உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/நற்றமிழ் நாவலர்

5 நற்றமிழ் நாவலர்

“சொல்வன்மை அஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணிநீ! கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையும் இம்பர்உனைப்போலெவர்மற்றினிதறிந்தார்?எடுத்துரைத்தார்? பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ? குன்றழிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோல் இன்றளிக்கும் தலைவன்நீ எனலுநினக் கிசையேயோ?”

என்பது, உரைவேந்தரின் மாணவர், ‘கோமான்’ ம.வி. இராகவன் என்பாரின் புகழுரை!

‘நற்றமிழ் நாவலர்’ என்பது, ‘நற்றமிழில் பேசுவதில் நாவன்மையுடையவர்’ என்ற பொருள் தருவதோடு, நற்றமிழ்ப் பற்றும், நற்றமிழ் வழங்கும் தமிழ்நாட்டுப் பற்றும், நற்றமிழைப் பேசும் நந்தமிழினப் பற்றும் கொண்டு, மேடைதோறும் தமிழ் முழக்கம் முழங்கியவர் உரைவேந்தர் என்ற பொருளும் தருவதாம்.


ஆழ்ந்த தமிழ்ப்பற்று

‘இடைக்கலை’ வகுப்பை முழுதும் முடிக்க முடியாத சூழ்நிலையில், அப்படிப்பை நிறுத்திவிட்டுப் பொருள் வருவாயின் பொருட்டு நகராட்சியில் ‘உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ பணியில் அமர்ந்தார் உரைவேந்தர். ஆனால், ‘தம் வாழ்வனைத்தும் தமிழ் வாழ்வே’ என்ற குறிக்கோள், அப்பணியில் நீடிக்க விடவில்லை. அதை உதறித் தள்ளிவிட்டுத் தனித்தமிழ் பயின்று ‘வித்துவான்’. ஆகவேண்டும் என்ற வேட்கையால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடிவந்த உரைவேந்தரைத் தமிழவேள் உமா மகேசுவரனார், தம் பிள்ளைபோல் கருதி, உடனே ஆசிரியப் பணியளித்து உதவினார்! உரைவேந்தரும் முறையாகத் தமிழ் பயின்று ‘வித்துவான்’ தேர்விலும் தேர்ச்சி பெற்றுத் தமிழாசிரியராக ஆனார் என்ற செய்திகள் முன்பே சுட்டப்பட்டன.

வடஆர்க்காடு திருவத்திபுரத்தில் இவர், தமிழாசிரியராகப் பணிபுரிந்தபோது, ‘ஔவைத் தமிழகம்’ என்றதோர் அமைப்பு நிறுவப்பெற்றது. தமிழ் பயிலும் மாணவர்க்கு முறையாக இலக்கிய இலக்கணப் பயிற்சிகள் அளிக்கப் பெற்றன. அவர்களை உரைவேந்தர் ‘வித்துவான்களா’க ஆக்கினார்.

தமிழைக் கற்பிப்பதோடு மட்டுமன்றி, அயல்மொழித் தாக்குதல்களிலிருந்து தமிழைக் காக்கும் அரும்பணியிலும் உரைவேந்தர் முனைந்து நின்றார். 1938இல், கட்டாய இந்தியைத் தமிழகத்தில் திணிக்க அன்றைய ஆட்சியாளர் முயன்றபோது, அதனை எதிர்த்துத் தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் ச.சோ. பாரதியாரும், ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதமும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டினர். அக்குழுவினர் வட ஆர்க்காடு மாவட்டத்திற்கு வந்தபோது, அவர்களை உரைவேந்தர் வரவேற்று, நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அதன் விளைவாகவே, 12 ஆண்டுத் தமிழாசிரியப் பணியின்போது, பற்பல ஊர்களுக்கு அரசினரால் மாற்றம் செய்யப்பட்டுப் பல்வேறு இடையூறுகளுக்கும் ஆளானார்!

தம்மிடம் ‘வித்துவான்’ தேர்வுக்காகப் பாடம் பயிலவரும் மாணவர்கட்குத் தமிழை முறையாகக் கற்பித்தார். பாடம் தொடங்குவதற்கு முன், உரைவேந்தர், தாம் பாடிவைத்த பாடல்களை முதற்கண் படிக்க வேண்டும் என்பார். அப்பாடல்கள், அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய புலவர் பெருமக்களுக்கு வணக்கம் கூறுவனவாக அமைந்திருக்கும்.

உரைவேந்தர் எண்ணியிருந்தால், ‘வித்துவான்’ பட்டத்தோடு அமையாமல், தமிழ் முதுகலை, ‘முனைவர்’ முதலான பட்டங்களையும் பெற்று, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக்கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு ஆக விரும்பவில்லை!


