உரிமைப் பெண்/எது பெரிது?
“ஒவ்வொருவனுக்கும் அவன் அவன் உயிர்தான் பெரிது. அதற்கப்புறத்தான் மற்றதெல்லாம்” என்றார் கல்யாணசுந்தரம்.
“ஒரே அடியாக அப்படிச் சொல்வதற்கில்லை. உயிரைக் காட்டிலும் பிரியமானது வேறே ஏதாவது ஒன்று ஒவ்வொருவனுக்கும் இருக்கலாம்” என்று எதையோ யோசித்துக்கொண்டே பதில் கொடுத்தார் அவருடைய நண்பர் வீராசாமி.
“அதெல்லாம் வெறும் பேச்சு. உயிர்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும்விடப் பிரியமானது.”
“நீங்கள் சொல்வதை ஒரளவிற்கு நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நான் அதை முற்றும் ஆமோதிக்க முடியாது.”
“தன்னுடைய உயிரின் மேல்தான் மனிதனுக்குப் பற்று அதிகம் என்பதை எடுத்துக் காட்டச் சுவாமி சாமதீர்த்தர் அழகான கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? சிறு வயசிலிருந்து ஒருவன் வெவ்வேறு பொருள்களின்மேல் ஆசை கொள்வதை யெல்லாம் அவர் கூறிக்கொண்டே வருகிறார். கல்யாணம் செய்துகொள்ளுகிறபோது அவன் தனக்குத் தன் மனைவி தான் மிகப் பிரியமானவள் என்று நினைத்தானாம், இரண்டு வருஷங்கள் கழிகின்றன. ஒர் ஆண்குழந்தை பிறக்கிறது. அவனுடைய ஆசையெல்லாம் குழந்தையிடம் செல்கிறது. உயிரைக் காட்டிலும் அதுவே மேலானது என்று அவன் நினைத்தானம். ஒருநாள் தற்செயலாக அவன் வசித்து வந்த வீடு தீப்பற்றிக் கொண்டது. அச்செய்தி கேட்டு அவன் தான் உத்தியோகம் செய்யும் காரியாலயத்திலிருந்து ஓடோடியும் வந்தான். குழந்தை வீட்டிற்குள்ளே அகப்பட்டுக்கொண்டதை அறிந்தான். ஆனால் அவன் உள்ளே பாய்ந்து செல்லவில்லை. “ஐயோ! என் குழந்தையைக் காப்பாற்ற யாரும் இல்லையா? என்று கதறிக்கொண்டு நின்றானே ஒழிய, வீட்டிற்குள் நுழைய மனம் துணியவில்லை. காரணம் என்ன? அவனுக்கு அவனுடைய உயிர்தான் குழங்தையைவிடப் பெரிது. அதன் மேல்தான் அவனுக்கு ஆசை அதிகம்.” இவ்வாறு கதை சொல்லிக் கல்யாணசுந்தரம் தம் கொள்கையை நிலைநாட்ட முயன்றார்.
“சுவாமி ராமதீர்த்தர் இந்தக் கதையின் மூலம் நிரூபிக்க வந்த விஷயம் வேறு. ஒவ்வொருவனிடத்திலும் இறைவன் விளங்குகிறான் என்பதை விளக்க அவர் கதை சொன்னர். எனது எண்ணம் தவறு என்று அதன் மூலம் எவ்வாறு ஏற்படுகிறது? உயிர்தான் பெரிதென்று அவர் கூறவில்லையே?”
“நீங்கள் என்ன சொன்னபோதிலும் என் அபிப்பிராயம் மாருது. மனிதனுக்கு உயிரைவிடப் பெரிதாக என்ன இருக்க முடியும்?”
“நடராஜ பிள்ளைகூட இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால்........”
“எந்த நடராஜ பிள்ளை ?”
அவர்தான், பாங்கியிலே தலைமைக் கணக்காாக இருந்தாரே அந்த நடராஜ பிள்ளை. அவரும் உங்களைப் போலத்தான் வாதாடிக் கொண்டிருந்தார்." “பிறகு யார் ஜெயித்தது? அவரே ஜெயித்தார் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லுவேன்.”
“இல்லை; அப்படி ஒன்றும் இல்லை. அந்த விஷயமே வேறு விதமாக முடிந்துவிட்டது.”
“அதைத்தான் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்.”
“என்னுடைய கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக நான் அதைச் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த விவாதத்தின் முடிவிலே ஒர் உருக்கமான சம்பவம் இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்கவேண்டும் என்பதற்காகவே சொல்லுகிறேன்” என்று விராசாமி பீடிகை போட்டுக்கொண்டார்.
வீராசாமியும் கல்யாணசுந்தரமும் சென்னைக் கடற்கரையிலே வீசும் காற்றை அனுபவித்துக் கொண்டு மணற் பரப்பில் அமர்ந்திருக்கிறார்கள். வீராசாமிக்கு அறுபது வயது இருக்கும். ஆனால் அவளைப் பார்த்தவர்கள் அத்தனை வயது மதிப்பிடவே மாட்டார்கள். மற்றவருக்கு 45 இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் ஒட்டுக் குடியாகத் தியாகராயநகரில் உள்ள வீராசாமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அது முதல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பு வளர்ந்துவந்தது. சில நாட்களில் அவர்கள் இாண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு கடற்கரைக்குச் செல்லலானார்கள். சுவாரசியமாக எதைப்பற்றியாவது பேசி மாலை நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டுத் திரும்புவார்கள். இன்றும் அம்மாதிரிதான் வந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கிறார்கள். வீராசாமி ஆரம்பித்தார்:—
“நடராஜ பிள்ளை எனக்கு நெருங்கிய நண்பர். உங்களுக்கு அவரை நேரிலே தெரிந்திருக்க முடியாது. அவர்தான் என்னை உல்லாச சபையில் அங்கத்தினராகச் சேரும்படி செய்தவர். வாரத்திற்கு ஒருமுறை அந்தச் சபை சனிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் கூடும். தேநீா் அருந்திக்கொண்டே உல்லாசமாகப் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். ஒரு சனிக் கிழமையன்று எப்படியோ இதே கேள்வி எழுந்தது. சிலருக்கு உயிரைவிடக் கலை பெரியது என்று ஒருவர் சொன்னார். அதற்கு உதாரணமாக அவர் ஒரு வரலாற்றை எடுத்துக் காட்டினர்.
