உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/பேராசிரியப் பெருந்தகை

2
பேராசிரியப் பெருந்தகை

“பலதிறப்பட்ட பொதுநலப் பணிகளிலும் ஆசிரியப் பணி அருமை வாய்ந்தது. அதற்குரிய பண்புகள், படிப்பாலோ, பயிற்சியாலோ பெறலாவன அல்ல! பிறவிப் பேறாகக் கருவிலேயே உருவாவதற்குரியன. ‘குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை, கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை, நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூல் உரை ஆசிரியன்’ என நல்லாசிரியர்க்குரிய பண்புகளைத் தொன்னுல்கள் தொகுத்துக் கூறுகின்றன. பிள்ளையவர்கள்(உரைவேந்தர்) இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர் ஆசிரியராவார், மாணவர் உள்ளத்தில் தம்மாட்டுத் தனி மதிப்பும் மரியாதையும் தம்மிச்சையாகவே தோன்றச் செய்யும் சான்றோராக அமைதல் வேண்டும். அவர்க்கு இன்றிமையாத அடிப்படைப் பண்பு, அசைவற்ற தன்னம்பிக்கை; அதனை அடுத்து வேண்டப்படுவன பெருமிதமான தோற்றப் பொலிவு, நகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான இனிய குரல், தெளிவான திருத்திய உச்சரிப்பு, அரிய கருத்துக்களையும் எளிய முறையில் எடுத்துச் சொல்லும் சொல்வன்மை, இவையனைத்தும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அமைந்திருந்தன. இப்பண்புகள், மாணவர்களை அவரிடம் அழலின் நீங்கார் அணுகார் அஞ்சி, நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு பழகச் செய்தன. அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் மாண வர்களை அவரிடம் பக்தியும் பணிவும் கொண்டு ஒழுகச் செய்தன. எத்தகைய துடுக்கான மாணவனும், அவரிடம் அடக்கமின்றி நடந்து கொள்ளத் துணிந்ததில்லை!”

இவ்வாறு உரைவேந்தரின் ஆசிரியப் பண்புகளை மனங்குளிர எடுத்துரைப்பவர், அவர்பால் தனியே தனித்தமிழ் கற்று, 'வித்துவான்' ஆகித் தமிழாசிரியப் பணிபுரிந்த 'கோமான்' ம.வி. இராகவன் ஆவார்.

மாவட்டக் கழகப் பள்ளிகளில்...!

கரந்தையை விட்டு வெளியேறிய உரைவேந்தர், 1929 முதல் 1941 வரை, வட ஆர்க்காடு மாவட்டக் கழக (District Board) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் 'தமிழ்ப் பொழிலில் இவர் எழுதிய கட்டுரைகள் மூலம், இவர் காவிரிப்பாக்கம் - காரை, செய்யாறு, போளுர், திருவத்திபுரம், திருவோத்தூர், செங்கம் முதலான பல்வேறு ஊர்களில் தமிழாசிரியராக, தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தமை அறிய முடிகின்றது. அக்கால ஆட்சியாளர்களால், உரைவேந்தர், அடிக்கடி பல்வேறு ஊர்களில் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

உரைவேந்தரின் பெருந்தமிழ்ப் புலமைக்கு உரிய இடம், உயர்நிலைப் பள்ளியாகாது; எனினும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்பதை நன்குணர்ந்தவராதலின், பள்ளிப் பணியிலிருந்து கொண்டே தமது தமிழ்ப் புலமையை மேலும் வளர்த்துக்கொண்டார். பணியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே இவரின் புகழ் வெள்ளமென எங்கும் விரைந்து பரவலாயிற்று. பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும், நகரத்துப் பெரியவர்களும் இவரைப் பற்றிப் பெருமையாகப் பாராட்டிப் பேசலாயினர். பள்ளிப் பணிநேரம் தவிர எஞ்சிய நேரத்தில், நூல் ஆய்வு செய்தல், இதழ்களுக்கு அரிய கட்டுரைகளை அனுப்புதல், இலக்கிய மன்றங்களுக்கும் சமய நிகழ்ச்சிகளுக்கும் சென்று உரையாற்றுதல், இடையிடையே ஏடுகள் படித்தல் எனப் பல்வேறு ஆக்கப் பணிகளை இடையறாது செய்து வந்ததால், அப்போதே நல்ல பேரும் புகழும் கிடைக்கலாயின.