“‘பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித் திரிந்து, ஆராய்ந்து கழித்த உங்கள் காலத்தை, பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., என்ற பட்டங்களைப் பெறுதற்குக் கழித்திருந்தால் உங்களது வாழ்க்கை

பொருள் நிலையில் மிக்க சிறப்புற்றிருக்கும்’ என்று என் நண்பரொருவர், என் சங்க நூல் வெளியீடுகளை நோக்கி, என்பால் கொண்ட உண்மையன்பினால் கழறிக் கூறினார். பொருள்நிலை நோக்கி, அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே; அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும், பிற எக்காலத்தும் இந்த இனிய தமிழ்ப் பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில் முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்!”

என்று உரைவேந்தர் கூறுகின்றார் (புறநா.முன்னுரை) எனின், இவர்தம் தூய தமிழ்ப்பற்றின் திண்மையை என்னென்பது?

உரைவேந்தர், தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டது அன்னைத் தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டு என்பதேயாம்.

“சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறைவுற்றி ருந்தமை கண்டு, எங்ங்ண மேனும் முயன்று நிறைவு செய்வது, தமிழன்னைக்குச் செய்யத் தக்க பணி யென்ற கருத்தை உட்கொண்ட- தோடு, அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்!”

என்று இவர் கூறுவது (நற்றிணை முன்னுரை) மனம் கொளத்தகும்.

தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும், தமிழைப் பற்றியும், ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைப்பது இவர்தம் இயல்பு! இங்கே சில காட்டலாம்:

“சங்ககாலச் சோழபாண்டியர்க்குப் பின், தமிழ்நாடு ‘களப்பிரர்’ என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன் சீரும் திருவும் இழந்து சமழ்ப்புற்றது. வேற்றுமை மாசின்றி ஒருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலைநாடுகளும், கீழைநாடுகளும்

போற்றிப் பரவ வீற்றிருந்த அதன்புகழ் மறைந்தது! அறவர் அறவராய், மறவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர், மாற்றவர்க்குப் பணிந்து, அவருடைய அடிவருடும் அடியராகும் அடிமைநிலை எய்தினர். தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன. அரசியல் - வாணிகம் - தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயின!”

என்று தமிழரின் வீழ்ச்சிகுறித்து, உரைவேந்தர் மனம் நொந்து எழுதுகின்றார். (வரலாற்றுக் காட்சிகள்)

தமிழின் தாழ்நிலைகுறித்து உரைவேந்தர், 1956இல், ஆற்றிய பேருரையிலிருந்து ஒரு சிறு பகுதி அறியத்தகும்:

“தமிழ் மக்களின் தமிழகம் இடம் சுருங்கி, பண்பாடு மெலிந்து, அடிமையுணர்வு மிகுந்து, வறுமையில் நெளிந்து கொண்டிருக்கும் நிலையில் நிறுத்தப் பெற்றுளது. காணும் இடமெல்லாம் தமிழர் அறியாத மொழிகள் காட்சி தருகின்றன. காணப்படும் ஒருசில தமிழ்ச் சொற்களும் பெயர்களும் பிழையும் வழுவும் பெருகியுள்ளன. அரசியல் நிலையங்களிலும், தொழில் வாணிக அலுவலகங்களிலும் புகைவண்டி முதலிய போக்கு வரவுகளிலும், சமய நிலையங் களான கோயில் வழிபாடுகளிலும் பிறதுறைகளிலும் தமிழர்களின் தமிழ் இல்லை! தமிழர் உள்ளம் வளர்க்கும் தமிழ்க் கருத்தும் ஒழுக்க நெறியும் தக்கவாறில்லை! தமிழர் அனைவரும் பிறர் யாருக்கோ அடிமைப்பட்டு, உரிமையிழந்து, மான மில்லாத வற்றல்மரங்கள் போல, வாடிய உள்ளமும் கோடிய நினைவும் கொண்டு, குனிந்து தோன்று கின்றனர். தமிழரது தமிழ்வாழ்வு, தமிழகத்தில்தான் இது நிலை என்றால், அவருடைய கிளைஞர் வாழும் பிறநாடுகளிலும்இந்தஅவலநிலையேநிலவுகின்றது!”

தமிழ் மொழியின் அவலநிலை குறித்து உரைவேந்தர் மனம் வெதும்பி உரைப்பன இன்னும் பலவுள!