“பாரிஸ் நகரத்திலே ஒரு சிற்பி இருந்தானாம். ஏதோ ஒரு சந்திலே ஒரு சின்ன அறையிலே இருந்து கொண்டு சலவைக் கல்லில் அவன் ஒர் அழகிய இளமங்கையின் வடிவத்தைச் செதுக்கிக்கொண்டிருந்தான். அவன் அதில் ஈடுபட்டுப் பல நாட்களாகிவிட்டன. அவனுக்கு வேறென்றைப் பற்றியும் ஞாபகம் இல்லை. சிற்பம் எப்பொழுது முடியும், எப்பொழுது அதைப் பார்க்கலாம் என்று சிலர் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிற்பி ஏதோ ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாள் காலையிலே வந்தால் பார்க்கலாம் என்று சொன்னான். குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் மாலையில் நெடுநேரம் வரை அவன் அந்தச் சிலைக்கு முடிப்புக் கோலமும் நயனமோக்கமும் செய்துகொண்டிருந்தான். பொழுது மறைந்து இருளும் சூழ்ந்துகொண்டது. அப்பொழுதும் அவன் ஒரு சிறிய கைவிளக்கின் வெளிச்சத்திலே வேலை செய்தான், ஒவ்வோர் அங்கமாகக் கவனித்து அதைக் கூர்ந்து நோக்கிச் சிறு சிறு மாறுதல் செய்தான். கடைசியில் இரவு பத்துப் பதினொரு மணிக்கு அவனுக்கு ஒருவாறு திருப்தி உண்டாயிற்று. தன் பணி முடிந்ததென்று பெருமகிழ்ச்சி யோடு படுத்துறங்கப் போனன். அந்தச் சமயத்தில் உறைபனி பெய்யத் தொடங்கிற்று. பாரிஸ் நகரமல்லவா? சில சமயங்களில் அங்கு உறைபனி பெய்யும். குளிரின் கடுமையும் மிக அதிகரித்தது. ஜலம் பனிக்கட்டியாக மாறியது. அக்கடுங் குளிரிலே சலவைக் கற்சிலையைத் திறந்து வைத்திருந்தால் அதில் கீறல்கள் விழுந்து கெட்டுப் போகும். அதற்கு என்ன செய்வது என்று அவன் கவலை கொண்டான். அவனுடைய சிறிய அறையிலே கணப்புக் கிடையாது. ஏழையாகிய அவனுக்குக் கரி வாங்கிக் கணப்பு மூட்டக் காசு ஏது? அவனுடைய உடம்பைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரே ஒரு நீண்ட கம்பளிச் சட்டை தான் உண்டு. அதைத் தன் உடம்பிலிருந்து களைந்து சிலையைப் பத்திரமாகப் போர்த்தினான். அவனுக்கு மனசிலே ஆறுதல் ஏற்பட்டது. சந்தோஷமாகச் சிலையின் பாதத்தருகில் படுத்துக்கொண்டு துாங்கலானன்.
“மறுநாள் காலையில் அந்த அற்புதச் சிற்பத்தைக் காணப் பலர் வந்தனர். உயிர் பெற்ற பாவைபோலச் சிலை அழகின் பிழம்பாய் நின்றது. ஆனால் அதை உருவாக்கிய சிற்பியோ உயிரற்ற பிணமாய்க் கிடந்தான். வறுமையால் வாடி, மெலிந்த அவனுடைய உடல் குளிர் தாங்காது விறைத்துப் போய்விட்டது. அந்தச் சிற்பிக்குத் தன் உயிரைவிடக் கலைதான் பெரியதாகத் தோன்றிற்று என்றார் அவர்.
“அவன் ஒரு முட்டாள் என்றார் நடராஜ பிள்ளை.”
“மற்றொருவர் ஆரம்பித்தார் : உயிரைவிடக் கொள்கைகளைப் பெரிதாக மதிப்பவர் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி தமது கொள்கைக்காக உயிரை விடக் தயாராக இருக்கவில்லையா?” “எல்லோரும் மகாத்மா காந்தி, ஏசுகிறிஸ்து ஆகிவிட மாட்டார்கள். அவர்களைப் போன்ற பெரியோர்களைப் பற்றிப் பேசக்கூடாது. சாதாரணமான நம்மைப்போன்ற மனிதர்கள் அப்படி நினைப்பார்களா என்பதுதான் கேள்வி என்று நடாாஜ பிள்ளை உரத்துப் பேசினார்.”
“சாதாரண மனிதரிலும் அப்படி நினைப்பவர்கள் இருப்பார்கள். இருக்கவே முடியாது என்று நினைப்பது சரியல்ல” என்றேன் நான்.
“அப்படி ஒருவன் இருந்தால், அவனைப் பைத்திய மென்றுதான் நான் சொல்லுவேன்” என்று கூறினார் நடராஜ பிள்ளை.
“நல்ல தன்மையுடையவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களே உலகம் அறியாமல் இருக்கலாம். அதனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் பல விஷயங்களிலே தப்பான வழியில் சென்றாலும் ஏதாவது ஒன்றில் உயர்ந்து நிற்பார்கள். அதை அவர்கள் பெரிதாக மதிப்பார்கள்” என்றார் மற்றோர் அங்கத்தினர்.
