10

“ஏம்மா! யாரு இறந்து போயிட்டாங்க?... துக்கக் கடிதாசி போல இருக்கு?”

ரங்கன் பின்புறத்தில் இருந்து ஏணியைத் துக்கிக் கொண்டு வருகிறான்.

“ஊருல, அன்னைக்கு மகளைக் கூட்டிட்டு வந்தாளே. அதொரு ரெண்டு மாசம் இருக்கும். அவபுருசன் செத்திட்டான்.

“அந்தக் காலத்துல, எப்படி இருந்தாங்க? காசீல போயிப் படிச்சான். துப்பாக்கிக் குண்டு போட்டு பணக்கார மிராசுகளை ஒழிக்கணும்னு ஒரு மிராசைச் சுட்டுட்டு, மூட்டையோடு நெல்லையும் அரிசியையும் குடிபடைகளுக்குக் குடுப்பேன்னு புதுமுறை கொண்டாந்தான். போலீசு புடிச்சிட்டுப் போயி மரண தண்டனை, ஆயுள் தண்டனைன்னு குறைச்சி, அதையும் மனநிலை சரியில்லன்னு பைத்தியக்கார ஆசுபத்திரிக்குப் பெத்தவங்க சொல்லி மாத்தினாங்க. அவன் அப்படிவே தியாகின்னு செத்திருக்கலாம். அம்பது வருசம், அஞ்சு புள்ளங்களையும் குடுத்து, அவளையும் வதைச்சிட்டு ஒழிஞ்சான். இன்னும் சோறு வடிக்கல... தலையை முழுகறேன். ஒட்டு ஒறவு இல்ல. அவ பாவம் தொலஞ்சிதே!”

கிணற்றடியில் சென்று தண்ணீரைச் சேந்தி அப்படியே தலையோடு ஊற்றிக் கொள்கிறாள். வெயில் நேரத்துக்கு ஊற்ற ஊற்ற இதமாக இருக்கிறது. சேலையைப் பிழிந்து கொண்டு உள்ளே மாற்றுச் சேலை எடுக்க வருகிறாள். கூடை நிறைய நாரத்தங்காய், மணத்தை வீசி என்னைப் பார், பார் என்று அழைக்கிறது.

இதற்கு யார் வித்துப் போட்டார்கள்? யார் நிரூற்றிப் பராமரித்தார்கள்? யார் பலனெடுக்கிறார்கள்? வேலிக்கு மறுபுறம் மாவில் எரி பூச்சிகள் விழுந்து, பயன் குத்துப்பட்டு, மரம் சோகம் காக்கிறது.

இந்தக் காயில் என்ன பளபளப்பு? சில காய்களில் பொன்னின் மின்னலாய், பருவமடைந்த கன்னியின் பூரிப்பாய் மெருகிட்ட நேர்த்தி. இந்தக் கொல்லையில் இப்படி ஒரு நாரத்தை விளைந்ததாக அவருக்கு நினைவில்லை. முன்பு எப்போதோ எலுமிச்சை காய்த்ததென்று குருகுலம் வீட்டுக்கு வந்ததுண்டு. பெரிய பெரிய சாடிகளில் ஊறுகாய் போடுவார்கள். பிறகு இரண்டொரு இடங்களில் பெரிய பெரிய முட்களுடன் எலுமிச்சையோ, நாரத்தையோ என்று தெரியாமல் செடிகள் முளைத்துப் பெரிதாக வந்து காய்ந்து போயிருக்கின்றன. “இந்தக் கொல்லையில் மாமா காலத்தில் வந்து பட்டுப்போன எலுமிச்சைக்குப் பிறகு அந்த சாதி மரமே வரதில்ல...” என்று அம்மா சொல்லிவிட்டு, நர்சரியில் இருந்து ஒரு சாத்துக்குடிக் கன்று வாங்கி வந்து நட்டார். நட்ட மூன்றாம் வருசமே அது காய்த்தது. உயரவே இல்லை. பரந்து, பின்புறமும் முட்களை நீட்டிக் கொண்டு ஒரு பெரிய இராட்சசி போல் அமர்ந்திருந்தது. வெண்மையாகப் பூக்கள். அது காய்த்தது என்றால், பருவம் கிருவம் என்பதெல்லாம் இல்லாமல் காய்த்துக் குலுங்கிற்று. பறிப்பதுதான் கஷ்டம். அப்போதெல்லாம் இந்த மண்ணாங்கட்டிதான் கூழை உடம்பை வைத்துக் கொண்டு, குச்சியால் கிளைகளை நீக்கிப் பழங்களைப் பறிப்பான்.

