18

ந்த வருசம் மழைக்காலம் என்று பெய்யவேயில்லை. அவர்கள் கிணறு, கைவிட்டு வாளியில் எடுக்குமளவுக்கு நீர் ஏறும். உள்வரையோடு நிற்கிறது, நீர். மார்கழிக்குளிர் என்று குளிரும் இல்லை. பக்கத்தில் காடாய்க்கிடந்த இடங்களைத் துப்புரவு செய்ய ரங்கனுடன் இரண்டு ஆட்கள் வருகின்றனர். நாரத்தை வேம்பு, கொவ்வைக் கொடிகள், நொச்சி, ஆடாதொடை, கீழாநெல்லி என்று மருந்து தேடுபவர்கள் இங்கே வருவார்கள்.

எல்லாம் இப்போது குவியல்களாகக் கழிக்கப்படுகின்றன. ‘பாம்பு...!’

தப்பி ஓட முயன்ற உயிர்களைத் தடியால் அடித்துக் கொல்கிறார்கள். ஒரு பன்றி அங்கே குட்டிக் குடும்பம் வைத்திருக்கிறது போலும்? அவைகளும் குடுகுடென்று எதிரே அரையும் குறையுமாக நிற்கும் சுவர்களுக்கிடையே ஓடுகின்றன. அந்த அறை சுவர் கட்டுமானங்களை ஒட்டி, பழைய கீற்று, சாக்கு, சிமந்துப்பலகை என்று மறைப்புகளுடன் ஒரு இடம் பெயர்ந்த கும்பல் குடியேறி இருக்கிறது.

“நாங்கள் எல்லாருமே, கிராமங்களை விட்டு, வியாபாரம் படிப்புன்னு, இடம் பெயர்ந்தவங்கதான்” என்று அய்யா சொன்ன குரல் ஒலிக்கிறது. ஆனால் இப்படிப் பிழைக்க வழியில்லாமலா வந்தார்கள்? இப்படிக் குஞ்சும் குழந்தையுமாகவா வந்தார்கள்?

சைக்கிளில், சுருக்கு வளையக்கம்பி, கயிற்றுடன் இரண்டு பேர் அங்கே போகிறார்கள்.

சற்றைக்கெல்லாம் பன்றியின் மூர்க்கமான பிளிறல் அந்தப் பக்கம் மெங்கும் எதிரொலிக்கிறது.

தாயம்மாளுக்கு வயிற்றை சங்கடம் செய்கிறது.

“கிறிஸ்துமஸ் வருதில்ல?..” என்று சொல்லிக் கொண்டு ரங்கசாமி பீடிக்காரலை உமிழ்கிறான்.

“கிழக்கால பெரிய ஜபக்கூடம் கட்டுறாங்க.”

“புதிசில்ல. அது கூரைக் கொட்டாயா இருந்திச்சி; அத்தப் பெரிசா கட்டுறாங்க. வெளிநாட்டுலேந்து பணம் கொட்டுதையா...” இவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு கார்கள் வந்து நிற்கின்றன. முதலில் வந்து நிற்கும் காரின் கதவைத் திறந்து கெண்டு ஒரு பெண் இறங்குகிறாள். நல்ல வெளுப்பாக, உயரமாக, கிராப்தலையும், நீண்ட தொங்கட்டானும், மூக்குக்கண்ணாடியுமாக இருக்கிறாள். சல்வார் கமிஸ், பாதம் தூக்கிய செருப்பு... பின்னால் பருமனாக... ஓ, சந்திரி... கரையில்லாத இளநீலப் பட்டுச் சேலை, கரேலென்று சாயம் போட்டமுடி... அச்சாக அப்பனே போல், ஒரு பையன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். இவன் ரஞ்சிதத்தின் பையனா? ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க... வாங்கம்மா, வாங்க...! முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல?” என்று மாடிக்கு ஏறிச் செல்கிறான்.

