உலகம் பிறந்த கதை/சூரிய மண்டலத்தில் சித்து விளையாட்டு

7. சூரிய மண்டலத்தில் சித்து விளையாட்டு


சூரியனுக்கும் ரசவாதத்துக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் உண்டு. ரசவாதம் என்று சொல்லப்படுகிற இந்த சித்து விளையாட்டு சூரிய மண்டலத்திலே நடக்கிறது. அது எப்படி? எப்படி என்று அறிய வேண்டுமானால் முதலில் சூரிய மண்டல அமைப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சூரியனுக்கும் நமக்கும் இடையிலே உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா? எண்பது கோடியே முப்பது லட்சம் மைல்.

இவ்வளவு தொலைவில் இருந்து பார்க்கும் போது சூரியன் எப்படிக் காட்சி தருகிறான்? வட்ட வடிவமானதொரு தட்டுப் போலே காட்சி தருகிறான். ஆனால் சூரியயனின் முழு உருவம் அது அன்று.

ஞாயிறு பெரியது; மிகப் பெரியது? பூமியை விடப் பெரியது. எத்தனை பெரியது. பூமியை விடப் பத்து லட்சம் மடங்கு பெரியது.

அங்கே எந்த உயிரும் வாழ முடியாது. எந்த விதமான திடப் பொருளும் இருக்க இயலாது. பின், இருப்பது என்ன? ஒரே , வாயு கோளம்!

வான மண்டலத்திலே இருக்கிற இந்தச் சூரியன் பெரியதொரு கோட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். என்ன கோட்டை? வாயு மண்டலக் கோட்டை. அந்தக் கோட்டையின் சுவர்கள் - மிகவும் கனமானவை. அந்தக் கோட்டைக்குள்ளே தான் இந்திர ஜாலம்! மகேந்திர ஜாலம் எல்லாம் நடக்கின்றன.

சர்க்கஸ் வேடிக்கைகள் நடக்கின்றன. குஸ்திகள் நடக்கின்றன. குத்துச் சண்டைகள் நடக்கின்றன. இவற்றைச் செய்வது

எது? பரம அணுவிலே காணப்படும் மகா சக்தியே.

சூரிய மண்டலத்தின் வெளிப்பாகத்திலே இருப்பதைவிட உள்ளேதான் சூடு அதிகம். காரணம் உள்ளே அமுக்கும் சக்தி அதிகம். அதனால் பல்வேறு பரமாணுக்களும் மின் வேகத்திலே சுற்றுகின்றன; சுழல்கின்றன; திரிகின்றன; முட்டுகின்றன; மோதுகின்றன; மல்யுத்தம் செய்கின்றன. குத்துச்சண்டை போடுகின்றன.

இவ்விதம் நடப்பதால் பரமாணுக்களின் அணுசக்தி பீறிட்டுப் பாய்கின்றன. அவ்விதம் பீறிடும் சூரியகாந்த மின் கதிர்கள் வெகு வேகத்துடன் வெளிப்படுகின்றன.

சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள வாயுக் கோட்டையை ஊடுருவிக் கொண்டு வெளிவருகின்றன. அவ்விதம் வரும்போது ஒளியாகக் காட்சி தருகின்றன.

ஆகவே, சூரிய மண்டலத்தில் அணுக்கள் செய்கின்ற மகத்தான குஸ்தியினாலே அணுசக்தி பீறிடுகின்றது. அந்த அணு சக்தியே சூரிய கிரணங்கள் அவை, மின் கதிர்கள், உஷ்ணக் கதிர்கள். வாயு மண்ட லத்தில் பாய்ந்து வரும் வெம்கதிர்களே சூரிய வெளிச்சம் என்றும், வெய்யில் என்றும் அழைக்கப்படுகின்றன.