யார் வீட்டுக்கு வந்தாலும் சாத்துக்குடி ஜூஸ்தான். “நெல்ல ருசிம்மா!” என்று, பழத்தை உரித்துச் சுவைக்கும் மண்ணாங்கட்டி சந்தோசத்தின் மொத்த உருவமாகத் தெரிவான்.

ராதாம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். விக்ரம் பையனாக அங்கு வந்த போது, குழந்தையின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சுவான்.

“மாமா, உங்களுக்கு ஏன் மண்ணாங்கட்டின்னு பேரு?” இதைக் கேட்டவுடன் அவன் சந்தோசம் நிரம்பி வழியச்சிரித்தான்.

“கண்ணு, எங்காயிக்கு முதப் பொறந்த நாலு புள்ள செத்துப் போச்சி. நா... அஞ்சாவது. முதப்பொட்டபுள்ள, குலதெய்வத்து பேரு வச்சாங்க, அங்காயின்னு. சத்துப் போச்சி. ரண்டாவது ஆம்புளப்புள்ள, முனியசாமின்னு பேரு வைக்கணும்னிருந்தாங்க. மூனே நாளுல பூடுத்து. மூணாவது, நாலாவது ரண்டும் பொறந்தவுடனே பூடிச்சாம். அப்ப, எங்காயி நினைச்சிசாம். இது மண்ணாங்கட்டியாக் கெடக்கட்டும்னு நினச்சாங்க. பேரே வய்க்கல. நா... மண்ணாங்கட்டியாவே உருண்டிட்டிருக்கிற...”

அந்த சிரிப்பு, வாழ்க்கையில் தூக்குமரத்துக்குப் போய் விட்டு மீண்டும் வாழ வந்த ராமுண்ணியின் சிரிப்பை நினைவூட்டும். ஒவ்வொரு கணமும் வாழ்வை நேசிப்பவர்கள். வாழ்க்கையில் இழப்புகள், நோவுகள், சித்திரவதைகள், கொடுமைகள், குரூரங்கள், அபாயங்கள் எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, எப்போதும் சிரிக்கும், நிறைவைக் காட்டும், வாழவைக்கும் மண்ணுக்கு நன்றி சொல்லும் உழைப்பாள மனிதர்கள்.

அந்தச் சாத்துக்குடி, ராதாம்மா பம்பாயில் நோவாக இருக்கையில் பூவும் பிஞ்சுமாகக் காய்ந்து, பட்டுப் போயிற்று. அது இன்னதென்று விவரிக்க முடியாத பூமியின் சோகமாகத் தோன்றியது. எலுமிச்சங்காய் அளவு பிஞ்சுகளே ஒராயிரம் இருக்கும்போல தோன்றியது. மண்ணாங்கட்டிதான் பறித்துக் கொண்டு மரத்தை வெட்டிச் சுத்தப்படுத்தினான். அப்போது தான் கோவாலு வந்ததும், மலக்குழி சுத்தம் செய்ததும் நடந்தது.

“யம்மா இந்த சாதி - ஐயிருமாருதி ஒசந்த சாதி. சிப்டிக் டாங்கிதா தீட்டாப்பூடிச்சி...” என்றான்.

இப்போது அவன்தான் உள்ளே வருகிறான்.

“வணக்கம் பெரீ...ம்மா...”

“என்னாப்பா, எப்படிருக்கிறீங்க, உங்களப்பாக்குற தேயில்ல?”

“நெல்லாகிறேம்மா. பொண்ணு நர்சு படிச்சிட்டி வீனஸ் ஆஸ்பத்திரில இருக்குது. பைய, இன்ஜினீர் படிக்கிறான். நமக்கு எப்பவும் போலதா வேல. கிழக்கால, ஜோதிகாபுரம் ஃபிளாட் கட்டுறாங்க இல்ல? அங்கதா வாட்சமேனா க்றேன். நைட்டு, பகல்ல இப்படீ எதானும் வேல செய்யறதுதா. காரியகாரரு சொன்னாரு. காயெல்லாம் பறிச்சிக்குதே. முன்ன இங்க ஆரஞ்சி இருந்திச்சே? அது காயி... ஆனா இதும் நெல்லாருக்கும் கொழுஞ்சி. அந்த மிலிடரிக்கார ஐயா இருந்தாரே, அப்ப எப்டீருந்திச்சி, வூடும் தோட்டமுமா... எனக்கு சொம்மா வாடகக்கி வுட்டிருந்தாகூட நெல்லா வச்சிருப்பேன்...”