கடவுள் வழிபாட்டிலும், தமிழ்மொழிக்கு இடமில்லாது போனது பற்றியும் உரைவேந்தர் சிவஞானபோதச் சிற்றுரைப் பதிப்பில் இப்படிக் கூறுகின்றார்:

“வைதிக நூல்களும் சைவ நூல்களும் செய்து கொண்ட பூசலால் சிவவழிபாடு சீரழிந்தது. புறச் சமயங்கள் தோன்றி, தொண்டை நாட்டிலும் தென்பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே, அவரது சமயம் போல அரசியலைக் கைப் பற்றியது. ஆரியம் எனப்படும் வடமொழி, சமய நிலையங்களிலும் அரசர் உள்ளத்திலும் இடம் பெற்றது. தொண்டை நாட்டில் பல்லவர்களின் அரசியல் மேலோங்கியிருந்தமை யின், காஞ்சி, மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் பல கடிகைள் (கல்லூரிகள்) உளவாயின. இதனால், மக்கள் பேசும் தமிழ்மொழி, கடவுள் வழிபாட்டிலும், அரசர் செல்வாக்கிலும் போதிய இடம் பெறாதொழிந்தது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டுத் தமிழ்மக்களிடையே சமய வுணர்வும், சமய ஒழுக்கமும் குன்றின! வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு, மக்கள் வழங்கும் தமிழ்மொழியைப் பேணாதொழிந் தமையால், வைதிக நெறியும் பெளத்த சமண நெறியும் வேரூன்றாது வறிதே நின்றன!”

சொல்வன்மை

தமிழகத்தில், கற்பிக்கும் திறன் பெற்று ‘நல்லாசிரியர்களா’க விளங்கியோர் பலர்; ஆனால் இவர்களில் பலருக்கு எழுத் தாற்றலும், மேடையேறிப் பேசும் பேச்சாற்றலும் வாய்ப்பதில்லை. அவ்வாறே, சிறந்த எழத்தாற்றல் உடையோருள் பலர், மேடையேறிப் பேசும்திறன் பெற்றாரிலர். பாடம் சொல்லும் திறமை, எழுத்தாற்றல், நாவன்மை எனும் இம்மூன்று திறனும் ஒருவரிடம் ஒருங்கே அமைதல் அரிது அரிது! ஆனால் இம்முத்திறனும் ஒரு சேர முழுமையாக வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர்.

                 “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
                  வேட்ப மொழிவதாம் சொல்”

(குறள்:643)

என்பார் திருவள்ளுவர். “நட்பாய் ஏற்றுக் கொண்டவரைப் பிணிக்கத்தக்க குற்றமின்மை, சுருங்குதல் முதலான குணங்களுடன் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும், பின் அப்பகைமை நீங்கி நட்பை விரும்புமாறு சொல்லப்படுவதே சொல்லாம்” என்பது இதன் பொருள். பேசுவது என்பது ஓர் அருங்கலை; பெறுதற்கரிய கலை. இஃது உரைவேந்தருக்குப் பிறவிப் பேறாக வாய்ந்தது. இவர், விவேகானந்தரை முன் மாதிரியாகக் கொண்டு, தமது பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை ஆழ்ந்து படிப்பார். சிறந்த பேச்சாளராக விரும்புவோர், விவேகானந்தரின் சொற் பொழிவுகளைப் பன்முறை படிக்க வேண்டும்’ எனத் தம் மாணவர்கட்கு அறிவுறுத்துவார் உரைவேந்தர்.

கவர்ச்சியான தோற்றம், பேரவைகளுக்கு அஞ்சாத துணிவு, எடுப்பான இனிய குரல், சீரிய செந்தமிழ் நடை, திருத்தமான- தெளிவான உச்சரிப்பு, சிந்தனைத் தெளிவு, நினைவாற்றல், சொல்லழூத்தம், தட்டுத் தடையின்றித் தொட்டுத் தொடரும் பேச்சோட்டம் எனப் பேச்சாளர்க்குரிய தன்மைகள் அனைத்துமே உரைவேந்தரிடம் இயல்பாகவே அமைந்துவிட்டன. பேச்சுக்குரிய பொருள், இலக்கியம், இலக்கணம், சமயம் ஆகியவற்றுள் எதுவாயினும் அதுபற்றிய செய்திகளையும், கருத்துக்களையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாமல், காரண காரியத் தொடர்பு அமைய நிரல்படத் தொடுத்துப் பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, கேட்போர் ‘அருமை, அருமை’ எனப் பெருமையாகப் போற்றுமாறு உரையாற்றும் திறன் கொண்டவர் உரைவேந்தர். இவரின் ‘நாவன்மை’ குறித்து, இவரின் மாணவர் ம.வி. இராகவன் கூறுவது இவண் குறிக்கத்தகும்:

“சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய (உரைவேந்தர்) சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற் பொழிவுகளில் நுண்மாண் நுழை புலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற் பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்புநலத்தையும் உணர்ந்து

இன்புறலாம். இலக்கியங்களும், சிறப்பாகக் கம்ப ராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர் களுக்கு (உரைவேந்தர்) இணை, பிள்ளையவர்களே! பேச எடுத்துக் கொண்ட பகுதியை நாடகக் காட்சி யாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவை யோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளை யவர்கள்பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது!”

