ஈரோட்டுத் தாத்தா/ஆரியத்தின் வைரி

ஆரியத்தின் வைரி

சாதிகள் நான்குண் டாக்கிச்
   சமத்துவக் கொள்கை நீக்கி
வேதியப் பிழைப்புக் கண்டார்
   வீணர்கள் அவரின் போக்கை
ஆதியில் மாடு மேய்த்திங்
   கடைந்தநாள் வரையில் ஆய்ந்து
போதிய சான்று காட்டிப்
   புகன்றனர் ஈரோட் டண்ணல்!

பார்ப்பனர் பேச்சை நம்பிப்
   பாழ்பட்ட தமிழ கத்தில்
சூத்திர ராக மக்கள்
   துயர்ப்படும் தமிழகத்தில்
நாத்திக னென்றும் இந்த
   நாயக்கன் துரோகி என்றும்
கூர்த்தறி யாதார் சொல்லக்
   கொஞ்சமும் அஞ்ச வில்லை!



சாதியால் மதத்தால் பார்ப்பான்
     சதியினால் சேர்ந்த இந்து
நீதியால் மூட பக்தி
    நிறைவினால் கெட்டி ருக்கும்
போதிலே தன்மா னத்தைப்
    புகட்டுதற் கென்று வந்த
சோதியாய் ஈரோட் டண்ணல்
    தோன்றினார் தமிழர் நாட்டில்!

மக்களைப் பிரித்து வைத்து
    மயக்கிடும் சமயத் திற்குப்
பக்கலில் நின்று பாட்டுப்
    பாடிடும் இந்நாள் ஆட்சி
சிக்கென ஒழியு மாயின்
    சிறப்புண்டு நாட்டிற் கென்று
தக்கவா றெழுதக் கண்டு
    சிறையினுள் தள்ளப் பட்டார்!

ஆரியத்தின் வைரி யாகி
    அதனாலாம் தீமை நீக்கப்
போரியக்கும் வீரன்! எங்கள்
    பொன்னாட்டுத் தந்தை! மிக்க
சீரியற்றித் தமிழ கத்தார்
    சிறப்புற வேதன் மானப்
பேரியக்கம் கண்டோன்! நல்ல.
    பெரியார் ஈரோட்டுத் தாத்தா!