இவள் மூச்சடைக்க நிற்கையில், மின்னும் காசாய பட்டு ஜிப்பாவுடன், அதே பட்டு வேட்டியும், வெளியில் துலங்கும் உருத்திராட்ச தங்க மணிகளும் மார்பில் புரள, பிடரியில் விழும் எள்ளும் அரிசியுமான முடி தாடியுடன் அவன்... பராங்குசம் இறங்குகிறான். நல்ல கருப்பில், சேலை உடுத்திய பருமனான ஒரு பெண், சிவந்த கழுத்தில் மெல்லிய சங்கிலியில் கோத்த சிலுவை, வயிரத் தோடுகள், புதையப்புதைய வெள்ளை மஸ்லின் ரவிக்கை...

“அம்மா எப்படி இருக்கிற? ரெண்டு மாசம் முன்ன நீ வந்திருந்தியாம், உடனே போயிட்டியாம். மஞ்சு சொல்லிச்சி. எனக்கும் உன்னை ஒரு நடை வந்து பார்க்கணும்னதா, மகளிரணிப் பொறுப்பு வந்த பிறகு நிக்க நேரமில்ல. எப்படியோ பொழுது ஓடிப் போயிடுது. எனக்கும்” சந்திரி முடிக்கு முன் “போதும்” என்று சொல்வது போல் கையைக் காட்டுகிறாள்.

அவள் மகன் வீட்டு பந்தம் நினைக்கவே கசப்புப் பந்தாகத்திரளுகிறது. இவள் அங்கு சென்று வந்தபின் மகன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததாகச் செய்தி வந்தது. குழந்தைவேலுவே வந்து சொன்னான். இவள் அசையவில்லை.

“அம்மா, எப்படி இருக்கிறீங்க..?”

பராங்குசமா, அம்மா என்று கேட்டு, கை குவிக்கிறான்? இது கனவா நினைவா? ஒருகால் தேர்தலுக்கு நிற்கிறானா? “தாயி, மாடிய வந்து பெருக்கிட்டுப்போ! துடப்பம் எடுத்திட்டு வா? இங்க ஏன் நிக்கிற, போ!” என்று பேசிய பராங்குசமா? காசாயத்தின் மர்மம் என்ன? அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆசாடபூதி வேசம் கட்டுவார்கள் அப்படியா?...

இவள் திகைத்து நிற்கையில் அந்த அரும்பு மீசை இவள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறது. அந்த லோலக்கு சுந்தரியும் அதைச் செய்கிறது.

“என்னம்மா, திகச்சிப் போயிட்டீங்க? இவ என் மக அர்ஷிதா. யு.எஸ்.ல மெடிசின் முடிச்சிட்டு வந்திருக்கா. இவன் தமிழ்ச் செல்வன், ரஞ்சிதத்தின் இரண்டாவது பையன். என்ஜினிரிங் முடிச்சிட்டு, நம்ம கம்பெனிலியே இருக்கிறான். கூடப்படிச்ச சுதாவயே கட்டிக்கிட்டான்...”

“ஏம்மா வாசல்லியே பேசுறிங்க? உள்ள வாங்க. எல்லாம் உள்ளே வாங்க... அம்மா, வாங்க!” மேலிருந்து விரிசமக்காளம் தட்டிப் போடப்பட்டிருக்கிறது.

“உக்காருங்க. முன்னமே ஒரு ஃபோன் போட்டு...” என்று ரங்கன் சொல்லும் போதே, இன்னொரு மஸ்லின் ஜுப்பா, உருத்திராட்சம் வருகிறது. பள்ளிக் கூடத்துப் பத்மதாசன்.

“அடாடா... வாங்க, வாங்க ஸார், வணக்கம்...”

“நமஸ்காரம். சாமிஜிய நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவுக்குக் கூப்பிடணும்னு அப்பாயின்ட்மெண்ட் நேரம் கேக்க நேத்துக்கூட ஃபோன் போட்டேன்...”