“ஏன், நீங்க, உங்க தலவரையா மூலமாக் கேக்க வேண்டியதுதானே?”

“அதெப்படி? இவங்க வேற கச்சி. நாம போயி எப்டீப்பேச...? எம் பொஞ்சாதி சொல்லிச்சி, அதெல்லாம் போயி கேக்காத. இங்கியே நமுக்கு சவுரியம்னிடிச்சி. இன்னா? ஒதுங்க எடமில்ல. பொம்பிளங்க, வயசுப் பொண்ணுங்க, ஒரு தீட்டுத் தொவக்கம்னா, கட வீதிக்குப் பின்னால ரயில்வே லயன்பக்கம்தான் போவணும்னு இருந்திச்சி. இப்ப பொது கழிப்பற கட்டிட்டாங்க...”

“பொண்ணுக்குக் கலியாணம் கட்டிட்டீங்களா?”

“இல்லிங்க, பெரீம்மா... உங்கையில சொல்லுறதுக்கென்ன. அதுக்கு நர்சு படிக்க எடம் வாங்க எத்தினி கஸ்டப் பட்டந் தெரிமா..? அப்ளிகேசன் போட்டு, தாசில்தார் சர்ட்டிவேட்டு அது இதுண்ணு அல்லாம் வாங்கிக்கினு போனா, அங்க, ரூவா அம்பதாயிரம் வச்சாதா எடம்னா, ஒரு கஸ்மாலம். தலவர், புரவலரையா கீறாருங்க, அமைச்சரா, இந்த வட்டம்மிச்சூடும் கச்சில நாந்தாகிறே... உனுக்குக்கூட தெரிஞ்சிருக்கும். மின்ன, இங்க தியாகி அய்யா ஒடம்பு முடியாம படுத்துகிறாரு எதுக்க மீட்டிங் போட்டிருந்திச்சி. எம்.ஜி.ஆர். ஆச்சி வந்த பெறகு இது எதர்க்கச்சி. ஆனாலும் தலவர் புரவலரையா, அந்த ஆச்சில அமைச்சரு... பெரீம்மா, நீங்க வந்து சொன்னீங்க, “இந்தாப்பா, அய்யா, தூக்கமில்லாம அவுதிப்படுறாரு. மைக்க நிறுத்திடுவீங்களான்னு. பத்து மணிக்கு மின்னயே கூட்டம் முடிச்சிட்டம்...”

“ஆமாமாம். நினப்பிருக்கப்பா. உங்கள மண்ணாங்கட்டின்னு கூப்புட மாட்டாங்க, ஒரு பேரு வச்சாங்க...”

“ஆமாம்மா, கொழந்தவேலுன்னு வச்சாங்க. அத சொல்லியே கூப்டுவாங்க... ஆனா இப்ப நீங்க ஆரும்கூட அப்படிக் கூப்புடறதில்ல. எங்காயி வச்ச மண்ணாங்கட்டிதா நெலச்சிருக்கு” என்று சிரிக்கிறான்.

“சரிங்க கொழந்தவேலு, பொண்ணுக்கு நர்சு படிக்க அம்பதாயிரம் குடுத்தா எடம் வாங்கினீங்க?”

“வுடுவனா? நேர, புரவலர் அய்யா வூட்டுக்குப் போன... போல்சு, துப்பாக்கி, காவலு எல்லாம் மறிச்சாங்க. ‘போயி சொல்லுங்க. நா. ஆதிநா கச்சிக்காரன். அவங்கம்மா இருக்கற ஊருக்காரன். மண்ணாங்கட்டி பாக்கணும்னு வந்துகிறான்னு சொல்லுங்க’ன்னே. ஒடனே ஆளுவந்திச்சி... உள்ளாற கூப்புடறாருன்னு. “இன்னாயா, எப்டீகிற"ன்னாரு. நா சொன்ன. த பாருங்கய்யா, நா தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட சாதி. அங்கபோனா, எம் பொண்ணுக்கு நர்ஸ் படிக்க அப்ளிகேசன் போட்டு, லெட்டர் வந்துகிது. எடுத்திட்டுப் போனா, அம்பதாயிரம் கட்டணும்ங்கிறாங்க. இன்னா நாயம்?ன்ன. அவுரு கையக்காட்டி அமுத்தினாரு. ஒடன போன் போட்டு ஆரிட்டயோ பேசினாரு. ஒரு லட்டர் டைப் செய்து குடுக்க சொன்னாரு. கொண்டாந்து குடுத்தே. சீட்டுக் கெடச்சி, படிச்சி முடிச்சி, இப்ப வீனஸ் ஆசுபத்திரிலதா நர்சாகீது. வாரம் ஒருநா தா ஆஃபு. அப்ப வூட்ட இருக்கும்...”

