உரிமைப் பெண்/பஞ்சுக் காலன்
சுந்தரம் வேட்டையாடுவதில் கை தேர்ந்தவன். நீலகிரித் தொடரிலே அவன் நுழையாத இடம் கிடையாது. எவ்வளவு அடர்ந்த காடு என்றாலும் அதற்குள்ளே அவனுடைய அடிச்சுவடு பட்டுத்தான் இருக்கும். யானை வேட்டை, புலிவேட்டை என்றால் அவனுக்கு ஒரே உற்சாகம். காட்டெருமை, காட்டுப் பன்றி முதலிய பயங்கர மிருகங்களையும் அவன் துப்பாக்கி எத்தனையோ தடவை உயிர் குடித்திருக்கிறது. ஆனால் புலி வேட்டையில்தான் அவனுக்கு அலாதியான விருப்பம்.
யானை மிகவும் பலம் வாய்ந்ததுதான். ஆனால் புலியின் தந்திரமோ குரூரமோ அதற்கு வராது. “யானையை ஏமாற்றி மடக்கிவிடலாம்; புலியிடத்திலே அந்த ஜாலமெல்லாம் பலிக்காது” என்று அவன் சொல்லுவான்.
“பிறகு எதற்காகப் புலி வேட்டை, புலி வேட்டை என்று எப்பொழுதும் அதையே நாடுகிறாய்?” என்று கேட்டால் அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும். “ஆட்டுக் குட்டியை வேட்டையாடுவதிலே என்ன சாமர்த்தியமிருக்கிறது? எந்த ஜமீன்தாரும் அதைச் செய்யலாம். எனக்குப் புலி வேட்டைதான் உகந்தது. மனிதனுடைய புத்திசாலித்தனத்தை அதுதான் ஒவ்வொரு விநாடியும் சோதனை செய்யக்கூடியது” என்று அவன் பெருமையோடு பதில் சொல்லுவான்.
அவன் கூறுவது முற்றும் உண்மைதான். புலி வேட்டை எளிதான காரியமல்ல. எடுத்து நீட்டியவுடன் குறி தவறாமல் சுடக்கூடிய திறமை முதலில் வேண்டும். அது மட்டும் போதாது. சமயோசித புத்தியும் மின்னல் வேகத்திலே தீர்மானம் செய்து பதற்றமில்லாமல் சடாரென்று காரியத்தில் இறங்கும் தன்மையும் வேண்டும். இவை யெல்லாமிருந்தாலும் புலியின் தன்மையைப் பற்றிப் பூரணமாகக் தெரிந்துகொள்ளாவிடில் அதை வேட்டையாடுவது உயிருக்கு ஆபத்தாகத்தான் முடியும்.
ஷோக் மான் வேட்டை என்று கேள்விப்பட்டிருக்கிறீா்களா? வேட்டையாடுகிறவன், துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஷோக்காக ஒரிடக்திலே பதுங்கியிருப்பான். அவன் காட்டிற்குள்ளே அலைவதுமில்லை; மானைக் தேடுவதுமில்லை. கூட வந்திருக்கும் ஏவலாளர்கள் தப்பட்டை, கொம்பு முதலிய வாத்தியங்களை முழக்கிக்கொண்டு காட்டிற்குள்ளே நுழைவார்கள். அந்த ஆரவாரம் கேட்டு மிரண்ட மான்கள் அங்கும் இங்குமாகப் பாய்ந்தோடும். பதுங்கியிருக்கிறவனுக்கு எதிரிலே தென்பட்டால் அவன் சுடுவான். இதுதான் ஷோக் மான் வேட்டை. இப்படி ஒய்யாரமாகப் புலிவேட்டையாடும் ஒரு வகையும் உண்டு. ஒரு மாரத்தின் உச்சியிலே கட்டப்பட்டிருக்கும் ஒளிகூண்டிலே ஒன்றிரண்டு பேர் உட்கார்ந்துகொள்வார்கள். கீழே ஓரிடத்திலே ஒர் ஆட்டையோ அல்லது கிழட்டு மாட்டையோ கட்டிவிடுவார்கள். கானகத்திலே தனியாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தப் பிராணி இருள் ஏற ஏறப் பயந்து ஒலமிடும். அதைக் கேட்டுப் புலி வருவதுண்டு.
