2. மாவட்டம் உருவானது


ஈரோடு மாவட்டப் பகுதிகளின் உரிமைக்காகப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஐதர்அலி - திப்புசுல்தான் கிழக்கிந்தியக் கும்பினி ஆகியோரிடையே பலமுறை கடும் போர்கள் நடைபெற்றன. இருதரப்பிலும் வெற்றி தோல்விகள் மாறிமாறி ஏற்பட்டன. அதனால் அலைக்கழிக்கப்பட்டது ஈரோடும். ஈரோட்டு மாவட்டப் பகுதியும் தான்.

4.6.1799ல் கன்னடத்துப் போர் வாள் விடுதலைப் போரின் முன்னோடி மாவீரன் திப்புசுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டப் பகுதி முழுவதும் கும்பினியார் வசம் ஆனது. உடனே இப்பகுதி நொய்யலை மையமாக வைத்து இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. "நொய்யல் தெற்கு மாவட்டம்" "நொய்யல் வடக்கு மாவட்டம்” என்று பெயரிடப்பட்டன. முறையே தாராபுரமும், பவானியும் தலைநகர்களாயின. தாராபுரத்திற்கு ஹர்டிஸ் என்பவரும், பவானிக்கு மேக்ளியாட் என்பவரும் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர். நொய்யலுக்கு வடகரையில் இருந்த காரணத்தால் கோயமுத்தூர் கூட பவானி தலைநகருடன் சேர்க்கப்பட்டது. பவானியில் பெரிய கட்டிடம் ஒன்று மாவட்ட நிர்வாகத்தின் பொருட்டுக் கட்டப்பட்டது. இன்றும் அம்மாளிகை உள்ளது.

நிலங்கள் சங்கிலி கொண்டு அளக்கப்பட்டு வரிக்கு உட்படுத்தப்பட்ட நிலங்கள் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டன. சேலம் மாவட்ட ஆட்சியர் ஜெனரல் ரீடு கொண்டு வந்த திட்டப்படி மாவட்ட நிர்வாகம் நடைபெற்றது. இரண்டாவது மாவட்ட ஆட்சியராகப் பவானிக்கு வில்லியம் கேரோ என்பவர் நியமிக்கப்பட்டார்.

1804ல் மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டுக் கோயமுத்தூரைத் தலைநகராகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்பட்டது. தாலுக்காக்களும் உருவாக்கப்பட்டன. கோயமுத்தூர் மாவட்டத்தில் கோயமுத்தூர், சத்தியமங்கலம், டணாயக்கன்கோட்டை, கொள்ளேகால், பொள்ளாச்சி, பெருந்துறை, அந்தியூர், ஈரோடு, தாராபுரம், காங்கயம், கரூர், சேவூர், பல்லடம், செங்கணாச்சேரி, நீலகிரி ஆகிய 15 தாலுக்காக்கள் அடங்கியிருந்தன.

பின்னர் சேவூர், டணாயக்கன்கோட்டை தாலுக்காக்கள் நீக்கப்பட்டன. ஈரோடு, காங்கயம், சத்தியமங்கலம் ஆகிய தாலுக்காக்கள் முறையே பெருந்துறையுடனும், தாராபுரத்துடனும், புதியதாக உருவாக்கப்பட்ட கோபிசெட்டிபாளையம் தாலுக்காவுடன் சத்திய மங்கலமும் இணைக்கப்பட்டு அவை மூன்றும் துணைத்தாலுக்கா எனப்பட்டது.

பல ஓலை ஆவணங்கள் "கோயம்புத்தூருச் சில்லா பெருத்துறை தாலுக்காவுக்குச் சேர்ந்த ஈரோடு கிராமம்" என்று குறிக்கின்றன. 1888ல் ஈரோடு மீண்டும் தாலூக்காவாகிப் பெருந்துறை ஈரோட்டோடு இணைக்கப்பட்டது, அந்தியூர் தாலுக்கா பவானியோடு இணைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் நீலகிரி தனி மாவட்டம் ஆனது. செங்கணாச்சேரி பாலக்காட்டோடு சேர்க்கப்பட்டது. கொள்ளேகால் கர்னாடக மாநிலத்திற்குச் சென்று விட்டது. கரூர் வட்டம் 1911ல் திருச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்படும்வரை கோயமுத்தூர் மாவட்டத்தோடு சேர்ந்திருந்தது.