உரைவேந்தர், தாம் பேசுதற்கு முன், வீட்டிலேயே சில குறிப்புக்களைத் தயாரித்துக் கொள்வார். அக்குறிப்புக்களை அப்படியே மனத்தில் பதிய வைத்துக்கொண்டு பேசுவாரேயன்றி, அவற்றைப் பேசும் இடத்திற்குக் கொண்டு வரமாட்டார்! அத்துணை நினைவாற்றல் கொண்டவர்!

“நமது புலவர் பெருமான் (உரைவேந்தர்) நாவீறு கெழும அஞ்சொல் உரையாற்றும் பேருரை யாளருமாவர்! சிறந்த பேச்சாளர்கள் (தொடர்பன் எழுதியது) என்னும் நூலில், இவர் உரைத்திறன் பாராட்டப்பெறுவதைக் கருத வேண்டும். இவர், சொற்றொடர் எவ் வினைமுற்றால் முடிகிறதோ, அதனையே எச்சமாக்கி, அடுத்த சொற்றொடரைத் தொடங்கும் அந்தாதித் தொடை மரபினை அழகொழுக ஆள்வர்; ‘எனவே’ என்ற சொல்லைப் பெய்து, தம் கருத்துக்களைத் தீர்ப்பாக உரைப்பார். இன்னிசை விருந்தென்ன இடிப்பண்ணும் இழைய உரைவேந்தர் பேசும் அழகே அழகு!”

எனப் புலவர் தி.நா. அறிவொளி கூறுவார்!

‘பேசுவது ஒன்று; எழுதுவது ஒன்று’ என்றில்லாமல் பேசுவது போன்றே எழுதுவார்; எழுதுவது போன்றே பேசுவார். கொச்சைத் தமிழை இச்சையோடு பேசுவதென்பது, இவர்பால் என்றும் காணமுடியாத ஒன்று. தூய, இனிய, செந்தமிழ் நடையில் பேசுவதும் எழுதுவதும் இவருக்குக் கைவந்த கலை! பேச்சின் முடிவில், அனைத்தையும் தொகுத்துக் கூறி முடிப்பார். இதனால் சொற்பொழிவின் இறுதியில் வந்தவர்கூட ‘இவர் என்ன பேசினார்’ என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இது, திரு.வி.க. பாணி!

உரைவேந்தர், தமிழகத்தில் பேசாத இலக்கிய மேடையோ, சமய மேடையோ இல்லை எனுமளவுக்குப் பல்வேறு கூட்டங்களில் தலைமை தாங்கியும், விரிவுரையாற்றியும் மக்களை மகிழ்வித்தவர். இவருடைய உரைவீச்சுகள் பல. குறிப்பெடுப்பாரின்றிக் காற்றோடு காற்றாய்ப் போய்விட்டன. ஒன்றிரண்டு மட்டும் அச்சு வடிவம் பெற்றுள்ளன.

1940ஆம் ஆண்டில், ஆம்பூர் சைவ சித்தாந்த விழாவில், ‘சிவபுராணம்’ என்ற பொருள் பற்றி உரைவேந்தர் ஆற்றிய பேருரை, சிறுநூல் வடிவம் பெற்றுள்ளது.

மாணிக்கவாசகர் அருளிய ‘சிவபுராணம்’ 95 அடிகள் கொண்டது. இதனை 9 உட்பரிவுகளாகப் பகுத்துக் கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார் உரைவேந்தர்.

‘புராணம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே, ‘அது ஒரு குப்பை’ என்றுதான் பலரும் ஒதுக்குவர்; வெறுப்பர். ஆனால் மணிவாசகர் அருளிய இச் ‘சிவபுராணம்’ அப்படிப்பட்டதன்று. இதனை உரைவேந்தர் கூறும் விளக்கமே தனி:

“இக்காலத்தே நிலவும் புராணங்களுட் பல, இக்கால மக்களின் கருத்துக்கு ஒவ்வாத நிலையில் இருப்பது கொண்டு, இக்காலத்தவர்க்குப் புராணம் என்ற சொல்லே அருவருப்பைப் பயந்து நிற்கின்றது. அதனால் சிலர், ‘சிவபுராணம்’ என்பதும் அப் புராணங்களுள் ஒன்றே எனக் கருதித் தவறு கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒருமுறை கருத்தூன்றிப் படிப்பரேல் தம் தவற்றுக்கு வருந்துவர். எதிர்காலத்தே இவ்வாறு கூறுவோரும் உளராவர் என்று கருதியோ, என்னவோ, அடிகளார், இச்சிவபுராணத்தின் முடிப்புரையில், ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் உளராதல் வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார் என நினைக்க வேண்டி இருக்கிறது!”

என்பது இவரது சொற்பொழிவின் முன்னுரை.

இச் ‘சிவபுராணச்’ சொற்பொழிவின்போது, மக்கள் ஆர்வமாய்க் கேட்கவேண்டும் என்னும் கருத்தால், தொடக்கத்தில், திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு பாடலைக் குறிப்பிடுகின்றார்:

                “ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
                 நீடுவாழ் கென்பாக் கறிந்து”

(குறள்:1312)

என்பது உரைவேந்தர் எடுத்துக் கூறிய திருக்குறள். ‘இதற்கும் சிவபுராணத்திற்கும் என்ன தொடர்பு?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.