இப்படியாகப் பலரும் அந்த விவாதத்திலே கலந்து கொண்டார்கள். அன்று உல்லாச சபையில் உல்லாசம் அதிகம் இல்லை. காரசாரமே மேலிட்டிருந்தது. நடராஜ பிள்ளை விடாப்பிடியாகத் தாம் சொன்னதையே வற்புறுத்திக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அதை ஆமோதிக்க வில்லை. ஆனால் அன்று யாருக்கும் பின்னால் நடக்கப் போகிற விஷயம் தெரியாது. தெரிந்திருக்குமானால் நடராஜ பிள்ளையே அத்தனை வேகமாக வாதாடியிருக்க மாட்டார்.
“நடராஜ பிள்ளை திருவல்லிக்கேணியிலே உள்ள பாங்கிலே தலைமைக் கணக்காாக இருந்தார். நம்பிக்கைக்கும் பொறுப்பாகக் காரியங்களைக் கவனிப்பதற்கும் அவரைப் போல வேறொருவர் கிடைக்க முடியாது. அத்தனைக்கும் அவர் சாதாரண மனிதர்தான்; சாது. அநாவசியமாக வேறொருவர் விஷயத்தைக் காதிலேகூட வாங்கிக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூட அவரைத் தெரியாது. தாமுண்டு, தமது வேலை உண்டு என்று இருப்பார். வாரத்திற் கொருமுறை உல்லாச சபைக்கு வருவதைத் தவிர அவரை வெளியே அதிகமாகப் பார்ப்பது அருமை. ஆனால் அவரிடம் குறைபாடே இல்லை என்று சொல்ல முடியாது. பெண்கள் விஷயத்திலே அவருக்கு அவ்வளவு உறுதி இல்லை. இப்படி இன்னும் சில சொல்லலாம். ஆனால் நண்பன் என்ற முறையில் நான் எல்லாவற்றையும் வெளியில் கூற விரும்பவில்லை. சாதாாண மனிதர்தான் அவர் என்பதை உங்களுக்குக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.
“அவர் பாங்கிலே குமாஸ்தாவாக 30 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். ஒழுங்காக வேலை செய்து வந்ததால் படிப்படியாகப் பதவி உயர்ந்தது. பத்தாவது வரையில் தான் அவர் படிப்பு. இருந்தாலும் கடைசியில் தலைமைக் கணக்கராகவே ஆகிவிட்டார். காரியாலயத்திற்குத் தாமதமாய் ஒரு நாள் கூட அவர் போனதில்லை. பத்து மணி என்றால் சரியாகப் பத்து மணிக்கு ஆஜாாகிவிடுவார். அவர் உள்ளே நுழைவதைக் கண்டு கடிகாரத்தில் மணியைச் சரிப்படுத்தி வைக்கலாம் என்று மற்றவர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிரமமாக அவர் வேலைக்கு வருவார். யாராவது காலங்தாழ்த்து வந்தாலோ, அல்லது கணக்கைச் சரியாக வைக்காவிட்டாலோ அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது. இந்தக் காலத்துப் பையன் களுக்குப் பொறுப் புணர்ச்சியே கிடையாது” என்று சீறுவார். வேலை நேரம் தவிர மற்ற நேரத்தில் அவர் தாராளமாகச் சிரித்துக்கொண்டு பேசுவதுண்டு. ஆனால் வேலையில் மட்டும் வெகு கண்டிப்பு. கீழ் உத்தியோகஸ்தர்களெல்லாம் அவரைக் கண்டால் பயந்து கிடப்பார்கள். அத்தனை மரியாதை. பாங்கு மானேஜருக்கும் டைரக்டர்களுக்கும் அவரிடத்திலே மிகவும் பிரியமும் மதிப்பும் உண்டு.
“நடராஜ பிள்ளை முப்பத்தைந்து வருஷம் அந்தப் பாங்கிலே வேலை பார்த்தார். வேறு இடத்திற்குப் போகலாமென்று அவர் நினேக்கவே யில்லை. அப்படி நினைத்திருந்தால் அதிகச் சம்பளங்கூடக் கிடைத்திருக்கும். அவர் அதை விரும்பவில்லை. நாணயம் தவறாமல் கடைசி வரையில் ஒரே இடத்தில் வேலை செய்வதென்று அவர் தீர்மானம் பண்ணியிருந்தார்.
“அதனால் அவர் தமது 53 ஆவது வயது முடிந்ததும் ஒய்வெடுத்துக்கொள்ள விரும்பியபோது அந்தப் பாங்கு டைரக்டர்கள், மானேஜர், குமாஸ்தாக்கள் முதலிய மற்ற ஊழியர்கள் அனைவரும் ஏகோபித்த மனத்துடன் அவருக்கு ஒரு நிதியளிக்கவும், பிரிவுபசாரம் செய்யவும் முன்வந்தார்கள்.”
“நடாாஜ பிள்ளை ஒரளவு பணம் சேமித்து நீண்டகால டிபாசிட்டுகளாகப் பல பாங்குகளில் போட்டு வைத்திருந்தார். தமது வருவாயிலிருந்தே சொந்த வீடு ஒன்றும் கட்டிக் கொண்டார். பாங்கிலிருந்து விலகிய பிறகு தலயாத்திரை போய்விட்டு வந்து தமது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கவேண்டுமென்பது அவருடைய எண்ணம். பூச்செடிகள் வைத்து வளர்ப்பதிலே அவருக்குப் பிரியம் அதிகம். ஆனால் உத்தியோகம் செய்கிறபோது அதற்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஏதோ மாலை வேளையில் சிறிது நேரம் தமது வீட்டைச் சுற்றியுள்ள செடிகளைக் கவனித்துக்கொண்டிருப்பார்; அவற்றிற்குக் கிணற்றிலிருந்து நீரிறைத்து ஊற்றுவார். வயது ஆக ஆகத் தளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியதால், காரியாலயத்திலிருந்து மாலையில் வந்த பிறகு இதைக்கூடச் செய்ய முடியவில்லை. அலுப்பு அதிகமாய் ஏற்பட்டது. ஆதலால் வேலையைவிட்டு விலகியதும் தமது காலத்தையெல்லாம் பூக்களோடு செலவிட வேண்டுமென அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். இன்னும் மூன்று மாத காலம் இருக்கிறது. பிறகு இந்தச் செடிகளோடு செடியாய்ப் பேசாமல் உட்கார்ந்துவிடுவேன். வேலை பார்ப்பதிலே ஒரு தப்பு வரப்படாது என்று நினைத்து நினைத்து அந்தக் கவலையே எனக்கு இப்பொழுது ஒரு பாரமாக இருக்கிறது. அந்திய காலத்தில் இந்தப் பொறுப்பையெல்லாம் இளமையும் வலிமையும் உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெற வேண்டாமா? எனக்கு இப்போது ஒய்விலே அதிக ஆசை வந்துவிட்டது என்று என்னிடம் அவர் கூறினர்.