கட்டுண்டு கிடக்கும் அந்த ஜீவனைப் புலி அடித்துக் தின்ன ஆரம்பிக்கும்போது மர உச்சியில் இருப்பவர்கள் அதன் முகத்திலே விழும்படி பிரகாசம் மிகுந்த மின்சார டார்ச்சு ஒளியைத் திடீரென்று போடுவார்கள். புவியின் கண்கள் இருட்டு நேரத்திலே பூனையின் கண்கள்போல இன்னும் அகலமாக விரிந்திருக்கும். அதனால் பிரகாசமான ஒளி பட்டவுடன் புலி திகைப்படைந்து பார்வை கலங்கி அசைவற்று நிற்கும். அந்தச் சமயம் பார்த்து ஆற அமர இருந்து துப்பாக்கியிலே குறி வைத்துச் சுடுவார்கள். அதிலே அத்தனே ஆபத்துக் கிடையாது. ஷோக் மான் வேட்டையைப்போல இதுவும் ஷோக் வேட்டைதான்.
சுந்தரத்திற்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்காது. காட்டு மிருகங்கள் நடமாடுகிற இடத்திற்கு நேரே அவன் செல்லுவான். மான் முதலான தனக்கு விருப்பமான இரையைத் தேடிப் புலியும் அங்கு வந்து பதுங்கிக்கொண்டிருக்கும். அதைக் கண்டுபிடித்து நேருக்கு நேரே சுட வேண்டும். இதுதான் அவன் விரும்புவது. இதிலே ஆபத்துண்டு.சாமர்த்தியத்திற்கும் இடம் உண்டு. “ஷோக் வேட்டை என்றால் அது கிழவிகள் செய்யவேண்டிய காரியம்” என்பான் சுந்தரம்.
அவனை நீலகிரி வட்டாரத்திலே ஷிகாரி சுந்தரம் என்று தான் அனைவரும் அழைப்பார்கள். துஷ்ட மிருக வேட்டையிலே விருப்பமுள்ள செல்வர்களில் அவன் உதவியை நாடாதவர்கள் இல்லை. அதனால் சுந்தரத்திற்கு நல்ல வரும்படி புலித்தோலும் போட்டோக்களும் செல்வர்களின் வீட்டை அலங்கரிக்கும். சுந்தரத்திற்கு அவற்றைப் பற்றி லட்சியம் இல்லை. செத்துப்போன புலி அவன் கவனத்தை இழுக்காது. அதனருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதிலும் அவன் ஆர்வங் காட்டுவதில்லை. புலியைச் சுட்ட சுந்தரம் துாரத்திலே விலகி நின்று கொள்ளுவான். கூட வரும் செல்வர்கள் செத்துப்போன புலியின் மீது பயமில்லாமல் காலை ஊன்றி நின்று கையிலே துப்பாக்கியையும் பிடித்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளுவார்கள்.
இருபத்தைந்து நாட்களுக்கு முன்னாலே சீமானுார் ஜமீன்தார் புவிவேட்டைக்குச் சுந்தரத்தை அழைத்த போது அவனுக்கு அளவுக்கு மீறி உற்சாகம் வந்துவிட்டது. சில மாதங்களாக அவனுக்கு இப்படி நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதோடு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. தீபாவளிக்குத் துணிமணிகள் வேண்டும். இந்த வேட்டை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அதற்குக் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிலே மனைவி மக்களுக்குத் திருப்தியாக எல்லாம் நல்ல பட்டாகக் கிடைத்து விடும்.
