உலகம் பிறந்த கதை/ரகசியம்தான் என்ன?

1. ரகசியம்தான் என்ன?

அகன்று பரந்து கிடக்கின்றது வானம். ‘தக தக’ என்று ஒளி வீசுகிறது ஞாயிறு. பால் போல் நிலவு பொழிகின்றது தண் மதி. வைரக் கற்களை அள்ளித் தெளித்தாற் போல மின்னுகின்றன நட்சத்திரங்கள்.

நில மடந்தைக்கு நீலச் சிற்றாடை உடுத்தியது போலக் கண்ணைக் கவர்கிறது கடல்!

இவற்றின் ரகசியம் என்ன? மலைகள் ஆகா! என்ன கம்பீரம்! என்ன கம்பீரம்! வானளாவத் தோன்றுகின்றன மலைச் சிகரங்கள்.

மரகதம் விரித்தது போன்ற புல் தரைகள் ஆகா! என்ன அழகு என்ன அழகு! இவற்றின் ரகசியம் என்ன?

செடிகள்! கொடிகள்! மரங்கள் எத்தனை நிறம்? எத்தனை நிறம்? இந்த நிறங்கள் இவற்றிற்கு எப்படி ஏற்பட்டன? ஏன் ஏற்பட்டன?

இலைகள் உதிர்கின்றனவே! ஏன்? தளிர் விடுகின்றனவே! ஏன்? என்ன விந்தை! என்ன விந்தை!



ஆறடி உயரத்திலே அடங்கியிருக்கிறான் மனிதன்! இவனுள்ளே யிருக்கிற விந்தைதான் என்ன?

இவன் எப்படித் தோன்றினான்?

பிள்ளைப் பிராயத்திலே இந்த உலகின் வனப்பிலே மனம் பறிகொடுத்தேன் நான். இதன் விந்தை பல கண்டேன்; வியந்தேன்.

எல்லாம் புதிராகத் தோன்றின. ஒன் றுமே விளங்கவில்லை. வியப்பினாலே கேள்விகள் பல கேட்டேன்.

சிறு வயதிலே ஒரு கிராமத்திலே வாழ்ந்தேன் கான். அந்தக் கிராமத்திலே ஒரு பள்ளிக்கூடம். அங்குச் சென்று படித்தேன்.

என் ஆசிரியருக்குக் காது கேளாது; செவிடு. ஆதலினாலே அந்தப் பள்ளிக் கூடத்துக்கும் செவிட்டு வாத்தியார் பள்ளிக் கூடம் என்ற பெயர் ஏற்பட்டது.

அவர் சொல்லிக் கொடுத்தது எதுவும் எனக்கு விளங்கவில்லை. நான் கேட்ட கேள்வி எதுவும் அவர் செவியில் ஏறவில்லை. செவிட்டு வாத்தியார் அல்லவா!

பெருக்கல் வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பார் அவர். முந்திரி வாய்ப்பாடு, இம்மாகாணி, மாகாணி முதலிய வாய்ப்பாடுகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். எதுவும்என் மண்டையில் ஏறாது.

செவிட்டு வாத்தியார் கேட்பார்.

‘அசுவினி எப்படியடா இருக்கும்?’

‘அசுவினி ஆறும் குதிரைத் தலை போல’ என்று உரக்கக் கத்துவேன்.

ஏன்?

அது எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

செவிட்டு வாத்தியாருக்குச் சோதிடம் தெரியும். ஆதலினாலே அவருக்கு இதிலே விருப்பம்.

மணலிலே குதிரைத்தலை வரைவார்.

ஆறு பிள்ளைகளை அழைப்பார். அந்தக் கோட்டின் மீது நிறுத்துவார்.

'பாரடா! அசுவினி நட்சத்திரம்! இந்த மாதிரி தான் இருக்கும். இரவு, வானத்தைப் பாருங்கள். அசுவினியைக்கண்டுபிடியுங்கள். நாளை நான் கேட்பேன். பதில் கூற வேண்டும்’ என்பார்.

இப்படியாக இருபத்தி ஏழு நட்சத்திரங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.

“மேல் ஏழு உலகங்களின் பெயர் என்னடா?”

இது செவிட்டு வாத்தியாரின் கேள்வி. உடனே நான் உரக்கக் கத்துவேன்.

‘பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்திய லோகம், சுவர்க்கலோகம்.’

‘கீழ் ஏழு உலகங்களின் பெயர்’- இது செவிட்டு வாத்தியாரின் இரண்டாவது கேள்வி.

உடனே நான் உரக்கக் கத்துவேன்.

‘அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாள...’

‘பூமிக்கு மேலே, பூமியையும் சேர்த்து ஏழு உலகம். கீழே ஏழு உலகம். தெரிந்ததா?’ என்று உறுமுவார் செவிட்டு வாத்தியார்.

செவிட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த மாகாணி, இம்மாகாணி, முந்திரி வாய்ப்பாடு என் மண்டையில் ஏறவில்லை.

ஆனால் அந்தப் பதினான்கு உலகங்களும் என் மனம் விட்டு அகலவில்லை.