உரைவேந்தர், சேயாறு கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தபோதுதான், புலவர் கா. கோவிந்தன், ம.வி. இராகவன் ஆகியோர், இவர்பால் தனித்தமிழ் கற்க மாணவர்களாகச் சேர்ந்து, முறையே பயின்று, பிற்காலத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.

ம.வி. இராகவன் என்பார், தாம் எவ்வாறு உரைவேந்தர்பால் அணுகித் தமிழைக் கற்றார் என்பதை ஒரு கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கின்றார்:

"ஏற்ற ஆசிரியரை எய்தப் பெறாமல் ஏக்கமுற்றிருந்த யான், ஊக்கம் பெற்று அவரை(உரைவேந்தர்) நேரில் ஆய்ந்தறியத் தொடங்கினேன். அவர், பிறரோடு பழகும் பண்பையும், பள்ளியில் பாடம் நடத்தும் பாங்கையும் கவனித்தேன். உரையாற்றும் அவைகட்குச் சென்று, அவர் சொற்பொழிவுகள் பலவற்றைக் கேட்டேன். நான் எதிர்பார்த்த தகுதிகள் யாவும் அவரிடம் ஏற்றமுற நிறைந்திருப்பன கண்டு, என் தமிழ்ப் பசியைத் தணிவிக்கும் தகவுடையார் அவரே எனத் தெளிந்து, அவரை அணுகி என் விருப்பத்தைக் கூறி வேண்டிக் கொள்ளத் துணிந்தேன்!”

என்று கூறுபவர், 37 அடிகள் கொண்ட பாடலையும் எழுதி உரைவேந்தரின் இல்லத்திற்குச் சென்றார். வீட்டு வெளித் திண்ணையில் புத்தகக் குவியல்களுக்கிடையே, சிறிய சாய்வு மேசை முன் அமர்ந்து, ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவரைக் கண்டு வணங்கித் தாம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார். உரைவேந்தரும் அவரின் தகுதியையும் உணர்ச்சியையும் வேட்கை விருப்பத்தையும் அறிந்து பாடம் சொல்ல இசைவளித்தார். முறையாகத் தமிழ் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வெழுதி, முதல்வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவராகத் தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக ஏறத்தாழ முப்பது ஆண்டு பணிபுரிந்தார்.

"இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின், அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை" என்கின்றார் ம.வி. இராகவன்.

இவ்வாறே உரைவேந்தரிடம் தமிழ்பயின்று வித்துவான் ஆகிப் பின்னர்த் தமிழ் முதுகலை முதலான பட்டம் பெற்றுத் தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பெருமை பெற்றவர் கா. கோவிந்தனாவார். சங்ககால அரசர் வரிசை, சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை முதலான பன்னூல்கள் எழுதியவர். பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய 'தமிழர் வரலாறு'(History of Tamil) என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்பதோடு அவர் எழுதிய தவறான முடிபுகள் சிலவற்றைத் தக்க சான்றுகளுடன் மறுத்து, அந்தந்த அதிகாரங்களின் பின்னிணைப்பாகத் தமது கருத்தைத் தந்தவர். இவ்வாறே கால்டுவெல்துரைமகனார் எழுதிய திராவிட மொழி ஒப்பிலக்கணம் (Comparative Grammar of Dravidian Languages) என்ற ஆங்கில நூலையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.

உயர்நிலைப் பள்ளிப் பணியின் போதே இத்தகைய நன்மாணவ மணிகளை உருவாக்கினார் என்றால், பின்னர்த் தியாகராசர் கல்லூரிப் பேராசிரியராக அமர்ந்தபோது எத்தகைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்கியிருப்பார் என்று ஊகித்துக் கொள்ளலாம்!

