உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறம்

2. அறம்

அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக!

அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் அறம் என்ற தத்துவத்தை நோக்கும் பார்வை இது!

மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம் அந்த அறம் தன்னலம் உடையதாக இருந்தால், அது வெறும் ஆடம்பரம், அறமன்று

-உலகப் பொதுமறை திருக்குறள்

அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை-உன் கடவுளை - உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய்.

-ஷேக்ஸ்பியர்

அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர்.

-மேட்டாலிங்க்

அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம்; தர்மம் தரிப்பது தரித்திரம்.

-தியோக்னீஸ்

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான்.

-ஸெனீக்கா

குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும்.

-ட்ரைடன்
அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க.
-டால்ஸ்டாய்

அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும்; மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும்.

-பழமொழி

அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது.

-பேக்கன்

பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று; அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும்.

-ஸ்வீடன் பர்க்


மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம்.

-ஷேக்ஸ்பியர்


ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; நாம் செய்யும் நற்செயலே அது.


-மேட்டாலிங்க்

நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே.

-எட்வர்டு கார்ப்பெண்டர்
எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு.
-ரஸ்கின்

என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.

-பர்க்

அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.

-பாஸ்கல்

மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.

-ஷேக்ஸ்பியர்

விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.

-ஸெயின்ட் அகஸ்டைன்

நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி.

-பென்தம்

அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.

-ஜார்ஜ் எலியட்

நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை உழைப்பு வேண்டாத செயல் எதுவும் மதித்தற்கு உரியதன்று

- டிமெஸ்டர்

கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவே யாகும்.

- எங்கல்

தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.

-பித்தாகோரஸ்

நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.

-ஜார்ஜ் எலியட்

அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.

-ப்ளேட்டோ

நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.

-எமர்ஸன்

நம்மில் உயர்ந்தோரிடமும் எவ்வளவோ தீமை இருக்கின்றது; நம்மில் தாழ்ந்தோரிடமும் எவ்வளவோ நன்மை இருக்கின்றது. ஆகையால் பிறரைப் பற்றிப் பேச நம்மில் எவர்க்கும் தகுதி இருப்பது அரிது.

-ராக்பெல்லர்க்கு உகந்த கவி
படம் - ஆப்ரகாம் லிங்கன் இருதயத்தைப் பெருக்கி அலங்கரித்துக் காலியாக வைத்திருப்பது என்பது நாம் விரும்பினாலும் கூட முடியாத காரியம். நாம் தயாராக்குவது நன்மை குடிபுகவா, தீமை குடிபுகவா என்பதே கேள்வி.
- கிப்சன்

நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.

- ஜார்ஜ் எலியட்

மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன்; அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன்.

-ஷேக்ஸ்பியர்

நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும்.

- மார்லி

பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

- செயின்ட் பேஸில்

ஒரு புல் முளைத்த இடத்தில் இரண்டு புல் முளைக்கவும், ஒரு கதிர் விளைந்த இடத்தில் இரண்டு கதிர் விளையவும் செய்பவனே இராஜீயவாதிகள் அனைவரிலும் தேசத்திற்கு அதிக உபயோகமான ஊழியம் செய்தவனாவான். அவனே மனித வர்க்கத்தால் அதிகமாகப் போற்றப்படத் தகுந்தவனுமாவான்.

-ஸ்விப்ட்
தான் அறத்தில் நிற்பதால் பிறர் அடையும் சாந்தியும் சந்தோஷமும் இவ்வளவென்று கணித்தல் அநேகமாக இயலாத காரியமாகும்.
-அக்கம்பிஸ்

தன்னெறி அதிகக் கரடு முரடென்றாவது, அதிக கஷ்டமென்றாவது கூறப்படக் காணோம். கூறப்பட்டிருப்ப தெல்லாம் அது குறுகியது என்றும், கண்டு பிடிக்கக் கடினமானது என்றுமே.

-ஆவ்பரி

ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதைவிட அதை அவனே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். ஒருவனுக்கு உதவி செய்வதைவிட அவன் பிறர்க்கு உதவி செய்யக் கற்றுக்கொடுப்பதே நலம்.

-ஆவ்பரி

குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக்கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது.

-ப்ளூட்டார்க்

நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும்.

-கார்லைல்

மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது.

-ஆவ்பரி

நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன.

-ஜார்ஜ் எலியட்

★ ★ ★