அவர் சொல்லிக் கொடுத்த நட்சத்திரங்களின் உருவம் என் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது.

இரவு நேரத்திலே என் தந்தையார் வாசலிலே படுப்பார். திறந்த வெளியிலே கயிற்றுக் கட்டிலிலே படுத்திருப்பார்.

அவர் அருகே மற்றொரு கட்டிலில் நானும் படுத்திருப்பேன். என் அருகே எங்கள் வீட்டு நாய் இருக்கும். சற்றுத் தொலைவில் எங்கள் வீட்டு மாடுகள் கட்டப்பட்டிருக்கும்.

நிலவு நாட்களிலே அந்தச் சூழ்நிலை மிக இன்பமா யிருக்கும்.

வானத்திலே ஓடுகின்ற மேகக் கூட்டங்கள் என் சிந்தை கவரும். அவற்றிற்கிடையே ஒளியும் தண்மதி என் மனத்தைக் கொள்ளை கொள்ளும்.

இவற்றிற் கிடையே கண் சிமிட்டும் தாரகைகளைக் கவனிப்பேன். அவற்றில் ஈடுபட்டவண்ணம் என் தந்தையாரிடம் பலப் பல கேள்விகள் கேட்பேன்.

‘எலேய்! என்னடா பார்த்துக் கொண்டிருக்கே’ என்பார் என் தந்தையார்.

‘ஆகாயத்தைப் பார்க்கிறேன். நம்ம தலைமேலே அது இருக்கே.’

‘ஆமாம்’ என்பார் தந்தையார்.

‘பொத் என்று என் தலை மேலே விழுந்துட்டா என்ன செய்யறது அப்பா.’

‘அப்படி விழாது.’

‘விழாமல் கடவுள் பார்த்துக் கொள்வாரா?’

‘ஆமாம்.’

நான் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘என்னடா யோசனை?’

இது தந்தையாரின் கேள்வி.

‘அது இடிந்து நம்ம தலைமேலே விழுந்துட்டா ...’

‘அதெல்லாம் விழாதுடா.’

‘ஏன் விழாது?’

‘கடவுள் பார்த்துக் கொள்வார்.’

"வானம் இடிந்து விழாமல் கடவுள் பிடித்துக் கொள்வாரா?’

‘ஆம்.’

‘இந்த சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றை யெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு அப்பா.’

‘ஏண்டா?’

‘பொத் என்று என் தலைமேலே விழுந்துட்டா என்ன செய்யறது அப்பா.’

‘அப்படி விழாது.’

‘ஏன் விழாது?’

‘கடவுள் பார்த்துக் கொள்வார்.’

‘அப்படியா!’

நான் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘என்னடா யோசனை.’

இது தந்தையாரின் கேள்வி.

‘இல்லேப்பா, பூமிக்கு மேலே ஏழு லோகம் இருக்கு என்று செவிட்டு வாத்தியார் சென்னார் அப்பா.’

‘ஆமாம்.’

‘ரொம்ப உயரத்தில் இருக்கோ?’

‘ஆமாம்.

‘சுவர்க்கத்துக்கு எப்படி அப்பா போறது.’

'வழி இருக்கு.'

'ஏன் நம்ம கண்ணுக்குத் தெரியல்லே.'

‘தெரியாது.'

‘நம்ம தாத்தா பாட்டி எல்லாரும் அங்கே தானே இருக்கா?'

'ஆமாண்டா '

'மேலே எப்படி அப்பா அவா இருக்கா. கீழே விழுந்துவிட மாட்டாளோ'

'விழாமாட்டா'

'சொர்க்கத்துக்குப் போனவர் . திரும்பி வரமாட்டாரா அப்பா.'

'வர மாட்டார்.'

'ஏன் அப்பா! போன வழியாவே இறங்கி வரக் கூடாதோ .'

தந்தையார் பதில் சொல்லவில்லை.

'அப்பா!'

‘தூங்குடா.'

நான் தூங்கிவிடுவேன். ஆனால் என் உள்ளத்திலே தோன்றிய எண்ணங்கள் - ஐயப்பாடுகள் - அலைகள் - தூங்கினால் தானே! மறு நாளும் இதே போன்ற கேள்விதான்.

‘ஏன் அப்பா! பூமிக்கு அடியிலே ஏழு உலகங்கள் இருக்காமே! செவிட்டு வாத்தியார் சொன்னார். அப்படியா அப்பா!'

'ஆமாம்.'

'அப்படி அந்த ஏழு உலகங்களும் ஒன்றின் மேல் ஒன்று இருந்தால் நசுங்கி விடாதோ!'

'நசுங்காது.'

‘ஏன் அப்பா! இந்த பூமி பாம்பின் தலை மேலே இருக்காமே!'

'ஆமாம்.'

'அப்படியானால் அந்தப் பாம்புக்குத் தலை வலிக்காதோ!'

'வலிக்காது. அந்தப் பாம்புக்கு ஆயிரம் தலை இருக்கு.'