“அப்படிக் கூறி ஒரு மாதங்கூட ஆகவில்லை. அவருக்கு ஒய்வு கிடைக்க இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன. திடீரென்று அவர் விஷயமெல்லாம் எதிர்பாராத விதமாய் மாறிப் போய்விட்டன.”
“நடராஜ பிள்ளை வழக்கம்போலக் காலத் தவறாமல் பாங்குக்குச் சென்றுகொண்டிருந்தார். விரைவில் கிடைக்கப்போகிற ஒய்வைப் பற்றிய நினைவால் உண்டான ஒரு வித இன்பத்தின் சாயல் அவருடைய முகத்தில் மலர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும். பாங்கு மூடும் சமயம். நடராஜ பிள்ளையின் தங்கை மகன் அருணாசலம் அவசர அவசரமாக அவருடைய அறைக்குள்ளே நுழைந்தான். அவனுக்கு இாண்டாயிரம் ரூபாய் உடனே தேவையாயிருந்தது. அது எதற்கு என்று அவர் என்னிடம் சொல்லவில்லை. ஏதோ தவிர்க்கமுடியாத நெருக்கடியாகத்தான் இருக்கவேண்டும். நடராஜ பிள்ளைக்கு அந்தப் பையனிடம் அதிகப் பிரியம் உண்டு. மேலும் அவனுக்குத்தான் அவர் தம் கடைசி மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதென்று முடிவு செய்திருந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள். மூன்றும் பெண்கள். இருவருக்கு விவாகமாகிவிட்டது. கடைசி மகளுக்குப் பதினேழு வயது இருக்கும். அவள் மட்டும் வீட்டில் இருக்கிறாள். ஒய்வு பெற்று வந்ததும் கல்யாணத்தை முடித்துவிட்டுத் தான் அவர் யாத்திரை கிளம்புவதாகத் திட்டம் வகுத்திருந்தார்.
அருணாசலம் நல்ல பிள்ளைதான். அவன் பி. ஏ. வரையில் படித்து முடித்துவிட்டுச் சொந்தமாக ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அந்தச் சமயத்திலே பணம் கிடைக்காவிடில் பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்குமென்று நான் ஊகிக்கிறேன். ஆனால் அதைப்பற்றி மட்டும் நடராஜ பிள்ளை என்னிடம் கூற விரும்பவில்லை. அதைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மனமில்லை என்று தெரிந்ததால் நான் வற்புறுத்த வேண்டாமென இருந்துவிட்டேன்.
மருமகனுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டுமென்று அவர் நினைத்தார். ஆனால். உடனே இரண்டாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது? அடுத்த நாள் காலை வரையிலும் அவகாசம் இருந்தாலும் அவர் சமாளித்துவிட முடியும். கைமாற்றாகவே அந்தத் தொகையை அவர் சுலபமாக வாங்கலாம். ஆனால் உடனே வேண்டுமென்றால் என்ன செய்வது?
பாங்கு மானேஜரும் தம் வீட்டிற்குப் போயாகிவிட்டது. அவர்தாம் கடைசியாக வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கையிருப்புச் சரியாக இருக்கிறதா என்றும் சோதித்து,பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுப் போகவேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் இவவாறு நடக்கிறதில்லை. சில நாட்களிலே அவர் முன்னலேயே போய்விடுவார். நடராஜ பிள்ளையிடம் அளவற்ற நம்பிக்கை இருந்ததால் மானேஜர் கையிருப்பைப்பற்றி அவ்வளவு கவலைப்படுவதில்லை. பணப்பொறுப்பு அவருக்கு முக்கியமாக உண்டென்றாலும் இத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக அவர் நடராஜபிள்ளை விஷயத்தில் அத்தனை ஜாக்கிரதையாக இருப்பதிலலை. இரும்புப் பெட்டிக்கு அவரிடத்திலே ஒரு சாவியும், நடராஜ பிள்ளையிடத்திலே ஒரு சாவியும் இருக்கும். அவரிடம் உள்ளதுதான் ராஜ சாவி. அதைக் கொண்டு பூட்டிவிட்டால் மற்றச் சாவியால் திறக்க முடியாது. ஆனால் நடராஜபிள்ளையிடம் உள்ள சாவியைக் கொண்டு பூட்டினல் அவரிடம் உள்ளதைக் கொண்டு திறந்துவிட முடியும். மானேஜரிடம் ராஜ சாவி இருப்பதன் அர்த்தமே அவருக்குத்தான் பணப் பொறுப்பு என்பதாகும். ஆனால் நம்பிக்கை வலுக்கிறபோது உஷாரெல்லாம் சற்றுத் தளர்வது சகஜந்தானே? அந்த மாதிரியே இன்றும் நடந்துவிட்டது.
