உரோம ரிசி ஞானம்

சித்தர் பாடல்கள்

நூல் 18

உரோம ரிசி ஞானம்

நூல் பக்கம் 305

பாடல்கள்

1

மூலவட்டம் ஆன குரு பாதம் காப்பு

முத்திக்கு வித்தான முதலே காப்பு

மேலவட்டம் ஆன பரப்பிரமம் காப்பு

வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு

காலவட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்

கண்டுபசி ஆற்றி மனக்கவடு நீக்கி

ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம்

நம்பினதால் உரோமன் என்பேர் நாயன்றானே

2

கண்ணாடி சிலமூடி அனுப்பினாலே

கருவதனை அறியாமல் மாண்டு போனான்

விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்

வெறுமண்ணாய்ப் போச்சுது அவன் வித்தை எல்லாம்

ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால்

ஒருபோதும் சித்தியில்லை வாதம் தானும்

பெண்ணார் தம் ஆசை தன்னை விட்டு வந்தால்

பேரின்ப முத்தி வழி பேசுவேனே

3

பேசுவேன் இடைகலையே சந்தர காந்தம்

பின்கலை தான் ஆதித்தன் ஆதியாச்சு

தேசமதாய் நடுவிருந்த சுடர்தான்

நீங்கி நீங்காமல் ஒன்றானால் அதுதான் முத்தி

காதலாய்ப் பார்த்தோர்க்கு இங்கு இதுதான் மோட்சம்

காணாத பேர்க்கு என்ன காம தேகம்

சோதனையாய் இடைகலையில் ஏற வாங்கிச்

சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே

4

வாங்கியந்தப் பன்னிரண்டின் உள்ளே ரேசி

வன்னி நின்ற இடம் அல்லோ சூரியன் வாழ்க்கை

ஓங்கியிந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி

உற்ற பரம் அடி தானே பதினாறாகும்

தாங்கி நின்ற காலடி தான் பன்னிரண்டு

சார்வான பதினாறில் மெள்ள வாங்கி

ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி ஊதி

எழுந்த புரியட்டம் அடங்கிற்றுப் பாரே

5

பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு

பரப்பிலே விடுக்காதே சத்தம் தன்னை

நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து

நிறைந்த சதாசிவனாரைத் தியானம் பண்ணு

கூரையா அங்குலம் தானாலும் சென்றால்

குறிக்குள்ளே தானடக்கிக் கொண்டதையா

ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்

அருமையுள்ள என் மகனென்று அழைக்கலாமே

6

அழைப்பதுவும் நல்ல பிள்ளையானால் நன்றே

ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்

பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான்

பெண்ணாட்டி மனம் குளிரப் பேசும் மாடு

உழைப்பதற்குச் செனனம் எடுத்தானே அல்லால்

உதவி தனக்கு எவ்வளவும் உண்டோ வில்லை

இளப்பமிவன் பேச்சை அடிக்கடி தானாகும்

ஏதுக்குச் சொல்லுகிறோம் இனிமேல் தானே

7 மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்

வேறுரையால் சாரங்கள் விடாமல் ஏற்று

நாலென்ன எட்டென்ன எல்லாம் ஒன்று

நவமான அட்டாங்க அப்பிய சித்துக்

காலென்னப் பிராணாயம் முன்னே செய்யில்

கணக்காகப் பூரகம் கும்பகமே நாலு

கோலென்ன ரேசகம் தானென்று மூன்று

குறையாமல் சரபீசம் கூட்டித் தீரே

8

கூட்டியே பழகியபின் சரபீசத்தில்

குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்

காட்டுவிக்கும் அல்லால் விழிக் குறியினாலே

கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு

மூட்டுவிக்கும் ஆதாரம் மாறும் தானே

மூலவட்டக் கணபதி நான்முகத்தோன் மாயன்

தாட்டி கமா மணிப்பூரங் கையன்

வட்டத் தணலான ருத்திரனும் தணலுமாமே

9

தணலாகும் விசுத்தி அறுகோண வட்டம்

சதாசிவனார் வட்டம் அல்லோ குரு பீடந்தான்

மனையான பதியினிலே குறித்துப் பார்க்க

மத்யமுதல் கரிகொண்டு தூங்கும் தூங்கும்

கனலேறிக் கொண்டு இருந்தால் எல்லாம் உண்டு

காற்றை வெளி விட்டக்கால் கருமம் தீதான்

புனல் ஊறும் வழிபாதை இந்த மார்க்கம்

பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே

10

செலுத்துவது உண்ணாக்கில் அண்ணாக் கையா

சென்றேறிப் பிடரி வழித் தியானம் தோன்றும்

வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு

மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு

சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி யூது

சோடசமாம் சுந்தர கலை தேய்ந்து போச்சு

பலித்ததடா யோக சித்தி ஞான சித்த

பருவமாய் நாடி வைத்துப் பழக்கம் பண்ணே

11

மூடாமல் சிறிது மனப்பாடம் பண்ணி

முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து

வீடேதிங்கு உடலேது யோகம் ஏது

வீண் பேச்சாச் சொல்லி அல்லோ மாண்டு போனார்

காடேறி மலையேறி நதிகள் ஆடிக்

காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்

சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி

சொரூப முத்தி பெற்றவர்கள் சுருக்கம் ஆச்சே

12

சொரூப முத்திக்கு அடையாளம் ஏதென்றக்கால்

சுடர் போலக் காணுமடா தூல தேகம்

அருப முத்தி இடமல்லோ பிரம ஞானம்

அபராட்சம் என்று சொல்லும் சிரவணந்தான்

பருபதததை அசைப்பன் எனச் சிற்றெறும்பின்

பழம் கதைபோல் ஆச்சுது இந்த யோகம் விட்டால்

வெறுங்கடத்தில் ஈப்புகுந்த வாறுபோல

வேதாந்தம் அறியாத மிலேச்சர் தாமே

13

ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே

உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே

ஆமென்றே இருபத்து ஓராயிரத்தோடு

அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்குப்

போமென்று போனதனால் நாள் குறைந்து

போச்சுது போகா விட்டால் போவது இல்லை

தாமொன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று

தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே

• முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=உரோம_ரிசி_ஞானம்&oldid=973759" இலிருந்து மீள்விக்கப்பட்டது