திருவாசகச் சிவபுராணப் பகுதியை, ‘பாயிரம், வாழ்த்து, வெற்றி, வணக்கம், நூற்பொருள், அவையடக்கம்’ என்னும் கூறுகளாகப் பகுத்துக்கொண்டவர். ‘வாழ்த்து’ என்ற பகுதியை விளக்க வருங்கால் மேற்காட்டிய திருக்குறளைக் கையாள்கின்றார்.

“வாழ்த்தினை முதற்கண் கூறியது அவர்க்கு(மணி வாசகர்)ச் சிவபரம்பொருள்பாலுள்ள பேரன்பினை எடுத்துக் காட்டுகின்றது; “உண்மையன்புடையார், தம்மால் அன்பு,தாம் புகழ்தற்கும் வணங்குதற்கும் உரியராகியவழி, அவற்றைச் செய்யாது வாழ்த்துதற்கே முதற்கண் விரும்புவர். உழுவலன்பால் பிணிக்கப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் கூடியிருந்தவழி, அவன் அவளால் வணங்கவும் புகழவும் படுதற்குரிய னாகவும், வாழ்த்தப்படுவதையே அன்பின் முதிர் நிலையாகவும், இன்ப ஊற்றாகவும் சான்றோர் கருதுவர். அஃது உயிர்கட்கு இயல்புமாகும். இதனை, இன்பநுகரும் சிறப்பால் ஊடியிருந்த காதலர்மாட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்கப் போந்த வள்ளுவப் பெருந்தகையார், காதலியாகிய அவள், தன் காதலனாகிய கொழுநனை வாழ்த்தும் செயலையே விதந்து, அவள் கூற்றில் வைத்து,

“ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து”

எனக் கூறுதல் காண்க!”

அவையோர் இதனைக் கேட்டு மகிழாதிருப்பரோ? உரை வேந்தரின் நாவன்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

உரைவேந்தர், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; அப்புலமை, தமிழ் உயர்வுக்கும், சைவ மாண்புக்கும் கை கொடுத்து உதவியது.

தூத்துக்குடி சைவசிந்தாந்த சபை ஆண்டுவிழாவில் தலைமை தாங்கிப் பேசிய பேச்சில், இத்தகைய தன்மையைக் காணமுடிகின்றது.

உரைவேந்தர், தமது தலைமையுரையில், மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்கள் பலவற்றைச் சைவசித்தாந்தக் கருத்தோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார்:


“ ‘வந்தவாறு எங்ங்னே போமாறேதோ, மாயமாம் பெருவாழ்வு’ என்றார் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர் போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக் கூறி, ‘இந் நிலவுலகிற்கு மக்களுயிர் வந்தது தற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது’ என்று சர் சேம்சுசீன்சு உரைத்தார். ‘தற்செயல்’ விளக்கமில்லாத சொல்லாதலின், ‘வந்தவாறு’ காண்டதற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்! “பின்பு அவர், ஜன்சுடைன், கீசன்பர்க் திராஅக் இலமேத்தர் லூயி- தெ-புரெக்ஸி முதலாயினார் கண்ட பெளதிகவுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவஞானம் என்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண், பிரபஞ்சம் ‘கடசக்கரர் எந்திரம் எனச் சுழல்வது’ (காஞ்சிபுராணம்-காப்பு) எனக் காண்கின்றார். முடிவில் இது, ‘படைக்கப் பட்டதே’ என்று தேறி, ‘இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும்’ எனவும்; ‘இதனைப் படைத்தோன், ஓவியம் வல்லான் ஒருவன், தான் திட்டும் ஓவியக் கிழிக்குப் புறம்பே நின்று ஓவியத்தை எழுதுவது போல, காலம் இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு

வற்புறுத்துகிறது’ என்ற கருத்துப்படவும்’ கூறி முடிக்கின்றார்... முடிவில் ‘அற்புதப் பிரபஞ்சம்’ (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார் சர்சேம்சுசீன்சு!”

இவ்வாறு, தாம் பெற்ற ஆங்கிலப் புலமையைச் சமயமறிந்து சைவசமயத்தோடு ஒப்பிட்டுப் பேசும் பேராற்றல் பெற்றவராகவும் விளங்கினார் உரைவேந்தர்!

‘சைவ சித்தாந்தக் கருத்துக்களின் பிழிவு இச் சொற்பொழிவு’ எனக் கூறலாம்.