கழகத் தொடர்பு

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடனும் அதன் ஆட்சியாளர் வ. சுப்பையா பிள்ளையுடனும் உரைவேந்தர் கொண்ட தொடர்பு மிக நெடிது. 1939 ஆம் ஆண்டில், உரைவேந்தர், வடார்க்காடு மாவட்டம், போளூரில், மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சமயம். அப்போது மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த ச. சச்சிதானந்தம் பிள்ளை, அப்பள்ளிக்குப் பார்வையிட வந்தபோது, உரைவேந்தரின் இலக்கண, இலக்கியப் புலமையையும், மாணவர் உள்ளம் ஈர்க்குமாறு கற்பிக்கும் திறனையும், சித்தாந்தச் செந்நெறிப் புலமையினையும், நேரிற்கண்டு வியந்தவர், சென்னையிலிருந்த வ.சுப்பையா பிள்ளையைக் கண்டு, உரை வேந்தரைப் பற்றி வியந்து கூறினார். இத்தகு பெரும் புலமை பெற்றவரின் தொடர்பு, தம் கழகத்திற்குத் தேவையென உணர்ந்த சுப்பையா பிள்ளை, ஒருநாள் போளூருக்குச் சென்றார்; ஆனால் உரைவேந்தர் அப்போது ஊரில் இல்லாமையால், மடல் ஒன்று எழுதி, உரைவேந்தரின் துணைவியாரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். உரைவேந்தர், அம்மடலைக் கண்டு மகிழ்ந்து, சென்னைக்குச் சென்று, கழக ஆட்சியாளரிடம் உரையாடியதன் விளைவாக, முதற்கண் 'சீவக சிந்தாமணிச் சுருக்கம்' நூல் எழுதியனுப்ப இசைவளித்தார். அந்நூல் அச்சானதும் அடுத்தடுத்துப் பல நூல்கள், கழகத்தின் வழி வெளிவந்தன!

அரிய ஆராய்ச்சியாளர்

உரைவேந்தர், தமது தமிழ் ஆய்வுக்கு ஏற்ற அருங்களம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது! இரண்டாம் போர்க்காலத்தில் 1942இல் அப்பணியில் அமர்ந்தார். ஆங்கு வேலைபார்த்த வடமொழி, பாலிமொழி போன்ற பிறமொழிப் பேராசிரியர்களின் அரிய நட்புக் கிடைத்தது!

கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளையின் வேண்டுகோட்கிணங்க, நாவலர் ந.மு.வே. நாட்டார், மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியை மேற்கொண்டார். போதிய உடல்நலம் இன்மையால், தம் மகளார் சிவ. பார்வதியம்மையாரைக் கொண்டு பதவுரையும் விளக்கவுரையும் எழுதி, எஞ்சிய நான்கு காதைகளையும் சமய நூல்களை நன்கு ஆராய்ந்து எழுத வேண்டும் என்று எண்ணிய வேளையில், திடுமென இயற்கை எய்தினார். அதன் பின்னர்க் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற் கிணங்க, மணிமேகலையின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் உரைவேந்தர். இப்பகுதிகள், புத்த சமயக் கோட்பாடு களையும் தருக்க முறைகளையும் விரிவாக இயம்புவன. எனவே, தாம் பணிபுரிந்த கீழ்த்திசைக் கல்லூரி வடமொழிப் பேராசிரியர் பிரபாகர சாத்திரியார், பாலிமொழிப் பேராசிரியர் ஐயாசாமி சாத்திரியார் ஆகியோரின் உதவியாலும் ஆங்கிருந்த நூல்நிலையத்து அரிய நூல்களின் உதவியாலும் விளக்கவுரை எழுதித் தம் ஆசிரியர்க்குப் புகழ் ஈட்டிக் கொடுத்தார்!