இப்படி நினைத்துக்கொண்டு அந்த ஷிகாரி வேட்டைக்குக் கிளம்பினான். வருவாயிலே அதிக நாட்டம் வைத்ததனாலோ என்னவோ அன்றைய இரவு வேட்டை உயிருக்கே ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய அவ்வளவு சங்கடமானதாகப் போய்விட்டது.
முன் நிலாக் காலமாதலால் அடர்ந்த அந்த நீலகிரிக் காடுகளிலும் சுந்தரம் எளிதாக வழி காட்டிக்கொண்டு சென்றான். சுமார் ஒரு மைல் நடந்த பிறகு அவன் ஜமீன்தாரையும் அவரோடு வந்த நால்வரையும் அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த ஒளியிடங்களுக்குள்ளே தங்கும்படி செய்தான். நல்ல பத்திரமான இடங்கள். மேலும் அந்தப் பக்கத்திலே புலிகளின் நடமாட்டம் அநேகமாகக் கிடையாது. வேட்டைக்காரர்களின் ஆர்ப்பாட்டம் அங்கே அதிகமாக இருந்ததால் மான்கள்கூட அந்த வழியாகப் போவதைத் தவிர்த்துவிட்டன. “ஒளியிடத்திலேயே ஜாக்கிரதையாக இருந்துகொண்டு எதாவது மிருகம் எதிர்ப்பட்டால் சுடுங்கள்; நான் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு வருகிறேன்” என்ற சொல்லிவிட்டு அவன் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனியாகப் புறப்பட்டான். சுமார் ஒரு மைல் அவன் நடந்திருப்பான். எதிரே ஒரு நீர்நிலை தென்பட்டது. அதைச் சுற்றிலும் சிறிதளவு வெளியிடம். பிறகு ஒரே மரச் செறிவு. அந்த நீர்நிலையை விட்டால் அவ்விடத்திலே வெகு தாகக்திற்குத் தண்ணீர் குடிக்க வேறொன்றுங் கிடையாது. ஆகையால் தாகங் கொண்ட பிராணிகள் எல்லாம் இரவு நோக்கிலே அங்கேதான் வர வேண்டும். புலி வேட்டைக்கு அதைப் போலச் சிறந்த இடம் கண்டுபிடிப்பது அரிது. சுந்தரம் மூன்று புலிகளை அங்கே சுட்டு வீழ்த்தியிருக்கிறான். ஆனால் அந்த இடத்தில் ஒரு கிழப் புலி மட்டும் அவனை இதுவரையில் ஏய்த்துக்கொண்டே வந்திருக்கிறது.
ஷிகாரி சுந்தரம் அதற்குப் பஞ்சுக்காலன் என்று பெயர் வைத்திருந்தான். புலிகள் எல்லாமே சப்தம் செய்யாமல் நடக்கக்கூடியவைதாம். அவற்றின் பாதங்களின் அடிப்பாகம் அவ்வளவு மெத்தென்றிருக்கும். வறண்டு உதிர்ந்துபோன இலைகளை மிதிப்பதால் ஒரளவு அரவம் கேட்குமேயொழிய, காலடி வைக்கும்போது உடம்பின் கனம் காரணமாக ஒசையே கேட்காது. இந்தக் கிழப் புலி உதிர்ந்த சருகுகளைக் கூட எப்படியோ சமாளித்துக் கொண்டு சிறிதளவும் ஒசை செய்யாமல் செல்லும். அதனாலேயே அவன் அதற்கு அப்படிப் பெயர் வைத்திருந்தான்.