உரைவேந்தர், ‘ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்’ என்ற நூலினை எழுதுவதற்குமுன், சைவசித்தாந்த சமாச அமைச்சராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாரின் விருப்பப்படி, குன்றக்குடியில், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஆண்டு விழாவில் ‘ஞானாமிர்தம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். உரைவேந்தரின் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்த ‘சித்தாந்த சரபம்’ பழனி ஈசான சிவாசாரியார், ‘இரும்புக் கடலைப் பக்குவமாக வேகவைத்து விட்டீர்கள்!’ என்று உரைவேந்தரைப் பாராட்டினார். பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரும் சிவக்கவிமணியும் ஞானாமிர்த நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு கூறினர் என்ற செய்திகள் முன்னரும் சுட்டப்பட்டன.

தருமையாதீனத் திருமடத்தில், 1941ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 28 முதல் 31 வரை, ‘மெய்கண்டார் சித்தாந்த மாநாடு’ ஒன்று நடந்தது. அப்போது, 30.8.41இல், கோ.ம. இராமச்சந்திரன் செட்டியார் தலைமையில், ‘சிவஞானபோதம்’ குறித்து விரிவுரையாற்றினார் உரைவேந்தர்.

சென்னையில், 22.4.1944இல், ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை தலைமையில் நடந்த, ‘புறநானூற்று மாநாட்’டில், ‘புறநானூறு காட்டும் தமிழ் நாகரிகம்’ என்ற பொருள் பற்றியும், 9.2.1952இல், நெல்லை மாநகரில் மு. வரதராசனார் தலைமையில் நடந்த ‘பத்துப்பாட்டு மாநாட்’டில், ‘திருமுருகாற்றுப்படை’ என்ற பொருள்பற்றியும்; அவ்வாறே அதே நகரில் 12.2.1956இல், நடந்த ‘பதினெண்கீழ்க்கணக்கு மாநாட்’டிற்குத் தலைமை தாங்கியும் ஆற்றிய சொற்பொழிவுகளனைத்தும், ‘நற்றமிழ் நாவலர்’ எனும் பட்டியலில் இடம் பெறத்தக்கன.

நெல்லை தருமபுர மடத்தில் 1952 மே திங்களில் 21 நாள் தொடர்ந்து ‘சிவஞான போத பாட வகுப்பு’ நடைபெற்றது. பாடம் நடத்தியவர் சாத்தூர் வழக்கறிஞரும் தமிழ்ப் புலவருமான தூ.சு. கந்தசாமி முதலியார்! வகுப்பில் நாற்பது பேர் பாடிம் கேட்டனர். அப்போது சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியவர் உரைவேந்தர்.

சென்னை மாநகரில், 25.12.1964இல், உரைவேந்தர் தலைமையில் ‘காப்பிய நிறைவு விழா’ மிகச் சிறப்பாக நடந்தது. அதில் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய ‘நீலகேசி உரை’ நூல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் உரைவேந்தரின் தலை மாணவியாகக் கருதப்படும் ‘கலையன்னை’ திருமதி இராதா தியாகராசன், ‘சிலப்பதிகாரம்’ பற்றிய ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இவ்விழாவை நடத்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளை கூறுவது இவண் குறிக்கத்தகும்:

“தலைவரவர்களின் (உரைவேந்தர்) மதிப்புமிக்க மாணவி தமிழ்த் திருவாட்டி இராதா தியாகராசன் அம்மையார், ‘சிலப்பதிகாரம்’ பற்றி ஆற்றிய சொற்பொழிவினைக் கேட்டவர்கள், விழித்தகண் விழித்தபடியும், மடுத்தசெவிமடுத்த படியும் தம்மை மறந்து சுவைத்தனர் என்றால், அது மிகையாகாது! ஆசிரியர் (உரைவேந்தர்) தலைமையில் அவர்தம் அருமை மாணவியார் இனிய பேச்சைக் கேட்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக எண்ணிய எனது எண்ணம் அன்று நிறைவெய்தி, எனக்கு எல்லையில்லா இன்பம் நல்கியது. இங்கே தமிழறியாத திருவாட்டியார், தம் ஆசிரியரிடம் தமிழ்< பயின்ற முறையினை எடுத்து விளக்குவது இனிமை தருவதாகும்.முதற்கண் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளச் செய்து, பின் திருக்குறள் பரிமேலழகர் உரைநூலைக் கையிலே கொடுத்துப் படித்துப் பொருளுணரு மாறும் அதன் வழியே பிற இலக்கியங்களைக் கற்குமாறும் தம் ஆசிரியர் செய்ததைக் கலைமகளும் திருமகளும் ஓருருக் கொண்டாற்போல் விளங்கும் அம்மையாரவர்கள் இயம்பக் கேட்டு வியந்தேன்!”

இஃது, ஆசிரியர் தலைமையில் மாணவர் ஆற்றிய உரைச் சிறப்புப் பற்றியது.

