உலகம் பிறந்த கதை/மலைகள் எழுப்பின

12. மலைகள் எழுப்பின


உலகப்படம் ஒன்றைக் கவனித்தால் எத்தனையோ நாடுகளைப் பார்க்கிறோம்; கண்டங்களைப் பார்க்கிறோம்; கடல்களைப் பார்க்கிறோம்; மலைகளைப் பார்க்கிறோம்.

இவை எப்போது தோன்றின? ஒரே காலத்தில் தோன்றினவா? பல்வேறு காலங் களிலே தோன்றினவா?

பூமியின் மேல் பரப்பு கெட்டியான நாள் முதல் அப்படியே இருக்கின்றனவா? அல்லது மாறியிருக்கின்றனவா? இவற்றையெல்லாம் ஆரய்ந்தால் ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை அறியலாம்.

வானளாவத் தோன்றும் நமது இமயமலை ஒரு காலத்தில் இல்லை; இல்லவே இல்லை. இப்போது இமயமலை உள்ள இடம் கடலாக இருந்தது. திதியன் கடல் என்று அதற்குப் பெயர்.

பிரிட்டனுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையே இப்போது இருப்பது அட்லாண்டிக் மாகடல். ஆனால், அப் பகுதி ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது.

மத்திய தரைக் கடல் என்று அழைக்கிறோமே! அப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது.

அப்படியானால் இந்த மாறுதல் எப்படி ஏற்பட்டது?

ஆறுகள் என் செய்கின்றன? பூமியை அகழ்ந்து கொண்டு போய்க் கடலில் சேர்க்கின்றன. கோடிக் கணக்கான ஆண்டுகள் இப்படியே நடந்தால் என் ஆகும்? பூமியின் பாரம் ஒரு புறமிருந்தும் மற்றொரு புறம் மாறும். நிலப் பரப்பில் உள்ள பாரம் கடல் பக்கம் மாறும். கடல் பரப்பின் பாரம் அதிக மானால் அது என்ன செய்யும்? பூமியை அமுக்கும். நெருக்கும். அந்த நெருக்குதல் தாங்க முடியாமல் பூமி வெடிக்கிறது. நொறுங்குகிறது. பூமியின் மேல் பரப்பு வளைந்து கொடுக்கிறது. பூமிக்குள்ளே இருக்கும் கல்பாறை வேகமாக மேலே எழும்புகிறது. இப்படி எழுப்பியவைதான் மலைகள்.

இவ்விதம் பூமியின் மேல் பரப்பும் அதற்குத் தக்கபடி மாறுகிறது, சில இடங்களில் கடல் உள் வாங்குகிறது. நிலம் தோன்றுகிறது. வேறு சில பகுதிகளில் நிலப்பரப்பு கடலில் மூழ்கிவிடுகிறது. நீர் தோன்றுகிறது. இப்படித்தான் பூகோள அமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது.

பூமி தோன்றிய காலம் முதல் இதுவரை ஐந்து முறை இம்மாதிரி மாறுதல் நிகழ்ந்துளது. இந்த மாற்றத்தைப் 'புரட்சி' என்று சொல்கிறார்கள் அறிஞர்கள்.

இத்தகைய புரட்சியிலே கடைசியாக ஏற்பட்ட புரட்சி எப்போது? நான்கு கோடி ஆண்டுகள் முன்பு. அப்போதுதான் இமயமலை தோன்றியதாம்.

ஆகவே, நமது இமயமலை உலகப் பெருமலைகளிலே ஒன்று. வயதில் சிறியது. வயது என்ன? நாலு கோடி.

மலைகள் தோன்றிய பின் என் ஆயிற்று?

தட்ப வெப்பங்களில் மாறுதல்கள் நிகழ்ந்தன.