உரைவேந்தரின் புகழ், தமிழகமெங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழகத்தின் தலைசிறந்ததாகத் திகழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கற்று வல்ல பெரும் புலவர்களைப் பேராசிரியர்களாகக் கொண்டது; நாட்டுக்கும் நற்றமிழுக்கும் பாடுபடும் மாணவ நன்மணிகளை ஆண்டுதோறும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பது. அத்தகு சீர்சால் கழகம், உரைவேந்தரைத் தன்பால் ஈர்த்தது. 1943 சூன் திங்களில் அப்பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றார். ஆங்கே, எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்!

உரைவேந்தரின் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அப்பல்கலைக் கழகம் மேலும் உரமிட்டது. 'சைவ சமய இலக்கிய வரலாறு', 'ஞானாமிர்தம்' முதலான அரிய நூல்கள் இவரால் எழுதப்பட்டுப் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாயின.

ஆங்கே பணிபுரிந்த பல்வேறு பேராசிரியர்களிடம் பழகவும், நட்புக் கொள்ளவும் உரைவேந்தருக்கு நல்வாய்ப்பாயிற்று. அவர்களில் கல்வெட்டுப் பேரறிஞர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண, வரலாற்று ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர் கல்வெட்டு ஆராய்வதில் முன்பே அனுபவம் பெற்றிருந்த உரை வேந்தருக்கு, இவ்விருவரின் நட்பால், அவற்றில் ஈடுபாடு மேலும் மிகுந்தது!

அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் இருந்தபோது, 'புறநானூறு போன்ற பல சங்க இலக்கியங்கட்கு விளக்கவுரை எழுத முடிந்தது! பிற்காலத்தில் உரைவேந்தர்' என்ற பெரும்புகழ் பெறுதற்கு அடித்தளமாக அமைந்தது இங்கேதான் என்று கூறினும் மிகையாகாது!

தியாகராசர் கல்லூரிப் பணி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போலவே, அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கு ஒருநிலைக்களனாக விளங்குவது மதுரையில் உள்ள தியாகராசர் கலைக்கல்லூரி, 'கல்வித் தந்தை' எனப் போற்றப்படும் கருமுத்து. தியாகராசச் செட்டியாரால் நிறுவப் பெற்றது. அவர் தொடங்கிய தமிழ்நாடு' என்னும் நாளிதழ், நாட்டு மக்களிடையே நல்ல தமிழைப் பரப்பியது உலகறிந்த செய்தி. தமிழின்பால் அளவிறந்த பற்றுக் கொண்ட இவர், தமிழ்ப்புலமை பெறவேண்டும் என்பதற்காகவே, புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை என்னும் தமிழ்மேதையை வரவழைத்துத் தமது மாளிகையில் ஒரிடம் தந்து இருக்கச் செய்து, அவருக்கு உணவு முதலான பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து, அவர்பால் தமிழைக் கற்றார் எனின், கருமுத்து'வின் ஆழ்ந்த தமிழுணர்வை ஒருவாறு அறிந்து கொள்ளலாம். அவ்வாறே தியாகராசர் கல்லூரியிலும் தமிழில் நன்கு புலமை பெற்ற பேராசிரியர்களைத் தாமே நேர்முகக் காண்டல் மூலம் அறிந்து, பணியில் அமர்த்தியவர். தமிழ்ப் பேரறிஞரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமாணவருமான முனைவர் அ.சிதம்பரநாதச் செட்டியாரைக் கல்லூரி முதல்வராக ஆக்கினார். முனைவர் சி.இலக்குவனார், முனைவர் மா. இராசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் அ.கி. பரந்தாமனார் போன்றோர் இக்கல்லூரித் தமிழ்த் துறையை அணிசெய்த பெருமக்களாவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த உரைவேந்தரை, விரும்பி வரவழைத்துத் தம் கல்லூரியில் பேராசிரியப் பணி தந்து பெருமை பெற்றவர் 'ஆலை அதிபர்' கருமுத்துச் செட்டியார்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகிய உரைவேந்தர், இக்கல்லூரியில் 1951 சூலைத் திங்களில் பணியிலமர்ந்தார். கற்பிக்கும் முறை

