டிடாமல் வாழ்வதெங்ஙன் சூரபன்மன்பட்டிடக்
கண்டவீரவாகு தேவர்கால் வருங்குலத்துமன்
வண்டுலாவுகண்டியூரன் வயிரவாகுகுந்தமே. (55)

இஃது கண்டியூர னென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

மூத்தமுதுகுன்றக்குரிசின் முதிருமணவைப்பாராளன்,
பாத்தனென்னுமணியன்கைக் குந்தங்கொடுத்துப்பகரவே,
பூத்தமார்பத்தார்பறித்துப்பூழிபடவேவீழ்ந்திறைஞ்சிக்,
கோத்துச்செங்கை மலர்கூப்பிக் குறுகார்சிறுகிவரக்கண்டான். (56)

இஃது முதுகுன்ற மணியனென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

பஞ்சம்வெம்பத் தரும்பனையே நாவான்மிகவேபாடாது,
தஞ்சைவேம்பனைப்புகழ்ந்தே மதுமுன்செய்ததவமேயா,
மெஞ்சவெளிதோவூழியுருத்திரன்கைக்கொளுமூவிலைவேலே,
வஞ்சமாயை யவதரித்த திவன்கைக்குந்தவரவாமால். (57)

இஃது தஞ்சை வேம்பனென்னுஞ் செங்குந்தத் தலைவன் புகழ் கூறியது.

வல்லான்றன்றிருத்தேவி மங்கலியம்
      பிழையாமன்மடிதானேற்றிங்,
கெல்லோருமங்கலியப்பிட்சையிடு
      மெனத்தாள்வீழ்ந்திரப்பவேண்டிக்,
கொல்லாமல்விடுதல்புக ழெனக்கருதியோ
      கற்பின் கொண்டவாய்மை,
நல்லார்களிருந்தவையின் புகழ்கைக்கோ
      காத்ததுகொனஞ்செங்குந்தம். (58)

இஃது செங்குந்தத் தலைவர் வல்லானென்னுமரசனைச் செவித்தமை கூறியது.

எல்லாக்காலத்தினு மொன்றேற்பவருக் கில்லையெனுஞ்,
சொல்லானதுகற்றுஞ் சொல்லறியாரேந்துகுந்தம்,
வல்லானைக் கொல்லாமன்மனை விக்குமங்கலிய,
முல்லாசத்திடனளிக்கு முதவியதொன்றறிந்தேமால். (59)

இஃது செங்குந்தத்தலைவ ரிரப்பவருக் கெக்காலத்துங் கொடுப்பாரென்பதை விளக்கியது.

முத்தமிழிராசராசேந்திரன்முன்னமே
சுத்தவீரத்திறந்துலங்குதற்கொரு
பொய்த்தலைகொடுத்தலிற்புகழ்பெறாதென
மெய்த்தலைகொடுத்தனவீரக்குந்தமே. (60)

இஃது செங்குந்தத்தலைவரது வீரத்திறங் கூறியது.

பைந்தமிழ்க்காவலர்பகரும்பாடலார்
கந்தவேடான்மகிழ்கைலைக்காவலார்
வந்தவீரப்படைத்தலைவர்வந்துழி
சிந்தவேகழுத்துடற்செகுத்தகுந்தமே. (61)

இதுவுமது.

தில்லைமூதூர் நடஞ்செய்யுமாலயத்
தொல்லையிற் பொறித்திடுமுழுவைமுத்திரை
யெல்லையினாவலொன் பதின்மர்க்காக்கியோர்
வல்லயிற்றுணையொடு மருவுங்குந்தமே. (62)

இஃது குந்தத்தின் பெருமை கூறியது.