பஞ்சுக்காலனுக்கு வயது முதிர்ந்து சிறிது தளர்ச்சியும் ஏற்பட்டுவிட்டது. வேகத்தில் வல்ல மான்களின்மீது முன்னைப்போல இப்பொழுது பாய்ந்து சாடுவதற்கு அதனால் முடிவதில்லை. பாயக்கூடிய துாரமும் கொஞ்சம் குறைந்து போயிற்று. அதனால் அது மனித இசையை நாட ஆரம்பித்தது. சாதாரணமாகப் புலிகள் மனிதனைக் கொல்ல இந்தத் தளர்ச்சி நிலையில்தான் தொடங்குவது வழக்கம். மனிதனுக்கு அத்தனே வேகம் கிடையாதல்லவா? இளம் பிராயம் முதற்கொண்டு புலிகளுக்கு மனிதனை அடித்துப் பழக்கமில்லை. காட்டிலே தனது தினசரி வாழ்க்கையிலே சந்திக்காக ஒரு புதிய பிராணி அவன். அதனால் பெரிய புலிகளும் அவனைக்கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் ஒரு தடவை மனித ரத்தத்தை ருசி கண்டுவிட்டால் பிறகு அந்த ருசியில்தான் அவற்றிற்கு நாட்டம் அதிகம். இப்படிப்பட்ட மனிதக் கொல்லிகளைச் சுடுபவர்களுக்கு அரசாங்கத்தில் சன்மானம் கொடுப்பதுண்டு.
பஞ்சுக்காலன் இதுவரை மூன்று பேரை மடக்கிவிட்டது. அதைச் சுட்டு மாய்க்கவேண்டுமென்று சுந்தரம் பல தடவைகளில் முயன்றிருக்கிறான். ஆனால் அவனை அது எப்படியோ ஏய்த்துக்கொண்டிருந்தது. அந்த மனிதன் தன்மேல் கண் வைத்திருக்கிறான் என்பதும் அதற்குத் தெரிந்துவிட்டது. அதனால் அதற்கும் சுந்தரத்தின் மேலே கண். அவனுடைய வாடை அதற்குத் தனியாகத் தெரியும். பஞ்சுக்காலனுடைய அடிச்சுவடுகளும் சுந்தரத்திற்கு நன்றாகத் தெரியும்.இப்படி மனிதனும் மிருகமும் போட்டி போட்டுக்கொண்டு கண் வைத்திருந்தது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்குள்ளே மட்டும் பகை வளர்ந்துகொண்டேயிருந்தது.
சுந்தரம் அந்தத் தடாகத்துக்கு மேல்புறமாக மரக் கூட்டங்களிடையே மெதுவாக அமர்ந்தான். அங்கிருத்து நாலு பக்கமும் நன்றாகப் பார்க்கலாம். அவன் அங்கே சேருவதற்கும் முன்நிலா மறைவதற்கும் சரியாக இருந்தது. அவனுக்கு இருட்டிலே பார்த்து நல்ல பழக்கமுண்டு. கூர்ந்த பார்வையும், சிறிய அரவத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய செவி நுட்பமும் காட்டு வேட்டையிலே அத்தியாவசியம். பயிற்சியடைந்த அவனுடைய புலன்கள் எப்பொழுதும் உஷாராகவே இருக்கும்.
அன்றைக்கு வெகுநேரம் வரையிலும் யாதொரு பிராணியும் நீரருந்த வரவில்லை. மனித வாடையைக் கண்டு கொண்டனவோ என்று சுந்தரக்கிற்கு ஐயமுண்டாயிற்று. வேட்டை கிடைக்காவிட்டால் தீபாவளி குஷிப்படாதே என்று அவனுக்குக் கவலை. அதே சமயத்தில் அந்தப் பஞ்சுக்காலன் தன்னை நீண்ட நாளாக ஏமாற்றி வருவதை நினைத்து அதன்மேல் எரிச்சலும் உண்டாயிற்று. அவன் மனத்திலே பலவிதமான நினைவுகள் ஒடின. சுந்தரம் மெதுவாக மல்லாந்து தரையில் சாய்ந்தான். சிந்தனையின் ஒட்டமும், சிறிதும் கலைவுறாத ஆழ்ந்த நிசப்தமும் சேர்ந்து எப்படியோ அவனுக்குச் சிறிது நேரத்திலே உறக்கத்தை உண்டாக்கிவிட்டன. கண்கள் அவனை அறியாமலே நித்திரை யில் மூடின. வலது கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பிடியும் தளர்ந்து போயிற்று. கைகள் இரண்டும் நெஞ்சின் மேலே கட்டைகள் போலக் கிடந்தன.