ஆசிரியத் தொழில் என்பது தெய்வீகத் தொண்டு, 'ஏதோ ஊதியம் வாங்குகின்றோம். எதையோ சொல்லித் தருகின்றோம்' என்றில்லாமல், வருங்காலத் திருநாட்டை ஒளிரச் செய்யும் மாணவ நன்மணிகளை உருவாக்கும் பொறுப்பு நம்பால் உள்ளது' என்று எண்ணிக் கடமையாற்ற வேண்டும். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் இராதாகிருட்டிணன், இப்போதுள்ள டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் நல்லாசிரியர்களால் உருவாக்கப் பட்டவர்கள். இவ்வகையில் உரைவேந்தர், ஆசிரியத் தொழிலுக்கு முற்றிலுமாகத் தம்மை ஆயப்படுத்திக் கொண்டவர். கரந்தைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதனால் அவை யனைத்தையும் தியாகராசர் கல்லூரியில் பயன்படுத்திப் பேரும், புகழும் பெற்றுக் கொண்டார்.

கற்பிப்பதில் உரைவேந்தர் கையாண்ட முறை புதுமையானது. மாணவர்களைச் சொற்களுக்குத் தனித்தனியே பொருளுணரச் செய்வதில், கருத்துக்களை அவர்களது உள்ளத் திரையில் உருவோவியமாகப் பதியச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு, அதற்கு ஏற்பக் கற்பிக்கும் முறையைக் கையாண்டார். குறிப்பாகச் செய்யுட் பாடம் நடத்தும் பொழுது ஒவ்வொரு செய்யுளையும் கருத்து விளங்க, நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி, இடத்திற்கு ஏற்ப எடுத்தும் படுத்தும் வலிந்தும் மெலிந்தும் தெளிவாக இசையொடு படித்துக் காட்டுவார். அப்படிப் படிக்கும்போதே, பாட்டின் திரண்ட கருத்து, மாணவர்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விடும்; பல சொற்களுக்கு மாணவர்களே பொருள் உணர்ந்து கொள்வர். ஒருகால் பொருள் விளங்காதன இருப்பின், அவற்றிற்குப் பொருள் கூறுவார்.

உரைநடைப் பாடம் நடத்துவதிலும் தனிமுறையைக் கையாண்டார். வரிசையாகப் படித்துக் கொண்டு போனால், மாணவர்கள் சோர்வடைவர் என்பதனால், அதன் மையக் கருத்தைச் சுட்டிக் காட்டி, ஒவ்வொரு பத்தியிலும் கூறப்படும் அதன் செய்திகளை வகைபட விரித்துரைத்து, முடிவில் அவற்றை நிரல்படத் தொகுத்துக் கூறுவார். இதனால் உரைநடைப் பாடத்திலும் மாணவர்கள் தெளிவும் மனநிறைவும் பெறுவர்!

தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களைப் பாடம் சொல்வதிலும் உரைவேந்தர் பேரார்வமுடையவர். அவர் கற்பிக்கும் திறத்தினால், மாணவர்கள் இலக்கணத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொள்வதுண்டு! தொல்காப்பியத்தைப் பாடம் சொல்லும் பொழுது, குறிப்பிட்ட உரையாசிரியரின் உரையை மட்டும் விளக்குவதோடு நின்றுவிடாமல், வேறு உரையாசிரியர்களின் கருத்தையும் ஒப்பிட்டுச் சொல்வார். சில நேரங்களில் தனித்தனித் தலைப்புக்களில் ஆய்வுரைகள் எழுதிவரச் செய்து அம்மாணவர்களை வகுப்பில் படிக்கச் செய்து, திருத்தமும் சொல்வார். இம் முறையால், மாணவர்கள், தாம் பயின்ற நூல்களில் ஐயம் திரிபின்றித் தெளிவு பெறுவர்!

