உலகம் பிறந்த கதை/தாவரங்கள் சமையல் செய்யும் விதம்
24. தாவரங்கள் சமையல் செய்யும் விதம்
நமது வீடுகளிலே உள்ள தோட்டங்களிலே செடிகளை வளர்க்கிறோம். கீரை பயிர் செய்கிறோம். வாழை பயிர் செய்கிறோம். வெண்டை, அவரை, கத்தரி முதலியன பயிர் செய்கிறோம். அவற்றிற்குத் தண்ணீர் விட்டு வளர்க்கிறோம். வேரிலே ஊற்றிய தண்ணீர் என்ன செய்கிறது? மண்ணிலே கிடைக்கும் தாது சத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு செடிகளின் வேர் வழியாக உள்ளே செல்கிறது. மரம், செடி, கொடி முதலியவற்றின் உள்ளே உள்ள நரம்புக் குழாய் வழியாக அடுப்பங்கரைக்குச் செல்கிறது.
நமது வீடுகளிலே, பெண்கள் நீர் பிடித்துக் கொண்டு போய் அடுப்பிலே வைத்துச் சமையல் செய்வதில்லையா! அந்த மாதிரி.
மரம், செடி இவற்றின் அடுப்பு அறை எது? இலை. இலைதான் தாவரங்களின் சமையல் கூடம். அங்கேதான் சமையல் நடக்கிறது. அருமையான சமையல்.
தாவரங்களின் மடைப் பள்ளியாகியசமையல் கூடமாகிய- இலையிலே சூரிய ஒளி படுகிறது.
அப்போது அந்த இலைகள் சூரிய ஒளியை வாங்குகின்றன. வாங்கி என்ன செய்கின்றன. வேர் வழியாக வந்த, தாது சத்து கலந்த நீரைக் கொதிக்க வைக் கின்றன. கஞ்சி காய்ச்சுகின்றன. தித்திப்பானகஞ்சி! குளூக்கோஸ்!
இந்தப் பாயசம் என்ன ஆகிறது? மற்றொரு குழாய்-நரம்பு-வழியாக மரம், செடிகளின் ஏனைய பகுதிகளுக்குச் செல்கிறது.
சென்று உணவு ஊட்டுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது.
எப்போது? பகல் நேரத்தில்; இரவு நேரத்தில் அல்ல. இரவு நேரத்தில் தாவரங்கள் என்ன செய்கின்றன. கழிவை ஆவியாக வெளியே விடுகின்றன. நாள் தோறும் இது நடைபெறுகிறது.
தாவரங்கள் கஞ்சி காய்ச்சும் முறை இருக்கிறதே! இதற்கு ‘போட்டோ சிந்தசிஸ்' என்று பெயர்.
இவ்விதம் தாவரங்கள் பூமியில் உள்ள சத்துக்களை எல்லாம் சேகரித்து அருமையான கஞ்சி காய்ச்சி வளர்கின்றன.
எங்களை உண்டு உயிர் வாழுங்கள் என்று கூறி மற்றைய உயிர் இனங்களையும் வளர்க்கின்றன. வள்ளல்களைப் போல் வாரி வழங்குகின்றன.