“பெரிய பெரிய மணிசருங்க, மினிஸ்டருங்க வந்து வைத்தியம் பாத்துக்கிற ஆஸ்பத்திரியாச்சே அதுவா?”

“ஆமாம்மா. புரவலர் அய்யா கூட செக்கப்புக்குப் போவாராம். அவங்க சம்சாரத்துக்குக்கூட மூணு மாசம் மின்ன ஆபரேசன்னு சொல்லிச்சி...”

“அப்ப உங்க பொண்ணு, பத்தாயிரத்துக்கு மேல சம்பாரிக்கும்...” மண்ணாங்கட்டியின் முகத்தில் அந்த சந்தோசத்தின் பூரிப்பில் நிழல் படிகிறது. அவள் துணுக்குற்றுப் பார்க்கிறாள்.

“கவுர்மென்டு ஆசுபத்திரியன்னா சம்பளம் அதிகம் கெடைக்குமா? பிறகு லீவு அது இதுண்ணு குடுக்குமா. இங்கே நாலாயிரந்தா குடுக்கிறாங்க...”

“ஏம்பா, சீட்டு வாங்கினாப்பல, ஆதிதிராவிடர்னு, வேலையும் வாங்க வேண்டியதுதான?”

“ஆமாம் பெரிம்மா. அது முன்னமே அப்ளிகேசன் போட்டிச்சி. இப்பதா, போன மாசம் வேலைக்கு வந்திச்சி. லட்டர எடுத்திட்டு ஆசுபத்திரிக்குப் போன. அமைச்சருட்ல கூட உள்ளாற பூந்துற முடிஞ்சிச்சி. இங்கே போக முடியல. ஒரே காரா வருது. யார் யாரோ கதவத் தொறந்து உடுறாங்க. போறாங்க. நா கெஞ்சுன. ப்பா, தமிழ் செல்வின்னு, நர்சாகீது. எம் பொண்ணு. முக்கியமான லட்டர் குடுக்கணும் பேசணும்னு கெஞ்சுன. பத்துமணிக்கு காலேல போன. வாசல்லியே நின்னுக்கிட்டிருந்தே. அது பன்னண்டுமணிக்கு வராந்தால அந்தக் கடுதாசியையும் எடுத்திட்டு வந்திச்சி. மூஞ்சி, காலு கையெல்லாம் தொப்பி போட்டுட்டு...” என்று சொல்லும் போதே பெருமை பொங்க சிரிப்பு வழிகிறது. “நீ ஏம்பா இங்கெல்லாம் வந்தீங்க? பெரிய ஆபீசருங்க, தலைவர்கள்ளாம் வர எடம், இங்க வந்து ஏன் பேரைக் கெடுக்கிறீங்க? நாவூட்டுக்கு வருவேன்ல! அப்ப பாக்குறது. இப்ப வூட்டுக்குப் போங்க"ன்னு சொல்லிடிச்சி...”

அவன் சிரித்தாலும் அவனுடைய துக்கம் கண்களில் உருகி வழிகிறது. துடைத்துக் கொள்கிறான்.

“ ‘கவுர்மென்ட் வேலை எல்லாம் வாணாம்பா. இங்க சென்டிரல் மினிஸ்டர் எம்.பி. பெரிய பெரிய ஆளுக, நடிகருங்க எல்லாம் வராங்க. கவுர்மெண்ட் ஆசுபத்திரில ஒண்ணுமில்லாத ஏழைங்க வந்து உருண்டிட்டுக் கெடக்கும். சுத்தம் சுகாதாரம் ஒண்ணிருக்காது... அங்க பத்தாயிரம் குடுத்தாலும், பாஞ்சாயிரம் குடுத்தாலும் இதுக்கு சரியாவாது’ன்னிடிச்சி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/10&oldid=1022819" இலிருந்து மீள்விக்கப்பட்டது