“...நா இப்பல்லாம் குருகுலம் சென்டரில இருக்கிற தில்ல- சாமிஜி ஆசிரமத்திலதான் என்ன இருக்கும்படி உத்தரவு. இன்னைக்குக்கூட அவங்க அனுமதியில்தான் வந்திருக்கிறேன்... எல்லாம் இவங்கதான் நிர்வாகம். டாக்டர் எமிலி, லட்ச லட்சமா புரளும் டாக்டர் தொழில வுட்டுட்டு, இங்க கல்விச் சேவைக்காக வந்து வாழ்க்கையையே கொடுத்திருக்காங்க. இதும் சாமிஜியின் ஆணைதான்.”

அந்தப் பூசணி முகம் கை குவிக்கிறது.

இதற்குள் ஓராள் ஆப்பிள் ஆரஞ்சு மலை வாழை அடங்கிய தட்டு, பெப்சி, கோலா, பான வகைகள் எல்லாம் கொண்டு வந்து வைக்கிறான்.

அவள் சுவரில் இருக்கும் அந்தப் படங்களை நிமிர்ந்து பார்த்த வண்ணம் சுவரோடு சாய்ந்து நிற்கிறாள். கண்களில் நீர் மல்குகிறது. ராஜலட்சுமி சொன்ன செய்திகள் முட்டுகின்றன.

இந்தப் பத்மதாசன்... ஜயந்தி டீச்சர் சொன்ன செய்திகள், சங்கரி... சங்கரி, அடேய் பொறுக்கிகளா, இந்தப் புனிதமான இடத்தை மாசு படுத்தவந்திருக்கீறீர்களா? எந்திருங்கடா? என்று கத்த வேண்டுபோல் இருக்கிறது... ஆனால், அவள் யார்? இந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் யார்? எங்கே! ராதாம்மாவின் பையன், விக்ரம், சுருண்ட முடியுடன் துருதுருவென்று இருக்கும். ராம்துன் பாடினால், அழகாகத் தாளம் போடும்...

ஏக் தோ... ஏக் தோ...

காந்தியடிகளின் ஒரே பிரார்த்தனைக் கூட்டம்தான் அவள் பார்த்தாள். அப்போது, பையன் பிறக்கவில்லை. ராதாம்மா பாவாடை சட்டை போட்டுக் கொண்ட வயசு. காந்திஜி இந்தி பிரசார சபைக்கு வந்திருந்தார். அதுதான் அவர் கடைசியாகச் சென்னைக்கு வந்த நேரம். அம்மா அய்யா எல்லோரும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முன்பு போய்விட்டார்கள். சந்திரி, பஞ்சமி, ராதாம்மா, எல்லோரையும் சுசீலா தேவி, மீனாட்சி என்று குருகுலத்தில் சேர்ந்த குழந்தைகளுடன் முன்பே கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். குருகுலத்தில் அந்தக் காலத்தில் டயர் போட்ட பெரிய ரெட்டை மாட்டு வண்டி ஒன்று உண்டு. அதை அவள் புருசன்தான் ஓட்டுவான். ஆனால் அன்று அந்த வண்டியைச் சுப்பய்யா ஓட்டிக் கொண்டு போனதாக நினைவு. இவளும் இவள் புருசனும் சாயங்காலமாகச் சென்றார்கள்.

என்ன கூட்டம் ?

ஒரே தலைகள். சேவாதள தொண்டர்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இளமஞ்சள் கதர்ச் சேலையும் ரவிக்கையும் அணிந்த பெண் தொண்டர்கள்... அம்மாவும் இந்தக் கூட்டத்தில் தான் இருப்பார்... என்று நினைத்துக் கொண்டு தெரிந்த முகத்தைத் துழாவினாள். ஆங்காங்கு மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலெல்லாம் மக்கள்... நடுவே உயரமாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது, ஏணி போன்ற படிகளில் காந்தி ஏறியது தெரிந்தது. மேடையில் பெண்கள், ஆண்கள் இருந்தார்கள். மாயமந்திரம் போல் இருக்கிறது.