அடர்ந்த காட்டிற்குள்ளே அவன் இவ்வாறு அஜாக்கிரதையாக என்றும் தாங்கினதே இல்லை. இன்று அவனுக்குப் பொல்லாத காலம் போலிருக்கிறது.
இவ்வாறு அவன் ஆழ்ந்து உறங்கும் சமயத்திலே அவனுக்கு எதிரிலே ஒரு பயங்கரக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலைமான் ஒன்று மருண்டு மருண்டு பார்த்துக்கொண்டு மெதுவாக நீர்நிலையை அணுகிற்று. அதன் காதுகள் விறைப்பாக நின்றன. மான் தனது வாயை நீரில் வைப்பதற்குமுன் மறுபடியும் சுற்றிலும் ஒரு முறை ஊடுருவிப் பார்த்தது. அவ்வளவுதான்; அக்கணமே திடீரென்று திரும்பி மின்னல் வேகத்தில் வந்த வழியிலேயே தாவிற்று. அதே சமயத்தில் பஞ்சுக்காலன் அதன் மேலே சரேலென்று பாய்ந்தது. அதன் நகங்கள் வெளியில் கோரமாகத் துறுத்திக்கொண்டு மானின் உடலைக் கிழிக்கத் தயாரக இருந்தன. ஆனால் ஒரு முழ துாரத்திற்குள் அதன் பாய்ச்சல் தப்பிப் போய்விட்டது. கலைமான் தனது முன்னெச்செரிக்கையினாலும் கால்களின் உறுதியாலும் உயிர் பிழைத்துச் சென்றோடி மறைந்தது. பஞ்சுக்காலனின் முதுமையும் பாய்ச்சல்துாரக் குறைவும் மானுக்கு உதவியாக நின்றன. பஞ்சுக்காலன் பாய்ந்ததாலும், மரச் செறிவிற்குள் மான் குதித்தோடியதாலும் ஏற்பட்ட அரவத்தால் சுந்தரம் விழித்துக்கொண்டான். ஆனால் அவன் திடுக்கிட்டு எழுந்திருக்கவில்லை. காட்டிற்குள்ளே அப்படி எழுங்திருப்பது உயிருக்கு ஆபத்து என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் நெருக்கடியான சமயங்களிலும் அவன் அசையாதபடி கண்ணை விழித்து நிதானமாகச் சுற்றிலும் பார்க்கப் பழகியிருந்தான்.
அப்படி இன்று நாலு பக்கத்திலும் பார்க்கின்ற போது ஏமாந்துபோன கிழப் புலியின் உருவம் சற்றுத் துாரத்தில் தெரிய வந்தது. சுந்தரம் அந்தத் திசையிலே பார்வையைச் செலுத்திப் பஞ்சுக்காலனைப் பார்ப்பதற்கும் அது அவனை ஏறிட்டுப் பார்த்து அறிந்துகொள்ளுவ தற்கும் சரியாக இருந்தது. உயிர் குடிக்க உறுதிகொண்டிருந்த விரோதிகள் நேருக்கு நேர் தனியாக எதிர்ப்பட்டு விட்டார்கள். சுந்தரம் புலியை ஊடுருவிப் பார்த்தான். புலியின் கண்கள் இவனை நோக்கி இரண்டு சுடர் விளக்கு களைப்போல் ஜொலித்தன. அந்தப் பார்வையிலே குரூரமும் ரத்த வெறியும் கலந்திருந்தன. பஞ்சுக்காலன் அவன் மேலே பாய்வதற்குத் தயாராயிற்று. உடம்பெல்லாம் அதற்கேற்றபடி முறுக்கேறியது. அதன் நுனிவால் படம் எடுத்த நாகம்போலச் சுருண்டு நெளிந்தது. சுந்தரத்திற்கு அந்த நிலைமையின் நெருக்கடியும் ஆபத்தும் தெரியாமலில்லை. ஆனால் அவன் அசையாமல் கல் துாண் போலக் கிடந்தான். நெஞ்சின் மேலே கிடக்கும் வலது கையை நகர்த்திப் பக்கத்திலே உள்ள துப்பாக்கியை எடுக்க அவன் நினைக்கவில்லை.
