உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/முன்னுரை

முன்னுரை


‘தமிழர்க்கு இரண்டு கண்கள்’ என்று சொல்லத்தகுவன தொல்காப்பியமும், திருக்குறளும்; ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகிய ‘தொல்காப்பியம்’, தமிழர்செய் நற்றவத்தால், நூல் முழுமையாகக் கிடைத்துள்ளது. இதற்கு அக்காலத்தே உரைகண்டவர் பலர். அவருள் முதன்மையானவர்.இளம்பூரணர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்ட சான்றோர். இவர்தம் உரையே, பின்னர் வந்த உரையாசிரியர்கட்குக் கலங்கரை விளக்கம்' எனலாம். நயவுரை காண்பதில் நாயகர் இவர்!

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் இடம் பெறுவது ‘உவமையியல்’. ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் காண்பது ‘உவமை’ எனப்படும். இதனை விளக்க வந்த இளம்பூரணர்,

“இதனாற் பயன் (உவமையியலின் பயன்) என்னை மதிப்பதோ வெனின், புலன் அல்லாதன புலனாதலும்; அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும். ‘ஆப் போலும் ஆமா’ என உணர்த்திய வழி, அதனைக் காட்டகத்துக் கண்டான், முன் கேட்ட ஒப்புமைபற்றி இஃது ‘ஆமா’ என்று அறியும். ‘தாமரைபோல் வாள்முகத்துத் தையலீர்’ என்றவழி, அலங்காரமாகிக் கேட்டார்க்கு

இன்பம் பயக்கும்!”

என்பர். ‘உவமையின் பயன்யாது?’, என்பதற்கான விளக்கம் இது. இருவகைப் பயன்கள்; ஒன்று; தெரியாத ஒன்றைத் தெரியப் படுத்துதல். (எ.டு.) ‘காட்டுப் பசு (ஆமா) எவ்வாறு இருக்கும்?’ என்று ஒருவன் கேட்டால், அது வீட்டுப் பசுவை(ஆ)ப் போல் இருக்கும்’ எனல். மற்றொன்று; செய்யுட்கு அணி (அலங்காரம்) ஆக அமைந்து, படிப்பவர்க்கு இன்பம் தருதல். (எ.டு.) தாமரை போன்ற ஒளி (வாள்) பொருந்திய முகத்தினையுடைய பெண்களே (தையலீர்).

இவ்வாறு உரைநயம் காணும் வித்தகர்கள், இளம்பூரணருக்குப் பின்னும் நம் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர் போன்றோர் இவ் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெரும் உரையாசிரியர்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெரியார்களில், பெரிய புராணத்துக்கு விளக்கவுரை கண்ட ‘சிவக்கவிமணி’ சி.கே. சுப்பிரமணிய முதலியார், திருக்குறளுக்கும் கம்பராமாயணத்துக்கும் விளக்கவுரை கண்ட ‘கவிராச பண்டிதர்’ செகவீர பாண்டியனார் ஆகியோர் குறிப்பிடத்தக்கோராவர். இவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பேராசிரியர்-ஔவை சு.துரைசாமி பிள்ளை ஆவார்!

“நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச்சொல்லவில்லைவேர்ப்பலாத்-தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு!”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரால் போற்றப் பெறுபவர் ‘உரைவேந்தர்’ ஔவை துரைசாமிபிள்ளை!

‘உரைவேந்தர்’, இல்லற ஏந்தலாக இலங்கியவர்; பேராசிரியப் பெருந்தகையாகப் பிறங்கியவர்; சங்கத் தொகை நூல்கட்கும் பிறவற்றிற்கும் உரைநயம் கண்ட உரவோராகத் திகழ்ந்தவர் சைவத்தின் சிறப்பையும் சைவ சித்தாந்தத்தின் மேன்மையையும் எடுத்துரைத்த சித்தாந்த வித்தகர்; தமிழ்ச் சொற்களின் பொருள்நயம் காண்பதிலும், ஊர்ப்பெயர்களின் உண்மைதனை எடுத்துரைப்பதிலும் சொல்லின் செல்வராக விளங்கியவர். இவற்றால் 'உரைவேந்தர்' எனப் போற்றப் பெற்றவர்; உயர்பண்புகள் நிறைந்த சீரிய பண்பாளர்; இவ்வகையில் புகழ்ச் செல்வராக வாழ்ந்தவர்!

இத்தகு பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்றை அறிவதனால், ஒவ்வொருவரும் ‘நற்றமிழுக்கும், நம் அருமைத் திருநாட்டுக்கும் பாடுபட வேண்டும்’ எனும் உயர் எண்ணம் கொள்வர். அதற்கு இந்நூல் பெரிதும் உதவும் என நம்பலாம்.