“மானேஜர் போய்விட்டார். நடாாஜ பிள்ளையே பணப் பெட்டியைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். மறுநாள் காலையிலும் அவர்தான் அதைத் திறப்பார். கொடுக்கல் வாங்கல் தொடர்ந்து நடக்கும். நடராஜ பிள்ளை வழக்கமாகக் கணக்கை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சரி பார்த்து இருப்பை எண்ணிக் கட்டி வைத்துவிட்டுப் போவார். ஒரு சல்லிக் காசு குறையாது. நூறு ரூபாய் நோட்டுக்கள் தனியாக, பத்து ரூபாய் நோட்டுக்கள் தனியாக, மற்றவை தனியாக, ரூபாய் நாணயம் சில்லறைகள் தனியாக ஒழுங்காக இருக்கும்படி வைப்பார். பார்த்தவுடனே இருப்புத் தொகை சட்டென்று தெரிகிற மாதிரி துண்டுக் காகிதங்களில் ஒவ்வொரு கட்டின் மதிப்பையும் எழுதி அதில் செருகி வைத்திருப்பார். ஒரு நாள், அரை நாளுக்கென்றாவது அவர் அதில் காலணாக்கூடத் தமது சொந்தக் காரியத்திற்காகத் தொட்டது கிடையாது.
ஆனால் இன்றைக்கு அதிலிருந்து அருணாசலத்திற்கு இரண்டாயிரம் கொடுத்தால் என்ன என்று யோசிக்கலானர். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குள் அந்தத் தொகையைச் சமாளித்து விடலாம். பிறகு காரியாலயத்திற்கு வந்ததும் அதைப் பெட்டியில் வைத்துவிட்டால் போகிறது - யார் கவனிக்கப் போகிறார்கள்? மேலும் அவர் என்ன, களவாடவா போகிறார்? எதிர்பாராத நெருக்கடியைத் தீர்க்க எடுத்துக்கொண்ட தொகையை யாரும் அறியாமல் மறுநாள் காலையிலே திருப்பி வைத்து விடப் போகிறார், அவ்வளவுதானே? செய்கிற காரியம் என்னவோ தப்பு என்பதில் சந்தேகமில்லை. முடிவில் அதற்கு அவர் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. பாங்குப் பணத்தைக் கையாடுவதா என்று அவர் நெஞ்சம் திடுக்கிட்டது. ஆனால் அந்த நெருக்கடியான நிலைமையிலே வேறு என்ன செய்வது?—கொஞ்ச நேரம் அவர் யாதொரு தீர்மானத்திற்கும் வர முடியாமல் ஊசலாடினார். மருமகனுக்கு இல்லையென்று சொல்லவும் மனம் வரவில்லை; பணத்தைத் தொடவும் கைவரவில்லை.
பணத்தை எடுக்கும் விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது என்கிற எண்ணமே கடைசியில் வெற்றி கொண்டது. நூறு ரூபாய் நோட்டுக்களாக இருபதை எடுத்து அருணாசலத்திற்கு அவர் கொடுத்துவிட்டார்.
பாங்கியை விட்டு வீடு வந்ததும் அவர் பணம் தேடும் முயற்சியில் ஈடுபடலானர். நாணயமுடையவராதலாலும், கைமாற்று வாங்கினால் குறித்த நாளில் தவறாமல் திருப்பிக் கொடுப்பார் என்று பலருக்கும் தெரியுமாதலாலும் பணம் எளிதில் கிடைத்தது. இரவு பதினெரு மணிக்குக் கையிலே இரண்டாயிரம் சேர்ந்தபோதுதான் அவருக்கு நிம்மதி உண்டாயிற்று.
மறுநாள் காலேயிலே உணவருந்தியதும் பணத்தை ஒரு பையில் பத்திரமாக முடித்து கொண்டு வழக்கமாகப் புறப்படும் நேரத்திற்குச் சற்று முன்னதாகவே பாங்கிக்குப் புறப்பட்டார். எப்படியும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பது அவர் கவலை. சரியாக ஒன்பது மணிக்கு அவர் ஏறியிருந்த பஸ் கிளம்பியது. இருபது நிமிஷத்தில் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் பஸ் நிற்கும் இடம் சேர்த்துவிடலாம்; அங்கிருந்து ஐந்து நிமிஷ நடை. சரியாக 9-25 க்குப் பாங்கியில் இருக்கலாம். அதனால் அவர் நெஞ்சிலே இருந்த பாரம் நீங்கிற்று.
ஆனால் நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கிறதா? பஸ் புறப்பட்டு ஏழெட்டு நிமிஷந்தான் ஆகியிருக்கும். வழியிலே எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. பக்கத் திலே இருக்கும் ஒரு சிறிய தெருவிலிருந்து வேகமாக வந்த கார் தடாலென்று பஸ்மேல் மோதிவிட்டது. பஸ் டிரைவர் எவ்வளவோ சாமர்த்தியமாக அதைத் தடுக்க முயன்றும் பயனில்லாமல் போயிற்று. அவன் மேல் தவறு இல்லை. காரை ஒட்டிக்கொண்டு வந்த இளைஞனுக்குப் புதுப் பழக்கம். அதனால் அவன் வேகத்தைக் குறைக்க முடியாமல் வந்து இடித்துவிட்டான். அவனுடைய கார் புதியது. அதன் முன்பாகத்தில் இருந்த விளக்கு போயிற்று. ஆனால் நல்ல வேளை அவன் உயிர் தப்பினான். நெற்றியில் மட்டும் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பஸ்ஸில் அதிகமாகப் பழுது ஏற்படவில்லை. பிரயாணிகளுக்கும் யாதொரு தீங்கும் இல்லை. பஸ் ஒட்டியவன் திறமைதான் அதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
எல்லோரும் அவனைப் புகழ்ந்தார்கள். ஆனாலும் அவனுக்குப் பயம். எங்கே தன் வேலை போய்விடுமோ என்று அவன் கலங்கினான். பஸ்ஸில் வந்த பிரயாணிகளையெல்லாம் அங்கேயே இருந்து நடந்த விஷயத்தை அப்படியே அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லித் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டான். நடராஜ பிள்ளை மரியாதைக்கு உரியவராகவும் வயதானவராகவும் தோன்றியதால் அவரைக் கட்டாயம் இருந்து சாட்சி கூறும்படி டிரைவர் வெகுவாகப் பரிந்து கேட்டான். அதை மறுக்க அவரால் முடியவில்லை. மேலும் அது பிரயாணிகளின் கடமையும் அல்லவா?