அப்படிச் செய்வது உயிருக்கு ஆபத்து என்பதை அவன் அறிவான். அசையாமலிருந்துகொண்டு நேராகப் பார்வையைத் தன்மேல் செலுத்தும் மனிதனைத் தாக்கப் புலி பயப்படுகிறது. பார்வை கொஞ்சம் விலகினாலோ, உடம்பில் அசைவு ஏற்பட்டாலோ உடனே அது பாய்ந்து விடும். பார்வையை வேறு பக்கம் திருப்பினால் கவனம் வேறு இடத்தில் சென்றுவிட்டதென்று அது புரிந்து கொள்ளுகிறது. உடம்பில் அசைவு ஏற்பட்டாலோ அதன் மூலம் தனக்கு ஆபத்து வருமென்று அதன் இயல்பு உணர்ச்சி துாண்டுவதால் அது பயத்தால் பிறக்கும் துணிச்சலோடு எதிரியைத் தாக்க முயலுகிறது. இந்த இரு வகையான விபத்துக்களிலிருந்தும் தப்புவதற்குச் சுந்தரம் அசையாமல் படுத்துப் பஞ்சுக்காலனேயே உற்று நோக்கியிருந்தான். அந்த நிலையிலே ஒரு வினாடி செல்லுவதும் அவனுக்கு ஒரு யுகமாகத் தோன்றியது. முதுகில் மிகுந்த வலி கண்டது. எத்தனை நேரம் அப்படி உடம்பின் ஒரே பாகத்தைக் கரடுமுரடான நிலத்திலே வைத்துக்கொண்டிருப்பது? உறங்கும்போது அவன் அசையாதுதான் படுத்திருந்தான். ஆனால் ஆபத்து முன்னால் தலையெடுத்து நிற்கும்போது எப்படியோ இந்த அசையா நிலையை அவனால் பொறுக்க முடியவில்லை. இன்னும் சற்று நேரம் சென்றால் தன்னால் அசையாமலிருக்க முடியாதென்று அவன் நினைத்தான்.
பஞ்சுக்காலனுக்கும் அந்தச் சந்தேகமான நிலைமை பிடிக்கவில்லை. முன்னால் மானையிழந்த ஏமாற்றம் ஒரு பக்கம்; சுந்தரத்தை ஒழித்துக்கட்டாவிட்டால் தன் உயிருக்கு ஆபத்துத்தான் என்ற உணர்ச்சி ஒரு பக்கம்; பசி ஒரு பக்கம். இப்படி எல்லாம் சேர்ந்து அதன் பொறுமையைச் சோதித்தன. என்ன ஆனாலும் சரி, அந்த மனிதன் மேல் பாய்ந்தே தீருவதென்று அது முடிவு கட்டிவிட்டது. ஒரே விநாடி, பஞ்சுக்காலன் சரியாகத் துாரத்தை அளந்துகொண்டது. இனி அம்புபோல நேரே பாயவேண்டியதுதான் பாக்கி. சுந்தரத்திற்கும் அதன் எண்ணம் புலப்படாமல் இல்லை. கொஞ்சம் அசைந்தால் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவனை துாண்டுகோல் போட்டதாகும். ஆனால் அசையாமலிருந்து தான் என்ன பலன்? எப்படியும் அவன்மேல் பாய்வதென அந்தப் புலி முடிவு கட்டிவிட்டது. சுந்தரத்திற்கு ஒன்றுமே புலப்படவில்லை. தனது சாமர்த்தியமெல்லாம் இன்று உதவவில்லையே என்று அவன் உள்ளம் கலங்கினன். பாதுகாத்துக்கொள்ள ஒரு முயற்சியும் செய்யாமலா இந்தப் புலியின் வாயில் சிக்குவது என்று அவனுக்குக் கோபம் வேறு. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கியை எடுத்துச் சுடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