ஏக் தோ... ஏக் தோ... என்று அவர் சொன்ன மந்திரக் குரலில் கூட்டம் அப்படியே கட்டுப்பட்டுத் தாளம் போட்டது. அந்த சுருதி, தாளம், எல்லாம் தாறுமாறாகி விட்டன. அவளுக்குக் கண்ணீர் வடிந்து கன்னங்களை நனைக்கிறது. சூழலை மறந்து அவள் நின்ற நிலையில் யார் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை.

“அப்பா... நான்... வரேன். ரிபப்ளிக்டே செலிப்ரேஷனுக்கு எப்படியானும் சாமிஜியக் கூட்டிட்டு வரணும்...”

“நிச்சியமா. நான் தகவல் சொல்றேன். நீங்க வந்து பாருங்க...” அவர் சென்ற பிறகு, பராங்குசம் தாடியை உருவிக் கொள்கிறான். பிறகு எமிலியிடம் எதோ பேசுகிறான். லட்ச லட்சமாகப் புரளும் மருத்துவத் தொழில் ஏதாக இருக்கும்? இந்தப் பொறுக்கிகளின் அநியாயங்களைக் கரைக்கும் மருத்துவத் தொழிலாகத்தான் இருக்கும். இப்போது, பொட்டைப் பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே பெண் குழந்தைகளைத் தாய்மார் அழித்துக் கொள்ளும் முன்னேற்றம் வந்திருக்கிறது. ‘ஏண்டி, உனக்குப் புருசன், பிள்ளை இல்லாது போனாலும், பெண் என்ற ஈவு இரக்கம், நியாய அநியாய மனசும் இல்லையா? ராஜலட்சுமி பெண்ணுக்கு இடம் இல்லைன்னு சொல்லவா இந்த அய்யா இப்படி ஒரு நிறுவனத்தை உண்டாக்கினார்?... இந்த இடம், அந்த மாதிரி ஒரு குருகுலத்துக்கு உதவனும். என்றிருந்தாலும் ராதாம்மாவின் அந்தப் பையன், விக்ரம்... தம்பி, குழந்தே, நீ எங்கப்பா இருக்கிற? பன்னிகளையும் பாம்புகளையும் விடக் கீழான சன்மங்கள் பெருகவா அய்யா இந்த மண்ணைத் தத்தம் செய்திட்டுப் போனாங்க?...’

கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அம்மா. அம்மா...?...”

சந்திரிதான் எழுந்து நின்று அவள் கையைப் பற்றுகிறாள்.

“ஏனிப்ப அழுவுற? நீ எதுக்கு அழணும்? உம்மகன் செத்துப் புழச்சிருக்கு. அவ மனசுக்குள்ள, அம்மா கிட்டேந்து ஒரு இதமான பேச்சு வரலன்னு தாபந்தான் அதிகமாயிருக்கு. நீ யாரோ ஒரு பொறுக்கிப் பயலுக்காக, வீடு தேடி வந்து, அவங்கள அவமானம் செய்திட்டுப் போனத ரஞ்சிதத்தால கூடத் தாங்க முடியல. ஆசுபத்திரிக்கு ஒரு எட்டு வந்து பாத்திருக்கலாமில்ல? நா அங்கதா இருந்தே...”

“சந்திம்மா, அதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்லுறீங்க? அது உங்க குடும்ப விசயம்... அதெல்லாம் இப்ப வாணாம். ”

“... தாயம்மா, இப்ப நான் நேரா விசயத்துக்கு வரேன்...” என்று பராங்குசம் அவளைப் பார்த்து உட்காருகிறான். தாடியைத் தடவிக் கொண்டு, மேலே பார்க்கிறான்.