இதேபோல், உரைவேந்தர்பால் தமிழ் பயின்று பின்னர்ச் சென்னைச் சட்டமன்றப் பேரவைத் தலைவராக விளங்கிய புலவர் கா. கோவிந்தன் தலைமையில் (அஃதாவது மாணவர் தலைமையில்) ஆசிரியப் பெருந்தகையாம் உரைவேந்தர் சொற்பொழிவாற்றி யுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சைவ சித்தாந்தக் கழகப் பொன்விழாவின் ‘மொழி மாநாட்’டிற்குக் கோவிந்தன் தலைமைதாங்க, உரைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

1971 பிப்ரவரியில், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த சைவசித்தாந்தக் கழகப் பொன்விழாவின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கி. இலட்சுமிகாந்தன் பாரதி தலைமையில், பேராசிரியர் கா.சு. பிள்ளையின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார் உரைவேந்தர்.

தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகப் பழமையானது; பெருமை பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கி, நீண்டதோர் உரையாற்றினார் உரைவேந்தர், “சித்தாந்த சைவச் செந்நெறி நிறைக்கும் பெருமக்களே! அந்நெறி வளர்க்கும் தாயர்களே! அன்பர்களே” என்று விளித்து இவராற்றிய சமயச் சொற்பொழிவைக் கேட்டு மிகழ்ந்தவர் பலராவர். இது, சிறு வெளியீடாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் 12ஆவது மாநில மாநாடு, மதுரை மாநகரில் 9.8.1970இல் நடந்தது. இதன் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, உரைவேந்தர், தமது வரவேற்புரையில், தமிழ்ப் புலவர் குறித்தும், அவர்தம் கடமை குறித்தும், தம்பாற் பயின்று உயர்நிலையிலிருக்கும் மாணவர் குறித்தும் விளக்கமாகப் பேசினார்:

“வெறிதே தமிழ் அறிவிக்கும் தொழிலாளியல்லர் தமிழ்ப் புலவர்; தமிழ் உள்ளத்தை நேரிய உருவுடையதாக்கும் சிந்தனைச் சிற்பிகளாவர்; அவர் கையாளும் பொருள் - சிந்தனை; ஏனையோர் கையாளும் மண்ணும் மரமும் இரும்பும் போல

அழிந்துபடும் அழிபொருள் அன்று! நின்று பயன்படும் அறிவுப் பொருள்!”

என்று தமிழ்ப்புலவர் பெருமை கூறிவிட்டு,

“தமிழ்ப் புலமை பெற்றார் அரசியல், வாணிகம், தொழில், சமுதாயம், சமயம் ஆகிய துறைகளில் கருத்தைச் செலுத்தும் நேர்மையுடைய தமிழா - சிரியர்கள் ஆதல் வேண்டும் என்பது என் தனிக்கருத்து! தமிழ் மனமும், தமிழறிவும் உடை யோர், அரசையும், வாணிகத்தையும் தொழிலையும், பிறவற்றையும் மேற்கொண்டாலன்றிச் சூழ்நிலை மாறுதற்கு வாய்ப்பில்லை! தமிழர்களின் அறிவுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே தமிழல்லாத வேறு மொழிகள் குறுக்கிட்டு நிற்கும் சூழ்நிலை இன்று, தமிழாசிரியர்களின் தமிழ்ப் பணிக்குப் பெரியதோர் இடையூறு; அதனைத் தகர்த் தெறிவது தமிழறிஞர் கடனாகும்!”

என்று தமிழாசிரியர் ஆற்றவேண்டிய கடமை குறித்தும் சுட்டிக் காட்டுகின்றார் உரைவேந்தர்.

தம்பால் தனியாகத் தமிழ் பயின்ற மாணவர் ஒருவரைக் குறித்து, இம் மாநாட்டு வரவேற்புரையில் உரைவேந்தர் குறிப்பிட்டார்.

“ஏறக்குறைய 40 ஆண்டுகட்கு முன்பு, கறுத்த மேனியும் சிரித்த முகமும், ஆர்வநெஞ்சமும் அடையப் பெற்ற ஒரு சிறுவன், தனித்த முறையில் என்பால் தமிழ் பயின்றான். அவனுக்குத் தொல் - காப்பியச் சொல்லதிகாரத்து உரைகாரரான சேனா வரையரும் நச்சினார்க்கினியரும் மாறுபடுகின்ற இடங்களைக் காட்டிய போது, முடிவு காண்பதில் அவனுடைய அறிவு நுணுகிச் சென்று, உண்மை கண்டு ஒளிவிட்டுத் திகழ்ந்தது. ‘பயலே! நீ படித்து நீதித் துறையில் செல்வாயானால் மிக்க சிறப்-

புறுவாய்!’ என்றேன். அந்தச் சிறுவன் யார் என்று நினைக்கின்றீர்கள்? இன்று தமிழ்நாடு சட்ட மன்றச் சபாநாயகராக இருந்து, நிகழும் வாதங்களுக்குத் தீர்ப்புக் கூறும் வகையில் நாடுபுகழும் நலம் பெற்ற மாண்புமிகு புலவர் கோவிந்தனாராவர்!”