நடுவழியில் வேறொரு பஸ் அந்த நேரத்தில் கிடைப்பதும் சுலபமல்ல. வேலைக்கு அனைவரும் போகும் சமயமானதால் பஸ்கள் நிறைந்து வந்தன. நடராஜ பிள்ளை சாட்சி சொல்லிவிட்டு வேறொரு பஸ்ஸில் ஏறிக் காரியாலயம் சேருவதற்கு மணி 10½ ஆகிவிட் டது. இருந்தாலும் என்ன? ஒருநாள்தானே தாமதம்? அதுவும் அவர் பிழையினால் ஏற்பட்டதல்லவே? பெட்டியிலுள்ள கையிருப்புப் பணத்தை இதற்குள் யார் பார்த்திருக்கப் போகிறார்கள்? கொடுக்கல் வாங்கலும் 10½ க்குப் பின் தானே? இவ்வாறு அவர் எண்ணமிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவர் உள்ளத்தைத் திருகிவிட்டது. இரும்புப் பெட்டியின் கதவு திறந்திருந்தது. நோட்டுக் கற்றைகள் கீழே கிடந்தன. மானேஜர் அவற்றைக் கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார். நடராஜ பிள்ளையின் இருதயம் அப்படியே நின்று விடும்போல இருந்தது.
“அவரைக் கண்டதும், ‘வாருங்கள்’, ஏன் இன்றைக்கு என்றும் இல்லாதபடி தாமதம்?” என்றார் மானேஜர்.
“பஸ்ஸில் வரும்போது வழியிலே ஒரு விபத்து....” என்று மென்று விழுங்கிக்கொண்டே நடராஜ பிள்ளை பதிலளித்தார்.
“ஆமாம், பணம் இரண்டாயிரம் குறைச்சலாக இருக்கிறதே! பத்தாயிரம் ரூபாய் உடனே வேண்டுமென்று மானேஜிங் டைரக்டர் சொல்லி அனுப்பினர். அதனால் தான் வந்ததும் பெட்டியைத் திறந்து பார்த்தேன். இருப்புச் சரியில்லையே?”
“என்ன பதில் அளிக்கிறதென்று நடராஜ பிள்ளைக்குத் தெரியவில்லை. ஒரு நாளும் இம்மாதிரியான குற்றம் செய்யாதவராகையால் அவருக்கு உடனே ஒன்றும் சொல்லத் தோன்றாமல் விழித்தார். உடம்பெல்லாம் குப்பென்று வேர்த்தது. மானேஜருக்கு விஷயம் விளங்கவில்லை. பெட்டி சரியானபடி பூட்டித்தானே இருந்தது?” என்று கேட்டுக் கொண்டே தலைமைக் கணக்கரை உற்றுப் பார்த்தார்.
நடராஜ பிள்ளையின் முகத்தில் என்றும் இல்லாத வேதனையின் சாயல் படரலாயிற்று. கொஞ்ச நரம் அசைவற்று நின்றுகொண்டு இருந்துவிட்டுப் பிறகு அவர் நிதானமாகப் பேசலானர் : நேற்றுச் சாயங்காலம் எனக்கு அவசரமாக இரண்டாயிரம் ரூபாய் வேண்டியிருந்தது. இருப்பிலிருந்து அதை எடுத்தேன். இதோ அதை இப்பொழுது திருப்பிக் கொண்டுவங்திருக்கிேறன்.
இவ்வளவுதான் அவர் சொன்னது. வேறு மன்னிப்பு வார்த்தைகளோ அருணாசலத்தைப் பற்றிய விஷயமோ அவர் கூறவில்லை. தம் பையில் இருந்த இாண்டாயிரத்தையும் மானேஜர்முன் வைத்துவிட்டுத் தம் ஸ்தானத்தில் போய் அமர்ந்துகொண்டார்.
மாலையில் காரியாலயம் மூடப்போகும் வரையில் இது சம்பந்தமாக மானேஜர் பேசவே இல்லை. அவர் எந்த நிமிஷமும் தம்மைக் கூப்பிட்டு விசாரிப்பார் என்று தலைமைக் கணக்கர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் கூப்பிடுவதாகக் காணோம். அந்தச் சங்கடமான நிலைமையை நடராஜ பிள்ளையால் தாங்க முடியவில்லை. அவர் உள்ளம் வெடித்துப் போகும்போல் இருந்தது.
மானேஜருக்கும் என்ன செய்வதென்று தோன்றாமல் இருந்திருக்கவேண்டும். அவர் பலவிதமாக அதைப்பற்றிச் சிந்தித்துக் கடைசியில் ஒரு தீர்மானத்திற்கும் வர இயலாமல் குழம்பிக்கொண்டிருந்திருப்பார் என்பது என் உத்தேசம். மாலை ஐந்து மணிக்குக் குமாஸ்தாக்கள், காஷியர் முதலியவர்களெல்லாம் வெளியே சென்ற பிறகு அவர் தலைமைக் கணக்கரை அழைத்தார். தலைகுனிந்தபடியே அவர் மெளனமாக வந்து நின்றார். சற்று நேரம் இருவரும் வாய் திறக்கவில்லை. பிறகு மானேஜர், நீங்கள் இப்படிச் செய்வீர்களென்று நான் நினைக்கவே இல்லை. பலமுறை இதுமாதிரி காரியம் நடந்திருக்காது என்றுதான் இப்பொழுதும் எனக்கு நம்பிக்கை. ‘வேலையிலிருந்து விலகிக் கொள்ளும் சமயம். ஆகையால் இதைப் பற்றிப் பேசாமல் அப்படியே விட்டுவிடலாம். இதனால் உங்கள் மேலிருந்த நல்ல அபிப்பிராயம் எனக்கு மாறவில்லை’ என்று கூறினார். அந்தச் சமயத்தில்கூட அவர் மனத்திலே என்ன பேசுவதென்ற தெளிவு உண்டாகவில்லை என்பது அவர் வார்த்தையிலிருந்தே வெளியாகியது. நடராஜ பிள்ளை தமது நிலைமையை விளக்கவோ, இம்மாதிரியான குற்றம் முன்னால் என்றும் செய்ததில்லை என்று கூறிக்கொள்ளவோ விரும்பவில்லை. மெளனமாகச் சிறிது நேரம் நின்றார். அவர் பார்வை நிலத்தை நோக்கியே இருந்தது. பதிலை எதிர்பார்க்கிறவர் போன்று மானேஜர் மேலே நோக்கினார். ஆனால் அவரும் பேசவில்லை. பத்து நிமிஷம் இப்படிச் சென்றிருக்கும். அது ஒரு யுகம் போல் இருந்தது நடராஜ பிள்ளைக்கு. பிறகு அவர் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தார். எப்படியோ விட்டுக்குப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்.
