ஈரோட்டுத் தாத்தா/செயற்கரிய செயல்கள்
செயற்கரிய செயல்கள்
தன்வீட்டார் பிறர்வீட்டில் உண்ணாமல்
பார்ப்பனர்போல் இருக்கச் சொல்லும்
புன்மைதனை வெறுத்துத்தம் புத்திவழி
போனதனால் பொறுமை மீறித்
தென்னாட்டில் யானைகட்குக் கால்விலங்கு
போட்டடக்கல் போலே யந்நாள்
தென்னாட்டுப் பெரியாருக் கன்னார்தம்
பெற்றோர் தாம் தளையிட் டாரே!
பார்ப்பனரும் பண்டிதரும் தம் வீட்டில்
கதைபேசிப் பணம்ப றிக்கப்
பார்க்குங்கால் அவர் கதையில் பலகுற்றம்
இழிவுபல இருத்தல் கண்டே
ஆர்ப்பரித்து நகையாடிக் கேள்விபல
கேட்குங்கால் அவர்கள் நாணி
வேர்த்துப்போய்த் தக்கபடி விடைகூறத்
தெரியாமல் விழித்து நிற்பார்!
ஈரோட்டில் கடைவைத்தோன் தலைவிதியின்
வலிவுதனை எடுத்துப் பேசும்
பார்ப்பனனின் கடைத்தட்டி தனைத்தள்ளித்
தலைவிதிதான் படுத்திற் றென்றே
ஈரோட்டுத் தாத்தாதன் இளம்பருவம்
தனில்செய்த குறும்பை யெல்லாம்
யாரேனும் நினைத்ததில்லை! அறிவியக்கக்
கொள்கையது வாகும் என்றே!
தன் மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்றுவெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி ஆய்ந்து
சின்னஓர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார் சென்றவ் வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலை நீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!
தாலி எனும் சங்கிலிதான் பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன் மனைவி
மறுத்துரைக்க, நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்!
'தாலிஎங்கே?’ எனக்கேலி செய்தபெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!