இதனைக் கேட்ட தமிழ்ப் புலவர் குழாம், கையொலி எழுப்பி ஆரவார மகிழ்ச்சியில் திளைத்தது

கையாளும் ‘நடை’ (Style)

உரைவேந்தரின் எழுத்திலும் பேச்சிலும் நல்ல ‘தமிழ் நடை’யைக் காணலாம். சின்னஞ்சிறு தொடர்களும் உண்டு; நீண்ட தொடர்களும் உண்டு. எதுவாயினும் ‘கொஞ்சுதமிழ் நடை’ தான்!

               “அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம்
                பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்!”

(புறம்: 207 உரை)

                “வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு
                 சேரா மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர்பேதுற்
                 றன்று;தாய் அறனிலள்”

(புறம் 336)


                “அவர்கட்குப்(புலவர்) போர்க்களமும் ஒன்றே; ஏர்க்
                 களமும் ஒன்றே; செல்வக் காலமும் அல்லாக்
                 காலமும் எல்லாக் காலமும் ஒன்றுதான்!”

(வரலாற்றுக் காட்சிகள்)


                “இறந்தது நினைந்து, இனி இரங்குவதை
                 விடுத்து, இந்நூற்கண் செல்வாம்!”

(ஞானாமிர்தம் உரை)

                “கொடையினும் ஒருவனே கொடுப்பன்:படையிலும்
                 ஒருவனே கெடுப்பன்!

(சீவக சிந்.சுருக்கம்)

இவ்வாறு எழுதுபவர், சில இடங்களில் நீண்ட தொடர்களையும் கையாள்கின்றார்.

“தெளிந்தாரைச் சேராமையும், ஒருகால் சேரின், தெளிந்தாரது தெளிவைக் கெடுத்துத் தெளியாமை இருளில் அழுத்துவதும், இவ்வகையால் வீழ்ந்தாரை மேன்மேலும் வீழ்த்துவதும், உயர்ந்தாரையே உயர்த்துவதும் செல்வத்துக்குப் பொது இயல்பு!”

(தூத்துக்குடி சைவசித். சபை விழாத் தலைமை)

“சிவபரம்பொருளின் செம்மைநலம் முற்றும் செம்மையாம் ஓதும் செம்பொருட் செந்தமிழ்ப்பாட்டு இச்சிவபுராணம் என்பது சாலும்”

(ஆம்பூர் சைவசித்தாந்த விழா உரை)

“கடலளவுக்கு 2800 அடி உயரத்தில், மலை முகட்டில் தோன்றி, 60 கல் அளவு மலையிடையே நெளிந்து, வளைந்து, தவழ்ந்து, தாவித்துள்ளிப் பரந்து வரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சிநல்கும்!”

(பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு)

“இயற்கையன்னை கோயில் கொள்ளும் இடம்- மலை நாடான குறிஞ்சி; அவள் தனது அருளழகை விளக்குமிடம்- முல்லை;கொலு வீற்றிருக்கும் திருவோலக்கம்-மருதம்; அவள் மகிழ்ந்து விளை யாடி மாண்புறும் இடம்- நெய்தல்!”

(நந்தாவிளக்கு)

“இதன்கண் மூவாதாரும் மங்கையரும் முறையே முன்னும் பின்னும் செல்ல, தொண்டர்கள் புடை சூழ, இடையே ஆரூர் இறைவன் செல்கின்றா னென்பது எத்துணை இன்பமாகவுளது காண்மின்! இக்கூட்டத்தில் உயர்ந்தோர் உயர்வும், தாழ்ந்தோர் தாழ்வும் மதிக்கப்பட வில்லை!"

(ஞானவுரை)

“உணவால் உயிர்களின் பசிப்பிணியும், மருத்துவத்தால் உடற்பிணியும், சிவஞானத்தால் பிறவிப் பிணியும் நீக்கும் இனிய தொண்டினைச் செய்தமையால், இக் ‘கோளகி சந்தானம்’ நாட்டில் நல்ல செல்வாக்கினைப் பெற்றது!”

இவ்வாறு, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்பத் தமக்கெனத் தனி ‘நடை’ யினைக் கையாள்வதில் வல்லவராக விளங்குகின்றார் உரைவேந்தர்.

இவைதவிர, உவமைகளை எடுத்தாளுதல், அரிய செய்திகளைக் கூறுதல், ஆங்காங்கே வானநூற் புலமை, சோதிடப் புலமை, வடநூற்புலமை முதலாயின வெளிக் காட்டுதல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்; அத்துணை அளவுக்கு நுண்மாண் நுழைபுல மிக்கவராக மாண்பார் உரைவேந்தர் திகழ்கின்றார். இவற்றை யெல்லாம் நோக்க, உரைவேந்தரை ‘நற்றமிழ் நாவலர்’ எனல் சாலுமன்றே!