அப்புறம் ஒரு பதினைந்து நாட்கள் அவர் பாங்கிக்குச் சென்றிருப்பாரென்று நினைக்கிறேன். ஆனால் அவர் முன்பு இருந்த தலைமைக் கணக்கரல்ல; இப்பொழுது எல்லாம் மாறிப் போய்விட்டது. வழக்கம்போல அவர் குமாஸ் தாக்களையோ மற்ற ஊழியர்களேயோ நிமிர்ந்து பார்ப்பது மில்லை. அவருடைய தலை குனிந்தபடியே இருக்கும். அதிகமாகப் பேசுவதுகூட இல்லை. வேலையை மட்டும் யந்திரம்போலச் செய்துகொண்டிருந்தார். நடந்த விஷயம் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவரும் அதுபற்றி மறுபடியும் பேச்செடுக்கவே இல்லை. நடாாஜ பிள்ளையை நடத்தும் முறையிலும் அவர் யாதொரு வேறுபாடும் காண்பிக்கவில்லை. இருந்தாலும் நடராஜ பிள்ளையின் உள்ளம் உடைந்துவிட்டது. கடமை தவறியவன் ஆனேன் என்ற எண்ணம் அவரைப் பிடிக்கலாயிற்று. அவர் கீழ் வேலை செய்பவர்கள் பழையபடியே பயந்து கொண்டு காரியம் செய்தாலும் அவருக்கு என்னவோ அது தம்மைக் கேலி செய்வதுபோலத் தோன்றியது. அவரால் மனவேதனை சகிக்க முடியவில்லை.
அவ்வளவுதான். படுக்கையில் படுத்துவிட்டார். நோயென்று அவர் எந்தக் காலத்திலும் நான்கு நாள் சேர்ந்தாற்போல் கட்டிலில் கிடந்ததில்லை. இந்த முறை ஒரே அடியாகப் படுத்துவிட்டார். அவருக்கு என்ன நோயென்று வைத்தியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதோ மருந்து கொடுத்தார்கள். அவரும் தம் மனைவியின் சொல்லை மறுக்காமல் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க நான் பல முறை சென்றேன். அப்படிச் சென்றபோது ஒரு தடவை நான் வற்புறுத்தியதன் மேல்தான் அவர் இதுவரை நான் கூறிய விஷயங்களேயெல்லாம் என்னிடம் ரகசியமாகச் சொன்னார். வேறொருவரிடமும் அவர் வெளியிட விரும்பவில்லை.
முப்பது வருஷங்களாக வேலை செய்தேன். ஒரு சின்னத் தப்புச் செய்ததில்லை. கடைசியிலே ஒய்வெடுக்கப் போகும் தருணத்தில் கடமை தவறிவிட்டேன்’ என்று பெருமூச்சு விட்டார். அவர் கண்கள் மங்கின. அவர் முகம் பார்க்க விகாரமாக மாறியது.
அந்த நிலையில் நான் அவருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்? கடமை தவறியதை நினைந்து ஒரு கண்ணியமான உள்ளம் உருகுகின்றது. அதைச் சாந்தப் படுத்த வெறும் வார்த்தைகளுக்கு வன்மை உண்டா ? நான் ஆரம்பத்தில் கூறியபடி நடராஜ பிள்ளை நற்குணங்களின் வடிவமல்ல; அவரிடம் குறைபாடுகள், தவறுகள் உண்டு. ஆனால் கடமை ஒன்றை மட்டும் அவர் வழுவாது செய்து வந்தார். அதில் தவறினால் இவ்வளவு மனச் சோர்வு ஏற்படுமென்று அவருக்கே அதுவரை தெரியாது. நண்பன் என்ற முறையிலே நான் என்ன என்னவோ வழிகளைக் கையாண்டு அவருக்கு ஆறுதல் உண்டாக்க முயன்றேன்.
மானேஜரிடம் சென்று நடந்த விஷயங்களை யெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னேன். ‘இந்தச் சமயத்திலே அவருக்கு நீங்கள்தான் ஆறுதல் கொடுக்க முடியும். வேறொருவராலும் அதைத் தர இயலாது. ஒரு நாள்கூடத் தப்புச் செய்யாதவர் கடைசியில் அப்படிச் செய்துவிட்டு உள்ளுக்குள்ளேயே நைந்து உருகுகிறார். மருமகன்மேல் கொண்ட வாஞ்சையின்முன் கடமை உணர்ச்சி மறைந்ததே என்று கலங்குகிறார்’ என்று கூறி வேண்டினேன்.
மானேஜர் நல்லவர். நான் கூறியதைச் சரியான நோக்கோடு ஏற்றுக்கொண்டார். நடராஜ பிள்ளையின் வீட்டிற்கு ஒருநாள் இரவு வந்து அவரோடு தனியாக வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் நல்ல பலன் ஏற்பட்டிருக்குமென்று நம்பி நான் ஆவலோடு மறுநாள் மாலை நடராஜ பிள்ளையைக் காணச் சென்றேன்.