தந்தையாரின் பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரு பாம்பின் தலை மேலே இவ்வளவு பெரிய பூமி எப்படி இருக்கமுடியும்? பாம்பின் தலை நசுங்கி விடாதா?

இதுதான் எனது கவலை.

எவரைக் கேட்டாலும் என்ன சொன்னார்? தந்தையார் கூறிய பதிலையே தான் கூறினார். எனது ஐயம் தீரவில்லை.

பாம்புப் பிடாரன் வருவான், அவன் அருகில் போய் நிற்பேன். அவன் தனது மகுடியை எடுத்து ஊதுவான். பாம்பு படம் எடுத்து ஆடும். நான் கூர்ந்து கவனிப்பேன்.

எனக்கு ஒரே வியப்பு! இந்தப் பாம்பின் தலை மேலே இவ்வளவு பெரிய பூமி எப்படி இருக்க முடியும்?

ஒரு நாள். செவிட்டு வாத்தியார் கதை சொன்னார். பகீரதன் கதை. பாதாள உலகம் போய் சாம்பலான சகர புதல்வர் ஆயிரவருக்காக ஆகாச கங்கையைக் கொண்டு வந்த கதை.

அதைக் கேட்டதும் எனக்கு ஓர் ஆசை தோன்றியது. என்ன ஆசை! பாதாள உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

பாதாள உலகத்தைப் பார்ப்பது எப்படி?

'பாதாள உலகம் பூமிக்கு அடியில் இருக்கிறது' என்று செவிட்டு வாத்தியார் சொன்னார்.

பூமியைத் தோண்டினால் பாதாள உலகம் தெரியும் அல்லவா!

எங்கள் வீட்டுக்கு அருகே கிணறு ஒன்று தோண்டினார்கள். அதை நான் கவனித்தேன். பாதாள உலகத்தைப் பார்த்துவிட உறுதி கொண்டேன்.

கிணறு தோண்டுபவர்கள் காலையில் வருவார்கள். கிணறு தோண்டுவார்கள். நானும் அங்கே சென்று நிற்பேன். எதற்காக? கிணறு தோண்டி முடிந்ததும் எட்டிப் பார்ப்பதற்காக. பூமி அடியில் பாதாள உலகம் இருந்தால் தெரியாதா?

பாதாள உலகத்தைப் பார்த்து விடுவது என்ற உறுதியோடு நின்றேன். நான் சிறுவன் எனவே, வேலைக்காரர்கள் என்னை விரட்டி விட்டார்கள். நான் கிணற்றில் விழுந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் அவர்களுக்கு. எனது ஆசையை அவர்கள் அறிவார்களா?

வேலைக்காரர் போன பிறகு எட்டிப் பார்க்கலாம் என்று எண்ணினேன்.

அவர்கள் போனார்கள். மெல்லமெல்லக் கிணறு அருகே சென்றேன்.

'டேய்! பயலே!' என்ற குரல் கேட்டேன். திரும்பிப் பார்த்தேன். எனது தந்தை. எனது எண்ணம் மண்ணாயிற்று. பாதாள உலகத்தைப் பார்க்காமலே திரும்பி விட்டேன்.

‘கர கர' என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார் தந்தை.

கோலார் தங்கச் சுரங்கத்திலே எனது தாய்மாமன் வேலை பார்த்து வந்தார். அவரிடமிருந்து ஒரு நாள் வந்தார் எனது பாட்டியார்.

‘கோலாரிலே, பூமியைத் தோண்டித் தங்கம் எடுக்கிறார்கள்' என்று என் பாட்டி சொன்னார். அதைக் கேட்டேன் நான். பாதாள உலகம் பற்றிப் பாட்டியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினேன்.

‘பாட்டீ!' என்றேன்.

'ஏன்' என்றார் அவர்.

‘சுரங்கம் என்றால் அது எப்படி இருக்கும் பாட்டி' என்று கேட்டேன்.

'பூமியைக் குடைந்து கொண்டு போவார்கள். அதுவே சுரங்கம்' என்றார் பாட்டியார்.

'அப்படியானால் அங்கே பாதாள உலகம் இருந்ததோ! நீங்கள் பார்த்தீர்களோ' என்று கேட்டேன்.

பாட்டியார் பதில் கூறவில்லை. விழித்தார். எனது ஐயம் தீரவில்லை.

எனது இளம் உள்ளத்தில் எழுந்த அலைகள்-எண்ணங்கள்- தோன்றிய ஐயப் பாடுகள் -சிறுது சிறிதாக உரம் பெற்றன.

பயன் என்ன ?

பலரைக் கேட்டேன். பல நூல்களைப் படித்தேன், ஆண்டுகள் பல சென்றன. அறிவிலே சிறிது தெளிவும் சிந்தையிலே திண்மையும் பெற்றேன்.

இதை எழுதத் துணிந்தேன். ஏன்? நான் அறிந்தவற்றை என் போன்றார் பலருக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆசையினால்.

"ஆசை பற்றி அறையலுற்றேன்" என்பது கம்பர் வாக்கு.