இரண்டு உயிர்களும் ஒரே முடிவுக்கு வங்கிருக்கின்றன. எந்த உயிர் எந்த உயிருக்குப் பலியாகுமோ என்று திகைக்கும்படியான அந்தப் பயங்கரக் கண நேரம், புலியின் வால் சுருண்டு நிமிர்த்துவிட்டது. பாய்வதற்கு வேண்டியவாறு உடம்பு முறுக்கேறிவிட்டது. சுந்தரத்தின் கை துப்பாக்கியைத் தாக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு ஜோடிக்கண்கள் மட்டும் மாறாமல் ஒன்றை ஒன்று விழுங்குவனபோல் பார்த்திருந்தன. அவற்றிற்கிடையே கூற்றுவனின் பாசக் கயிறு இங்கா அங்கா என்று ஊசலாடிக்கொண்டிருந்தது.
ஆயிற்று, பஞ்சுக்காலன் பாயப் போகிறது. அந்தக் கணத்திலே எதிர்பாராத கிரீச் என்ற ஒரு குரல் கேட்டது. ஒர் எலியின் கீச்சுக் குரல். அதையொட்டி ஒர் ஆந்தையின் அலறல். எலியென்றால் ஆந்தைக்குப் பிரியமான உணவல்லவா? எங்கேயோ மரக் கிளையிலே உட்கார்ந்திருந்த அந்த ஆந்தை பஞ்சுக்காலனுக்கு அருகிலே குடுகுடுவென்று சென்ற ஒர் எலியைப் பார்த்துவிட்டது. அதன்மேல் ஒரே பாய்ச்சல், எலி பயந்து அலறிக் கத்தியது. அதைக் கொன்ற ஆந்தையும் வெற்றிக் குரல் கொடுத்தது. இவ்வாறு ஏற்பட்ட அந்த சப்தம் எப்படியோ பஞ்சுக் காலனின் கவனத்தை ஒரு விநாடி கவர்ந்தது. பார்வையைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிற்று.
சுந்தரத்திற்கு அந்தக் கண நேரம் போதும். மின்னல் வேகத்திலே துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து விட்டான். ஏமாந்த புலியும் மறு கணத்திலே அவன்மேல் மூர்க்கமாகப் பாய்ந்தது. ஆனால் சுந்தரம் முந்திக்கொண்டான். அவன் குறி தவறியது கிடையாது. முதல் குண்டிலேயே பஞ்சுக்காலன் மடங்கி விழுந்தது. அடுத்த குண்டு அதன் உயிரை முற்றும் போக்கிவிட்டது.
சுந்தரத்திற்கு எப்பொழுதுமே ஆந்தை என்றால் ஒரே வெறுப்பு. அதைக் கண்டால் சுடாமல் விடமாட்டான். அதனுடைய விகாரத் தோற்றம், அதன் குரூரமான குரல் இரண்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பஞ்சுக்காலன் வேட்டையிலிருந்து அவனுக்கு ஆந்தைகளிடம் மிக்க மதிப்பு உண்டாகிவிட்டது. ஒவ்வோர் உயிர்ப் பிராணியையும் ஒரு நல்ல காரியத்திற்கு இறைவன் உண்டாக்கியிருக்கிறான் என்று அவன் அது முதல் கூறிக்கொண்டிருக்கிறான்.