உலகம் பிறந்த கதை/ஆதிபகவன் முதற்றே உலகு
27. ஆதிபகவன் முதற்றே உலகு
உயிர்ப் பாசி தோன்றியபின் என்ன ஆயிற்று? உயிர் இனத்தின் 'முன். தோன்றல்கள்' தோன்றின. உயிர் நூல் அறிஞர்கள் இந்த முன்தோன்றல்களுக்கு ஓர் அருமையான பெயர் கொடுத்திருக்கிறார்கள். 'புரொடோ சுவா' என்று பெயர். 'சுவா' என்றால் ஆதி. ஆகவே, 'புரோடோ சுவா' என்றால் ஆதி உயிர் இனம் என்று பொருள்.
இந்த ‘புரோடோ சுவா' விலிருந்துதான் உயிர் இனம் முழுதுமே தோன்றியது. நாமும் தோன்றினோம்.'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்கிறார் திருவள்ளுவர்.
எழுத்துக்கள் எல்லாம அகரத்தை முதலாக உடைய., அதே மாதிரி, உலகமும் ஆதி பகவனை முதலாக உடையது என்று இதற்குப் பொருள் சொல்வார்கள். உலகம் என்பது எது? உலகில் உள்ள உயிர் இனங்கள். அவை ஆதி பகவனை முதலாக உடையன. அதாவது அவற்றின் முன்தோன்றல் ஆதிபகவன். ஆதிபகவன் எது? - புரொடோசுவா.
திருவள்ளுவர் இவ்விதம் நினைத்தாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விதம் பொருள் கொள்ளவும் அந்தக் குறள் இடம் கொடுக்கிறது அல்லவா?
புரொடோ சுவா என்பது ஓர் இனப் பெயர். ஒரே கருவட்டத்தால் ஆன உயிர் இனம். இந்த இனத்துக்குத் தான் 'புரொடோசுவா' என்று பெயர். இந்த இனத்திலே இருபதாயிரம் விதம் இருப்பதாக உயிர் நூல் அறிஞர் கூறுகின்றனர். இவற்றுள் ஒன்று 'அமீபா' என்பது.நீண்ட காலம் வரையில் கடலிலே இந்த அமீபா போன்ற 'புரொடோசுவா' இனம் தான் இருந்தது.
அதன் பிறகு, கடற்பஞ்சு போன்றவை தோன்றின. இவை இரண்டு கருவட்டங்களால் ஆனவை. இந்த இனத்திற்கு 'போரி பரா' என்று பெயர். போரஸ் என்றால் துளை துளையாக உள்ளது என்று பொருள். போரிபராவும் புரொடோ சுவாவுமே சிறிது காலம் கடலில் இருந்தன.
அதன் பிறகு ‘கொயலன்டிராடா' இனம் தோன்றியது. கொயலன்டிராடா என்றால் குழாய் போன்ற குடல் உள்ளவை என்று பொருள். பவழங்கள் இந்த இனத்தில் சேர்ந்தவை.இரண்டு கருவட்டங்களால் ஆன உயிர் இனம் பவழம். மத்தியிலே குழாய் போலிருக்கும். கடற்பஞ்சுகளை விட இவை மிகத் திறமையானவை. சுறு சுறுப்பாக இயங்கக் கூடியவை. தற்காப்புத் திறனும் உள்ளவை.
இவற்றுக்குப் பிறகு புழுக்கள் தோன்றின. 'அனலிடா' இனம் என்று இவற்றிற்குப் பெயர். பிறகு சிப்பி, நத்தை முதலியன தோன்றின. இவற்றிற்கு 'மெல்லூஸ்கா' என்று பெயர். மெல்லூஸ்கா என்றால் மெல்லிய உடல் உள்ளவை என்று பொருள்.
உலகம் தோன்றியது முதல் சுமார் நூற்றைம்பது கோடி ஆண்டுகள் வரை இருந்த உயிர்கள் இவையே.
அதனால்தான் உயிர் இன வரலாற்றின் தொடக்கத்திலே- வண்டல் குன்றுகளின் வர லாற்றிலே இவை பற்றிய விபரம் தெளிவாக இல்லை.
புராதன ஜீவயுகம், ஆரம்ப ஜீவயுகம் இரண்டும் இருள் படிந்து கிடக்கின்றன.