“அய்யா. தியாகி எஸ்.கே.ஆர். என் கனவுல வந்தாங்க. புழுதில தேய வேண்டிய என்னை, சேவையில் புடம் போட்டு இன்னிக்குக் கல்விக்குன்னு ஒரு வாழ்நாள் தொண்டுக்கு அர்ப்பணிக்க ஆளாக்கியவரு, அந்த வள்ளல். உனக்கு நா ஏன் காசாயம் போட்டுக்கணும்னு தோணியிருக்கணும். அது நியாயமானது தான். ‘தம்பி, நான் தோற்றுவித்த குருகுலக் குடிலை நீ பெரிய கல்வி சாம்ராச்சியமா வளர்த்திட்டே. மக்கள் குலத்துக்கு நீ இன்னும் சேவை செய்யணும். ‘ஆன்மிகம்’ இல்லாத வாழ்க்கை இல்ல. நீ முழுசா அதில் ஈடுபடனும்...’ன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்னும் புரியல. சாமிஜிகிட்ட ஓடினேன். நம்ப அய்யா படம் அங்கேயும் ஆசிரமத்துல இருக்கு இப்ப. அவங்கதான் சொன்னாங்க நீ... காவி உடுத்தணும்னு உத்தரவாயிருக்குன்னு... இந்த பாரத தேசம் மகான்கள் உருவான தேசம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காந்திஜி, நம் தியாகி, எல்லோரும் வழிகாட்டி இருக்காங்க. அந்த வழியில் நீ இன்னும் சேவை செய்யணும்னாங்க. இப்ப, நகரத்தில் மூலைக்கு மூலை ஆஸ்பத்திரி இருந்தாலும், நோய்க்கூட்டம் பெருத்துப் போச்சு. இப்ப இந்த இடம் முழுதுமாக, எல்லா வசதிகளையும் அடக்கிய நவீன சிகிச்சைகள் செய்யுமளவுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்னு இருக்கிறோம்...” அவன் நிறுத்துகிறான்.

சந்திரி தொடருகிறாள். “ஆமாம்மா. இப்ப தம்பி, ‘ஹார்ட்ஃபெய்லியர்’ன்னான பிறகு பிழைச்சு நடமாடுறான்னா, அது நவீன மருத்துவம்தான். அமெரிக்காவுல இருக்கிற மாதிரியே அத்தனை வசதிகளுடன், அங்கேயே பயிற்சி பெற்ற டாக்டர்கள், அதுக்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் வரவழைச்சி உருவாக்கும் திட்டத்தில இறங்கி இருக்கிறாங்க. என்னிக்கிருந்தாலும், உங்களுக்கும் வயசாவுது எண்பதுக்குமேலே ஆயிட்டுது. எதுக்கு இங்கே கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியே இருக்கணும்?... சொல்லுங்க?”

தாடி உருவல், அவளுக்கு மிக அருவருப்பாக இருக்கிறது. “நீங்க உங்க மகன் வீட்டுக்குப் போக இஷ்டப் படலன்னா வேணாம். பேசாம, குருகுலம் ‘கார்னரில்’ உங்களுக்குன்ன ஒரு ரூம் வசதியா, இப்படியே காந்திபடம், அய்யா படம் மாட்டி, வச்சிக் குடுத்துடறோம். உங்களுக்கு என்ன வசதி வேணுன்னாலும் அப்படி...”

அவளுள் ஒரு பிரளயமே நடக்கிறது.

‘தாயம்மா, சத்தியம் மயிரிழை போல் இருந்தாலும் அதன் வலிமை பெரிது. விடாதே. அந்தக் கல்விச்சாலை போல்தான் இந்த ஆஸ்பத்திரியும் இயங்கும். எந்த ஏழைக்கும் இங்கே இடம் இருக்காது. ஜயந்தியின் பழைய வீட்டில், அந்த கிறிஸ்தவ டாக்டர், தொள தொளவென்று வெள்ளைச்சராய் போட்டுக் கொண்டு வரும் பஞ்சைப் பராரிகளுக்கு வைத்தியம் செய்கிறாரே, அதற்கு மாற்றில்லை இது. இது முதலைகளுக்கு...’