எந்தையாமம்மை பாகத்திறைவனை வணங்கியாமே
பைந்தமிழ்ப்பரணி செய்தப் பாடலோடந்தமாக
வந்தமாமடவாராட வரியணையிருந்தவீரர்
குந்தமேகுந்தம்வேறு குந்தமுமுளதோகூற. (63)

இஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தம்மாற் பாணிப்பிரபந்தங் கேட்டனரென்பதை விளக்கியது.

வரச்சிங்காதன வளவர்தம்பிரான்
றரச்சிங்காதனந் தன்னிலேறியே
துரைச்சிங்காதனந் தொழுங்கவிக்கிடுஞ்
சிரச்சிங்காதனச் சீர்செங்குந்தமே. (64)

இஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தமக்கு ஈட்டியெழுபதென்னும் பிரபந்தத்தைக் கேட்கச் சிரச்சிங்காடன மீட்டமை கூறியது.

வேட்டுமானாடரிதாயவேணியர்
சூட்டுதாள்வாரிசத்துணைகளேத்தியே
யாட்டுகசென்னியையலர்த்தியேயெனக்
காட்டுதற்கேயரிக வின்கைக்குந்தமே. (65)

இதுவுமது.

விண்டுவேதனுநாடரிதாகியவிமலன்
பண்டுதாருகப்பிரமகத்திப்பழிபோகக்
கொண்டுதாமெனக்கடுகியேகுடிவழித்தொன்மை
கண்டுதாங்கழுத்தரிந்ததுகவின்கவின்குந்தம். (66)

இதுவுமது.

தவந்தனிச்செய்வதென்றலைச்சிங்காதன
முவந்துபாவாடையிட்டோடுஞ்சோரிமே
னவந்தனிற்பாடியநங்கவித்திறஞ்
சிவந்திடச்செய்ததுதிருச்செங்குந்தமே. (67)

இஃது குந்தத்தினது மகத்துவங் கூறியது.

வீணுக்கேறாத வாய்மை விளம்பிடாவெற்றியாள
ராணுக்கேறாய்ப் பிறந்தோரடு புலிப்பதாகைமன்னர்
நாணுக்கேறாத சாபநாட்டியே யிறுத்தமாறன்
மாணுக்கேறாத மாற்றாரடைந்திட மருவுங்குந்தம் (68)

இஃது குந்தத்தினது பெருமை கூறியது.

வட்டமாரவையுழைவந்தமேலவ
ரிட்டபாவாடைகண்டிசைபெறாதுமண்
முட்டவந்துயிர்பெறீஇமொய்த்துளேமெனக்
கட்டுளகுந்தர்சீர்கழறியேத்தினார். (69)

இஃது செங்குந்தத்தின் பெருமையை உலகம் புகழ்ந்தமை கூறியது.

செந்தமிழ்க்காகப்போந்து சிவந்தபாவாடையாக
நந்தமக்கிடுங்கா லெந்தநகரமு முளம்வியந்த
வந்தரத்தமரர் வாழ்த்தியணி மலர்மாரி பெய்தாரிந்தச்
செங்குந்தர் பெற்றவிசையெவர் பெற்றாரம்ம. (70)

இஃது இச்செங்குந்தத்தலைவர் பெரும்புகழ் பெற்றோரெனக் கூறியது.

அம்பர்நாட்டமர்ந்தகுந்தமயனரியரன்மூன்றென்னு,
மும்பர்தாமறியவேண்டு முயர்ந்தமுத்தமிழினாலே,
கும்பசம்பவனேதேர்ந்து கூறவேவேண்டுமல்லா,
லிம்பர்யாங்கூறவேண்டு மெவர்மற்றுங் கூறுவாரே. (71)

இஃது செங்குந்தத்தின் பெருமை கூறற்பாலா ரினைய ரெனக் கூறியது.

ஈட்டியெழுபது மூலம் முற்றிற்று.

உசாத்துணை

தொகு
"https://ta.wikisource.org/w/index.php?title=ஈட்டியெழுபது&oldid=1731315" இலிருந்து மீள்விக்கப்பட்டது