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்பத் தம்பால் கல்வி பயிலும் மாணவர்கள் தம்மைப் போலவே கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே உரைவேந்தரின் நோக்கம்.

மாணவர்கள்பால் உரைவேந்தர் காட்டிய பேரன்பு எல்லை கடந்தது. அவர்களை, 'ஐயா, ஐயா' என்று அன்போடு அகமிக மகிழ அழைத்திடுவார். தம்மிடம் பயிலும் மாணவர்கள், சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் கொண்ட அருளாளர்! தாம் அரிதில் கற்றுத் தேர்ந்த தமிழ்ச் செல்வத்தை மாணவர்கட்கு வாரி வழங்குவதில் 'கல்விக் கொடையாளரா'கத் திகழ்ந்தார். பெரிய கூட்டங்களில்கூடத் தம் மாணவர்கள் அவையஞ்சாது பேசும் திறன் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று எண்ணி, அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார். தம்மைக் கண்டு அளவளாவ வரும் அறிஞர்கள், புலவர்கள், செல்வர்கட்குத் தம் மாணவர்களையும் அறிமுகப் படுத்தி வைப்பார்!

உரைவேந்தர், தியாகராசர் கல்லூரியில் பணிபுரிந்தபோது அவர்தம் தமிழ்ப்புலமையையும், சைவ சித்தாந்தத் தேர்ச்சியையும் நேரில் அறிந்த கருமுத்துச் செட்டியார், தம் அருமைத் துணைவியார் திருமதி. 'கலையன்னை' இராதா தியாகராசனாருக்கு ஆசானாகவும் இருக்கச் செய்தார். சமயம் நேரும்போதெல்லாம் செட்டியாரின் மாளிகைக்குச் சென்று, பரந்துபட்ட தமிழ் இலக்கியச் செல்வத்தையும், ஆழ்கடலென விளங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் அம்மையார் உளங் கொள்ளுமாறு இனிது எடுத்துரைத்தார்! இதனால், கற்றுவல்ல புலவர்களிடையேயும், செம்மாந்த தமிழ் நடையில் பேசும் பேராற்றலைப் பெற்றார் கலையன்னையார் ச.சாம்பசிவனார், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக இருந்தபோதுதான் கலையன்னையாரின் முதல் தமிழ்ச் சொற்பொழிவு அரங்கேறியது. 'சிலம்பொலி' என்ற தலைப்பில், எவ்விதக் குறிப்புமின்றிக் கடல்மடைதிறந்த வெள்ளம் போல் ஒருமணி நேரம் ஆற்றிய அவ்ஒலி, இன்றும் செவி மடுத்தோர்தம் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இதன்பின்னர், அன்னையார் பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும் சமய மாநாடுகளிலும் அரியவுரையாற்றியுள்ளார். உரைவேந்தரிடம் தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் பயின்ற பான்மையினால்தான் இன்றும், தியாகராசர் கலைக் கல்லூரியில்- திங்கள் தவறாமல் சைவ சமயச் சொல்பொழிவுகளைத் தக்க அறிஞர்கள் வாயிலாக நடாத்தி வருகின்றார்! மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு ஒரு சாமிநாத ஐயர் வாய்த்ததுபோல, உரைவேந்தருக்குக் கலையன்னையார் வாய்த்தது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆக்கமெனலாம்!

தியாகராசர் கல்லூரியில் உரைவேந்தர்பால் பயின்று வெளியேறியோர், பிற்காலத்தில் பேராசிரியர்களாக-கவிஞர்களாக- அரசியல் வித்தகர்களாக விளங்கினர்; விளங்கி வருகின்றனர். ஆசிரியத் துறையில் உரைவேந்தர் எய்திய உயர்வு, இயல்பாக அமைந்த வளர்ச்சியேயாகும். ஆசிரியர்க்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும், இவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன.

இவ்வகையில் உரைவேந்தரைப் 'பேராசிரியப் பெருந்தகை' என்று போற்றுவது சாலப் பொருந்தும் எனலாம்.