நான் எதிர்பார்க்கபடி ஒரு நன்மையும் ஏற்படவில்லை. அவர் நிலைமை இன்னும் மோசமாகக் காணப்பட்டது. வெகு நேரம் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அவர் ஒரே மெளனம் சாதித்தார். வேதனையோடு புரண்டு புரண்டு படுத்தார். அவர் உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் எழுந்தனவோ, யார் கண்டார்கள்?
‘நீங்கள் ஒன்றும் பணத்தைத் திருடிக் கொள்ள வில்லையே? அந்தப் பணம் மறுநாள் காலைவரையில் பெட்டியில் இருந்திருந்தாலும் அதனால் பாங்குக்கு யாதொரு லாபமும் உண்டாகி இருக்காது’ என்று இப்படிப் பேச்சை மாற்றினேன்.
அவர் வாய் திறந்தார். ‘பாங்குக்கு லாபமா இல்லையா, அதா கேள்வி?’ என்று என்மேல் சீறிவிழுந்தார்.
மெளனம் சாதிப்பதைவிட அப்படிச் சீறினாலும் மனக் கொதிப்புத் தணியும் என்று நான் மேலும் மேலும் பேசினேன். என் பேச்சு அவருக்கு வெறுப்பையே தந்தது. அவர் துயரமும் ஓங்கிற்று.
“விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்த படி உளறாதீர்கள். நான் கடமையில் தவறிவிட்டேன். அதை இனி மாற்ற முடியுமா? நான் இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோசனம்?” என்றார் அவர்.
“மானேஜர் உங்களைப்பற்றி வித்தியாசமாக நினைக்கவில்லையே?”
அவர் என்னைக் கண்டித்திருந்தால் எனக்கு ஒரளவு சந்தோஷமாக இருக்கும். வெளியே அனுப்புகிற சமயத் தில் எதற்குக் கண்டிக்க வேணும் என்று இருந்துவிட்டார். அதுவே என்னே வாட்டுகிறது.”
“இல்லை இல்லை; அவர் அப்படி நினைப்பதாகத் தெரியவில்லை.”
“மானேஜர் நினைப்பதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. எத்தனையோ தடவை நான் இப்படிப் பணத்தைக் கையாண்டிருப்பேன் என்று அவர் எண்ணினாலும் அதைப்பற்றி அவர்மேல் குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு என்மேல் இருந்த நம்பிக்கையை நான் போக்கிக்கொண்டேன். பிறகு எனக்கு என்ன வேண்டியிருக்கிறது?”
என்னாள் அவருக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. அரைமணி நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். அவர் கட்டிலில் நிலை கொள்ளாது புரண்டு புரண்டு பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் படிந்திருந்த துயரம் பெருகிக்கொண்டேயிருந்தது. நான் வெளியே புறப்படுகிற சமயத்திலே அவர் மனைவி மருந்தை எடுத்துக் கொண்டு ஏக்கத்தோடு வந்தாள். அவர் அதை வாங்கி அருந்திவிட்டு, கதவருகே வாடிய முகத்துடன் வந்து நின்ற மகளை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு கட்டிலின்மேல் சாய்ந்து முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டார். நான் வெளியே வந்தேன்.
நாளுக்கு நாள் அவர் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக மாறியது. அதுதினமும் நான் அவரைப் போய்ப் பார்ப்பேன். அவர் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.
ஒரு நாள் என்னால் அவருடைய முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதில் ஒரே துயரம். என்னையும் மீறிக் கண்ணீர் பிதுங்கியது. நெடுநாள் நட்பு அல்லவா ? என்னால் தாங்க முடியவில்லை.
“அவர் சிரித்தார்; மகிழ்ச்சி இல்லாத சிரிப்பு; துயரச் சிரிப்பு. எனக்காகவா கண்ணீர் ? கடமை தவறியவனுக்கு எதற்காக இரக்கப் படுகிறீர்கள்?” என்றார் அவர்.
“எனக்கு மேலும் அழுகை வந்துவிட்டது. குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதேன். அழுவதற்குக் காலம் வரும். என்னுடன் சினேகமாக இருந்த தோஷத்திற்கு அப்பொழுது கண்ணீர் சிந்தலாம். இப்போது என்ன வந்துவிட்டது?” என்று அவர் கூறி மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டார்.
அன்றைக்குத்தான் அவர் பேசியது. பிறகு பேச்சே இல்லை பாங்கு ஊழியர்கள் நிதி கொடுக்கவும் இல்லை; பிரிவுபசாரக் கூட்டம் நடக்கவும் இல்லை. நடாாஜ பிள்ளை படுக்கையை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.
கடைசி நாளன்று நான் பக்கத்திலேயே இருந்தேன். அவர் ஏதேதோ பிதற்றினார். ஆவலோடு எதிர்பார்த்த ஒய்வைப்பற்றியோ, தாம் வளர்த்த பூச்செடிகளைப் பற்றியோ, மனைவி மகளைப் பற்றியோ அவர் நினைக்கவே இல்லை. கடமை ஒன்றைப்பற்றித்தான் என்ன என்னவோ கூறிக்கொண்டிருந்தார். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.
ஆனால் மூச்சு நிற்பதற்கு முன்பு நன்றாக அனைவருக்கும் தெரியும்படி அவர் ஒரு தரம் நிதானமாகப் பேசினர்: கடமை பெரிதா, உயிர் பெரிதா? கடமை தவறி வாழ்வதைவிட இறப்பதுதான் நல்லது’
“அந்த நிமிஷத்திலே அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் உயிர் நிற்கவில்லை.”
இவ் வரலாற்றைக் கூறி முடிக்கும்போது வீராசாமியின் குரல் கம்மியது. கல்யாணசுந்தரம் சிந்தனையில் மூழ்கினர்.