1974ல் “மாநில நிர்வாக சீர்திருத்தக்குழு" புதிய மாவட்டங்கள் அமைப்பது பற்றிப் பல பரித்துரைகள் செய்தது. அதன் அடிப்படையில் 8.5.1976 மற்றும் 10.12.1976 ஆகிய நாள்களில் புதுதில்லியில் கூடிய மாநிலத் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பரப்பளவு, மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய மாவட்டங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

"மாநில வருவாய் ஆணையம்" கோயமுத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோட்டைத் தலைநகராக்கி புதிய மாவட்டம் அமைக்கப் பரிந்துரை செய்தது. மேலும் அந்த ஆணையம் தாராபுரத்திலிருந்து காங்கயத்தையும், கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலத்தையும் பிரித்துத் தனித் தாலுக்காக்கள் உருவாக்கவும் பரிந்துரை செய்தது.

மற்றொரு முக்கியமான திட்டத்தையும் அந்த ஆணையம் அறிவித்தது. தாராபுரம், சத்தியமங்கலம் தாலுக்காக்கள் கோயமுத்தூர் மாவட்டத்துடனும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்ககிரி திருச்செங்கோடு தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்துடனும் சேர்க்க வேண்டும் என்றும் பரித்துரை செய்தது.

சேலம் மாவட்டத்தின் சங்ககிரியையும், திருச்செங்கோட்டையும் ஈரோடு மாவட்டத்தோடு சேர்க்க சேலம் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சேலம், ஈரோடு மாவட்டங்களுக்குக் காவிரியாறு இயற்கை எல்லையாக இருப்பதாலும், தொழில் வளம் மிக்க சங்ககிரி, திருச்செங்கோட்டை ஈரோட்டோடு சேர்த்தால் சேலம் மாவட்டம் மிகப் பாதிக்கப்படும் என்பதாலும் காவிரியில் சில புதுப்பாலங்கள் அமைக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அரசு சங்ககிரி, திருச்செங்கோடு ஆகிய தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது.

அதற்குப் பதிலாக கோயமுத்தூர் மாவட்டத்தோடு சேர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்ட தாராபுரம், சத்தியமங்கலம் தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்திலேயே வைந்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. காங்கயம், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய புதிய தாலுக்காக்கள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆந்திராவில் "பிரகாசம் மாவட்டம்" அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி கோயமுத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும் புதிய மாவட்டத்திற்குத் “தந்தை பெரியார் மாவட்டம்" என்று பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பின் பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கத் "தந்தை" என்ற சொல் நீக்கப்பட்டது. 17.9.1979 அன்று பெரியார் நூற்றாண்டு விழா முதல் "பெரியார் மாவட்டம்" என இயங்கும் என்ற ஆணையை அரசு 31.6.1979 அன்று பிறப்பித்தது.

17.9.1979ல் மாவட்டத் தொடக்கவிழா கோலாகலமாக ஈரோடு சி.எஸ்.ஐ மைதானத்தில் தடைபெற்றது. ஆனால் முறைப்படி 24.9.1979ல் மாவட்ட நிர்வாகம் இயங்கத் தொடங்கியது, ஈரோடு நகராட்சிக்குப் புதிதாகக் கட்டியிருந்த நகராட்சிக் கட்டிடத்தில் மாவட்ட நிர்வாகம் இயங்கியது, திரு. இலட்சுமிரத்தன் பாரதி அவர்கள் முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1975ல் சத்தியமங்கலம் தனிவட்டம் ஆக்கப்பட்டிருந்தது. 4.7.1979ல் பெருந்துறை வட்டமும், 1.8.1981ல் காங்கயம் வட்டமும் ஏற்பட்டன. ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, காங்கயம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய ஏழு வட்டங்களோடு ஈரோடு மாவட்டம் விளங்குகிறது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு, தாராபுரம், கோபிசெட்டிபாளையம் என்ற மூன்று வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஈரோடு வருவாய்க் கோட்டத்தில் ஈரோடு, பெருந்துறை வட்டங்களும், தாராபுரம் வருவாய்க் கோட்டத்தில் தாராபுரம் காங்கயம் வட்டங்களும் கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி வட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈரோடு_மாவட்ட_வரலாறு/002-043&oldid=1491965" இலிருந்து மீள்விக்கப்பட்டது