“என்னம்மா? யோசிக்கிற ? இப்ப உலகமுச்சூடும், ரொம்ப வேகமா வளர்ச்சியும் மாறுதலும் வந்திருக்கு. 2005க்குள், சர்க்கரை நோயும் மூட்டு வாதமும் மிக வேகமா வளரும்னு சொல்றாங்க. வசதி, சவுரியங்கள் இப்படியும் பாதிப்பை உண்டாக்குது. நான் இப்ப எத்தினி கிராமங்களுக்குப் போறேன்? நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. பொம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப...? சில்க்சாம்பு, கிளீன் சாம்புன்னு விதவிதமா பாக்கெட் வாங்கித் தலை கசக்குறாங்க. டி.வி. இல்லாத குடிசை இல்ல. அதுனால, வளர்ச்சியோட, பாதிப்புகளையும் நாம நினச்சிப் பார்க்க வேண்டி இருக்கு...”

இப்போது, குழந்தைவேலு கூடத்து வாயிலில் தென்படுகிறான். சந்திரியைப் பார்த்து, கூழையாகவே கும்பிடு போடுகிறான்.

“வணக்கம் டாக்டரம்மா!...”

ஒரே மலர்ச்சி உருவம். “வாய்யா, மண்ணாங்கட்டி! எப்டீயிருக்கே?”

“வணக்கம் சேர்மன் ஐயா!”

பராங்குசத்துக்கு ‘சேர்மன்’ பதவியா?

இவன் வருகை இறுக்கத்தைத் தளர்த்துகிறது.

“யோவ், வீனஸ் ஆஸ்பத்திரியைவிட மிகப் பெரிசு இங்க ஒரு ஆஸ்பத்திரி வரப்போகுது...”

அவன் முழுதாக மலர்ந்து, “சந்தோசம் அய்யா, வரட்டும்” என்று ஆமோதிக்கிறான்.

இளைய தலைமுறைகள் இரண்டும் அதற்குள் பின்புறம் சென்று சுற்றிவிட்டு வருகிறார்கள்.

“வணக்கம், சந்திரிம்மா மகளா?...” அதற்கு ஒரு சிரிப்பு, கைகுவிப்பு.

“அச்சா புரவலரய்யா மாருதியே கிறாரு... வணக்கமையா, இளைய புரவலர்...” என்று மீண்டும் சிரிப்பு.

அரசியல் கட்சி என்பது இப்படி ஒரு பலாப்பழமாக ஈக்களைக் குந்தவைக்குமோ?

“என்ன, ப்பா! பாத்தியா?...”

“பின்னாடி ஒரு ரோ பழைய வீடுங்க இருக்கு... அதையும் சேத்துக்கிட்டா, இந்த இடம் ஒரு ஃபைவ் ஸ்டோரி பில்டிங்கா, பேஸ்மென்ட் - காலேஜ், பெரிய ஓபன் ஸ்பேஸ், எல்லாம் செய்துக்கலாம். அந்தப் பக்கம் எதோ சர்ச் கட்டுறாங்க போல...”

“அதெல்லாம் தொல்லையில்ல. நாம ஒரு பிள்ளையார் கோயில் மாஸ்க்-எல்லாமே பக்கத்துல ஏற்பாடு பண்ணிடலாம்- ஏன்னா, நோய்ன்னு வரவங்க எல்லாருமே கடவுள் நம்பிக்கையத்தான் வச்சு வருவாங்க. நாமும் ‘கடவுள்’ அருளைத்தான் வைக்கிறோம். எம்மதமும் சம்மதம்...”

சந்திரியும் இளையவர்களும் ரங்கன் உடைத்துத் தரும் பானத்தைக் குடிக்கிறார்கள்.

“.... உம், வரட்டுமா?” என்று உறுத்துப் பார்ப்பது போல் பராங்குசம் கேட்டுவிட்டுப் போகிறான்.

“அம்மா, நீ ஒண்ணும் யோசனை பண்ணாதே. நீரடிச்சி நீர் விலகாது. இப்பவே நீ வந்தாகூட கூட்டிட்டுப் போயிடுவ. அப்பிடி நினைச்சிட்டுத்தா வந்தே.”

“சரி சரி, நீ போயிட்டுவா!” எல்லோரும் போகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/18&oldid=1022829" இலிருந்து மீள்விக்கப்பட்டது